குடந்தையில் நடந்த தமிழக இளைஞர் முன்னணி மாநாட்டில் முடிவு!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் இளைஞர் அமைப்பான தமிழக இளைஞர் முன்னணியின் ஆறாவது தமிழகமாநாடு 17.11.2012 அன்று குடந்தையில் எழுச்சியுடன் நடைபெற்றது. காலையில், குடந்தை தாராசுரம் நாடார் திருமண மண்டபத்தில் பேராளர் மாநாடு நடைபெற்றது.

பேராளர் மாநாட்டை வழிநடத்துவதற்காக, த.இ.மு. தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ரெ.சிவராசு, தமிழக இளைஞர் முன்னணி கோவை பொறுப்பாளர் தோழர் பா.சங்கர வடிவேல், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி ஆகியோர் அடங்கிய தலைமைக் குழு அமைக்கப்பட்டது. தமிழக மெங்கிலுமி ருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருந்த தமிழக இளைஞர் முன்னணியின் முன்னணி நிர்வாகிகள் இப்பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

 தமிழக இளைஞர் முன்னணியின் புதிய கொடியை ஏற்றி வைத்து, தமிழ்த்தேசப் பொதுவு டைமைக் கட்சிப்பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தொடங்கி வைத்தார்.

மறைந்த கேணல் பரிதி, குடந்தை கதிர் தமிழ் வாணன், தமிழறிஞர் விருத்தாச்சலனார், தோழர் ச.அர.மணிபாரதி, மற்றும் தமிழீழ விடுதலைப் போரில் உயிர் ஈகம் செய்த போராளிகளுக்கு அமைதி வணக்கம், செலுத்தப்பட்டது.

த.இ.மு. பொதுச்செயலாளர் தோழர் நா. வைகறை “தமிழக இளைஞர் முன்னணியின் நோக்கங்கள் மற்றும் அமைப்பு விதிகள்” என்ற ஆவணத்தை முன் வைத்தார். ஏற்கெனவே உள்ள த.இ.மு. கொள்கை அறிக்கையிலும், அமைப்புச் சட்டத்திலும் திருத்தங்கள் செய்யப்பட்டு, சுருக்கி, மேம்படுத்தப்பட்ட வரைவு ஆகும் இது.

பேராளர்கள் இதன் மீது விவாதம் நடத்தி, அதன் பிறகு மாநாட்டில் ஒரு மனதாக இவ் வரைவு ஏற்கப்பட்டது. தோழர் நா.வைகறை அதன் பிறகு முன்வைத்த மூன்றாண்டு வேலை அறிக்கை விவாதித்து ஏற்கப்பட்டது.

மாநாட்டின் முடிவில், 12 பேர் கொண்ட புதிய நடுவண் குழுவும், நடுவண் குழு நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழக இளைஞர் முன்னணியின் புதிய தலைவராக தோழர் கோ.மாரிமுத்து, பொதுச் செயலாளராக தோழர் க.அருணபாரதி, பொருளாளராக தோழர் பா.தமிழரசன், துணைத் தலைவராக தோழர் கெ.செந்தில்குமார், துணைப் பொதுச்செயலா ளராக தோழர் ஆ.குபேரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாலை குடந்தை மகாமகக் குளம் அருகில், எழுச்சியுடன் நடைபெற்ற பொது மாநாட்டில், தமிழகமெங்குமிருந்து த.தே.பொ.க., த.இ.மு, தோழர்களும், பெண்களும், இனஉணர்வாளர் களும் வாகனங்களில் வந்து கலந்து கொண்டனர். தமிழர்களின் மரபுக் கலைகளான தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன. குடந்தை நகர தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் வரவேற்புரை நிகழ்த்த, த.இ.மு. முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை மாநாட்டிற்குத் தலைமையேற்றார்.

முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்தது, தமிழர்களைத் தாக்கிய மலையாளி களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2011 திசம்பரில் தமிழகத்திலுள்ள மலையாள நிறு வனங்களை முற்றுகையிட்டுப் போராடி சிறை சென்ற தோழர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிவு வழங்கி பாராட்டப்பட்டது த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் தோழர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

மாநாட்டையொட்டி செம்மை இசையகம் அணியம் செய்திருந்த பாவலர் கவிபாஸ்கரின் “வீரமண்” இசைக் குறுந்தகடு வெளியிடப் பட்டது. தோழர் கி.வெங்கட்ராமன் வெளியிட முனைவர் த.செயராமன் முதற்படியைப் பெற்றுக் கொண்டார்.

மாநாட்டில் உரையாற்றிய த.இ.மு. புதிய பொதுச்செயலாளர் தோழர் க.அருணபாரதி, தமிழகத்தில் அதிகளவுக் குடியேறிவரும் வெளி யாருக்கு எதிராகவும், தமிழக அரசு அவர்களுக்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை ஆகியவை வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் வரும் திசம்பர் மாதத்தில் தமிழகம் தழுவிய அளவில் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் பரப்புரை நடத்தப்படும் என அறிவித்தார்.

த.இ.மு. புதிய தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, தமிழக இளைஞர்களை சீரழிக்கும் மதுக் கடைகளை எதிர்த்து, வரும் சனவரி 4ஆம் நாள் தமிழகமெங்கும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடத்தப்படும். த.இ.மு. ஆறாவது மாநாட்டின் முதன்மைத் தீர்மானம் இது என்று அறிவித்தார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால் ராசு, முனைவர் த.செயராமன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தோழர் அரிஹரன், மகளிர் ஆயம் தமிழக ஒருங்கி ணைப்பாளர் தோழர் அருணா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடை பெற்ற தர்மபுரி தீ வைப்பு குற்றம் குறித்து நீதி விசாரணை வேண்டும், பரமக்குடி, - மதுரை படு கொலைகளில் ஈடுபட்டவர்களைக் கண்ட றிந்து தண்டிக்க வேண்டும், தமிழீழம் குறித்து ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பும், இனப்படுகொலைப் போர்க்குற்றவாளிகளை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தவும் ஐ.நா. மன்றம் முன்வர வேண்டும், கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன.

மாநாட்டை நிறைவு செய்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் உரையாற்றினார். 1938இல் தமிழகத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து சிறை சென்று, சிறையிலேயே மாண்ட குடந்தையைச் சேர்ந்த மொழிப் போர் ஈகி தாளமுத்து அவர் களுக்கு குடந்தையில் தமிழக அரசு மணி மண்டபம் எழுப்ப வேண்டும் என்ற மாநாட்டுத் தீர்மானத்தை தானும் வழி மொழிவதாக தோழர் பெ.மணியரசன் அறிவித்தார்.

“ஈழத்தமிழர்களை மட்டுமல்ல தமிழ்நாட்டுத் தமிழர்களையும் இந்தியா பகையினமாகவேக் கருதுகிறது. இதற்கு அடுக்கடுக்கான சான்றுகள் வந்து கொண்டே இருக்கின்றன.

நேற்று (16.11.2012), பெங்களுரில் தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டம் நடுவண் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில் நடந்தது. தமிழக முதல மைச்சர் செயலலிதா சார்பில், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அக் கூட்டத்தில், செயலலிதாவின் அறிக்கையை அவர் படித்தார். தமிழக முதலமைச்சர் சொல்வதைப் பாருங்கள்.

“தமிழ்நாட்டிற்கு, 1076 கிலோ மீட்டர் நீள கடல் உள்ளது. ஆனால், இந்த கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க முடியவில்லை. தெற்கே மீன்பிடிக்கப் போனால், சிங்களப் படை சுட்டுக் கொல்கிறது. வடக்கே ஆந்திரக் கடலோரம் சென்றால், எல்லை தாண்டி வந்துவிட்டதாக ஆந்திரா மீனவர்கள், தமிழக மீனவர்களை கடத்திக் கொண்டு போகிறார்கள். பணயத் தொகை வாங்கிக் கொண்டு தமிழக மீனவர்களை பின்னர் விடுதலை செளிணிகிறார்கள். இதை தட்டிக் கேட்டு நடுவண்அரசு தடுப்பதில்லை. இந்தப் பக்கம் தென்மேற்கே கன்னியா குமரி மீனவர்கள் கேரளாப் பகுதிக்கு சென்று விட்டால், அங்கே கேரள மீனவர்கள் தமிழக மீனவர்களைத் தாக்குகிறார்கள்." இந்த உண்மைகளைத் தமிழக முதலமைச்சரே சொல்கிறார்.

