உலகில் எங்குமில்லாத புதுமையாக அரசியல் அமைப்பைக் குருதி உறவும் குடும்பப் பாசமும் கொண்டதாக மாற்றிப் பாசமழை பொழிய வைத்த இயக்கம் தி.மு.க.தான் என்று அக்கழகத்தினர் பெருமை பேசிக் கொள்வர்.

ஆனால் தி.மு.க.வின் உடன்பிறப்புகள் தங்களுக்குள் தாக்கிக் கொண்டும் கொலை செய்து கொண்டும் குருதி சிந்திய அளவுக்குத் தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியிலும் உட்கட்சிக் கொலைகளும் அடிதடியும் நடந்திருக் காது.

அண்மையில் 7.2.2013 அன்று தி.மு.க. பிரமுகர்களில் ஒருவரான நடிகை குஷ்பு மீது திருச்சியில் தி.மு.க. உடன்பிறப்புகள் செருப்பு வீசினர். அதே நாளில் சென்னையில் கழகக் கண் மணிகள் குஷ்புவின் வீட்டைத் தாக்கினர்.

அதற்குமுன் 31.1.2013 அன்று மதுரையில் தி.மு.க. பிரமுகரான பொட்டு சுரேசு உடன் பிறப்புப் பகையினால் படுகொலை செய்யப் பட்டார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்குப்பின் கழகக் குடும்பத்தில் தலைமைப் பொறுப்புக்கு யார் என்ற போட்டி தலைவர் குடும்பத்திற்குள் நடந்து வருகிறது. இப்போட்டியில் கலைஞரின் தமக்கை பேரன்கள் நடத்தும் தினகரன் ஏடு கலைஞர் மகன் ஸ்டாலினுக்கு ஆதரவு திரட்டியது. இதனால் ஆத்திரமடைந்த தலைவரின் மூத்த மகன் அழகிரி ஆட்கள் மதுரையில் 2007 மே 9 அன்று தினகரன் நாளிதழ் அலுவலகத்தைக் கொளுத்தினர். அதில் சிக்கி இதழ் ஊழியர்கள் மூன்று பேர் செத்தார்கள்.

அதற்கு முன்னர் 2003 மே 20 அன்று முன்னாள் தி.மு.க. அமைச்சர் தா. கிருட்டிணன் தி.மு.க. உடன்பிறப்புகளில் ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. மூத்த மகன் அழகிரி உள்ளிட்டோர் சிறைப்படுத்தப்பட்டனர். வழக்கு நடத்தி விடுதலை பெற்றனர்.

முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை செய்யப்பட்டது. தமது கழகத்தின் ஒரு கோஷ்டியால் என்பதை ஏற்றுக் கொண்ட தலைவர் கருணாநிதி, இது தி.மு.க.வுக்கு ஒன்றும் புதிதல்ல, அண்ணாகாலத்திலேயே தூத்துக்குடியில் கழக முன்னணி பிரமுகர் கே.வி.கே.சாமி கழகத் தின் இன்னொரு கோஷ் டியால் (தங்கப் பழம் கோஷ்டி) கொலை செய்யப்பட்டார் என்றார். தம்முடைய மூத்த மகன், கழகப் பண்பாட்டை மீறி எதுவும் செய்துவிடவில்லை, அலட்டிக் கொள்ளாதீர்கள் என்று சொல்லாமல் சொன்னார்.

“குருதி உறவு”, “குடும்பப் பாசம்” என்றெல்லாம் சொக் கட்டான் காய்களைப்போல் சொற்களை உருட்டிவிடும் தி.மு.க.வில் உட்கட்சிப் பகை யால் நடந்த கொலைகள் அதிகம், கொட்டப்பட்ட குருதி அதிகம்! ஏன் இப்படி?

கொலை அரசியலை உட் கட்சிச் சிக்கல் என்று கூறி மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ளக் கூடாது. இது தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கப்பட் டுள்ள சிக்கல் என்று பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல கட்சிகள் தி.மு.க. வின் நடைமுறையைத் தான் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டுள்ளன.

