சாதி என்பது இந்து மதத்திற்கு மட்டும் உரிய சமூகப் பிரிவாக உள்ளது. ஆகவே அது இந்து மதம் நிலவும் இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டும் உள்ளது. இந்தியா முழுவதும் சாதிகள் உள்ளன. ஆனால் அனைத்திந்தியச் சாதி எதுவும் கிடையாது. ஒவ்வொரு சாதியின் எல்லை, பரப்பு, மற்றும் உறவு ஆகியவை ஒரு மொழி வழித் தேசிய இனத்திற்குள் அடங்கியவையாகவே உள்ளன.  இந்த வரைவிலக்கணம் தமிழ் நாட்டிலுள்ள தமிழ்ச் சாதிகள் அனைத்திற்கும் பொருந்தும்.

தலித்தியம் பேசும் சிலரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சாதி அமைப்பினர் சிலரும் தங்கள் சாதி அனைத்திந்திய உறவு கொண்டவை என்றும் அனைத்திந்தியச் சாதி எனவும் கூறிக் கொள்கின்றனர். “தலித் முரசு” ஏடு முல்லைப் பெரியாறு அணை உரிமைப் போராட்டம் தொடர்பாக எழுதிய ஆசிரிய உரையில் (நவம்பர் 2011) பின்வருமாறு கூறுகிறது:

“மொழிவழித் தேசியம் சாதிகளாகப் பிரிந்திருக்கும் மக்களை இணைக்கவில்லை.  சாதிகளை இணைத்துவிடக்கூடாது என்பதில் மட்டும் எல்லாத் தேசியங்களும் ஒன்றுபடு கின்றன.  இந்நிலையில் தேசிய இனங்களுக் கிடையிலான முரண்களையே முதன்மையாக் குவது, கடைந் தெடுத்த முரண்பாடில்லையா? மொழிவாரி மாநிலங்களில் உள்ள தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களை அவர்களின் மொழி இணைக்கவில்லை. ஆனால் சாதி, அவர்களை (சாதி இந்துக்களை) இணைத்துமிருக்கிறது. (சேரி மக்களை) பிரித்தும் வைத்திருக்கிறது”

“மலையாள மொழி பேசும் தலித், பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின மக்களும், தமிழ் மொழி பேசும் தலித், பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின மக்களும் சாதி ரீதியாகத் தீண்டாமையையும் பிற்படுத்தப்பட்ட தன்மை யையும் ஒருசேர அனுபவிக்கின்றனர்.  சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு நிலைகளில் அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் மறுக்கப் படுவதற்கு அவர்கள் பேசும் மொழி காரணமல்ல.  ஊரையும் சேரியையும் ஒன்றிணைக்காத சாதி காப்பாற்றும் மொழி (கள்), இன்னொரு மொழிக் காரனுக்கு எதிராக மட்டும் ஓர்மையைப் பெற்றுத் தருமா?ஆனால் மொழி, ஓர்மையை (ஒருமைப்பாட்டை - பெ.ம.) வென்றெடுக்கும் என்று இங்கு கற்பிக்கப்படுகிறது“

... .... .... .... ...

“நாம் சாதியால் ஒடுக்கப் பட்டிருக்கிறோம்.  மொழியால் அல்ல. சாதி அமைப்பை உடைப்பதே ஓர்மைக்கு வழி வகுக்கும்.  அணையை உடைப் பதோ இந்தியாவை உடைப் பதோ அல்ல!“

முல்லைப் பெரியாறு அணையை உடைக்கக் கூடாது என்று போராடும் தமிழர்கள் இந்தியாவை உடைக்கும் முடிவுக்குப் போய்விடக் கூடாது என்று தலித் முரசு மிகவும் கவலைப்படுகிறது.  தமிழ் நாட்டில் பேரெழுச்சியோடு நடைபெறும் மக்கள் திரள் போராட்டம் முல்லைப் பெரியாறு அணை உரிமையை மீட்பதாக உள்ளதே தவிர தமிழ்நாட்டு விடுதலையை முன்வைத்ததாக இல்லை. ஆனாலும் தலித் முரசுக்குக் கவலை ஏற்படுகிறது.  இந்தத் தமிழின எழுச்சி தனித் தமிழ்நாடு கோரிக்கையில் கொண்டு போய் விட்டு விடுமோ என்று அதற்கு மனப் பதைப்பு ஏற்படுகிறது.  ஏன்? தலித்தியத்தின் பிரிக்கமுடியாத கூறு இந்தியத் தேசியமும் மொழிவழித் தேசிய இன மறுப்பும் ஆகும்.