இந்தியா ஒரு தேசமா? இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் போய் தொழில் செய்யலாம் என்கிறார்களே? தமிழர்களுக்கு அந்த உரிமை கிடையாதா? தமிழ்நாட்டில் மார்வாடிகளும், குஜராத்தி சேட்டுகளும் மலையாளிகளும், வட நாட்டவரும் புகுந்து, தொழில் வணிகம் அனைத் தையும் கைப்பற்றிக் கொள்கிறார்கள். ஆனால், இந்த பாழ்பட்ட தமிழின மீனவர்கள் ஆந்திரக் கேரளப் பகுதிகளிலே போய் மீன்பிடிக்க உரிமை யில்லை. புயல்காற்றில் வழி தவறிப் போனாலும் மீனவர்களைத் தாக்குகிறார்கள்.

தமிழர்களே, இந்திய அரசு இதை ஏன் தட்டிக் கேட்கவில்லை? இந்தியா தமிழர்களையும், மற்ற இனத்தவரையும் சமமாக கருதவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தமிழர்களுக்கு எதிரா கவே செயல்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?

எதிர்காலம் இளைஞர்களுக்குரியது. முதியவர் கள் இளைஞர்களுக்கு உரிமைகளை தக்கவைத்து கையளித்துச் செல்லவேண்டும். ஆனால், என் போன்றவர்கள் இளைஞர்களாக இருந்த காலத்தில் தமிழ்நாட்டிற்கு இருந்த உரிமைகளை, இன்றைய இளைஞர்களுக்குக் கையளித்துத் தர முடியாத அவலநிலை உள்ளது. நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது, காவிரி தமிழ் நாட்டில் கரைபுரண்டு ஓடியது. அந்த உரிமை நமக்கு இருந்தது. முல்லைப் பெரியாற்றில் 152 அடி தண்ணீர் தேக்கி, தென் மாவட்டங்களுக்கு பாசன நீர் தர முடிந்தது. கச்சத்தீவு தமிழ்நாட்டில் இருந்தது. மீன்பிடி உரிமை இருந்தது. பாலாற்று உரிமை இருந்தது.

ஆனால், இவையெல்லாம் இன்று இல்லை. சுதந்திர இந்தியா தமிழ்நாட்டிற்கு அளித்த பரிசுகள் இவைதான். இந்த உரிமைகளை மீட்க இளைஞர்கள் களம் காண வேண்டியத் தேவை இருக்கிறது. பெரியவர்களும் இளைஞர்களோடு சேர்ந்து போராட வேண்டியத் தேவை இருக்கிறது. தமிழக இளைஞர் முன்னணி, தமிழ்த் தேசத்தின் அடிமைத்தளையை அறுத்து, தமிழ்த் தேசக் குடியரசு நிறுவ, தமிழக மரபுரிமைகளை மீட்க உறுதியேற்க வேண்டும்.

தமிழ் இனத்திற்கு ஏற்பட்ட இந்த உரிமை இழப்புகள், தமிழ் இனத்தின் அனைவருக்கு மான உரிமை இழப்புகள். ஆனால் இந்த உரிமைகளை மீட்கின்ற திசையில் இளைஞர்களை செலுத் தாமல், தேர்தல் அரசியலில் உள்ள தன்னலக் கட்சிகள் சாதிவெறியைத் தூண்டி விடுகின்றன. தமிழ்த் தேசியத்தைப் பொறுத்தவரை மனிதர்கள் அனைவரும் சமம் - தமிழர்கள் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டைக் கொண்டுள்ளது. சாதி ஒடுக்குமுறையையும், தீண்டாமைக் கொடுமை யயும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறவே வெறுக்கிறது; எதிர்க்கிறது.