கழகத்திற்குள் கருத்து வேறு பாடு ஏற்பட்டால் அதைக் கொலைப் பழியோடு தொடர்பு படுத்திக் குற்றம் சாட்டும் போக்கு தி.மு.க. தலைமையில் இருக்கிறது. அதன் தாய்க் கழக மான தி.க.விலும் இருந்திருக்கிறது.

தி.மு.க.வில் எழுச்சி பெற்ற வைகோவின் வளர்ச்சி கலைஞரின் வாரிசுக்குத் தலைவர் பதவி கிடைக்காமல் செய்து விடுமோ என்ற அச்சத்தை உண்டாக் கியது. எனவே வைகோவை மட்டம் தட்டி வைக்கவும், வாய்ப்பு நேரும் போது அவரை வெளியேற்றவும் தி.மு.க. தலைவர் திட்டமிட்டார். அதற்காக அவர் வைகோ மீது வைத்த குற்றச்சாட்டு கொடூரமானது. “என்னைக் கொலை செய்து விட்டு கழகத்தின் தலைமைப் பதவியைக் கைப்பற்ற சதி செய்கிறார் வைகோ. இக் கொலையை விடுதலைப்புலிகள் செய்யத் திட்டமிட்டுள்ளார்கள். இச்செய்தியை உளவுத் துறை சொன்னது” என்றார் கருணாநிதி. கொலைச் சதிப் பழியைப் போட்டு வைகோ வைக் கழகத்தை விட்டு வெளி யேற்றினார்.

உட்கட்சி கோஷ்டி அரசியல் திராவிட இயக்கத்தில் தொடக்க காலத்திலிருந்தே இருக்கிறது. கொலைப் பழி சுமத்திக் கொள்வதும் பெரியார் அண்ணா மோதலில் இடம் பெற்றுள்ளது.

திராவிடர் கழகம் உடைவ தற்குச் சற்றுமுன் 1949 சூலை 13 விடுதலை நாளிதழில் “ஈ.வெ. இராமசாமி” என்று பெரியார் கையொப்பமிட்டு ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் தலைப்பு “திருமணத் தோற்றத்துக்குக் காரணமும் அவசர முடிவும்” என்பதாகும். தம்மைக் கொலை செய்ய யாரோ சதி செய்கிறார்கள் என்று எழுதிய பெரியார், அண்ணாதான் அவ்வாறு சதி செய்கிறார் என்று அவ்வறிக்கையைப் படிப்போர் புரிந்து கொள்ளும்படி கோடு காட்டியிருந்தார். தம்மைக் கொலை செய்ய முயல்வோர்க்கு ஈ.வே.கி. சம்பத் துணை செய்கிறார் என்றும் எழுதியிருந்தார்.

பெரியாரின் கொலைச் சதிக் குற்றச்சாட்டை மறுத்த அண்ணா நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். அதே போல் சம்பத்தும் வழக்குப் போட்டார். அன்ணா வழக்கறிஞர் ஜெக நாதனும் பெரியார் வழக்கறிஞர் கைலாசமும் நீதிமன்றத்தில் பேசி சமாதானம் கண்டனர். தமது கட்சிக்காரர் அண்ணாவை மனதில் வைத்துக் கொண்டு அக்கட்டுரையை எழுதவில்லை என்று பெரியார் வழக்கறிஞர் உறுதி கொடுத்த அடிப்படையில் அவ்வழக்கு கைவிடப் பட்டது. அதே போல் சம்பத் தொடுத்த வழக்கிலும் சமரசம் காணப்பட்டது. (காண்க: தி.மு.க. உருவானது ஏன்? மலர் மன்னன் பக்கம்: 145, 146)