மொழிவாரி மாநிலங்களில் உள்ள தலித், பிறபடுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களை அவர் களின் மொழி இணைக்க வில்லை. சாதி, சாதி இந்துக் களை இணைத்து வைத்திருக் கிறது.  சேரி மக்களைப் பிரித்து வைத்திருக்கிறது என்று கூறு கிறது தலித்முரசு.  பிற்படுத்தப் பட்ட மக்களை சாதி இந்தியா முழுவதும் இணைத்து வைத் திருக்கிறதா? தமிழ்நாடு முழு வதும் இணைத்து வைத்திருக் கிறதா? சாதியானது சேரி மக்கள் அனைவரையும் இந்தியா முழு வதும் இணைத்து வைத்திருக் கிறதா? தமிழ்நாடு முழுவது மாவது இணைத்து வைத்திருக் கிறதா? இவ்வினாக்களுக்கு “இல்லை“ என்ற ஒற்றை விடைதான் சரியானது.

தமிழ்நாட்டில் உள்ள “பள்ளர்“, “பறையர் என்ற இருபெரும் சாதிகள் வேறு மொழி பேசும் மாநிலங்கள் எதிலும் இல்லை.  இவர்களுக்கு அயல்மொழி மாநிலங்களில் உள்ள தலித்துகளுடன் திருமண உறவு கிடையாது.  இவ்விரு சாதி மக்களையும் தமிழ் நாட்டில் இணைத்திருப்பது தமிழ்மொழியும் தமிழ் இனமும் மட்டுமே!  இவ்விரு மக்களையும் இவர்களின் சாதி பிரித்தே வைத்திருக்கிறது.  சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக உருவான சாதி அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இவ்விரு சாதிகளுக் கும் பொதுவாக இல்லாமல் தனித்தனியே செயல்படுகின்றன. 

தீண்டாமைக் கொடுமைக் குள்ளான ஒடுக்கப்பட்ட சாதிகள் அனைத்திற்கும் பொது வான அரசியல் அமைப் புகளாக அறிவிக்கப்பட்ட புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்      தைகள் போன்ற கட்சிகளில் தலைமை தாங்கு வோரின் சாதியைச் சேர்ந்த மக்களே 99 விழுக்காட்டினராக உள்ளனர். மேலே குறிப்பிட்ட இரு சாதி யினரும் ஒருங்கிணைந்து இவ் விரு அமைப்புகளில் இல்லை. ஏன்? சாதி என்பது உயர்வு தாழ்வு அடிப்படையில் சமூகத் தைப் பிரிக்கும் கருத்தியல் என்பதால் தான்! ஒரு தேசிய இனத்திற்குள் சாதியானது மக்களைப் பிரிக் கிறது.  மொழியும், இனமும் தான் மக்களை இணைக் கின்றன.  இந்த நடைமுறை உண்மைக்கு நேர் எதிராக, சாதியானது மக்களை இணைக் கிறது என்று கூறுகிறது தலித் முரசு.

தமிழ்நாட்டில் உள்ள இரு சாதித் தலித் மக்களையே தலித் அமைப்புகளில் ஒன்றிணைக்க முடியாத தலித்தியம், அனைத் திந்தியத் தலித்துகளை ஒன்றி ணைத் துவிடுமா? அனைத்திந் தியாவில் பல்வேறு மொழி பேசும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான சாதிகளின் மக்கள் தாங்கள் தலித்துகள் என்ற கருத்தியலின் கீழ் ஒருங்கிணைய வாய்ப்பே இல்லை. பாரதமாதா பக்தி வெளிப்பாட்டின் பல்வேறு வடிவங்களில் ஒன்றுதான் தலித்தியம் என்ற கானல் நீர் கருத்தியல்! பாரத மாதா பக்தியின் சாரம் பார்ப்பனியம்! தண்ணீர் போன்ற போலித் தோற்றம் கானல் நீர்! அனைத் திந்திய ஒடுக்கப்பட்ட சாதிகள் ஒற்றுமை என்பதும் கானல் நீரே!