இந்த வேளையில் தமிழ்நாட்டில் சாதியச் சிக்கல்கள் தீவிரமாகி தன்னல சக்திகள் மக்களை பிளவுபடுத்துகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கலப்புத் திருமணத்தைக் காரணமாகக் காட்டி, சாதி வெறியர்கள் நடத்திய வெறியாட் டம் நாம் நாகரிகம் அடைந்து விட்டோமா என்ற ஐயத்தை ஏற்படுத்தியது. மூன்று கிராமங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களில் படித்த இளைஞர்கள் முதல் தலைமுறையாக அரசுப் பணிகளுக்கும், தனியார் நிறுவன வேலைகளுக் கும் போயிருக்கிறார்கள். சிலர் சொந்தமாகத் தொழில் செய்கிறார்கள். முன்பைவிட வசதியாக வாழ்கிறார்கள். அதில் பொறாமைப்பட்டே திட்டமிட்டு இத்தாக்குதல் நடந்துள்ளது.

பரமக்குடியிலும், மதுரையிலும் தேவர்கள் உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்ட சாதி இளை ஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்கு முன் அவர்கள் எங்களைக் கொன்றார்கள் பதிலடியாக இன்று நாங்கள் கொல்கிறோம் என்று தாழ்த்தப்பட்டவர்கள் சார்பில் பேசுவதாக யார் கூறினாலும் அது ஏற்க தக்கதல்ல. குற்றம் யார் செய்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். தேர்தல் கட்சிகள் தேவர் குரு பூசை, இமானுவேல் சேகரன் குரு பூசை ஆகியவற்றை பதவி ஆதாயத்திற்காக பெரிதாக்கி மக்களை மோதவிடுகிறார்கள். இது ஒட்டுமொத்தத் தமிழி னத்தை சிதைத்துவிடும். இச்சூழலில் தமிழர்கள் அனைவரும் ஓரினம் - ஒரு குலைக்காய்கள் என்ற உணர்வோடு, சமூக சமத்துவத்திற்கு, வழிகாட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் இளைஞர் களுக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட போராட் டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இளைஞர்களுடன் சேர்ந்து மேற்கொள்ளும்! போராடும்” என தோழர் பெ.மணியரசன் பேசினார்.

எழுச்சியாக நடந்தேறிய மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம்

 தமிழக அரசே டாஸ்மாக் மதுக்கடைகளை நடத்தி, இளைஞர்களை சீரழிக்கிறது. அரசின் சொந்த நிதியைப் பெருக்குவது என்ற பெயரால் மதுக்கடைகளை நடத்துவதை ஏற்க முடியாது. டாஸ்மாக் மதுக்கடைகளைத் தமிழக அரசு மூட வேண்டும் அத்துடன் இளைஞர்களின் ஆளு மைத் திறனை சீரழரித்து அவர்களை போதை அடிமைகளாக வைத்திருக்கும், பான் பராக், மாணிக்சந்த், ஹான்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை போதைப் பொருட்களையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

அண்மையில் இந்திய அரசு புகையிலை சார்ந்த பொருட்களை உணவு கலப்பட தடுப்புச் சட்டத் தின் கீழ் அறிவித்துள்ள காரணத்தால், பான்பராக், மாணிக் சந்த், ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பாக்குகளின் விற்பனையை மாநில அரசுகளே தடை செய்ய முடியும். மத்தியப் பிரதேசம், கேரளா, பீகார் ஆகிய மாநிலங்கள் குட்கா வகை பாக்குகளின் விற்பனைக்குத் தடை விதித் துள்ளன.

எனவே, தமிழக அரசு பான்பராக், மாணிக் சந்த், உள்ளிட்ட போதைப் பாக்குகளை தடை செய்வதுடன், முழு மதுவிலக்கை அமல்படுத்தி, மதுவால் சீரழியும் தமிழக இளையோர் சமூகத் தைக் காப்பாற்ற முன்வர வேண்டும்.