பெரியார் தலைமையில் 1939 இல் செயல்பட்ட நீதிக்கட்சியில் இருந்த கோஷ்டிச் சண்டையைப் பற்றி பெரியாரே கூறுகிறார். அப்போது காங்கி ரசுத் தலைமையின் முடிவுப்படி, இராசாசி அமைச்சரவை பதவி விலகியது. பெரியாரைப் புதிய அரசு அமைக்குமாறு ஆங்கிலேய ஆளுநர் லின் லித்கோ கேட்டார். அதற்குப் பெரியார் சொன்ன விடை, அப்போது நீதிக் கட்சியில் இருந்த கோஷ்டிகள் பற்றி நாம் ஊகித்துக் கொள்ள இடம் தருகிறது. ஆனந்தவிகடன் 11.4.1965 இதழில் பெரியாரின் நேர்காணல் வெளிவந்துள்ளது.

“ஆ, லின் லித்கோ, அவனே தான். கிண்டிக்குப் கூப்பிட்டுப் பேசினான். நான் சொன்னேன், மந்திரி சபை அமைச்சர் யார் யாருக்கு மந்திரிங்கிறதுலேயே எங்களுக்குள்ளே சண்டை வந்துடும். கொள்கை அடி பட்டுப் போகும். முடியாதுன் னேன்.”

(-ஆனந்த விகடன் பெரியார் நேர்காணல், நேர்கண்டவர்கள் சாவி மற்றும் மணியன் பக்கம்: 29) இதே நேர்காணலில் இன்னொரு இடத்தில் முகம தலி ஜின்னா, சென்னை வந்த போது அவரைப் பெரியார் சந்தித்துப் பேசியது பற்றி வருகிறது. நீதிக்கட்சியைப் பற்றி ஜின்னா அப்போது கூறியதாக பெரியார் சொன்னது கவனிக்கத் தக்கது.

“கேள்வி: அப்புறம் ஜின்னா வந்தாரா?

பெரியார்: வந்தாரு. உன் கட்சி விஷயம் என்னான்னு கேட்டாரு. என் கட்சியில முக்கியமா ஒன்பது பேரு இருக்கோம். ஒன்பது பேரும் ஒன்பது ஜாதி. ஆனால் ஆல் நான் பிராமின்ஸ் என்றேன். ஜின்னா சிரிச்சிட்டு, என்ன நெனச்சு இப்படி ஒரு கட்சி வச்சிருக்கீங்க, நல்ல கட்டில்தான். ஆனால் காலில்லாக் கட்டிலா இருக்குதேன்னு கேலி பண்ணாரு. என்ன செய்யிறது? எப்படியோ இதத்தான் ஒரு கட்டிலா வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கோ மினேன்.”

மேற்படி ஆனந்தவிகடன் 11.4.1965, பக்கம்: 30

நீதிக் கட்சியிலிருந்து, திரா விடர் கழகத்திலிருந்து வழிவழி வரும் “மரபுப் பண்பு” போல் கோஷ்டித் தகராறு தி.மு.க. வுக்கும் வந்துள்ளது.

ஆனால் தந்தை - மகன் உறவு, அண்ணன்- - தம்பி, அக்கா - -தங்கை பாசம் போன்ற குருதி உறவுச் சொற்களைக் கூடை கூடையாகக் கொட்டி விடுவார்கள் தி.மு.க. தலைவர் கள்.

அதேபோல் கடமை - கண் ணியம் - கட்டுப்பாடு என்ற ஒழுங்குமுறைக் கோட்பாடு தங்களால்தான் உருவாக்கப் பட்டு தங்கள் கட்சியில் மட்டுமே கடைபிடிக்கப்படுவது போல் உருக்கமாகப் பேசுவார்கள். “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” “எங்கிருந்தாலும் வாழ்க” என்று அண்ணா சொன் னார் என்று கூறுவார்கள்.

ஆனால் சொந்தக் கட்சியில் கருத்து வேறுபாடு வெளிப் பட்டால் மாற்றுக்கருத்து கூறு வோரை செருப்பால் அடிப்பார்கள்.