அனைத்திந்தியப் பிற்படுத் தப்பட்ட சாதிகள் உண்டா? இல்லவே இல்லை.  பிற்படுத்தப் பட்ட தமிழ்ச் சாதி எதற்கும் அயல்மொழிச் சாதிகளோடு அயல்மாநிலங்களில் திருமண உறவு கிடையாது.  சாதி அடிப்படையில் அனைத்திந்திய அமைப்பு எதுவும் வளர்ச்சி பெற்றுவிடவில்லை.

இந்தி மாநிலங்களில் “யாதவர்“ வகுப்பைச் சேர்ந்த வர்கள் அரசியல் கட்சிகள் நடத்தி மாநில ஆட்சியைப் பிடித்ததைப் பார்த்ததும் தமிழ்நாட்டில் உள்ள கோனார் கள் சிலர் தாங்களும், ”யாத வர்கள்” என்று கூறிக்கொண்டு, இந்தி மாநிலங்களின் தலைவர் களை இங்கு அழைத்துக் கூட்டங்கள் நடத்தினர்.  அவர்களின் வடநாட்டுக் கட்சி களை இங்கு தொடங்கினர்.  இங்கு வந்து பேசிய லல்லு பிரசாத்தும், முலாயம் சிங்கும் தமிழர்களைப் பார்த்து இந்தி கற்றுக் கொள்ளும்படி கூறினர்.  அவர்களின் கட்சிகள் இங்கு வேர் பிடிக்கவில்லை.

குறிஞ்சி நிலத்தை அடுத்து மானிட வளர்ச்சியில் முக்கிய இடம் பெற்றது முல்லை நிலம். ஆடுமாடுகள் வளர்த்தல் மற்றும் வேளாண்மை செய்தல் என்ற மனிதகுல வளர்ச்சி முல்லை நிலத்தில் ஏற்பட்டது.  கூட்டம் கூட்டமாகக் கால்நடைகளை வளர்த்ததால் இந்நில மக்களை, ”ஆயர்” என்று தமிழ் கூறுகிறது.  குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் இடைப்பட்ட நிலத்தில் வாழ்ந் ததால் பின்னர் இவர்கள் இடையர் எனப்பட்டனர்.  இவர்களின் வாழ்க்கை, பண் பாடு ஆகியவற்றைச் சங்க இலக்கியமான கலித்தொகை முல்லைக் கலியில் விரித்து ரைக்கிறது. பின்னர் இவர்கள் ”கோனார்கள்” எனப்பட்டனர்.  இவர்களை ”யாதவர்கள்” என்று சங்க இலக்கியமோ பழந்தமிழ் இலக்கியமோ அடையாளப் படுத்தவில்லை.

அரசியல் ஆதாயம் தேட விழைந்த கோனார் வகுப்புப் பிரமுகர்கள் சிலர், வடநாட்டில் ஏற்பட்ட அதிகாரக் கவர்ச் சியைக் காட்டி, உழைக்கும் மக்களாகிய கோனார்களை “யாதவர்“ என்று புதிய சாதிப் பெயர் தாங்க வைத்தனர். ஆரிய மயமாக்கப்பட்ட கதைகளின், அடிப்படையிலும் 'யாதவர்' என்று கூறிக் கொண்டனர். “யாதவர்” என்பது ஆரியமய மாக்கப்பட்ட சாதிப் பெயர்! வடநாட்டு யாதவர்களுக்கும் தமிழகக் கோனார்களுக்கும் எந்த உறவும் கிடையாது. 