வடநாட்டு மார்வாடிகளின் தயாரிப்புகளான பான்பராக், மாணிக்சந்த், ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பாக்குகளை தமிழக வணிகர்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் இம்மாநாடு கோருகிறது.

டாஸ்மாக் மதுக்கடைகளை அரசு உடனே இழுத்து மூடவேண்டும் என வலியுறுத்தி வரும் 2013, சனவரி 4 ஆம் நாள் டாஸ்மாக்கடைகளை இழுத்துப்பூட்டும் போராட்டத்தை தமிழகமெங்கும் நடத்துவது என இம்மாநாடு தீர்மானிக்கிறது

வெளிமாநிலத்தவருக்கு வாக்களர் அட்டை- குடும்ப அட்டை வழங்காதீர்

1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் தமிழ் நாடு மொழிவழித் தாயகமாக உருவாக்கப்பட்ட பின் தமிழகத்தில் குடியேறி, தமிழகத்தின் தொழில், வணிகம், வேலை வாய்ப்புகளைக் கைப்பற்றி ஆதிக்கம் புரிந்து வரும், மார்வாடி, குசராத்தி சேட்டுகளையும், தமிழகத்தில் மிகை எண்ணிக்கையில் குடியேறியுள்ள இந்திக்காரர் கள், பீகாரிகள், மலையாளிகள், வங்காளிகள் உள்ளிட்ட அயல் இனத்தார் அனைவரையும் தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டுமென இம்மாநாடு ஒருமனதாகக் கோருகிறது.

ஏற்கெனவே, குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டுள்ள தமிழகத்தில், வந்தேறிகளான அயல் இனத்தாரால் கொலை, கொள்ளை, பாலியல் குற்றச்செயல்கள் என மேலும் குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டதை கவனத்தில் கொண்டு, தமிழக அரசு முறையான நடவடிக் கைகளை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டைக் கலப்பினத் தாயகமாக உரு மாற்றி, தமிழர் தாயகத்தை சிதைக்கும் வன்ம நோக்குடன் இந்திய அரசு இது போன்ற குடியேற்றங்களை ஊக்குவிப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் நுழையும் வெளி மாநிலத்தவர்க்கு, வாக்காளர் அட்டையும், குடும்ப அட்டையும் கொடுக்கக் கூடாதென தமிழக அரசை இம்மாநாடு கோரு கின்றது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி, வரும் திசம்பர் மாதம் தமிழகமெங்கும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் பரப்புரை நடத்துவதென இம்மாநாடு ஒருமனதாக முடிவு செய்கின்றது. இப்போராட்டத்திற்கு, தமிழர்கள் அனைவரும் கட்சி கடந்து ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

தர்மபுரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடி யிருப்புகள் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு, நீதி விசாரணை வேண்டும்.

தர்மபுரி நாயக்கன் கொட்டையில், தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த இளவரசனும், வன்னியர் வகுப்பைச் சேர்ந்த திவ்யாவும், காதலித்து முறைப் படி திருமணம் செய்து கொண்டதை எதிர்த்து, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி பகுதிகளில் 07.11.2012 அன்று மாலை சாதி ஆதிக்க வெறியர் கள் நடத்திய அட்டூழியத் தாக்குதலால் சற் றொப்ப 200க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக் களின் வீடுகளும், உடைமைகளையும் சேத மாகியுள்ளன.

சொத்துகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. குடும்ப ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளன. சாதி ஆதிக்க வெறியர்களின் இந்த அட்டூழிய நட வடிக்கையை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக் கிறது. சாதி மோதலுக்கான அறிகுறிகள் தெரிந்தும் கூட, அங்கு காவல்படையை அதிகரிக் காமல் அலட்சியமாக இருந்த தமிழகக் காவல் துறையினருக்கு இம்மாநாடு கண்டனம் தெரிவிக் கிறது.