1960களின் தொடக்கத்தில் சம்பத் தலைமையில் மாற்று அணி தி.மு.க.விலிருந்து பிரிய உள்ள நிலையில், திருச்சியில் சம்பத் ஆதரவாளர்கள் கூட்டம் போட்டார்கள். அதில் கவிஞர் கண்ணதாசன் பேசிக் கொண்டிருந்த போது, அவருக்கு மாலை போட வந்தது போல் மேடையேறி ஒரு தி.மு.க. காரர் கண்ணதாசனைச் செருப் பால் அடித்தார்.

வேலூர் செயற்குழுவில் சம் பத் தாக்கப்பட்டார் என்று செய்தி பதிவாகியுள்ளது.

1972 இல் தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்த போது தி.மு.க. பொதுக் குழுவில் மாற்றுக் கருத்துகள் கூறிய நடிகர் எஸ். எஸ். இராசேந்திரனை தி.மு.க. வினர் அடித்து, சட்டையைக் கிழித்து வெளியேற்றினர்.

அதே போல் அரசியலில் வாரிசை நியமிக்கும் திருப் பணியை முதல் முதல் செய்தவர் பெரியார்தாம். திராவிடர் கழகத்திற்கு தமது வாரிசை நியமிக்க வேண்டும் என்பதற் காகவே 72 அகவையில் மணி யம்மை என்ற 26 அகவைப் பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இப்போது கருணாநிதி தி.மு.க.வுக்குத் தமது வாரிசை நியமிக்கிறார்.

உட்கட்சிச் சனநாயகத்தைப் பற்றியும் உடன்பிறப்புப் பாசத் தையும் உரத்துப் பேசிக் கொண்டே தி.மு.க. அதற்கு நேர் எதிராகச் செயல்பட்டு வரும் வரலாற்றுப் பின்னணி இது.

அரசியல் இலட்சியத்தையும் போலியாகத்தான் உச்சரித்தது தி.மு.க. உதட்டில் ஒன்றும் உள்ளத்தில் வேறொன்றும் தி.மு.க. வைத்திருந்தது என்ப தற்கு எடுத்துக்காட்டுதான் திராவிட நாட்டு விடுதலைக் கோரிக்கையை அது கண நேரத்தில் கைவிட்ட நிகழ்வு. 1950களில் இருந்து அதைக் கைவிடுவதற்கான நேரம் பார்த்திருந்து 1963 இல் கை விட்டது.

அரசியல் கட்சிகள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை யைச் சீர்குலைத்ததில் காங்கிரசு உள்ளிட்ட மற்ற தேர்தல் கட்சி களுக்கும் பங்குண்டு. ஆனால் இதில் தி.மு.க.வுக்கே பெரும் பங்கு இருக்கிறது. இன்றும் தமிழகத்தின் மற்ற தேர்தல் கட்சிகள் தி.மு.க.வின் போலித் தனங்களையே பெரிதும் பின் பற்றி மக்களைச் சீரழித்து வருகின்றன.

மக்கள் திரள் இயக்கமாக வளரவேண்டிய புரட்சிகரத் தமிழ்த் தேசியம் தி.மு.க.வின் போலித் தனங்களிலிருந்து முற்றாக விடுபட்டு, இலட்சியத் திற்காக எந்த ஈகத்தையும் செய்ய அணியமாயிருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இலட்சியத்தைத் தியாகம் செய் யக் கூடாது. உயிரை வேண்டு மானால் ஈகம் செய்யலாம்.

உள் கட்சிச் சனநாயகம், தோழமை உறவு, விமர்சன உரிமை போன்றவற்றைக் கடைபிடித்துக் கொண்டே இலட்சியத்தை அடைவதற் கான இறுக்கமான கட்டுப் பாட்டைத் தமிழ்த் தேசிய அமைப்பு கொண்டிருக்க வேண்டும்.

Pin It