கால்நடை வளர்ப்பு அதை ஒட்டிய உழவு ஆகியவை உலகெங்கும் மானிட நாகரிக வளர்ச்சிக் கட்டங்களில் முதல் நிலையாகும். கால்நடை வளர்ப்பு சார்ந்து வாழ்ந்த மக்களை ஆயர் (Sheperd) என்று அழைப்பது உலகெங்கும் அவரவர் மொழிக்குரிய சொல்லில் உள்ளது.  ஏசு பிரானையும் ஆயர் என் கின்றனர்.  உலகெங்கும் அறியப் படும் ஆயர் என்போர் ஓர் இனத்தைச் சேர்ந்தோர் அல்லர்! ஒரு மொழிக்குரியோர் அல்லர்.  தமிழக ஆயர்கள் தமிழ் இனத்தைச் சேர்ந்தோர். இவர்க ளுக்கும் வேற்று மொழி பேசும் ஆயர்களுக்கும் எந்த உறவும் கிடையாது.

மானிட சமூகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக வணிகம் உருவாயிற்று. வணிகர்களைத் தமிழ்நாட்டில் செட்டியார் என்கிறோம்.  “செட்டி“ என்ற வணிக சாதிப் பெயர் பிறமொழி இனங்களிலும் உள்ளது.  செட்டியிலிருந்து வந்ததுதான் சேட்டு என்றும் கூறுவர்.  வேற்று இனச் செட்டி மற்றும் சேட்டுகளுடன் தமிழகச் செட்டியார்களுக்கு எந்த உறவும் கிடையாது.  தமிழகச் செட்டி யார்கள் தமிழர்களாவர்! இவ்வாறு இன்னும் பல தமிழ்ச் சாதிகள் இருக்கின்றன.

தமிழகப் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் சில பிரிவினர் தங்களைச் ”சத்திரியர்கள்” என்று கூறிக் கொள்கின்றனர்.  ஆரிய வர்ணம் நான்கில் ஒன்றுதான் சத்திரியப் பிரிவு, தமிழர்களில் சத்திரியர் என்ற பிரிவு கிடை யாது.  அதைப் போலவே தமிழர்களில் “சூத்திர“ என்ற பிரிவும் கிடையாது.  “சூத்திர“ வர்ணமும் ஆரிய வர்ணங் களான நான்கில் ஒன்றாகும்.

அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்று நான்கு சமூகப் பிரிவுகளைத் தொழில டிப்படையில் மட்டுமே தொல் காப்பியம் கூறுகிறது.  ஆரி யர்கள் தங்களது ஆரியவர்த் தத்திற்கு வெளியே உள்ள தேசங்களைச் சூத்திர தேசங்கள் என்றனர். சூத்திர தேச அரசர்கள், ஆரியப் பகுப்பின் படி சூத்திர அரசர்களே ஆவர். தமிழர்களைப் பொறுத்தவரை, அரசர்கள் அரசர்கள்தாமே தவிர, சூத்திரர்களல்லர். ஆரியம் கூறிய “சூத்திர அரசர்” என்பது பற்றி அம்பேத்கரும் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். அரசர்களும் இங்கு சூத்திரர்கள் என்பதால் அவர்கள் பூணூல் போட்டுக் கொள்ளும் இரு பிறப்பாளர் தகுதியைப் பெற வில்லை.

ஆனால் ஆரிய நால் வர்ணத்தில் பிராமணர், சத்தி ரியர், வைசியர் ஆகிய மூன்று வர்ணத்தாரும் பூணூல் போட்டுக் கொள்ளும் இரு பிறப்பாளர் ஆவர். குழந்தை பிறந்தபோது முதல் பிறப்பும் அதற்கு அறிவுக்கண் திறந்த போது இரண்டாம் பிறப்பும் ஏற்படுகிறது என்கிறது ஆரிய வர்ணாசிரமம். அந்த இரண் டாம் பிறப்பைக் குறிக்கவே ஆரிய வர்ணத்தாருக்குப் பூணூல் அணியப்படுகிறது.  தமிழர்க்குப் பூணூல் அணியும் உரிமை இல்லை என்றனர் ஆரியப் பார்ப்பனர்.  தமிழரில் சில சாதியினர் பூணூல் போட்டுக் கொள்வதை இரு பிறப்பின் அடையாளமாக ஆரியர் ஏற்கவில்லை.