தர்மபுரி தீ வைப்பு மற்றும் கொள்ளை நிகழ்வுகளில் ஈடுபட்ட அனைவரையும், வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். முழுமையாகவும், பாதியாகவும் பாதிப்பு அடைந்த வீடுகளுக்கு பாரபட்சம் காட்டாமல், அனைத்து வீடுகளுக்கும் மாற்றாக புதிய வீடுகளைத் தமிழக அரசு கட்டித் தர வேண்டும். அத்துடன் அவர்களுக்கு உடனடியாக அவர்கள் குடும்பம் நடத்துவதற்குப் பொருட்கள் வாங்க நிதி உதவி வழங்க வேண்டும்.

பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை யில், விசாரணை ஆணையம் அமைத்து தர்மபுரி தீ வைப்பு நிகழ்வுகள் குறித்து விசாரிக்க வேண்டு மென இம் மாநாடுக் கேட்டுக் கொள்கின்றது.

தமிழர்கள் அனைவரும் சாதி கடந்து ஒற் றுமையாய் நின்று, நம் உரிமைகளை மீட்பதற்குப் போராடுவதற்கு மாறாக, சாதியின் அடிப்படையில் தங்களுக்குள் அழிவுகளை உண்டாக்கிக் கொள் வது, தன்னழிவுப் பாதையாகும். மனிதர்கள் அனைவரும் சமம்; தமிழர்கள் அனைவரும் சமம் என்ற அறம் சார்ந்த கொள்கையான தமிழ்த் தேசியம்தான் சாதிப் பிளவுகளை முறியடிக்கும் மருந்தாகும். இதனை உணர்ந்து, தமிழர்கள் சாதிப் பெருமிதத்தை எந்த வடிவிலும் ஏற்றுக் கொள்ளாது அறுவருத்து ஒதுக்க உறுதியேற்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள் கின்றது.

பரமக்குடி, மதுரை, படுகொலைகள்: - குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்க

ஈகி இமானுவேல் சேகரன் (செப்டம்பர் 11) நினைவு நாளும், முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளும் (அக்டோபர் 30) ஒவ்வொரு ஆண்டும் பதற்றத்தோடுதான் நடக்கின்றன. சில ஆண்டுகளில் படுகொலைகளும் சேர்ந்துகொள் கின்றன.

கடந்த ஆண்டு இமானுவேல் சேகரன் நினைவு நாளில் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் 6 பேர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பழனிக்குமார் என்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவன் மேல்சாதி வெறியர்களால் கொல்லப் பட்டான்.

இவ்வாண்டு, முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளை ஒட்டித் தேவர் வகுப்பினர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். பரமக்குடிப் பகுதியில் காவல்துறை வகுத்துக் கொடுத்த பாதையைத் தாண்டி வேறு பாதையில் சென்ற மூவர் அடித்துக் கொல்லப் பட்டனர்.

ஒரு டாட்டா சுமோ ஊர்தியில் பசும்பொன் சென்று திரும்பியவர்கள் மீது தேவேந்திரர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதுரை அருகே, பெட்ரோல் குண்டு வீசினர். அதில், படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோரில் இது வரை ஆறு பேர் இறந்துபோயினர். இவை அனைத்தும் கொடுமையான பச்சைப் படு கொலைகள் ஆகும். கொலைகாரர்கள் தண்டிக் கப்பட வேண்டியவர்கள்.

தலைவர்களுக்கு வணக்கம் செலுத்துவது என்ற பெயரில் இருவகுப்பினரும் தங்கள் தங்கள் சாதி வலிமையைக் காட்டிக் கொள்ளவே முனை கின்றனர். இவ்விரு தலைவர்களின் நினைவு நாளுக்கு அங்கு செல்லும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அந்தந்த சாதி வாக்குகளைப் பெறும் நோக்கத்திலேயே செல்கின்றனர். அதனால்தான், அண்ணா, பெரியார், காமராசர் நினைவிடங்களைவிட மேற்கண்ட இருவரின் நினைவிடங்கள் “புகழ்” பெற்று விளங்குகின்றன.

தாங்கள் போற்றும் தலைவர்களை சாதி மோதலுக்குரிய சின்னங்களாக மாற்றுவது அத்தலைவர்களுக்கு செலுத்தும் மரியாதை அன்று; அவமரியாதை ஆகும்.