களப்பிரர், பல்லவர் ஆட்சிக் காலங்களில் தமிழ்நாட்டில் ஆரியக் கருத்தியல் மேலாதிக்கம் பெற்றது.

“பார்ப்பார்“ என்ற சொல் தமிழர்களில் அறிவர்களாக விளங்கிய பிரிவார்க்கே உரிய தாகவிருந்தது. நூல் பார்த்தல், கோள் பார்த்தல் போன்ற அறிவுத்துறைப் பணிகளைச் செய்தவர்களைப் “பார்ப்பார்“ என்று தமிழர்கள் அழைத் துள்ளனர். ”ஐயர்” என்பதும் தமிழ் அறிவர்களை அழைக்கப் பயன்படுத்திய சொல்லே.  பூணூல் போடும் வழக்கமும் தமிழர்களிடமே இருந்துள்ளது.  தவம் செய்யும்போது பிறர் இடையூறு செய்யாமல் இருப் பதற்காகத் தமிழ் அறிவர்கள் பூணூல் போட்டுக் கொள்வர் என்று மறைமலை அடிகளார் “சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்“ என்ற நூலில் குறிப் பிடுகிறார்.

வெளியிலிருந்து வந்த ஆரியரில் பிராமணர் என்போர் அறிவுத் துறை சார்ந்தவர்கள் ஆவர். தமிழ் அறிவர்களைப் பார்த்து அப்பிராமணரும் பூணூல் போட்டுக் கொண் டனர். தமிழ் அறிவர்கள் “பார்ப்பார்“ என்றும் “ஐயர்” என்றும் சிறப்புப் பெயரால் தகுதி அடிப்படையில் அழைக் கப்பட்டனர். வடக்கே இருந்து வந்தவர்களான பிராமணரும் தங்களைப் “பார்ப்பார்“ என்று அழைத்துக் கொண்டனர். தமிழர்களில் உயர்ந்தோரைக் குறித்த 'ஐயர்', அறவோரைக் குறித்த “அந்தணர்“ என்ற சிறப்புப் பெயர்களை பிராமணர் சூட்டிக் கொண்டனர். மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் பிராமணர்களைக் குறிப்பிடும் போது “ஆரியப் பார்ப்பனர்“ என்றே குறிப்பிடுவார். “தமிழ்ப் பார்ப்பனர்“ இருந்தனர் என் பதைப் பிரித்துக் காட்டவே இவ்வாறு “ஆரியப் பார்ப்பனர்“ என்பார். பிராமணர்களைப் “பார்ப்பனர்” என்று கூறுவது தமிழ்ப் பார்ப்பாரை இழிவுபடுத் துவதாகும் என்று அறிஞர் குணா கூறுகிறார்.

சமூகத்தில் மதிக்கப்படும் உயர்ந்தோராய் இருக்கும் மக்களைப் பார்த்து கீழ் நிலையில் உள்ளவர்கள் தாங் களும் “உயர்ந்தோரைப் போல், பெயர் சூட்டிக் கொள்வதும், பழக்க வழக்கங்களை உருவாக் கிக் கொள்வதும், உலக நடை முறையாகும். அவ்வுளவியல்படி தமிழர்களைப் பார்த்து பார்ப் பார் என்ற பெயரும், பூணூலும் ஏற்றவர்களே ஆரியப் பிராமணர்.

பின்னர் கன்னடக் களப்பிரர், தெலுங்குப் பல்லவர் ஆட்சிக் காலத்தில் ஆரியம் தமிழ் நாட்டில் ஆழமாக வேரூன் றியது.  வடக்கேயிருந்து வந்த சமண, பௌத்த மதங்கள் வட மொழிகளான பிராகிருதம், பாலி ஆகியவற்றைத் தமிழ் நாட்டில் திணித்தன. இம் மொழித் திணிப்பு ஆரியம் வேரூன்றும் சூழலை ஏற் படுத்தின. இவர்கள் ஆட்சியில் வடமொழியான சமற்கிருதம் ஆட்சி மொழியாகவே விளங் கியது.  இந்த ஆட்சியாளரால் பிராமணர்கள் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டனர்.  பிராமணர்களுக்கு, வரியில்லாமல், அரசர்களும் தலையிட முடியாத இறையிலி நிலங்களை “பிரம்மதேயம்“ என்ற பெயரில் ஏராளமாக வழங்கினர் களப் பிரரும் பல்லவரும்.

தமிழும் தமிழ்ப் பார்ப்பாரும், அறிஞர்களும், கலைஞர்களும் ஒதுக்கப்பட்டனர்.  பின்தள்ளப் பட்டனர்.  இவ்வாறு ஆரியப் பிராமணர்களின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் நிலை நாட்டப் பட்டது.  பல்லவர்க்குப் பின் வந்த பிற்காலச் சோழர்களில் இராசராசன், இராசேந்திரச் சோழன் ஆகியோர் தமிழ், தமிழர் சிறப்புகளை மீட்பதில் முனைப்புக் காட்டினர். அவர்கள் ஆட்சியில் பிராமண ஆதிக்கம் ஒரு வரம்புக்குள் வைக்கப்பட்டது. இவ்விரு மன்னர்களும் ஆன்மிகத்தில் பிராமணியத்தையும் ஏற்றுக் கொண்டவர் ஆவர். மேற்கண்ட காரணங்களால் இவர்களால் பிராமண ஆதிக்கத்தை ஓரளவே கட்டுப்படுத்த முடிந்தது. தமிழ் நாட்டிற்கும் தமிழர்க்கும் உரியதான சிவ வழிபாட்டில் தமிழ் மீட்புப் பணிகளைச் செய்தான் இராசராசன்.  தேவாரத்தை மீட்டது தமிழ் ஓதுவார்களை அமர்த்தியது போன்ற சிலவற்றை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

இராசேந்திரச் சோழனுக்குப் பிறகு வாரிசில்லாமல் போன தால் தெலுங்குச் சோழர் ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டது.  சோழரும் பாண்டியரும் சண்டையிட்டு இருவரும் அழிந்தனர்.  நவாப் ஆட்சி உருவானது. அதை எதிர்த்து விசய நகரத் தளபதிகள் தமிழ்நாட்டைக் கைப்பற்றினர். விசயநகரத் தளபதிகள் ஆட்சி வெள்ளையன் வந்து நாடு பிடிக்கும் வரை நடந்தது. விசய நகரத் தளபதிகள் ஆட்சிக் காலத்தில் பிராமணியம், சமற் கிருதம், தெலுங்கு மூன்றும் செழித்து வளர்ந்தன. எல்லாம் தலைகீழாக மாறின. “சர்வ மானியம்” என்ற பெயரில் விசய நகர- நாயக்க மன்னராட்சி பிராமணர்களுக்கு வரிவிலக்கும் அரசு அதிகார விலக்கும் உள்ள நிலங்களை ஏராளமாகக் கொடையாகக் கொடுத்தது.

பிராமணியத்தால் ஏற்கெனவே நசிந்திருந்த தமிழ், தமிழர் மேன்மை, அறிவுத்துறை ஆன்மீகத்துறை, கலை-பண் பாட்டுத் துறை ஆகிய அனைத் தும் விசயநகர நாயக்கர்கள் ஆட்சியில் அடித்து வீழ்த்தப் பட்டன. பிராமணர், சமற் கிருதம், தெலுங்கர், தெலுங்கு மேலாதிக்கம் நிலை நாட்டப் பட்டது.  பிராமணர் - தெலுங்கர் கூட்டணி, சமற்கிருதம் தெலுங்குக் கூட்டணியாகவும் விளங்கியது. தமிழிலிருந்த கோயில் பெயர்கள், ஊர்ப் பெயர்கள் அனைத்தும் சமற் கிருதத்தில் மாற்றப் பட்டன. 