தமிழர்கள் அனைவரும் சாதி கடந்து ஒற்றுமையாய் நின்று, நம் உரிமைகளை மீட்ப தற்குப் போராடுவதற்கு மாறாக, சாதியின் அடிப் படையில் தங்களுக்குள் அழிவுகளை உண்டாக் கிக் கொள்வது, தன்னழிவுப் பாதை யாகும்.

இதனை உணர்ந்து, தமிழர்கள் சாதி உணர்வை எந்த வடிவிலும் ஏற்றுக் கொள்ளாது அறுவருத்து ஒதுக்க உறுதியேற்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.

பரமக்குடியிலும், மதுரையிலும் கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர அரசு நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். என இம் மாநாடு வலியுறுத்துகிறது.

இனப்படுகொலைக் குற்றவாளிகளை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்துக! தமிழீழம் குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்துக !

2009 ஏப்ரல், -மே மாதங்களில், சற்றொப்ப 1,40,000க்கும் மேற்பட்ட தமிழீழத் தமிழர்களை, இந்தியாவின் துணையுடன் சிங்களப் படைகள் இனப்படுகொலை செய்தன. அப்போருக்குக் காரணமான சிங்கள அதிபர் இராசபக்சே தலைமையிலான இனப்படுகொலைக் குற்றக் கும்பலை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி, இனப்படுகொலைக்குத் தண்டனைப் பெற்றுத் தர வேண்டும் என ஐ.நா. மன்றத்தை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

ஒரு பக்கச் சார்பாக செயல்பட்ட ஐ.நா. மன்றம், தனது போக்கைத் திருத்திக்கொள்ள வேண்டும். தமிழீழம் குறித்து, ஈழத்தமிழர்களி டையே உலக நாடுகள் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தி, முடிவு செய்யவேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.

தமிழக அரசு, இலங்கை மீதான பொருளியல் தடைக்கு செயல்வடிவம் கொடுக்கவும், தமிழ் நாட்டில் தங்குதடையின்றி நுழையும் சிங்களர் களுக்குத் தடைவிதிக்கவும் முன்வர வேண்டும். மேலும், சிறப்பு முகாம் என்ற பெயரில் தமிழகத் தில் செயல்பட்டுக் கொண்டுள்ளவதை முகாம் களில் அடைக்கப்பட்டுள்ள தமிழீழத் தமிழர் களை, திறந்தவெளி அகதிகள் முகாமிற்கு மாற்றி, சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

 மேற்கண்ட தீர்மானங்கள் தவிர கீழ்வரும் தலைப்பிலான தீர்மானங்களும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தமிழக மின்சாரம் தமிழ்நாட்டிற்கே!

ஆற்று நீர் உரிமைகளைப் பாதுகாப் போம்!

தமிழ்வழிக் கல்வியில் பயின்றோருக்கு உயர்கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வேண்டும்!

அணுஉலைகளை இழுத்து மூடுக!

மூவர் தூக்குத் தண்டனையை இரத்து செய்க!

அணு உலை எதிர்ப்பாளர்கள், ஆதித் தமிழர் பேரவை நிர்வாகிகள், முன்னாள் நக்சல் பாரிகள் உள்ளிட்ட மக்கள் போராளிகள் மீதான அடக்கு முறையைக் கைவிடுக!

மொழிப்போர் ஈகி தாளமுத்துவுக்கு குடந்தையில் மணிமண்டபம் நிறுவுக. மாநாட்டு நிறைவில் தோழர் செந்தமிழன் நன்றி நவின்றார்.

எதிர்கால தமிழ்ச் சமூகம், தமிழ்த் தேசியம், நோக்கி ஈர்க்கப்படுவது திண்ணம் என்பதை இம்மாநாட்டில் திரளாகக் கூடிய இளைஞர் களின் எண்ணிக்கையும், மாநாட்டில் பெருமள வில் விற்பனையான தமிழ்த் தேசிய நூல்களும் எடுத்துக்காட்டியது.

Pin It