விசயநகரத் தளபதிகள் ஆட்சியில் வர்ணாசிரமம் தழைத்தோங்கியதால் பிறப்பின் அடிப்பைடையிலான சாதி மிகத் துல்லியமான எல்லைக் கோடுகளுடன் இறுக்கம் பெற்றது.  உயர் நிலையில் இருந்த தமிழர்கள் கீழ்ச் சாதிகளாக இறக்கம் பெற்றனர்.  பிராமணிய வரையறுப்பின்படி தமிழ்ச் சாதிகள் அனைத்தும் சூத்திர சாதிகளாயின. மற்றும் பஞ்சம சாதிகளாயின. 

உலகெங்கும் மனித குலத்தில் உருவாகி வளர்ச்சியடைந்த வர்க்கப் பிரிவினைகள் தமிழ்ச் சமூகத்திலும் ஏற்கெனவே உருவாகி வளர்ந்திருந்தன.  உடைமை மற்றும் உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உருவான வர்க்க உயர்வு தாழ்வு களை வர்ணாசிரமம் பிறப்பின் அடிப்படையில் மாற்றிய மைத்தது.

விசயநகர நாயக்கர் ஆட்சியில் வர்ணாசிரமம் கோலோச்சியபோது, தமிழரில் உடைமை அடிப்படையில் உயர்ந்தோராய் இருந்த மேல் தட்டு வர்க்கத்தார் தங்களை “சற்சூத்திரர்“ (உயர்ந்த சூத்திரர்) என்று சொல்லிக்  கொண்டனர்.  “வேளாளர்“ என்று வர்க்க அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட அவர்கள், பிராமணியப் பகுப்பின்படி சூத்திரர்கள் ஆகிப் போனதால், சூத்திரர் களுக்குள் தாங்கள் உயர்ந்தவர் கள் என்று காட்டிக்  கொள்ள, தங்களைச் ”சற்சூத்திரர்கள்” என்று அழைத்துக் கொண்ட னர்.

தொல்காப்பியம் குறிப்பிட்ட “வேளாளர்“ என்ற பிரிவுக்கு மிகவும் பிற்காலத்தில் விளக்கம் எழுதிய உரையாசிரியர்கள் வர்க்க அடிப்படையில்தான் உரை எழுதினர்.  வேளாளரில் இரு பிரிவினர் உள்ளனர்.  ஒரு பிரிவினர் “உழுதுண்போர்“, இன்னொரு பிரிவினர் “உழுவித் துண்போர்“ என்றனர்.  உழு துண்போர் என்பவர்கள் தாங்களே நிலத்தில் உழவு செய்து உண்டு வாழ்வோர்.  உழுவித்துண்போர் என்பவர் பிறரை உழச் செய்து அதன் பலனைத் தாங்கள் அனுப விப்போர் ஆவர். 

நிலவுடைமையும், நிலக் கிழமையும் நிலவிய காலத்தில் உரை எழுதியோர் இவ்வாறு விளக்கம் அளித்தனர். அப்பொ ழுதும் அவ்வுரையாசிரியர்கள் உழுவித் துண்போரை சற்சூத் திரர்கள் என்று கூறவில்லை.  ஆனால் நாயக்கர் ஆட்சியில் வர்ணா சிரமம் கோலோச்சி பிராமணர்களும் தெலுங்கு உயர் வகுப்பாரும் மேல் நிலையில் வைக்கப்பட்ட பின், வர்க்க அடிப்படையில் மேல் நிலையில் இருந்த நிலக் கிழார்களான வேளாளர்கள் தங்களைச் சற்சூத்திரர்கள் என்று கூறிக் கொண்டு, மற்ற தமிழர்களி லிருந்து தாங்கள் உயர்ந்தோர் என்று காட்டிக் கொண்டனர்.

ஒரு காலத்தில் அறிவுத்துறை சார்ந்த வகுப்பாக இருந்த பறையர், பிற்காலத்தில் கீழ் நிலைக்குத் தள்ளப் பட்டனர் என்பதைக் கீழ்வரும் வழக்கு தெளிவு படுத்தும்

“பார்ப்பானுக்கு மூப்பான் பறையன்
கேட்பாரின்றிக் கீழ்ச்சாதி ஆனான்“               (தொடரும்)

Pin It