இசுரேலின் கொடுந்தாக்குதால் உருக்குலையும் பாலத்தீனம்

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்னணி அடியாளாக நின்ற உலகை மிரட்டி வரும் இசுரேல் அரசு, கடந்த 14.11.2012 அன்று முதல், திடீரென பாலத்தீனத்தின் காசா பகுதிகளில் கடும் தாக்குதல்களை ஏவியது.

பாலத்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் “பயங்கரவாதிகள்” மீதான தாக்குதல் என்ற பெயரில், யூதவெறி இசுரேல் அரசு நடத்திய இக்கொலைவெறித் தாக்குதலில் சற்றொப்ப, 90க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் சில தினங்களில் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலும் பெண்களும், பிஞ்சுக் குழந்தைகளும் அடங்குவர்.

கடந்த 18.11.2012 அன்று மட்டும், இசுரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலால், 5 குழந்தைகள் உள்ளிட்ட 31 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 14.11.2012 தொடங்கிய ஆறு நாட்களில் மட்டும் சற்றொப்ப 1350 முறை காசா மீது தாக்குதல் நடத்தியதாக, மனிதகுலப் படுகொலை செய்ய எந்தவிதத் தயக்கமும் இன்றி புள்ளி விவரம் வெளியிடுகிறது.

இத்தாக்குதலின் போது, காசா மீது தரைவழித் தாக்குதலை நடத்த, 75 ஆயிரம் இராணுவத் தினரை ஆயத்தமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேடன்யாகு.

பாலத்தீனத் தாயகப் பகுதியான காசாவை, 1967இல் அடாவடித்தனமாக ஆக்கிரமித்த இசுரேல் நாடு, கடந்த 2005-ம் ஆண்டுதான், அனைத்துலக நர்டுகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து வெளியேறியது. அதன்பின், 2007இல் காசா பகுதியில் நடைபெற்ற தேர்தலில் பாலத்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் பெருவெற்றி பெற்றதைத் தொடர்ந்து, காசா மக்களை பணியவைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது இசுரேல். உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தடை, பொருளியல் தடை என பல தடைகளை விதித்து பாலத்தீன மக்களைப் பணியவைக்க முயன்றது இசுரேல்.

ஆனால், எதிர்பார்த்தது நடக்கவில்லை. மக்கள் பணியவில்லை. அதனால், தொடர்ந்து, காசாவை மீண்டும் ஆக்கிரமிக்க வேண்டுமென்ற வெறியுன் அவ்வப்போது இசுரேல் தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையில் இப்போதுவரை பாலத்தீனம் “பார்வையாளர்” (Observer) என்ற தகுதி நிலையில் உள்ளது. அதனை “உறுப்பினர் அல்லாத நாடு” (Non-member state) என்ற தகுதி நிலைக்கு உயர்த்திக் கொள்ள உலகின் பெரும்பாலான நாடுகளின் ஆதரவைப் பெற்றுவிட்டது.

2012 நவம்பர் 29இல் நடைபெறும் வாக்கெடுப்பில் பாலத்தீனம் “உறுப்பினர் அல்லாத நாடு” என ஏற்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவ்வாறான தகுதியைப் பாலத்தீனம் பெற்றுவிட்டால் ஐ.நா.வின் பல்வேறு உறுப்பு அமைப்புகளில் யுனிசெப், ஐ.நா. மனித உரிமை மன்றம் போன்றவை) பாலத்தீனம் இடம் பெற வாய்ப்பு ஏற்படும்.

பிறகு இந்த உறுப்பு அமைப்புகளில் எல்லாம் இசுரேல் அமெரிக்க அச்சுக்கு எதிரான விவாதங்கள் எழும். இதனைத் தடுக்கும் நோக்குடனேயே இசுரேல் இத்தாக்குதலை நடத்தியது.

இசுரேல் மட்டும் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இருதரப்பும் போரை நிறுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். பாலத்தீனத்தின் மீதான போரை நிறுத்த, எகிப்து அரசு முயற்சிகளை எடுத்ததன் விளைவாக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

பொருளியல் நெருக்கடியால் ஐரோப்பாவிலும் அதிகரித்த தற்கொலைகள்

கடந்த 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரும் பொருளியல் நெருக்கடி, அமெரிக்காவில் வேலையிழந்த பலரையும் தற்கொலைக்குத் தள்ளியதை, 2008 மார்ச் தமிழர் கண்ணோட்டம் இதழில் நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.

தற்போது, அதே போன்றதொரு பொருளியல் நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஐரோப்பாவில், அதன் விளைவாக நடைபெறும் தற்கொலைகள் அதிகரித்துள்ளன.

கடந்த மே மாதத்தில் இத்தாலியின் ரோம் நகரில் அமைந்துள்ள பாராளுமன்றக் கட்டிடத்தின் முன், வேலையிழந்து விரக்தியடைந்த ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரைத் தொடர்ந்து அதே போல், இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.

பிரிட்டன், பிரான்ஸ், கிரேக்கம் உள்ளிட்ட பல ஐரோப்பா நாடுகளிலும், பொருளியல் நெருக்கடியின் காரணமாகவும், வேலையிழப்புக் காரணமாகவும் நடைபெறுகின்ற தற்கொலை களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

ஐரோப்பிய நாடுகளிலேயே குறைந்த விகிதம் தற்கொலைகள் நடைபெற்ற கிரேக்க நாட்டில், பொருளியல் நெருக்கடியின் விளைவாக, வேலையின்மை விகிதம் 20 ஆக உயர்ந்துள்ள நிலையில், தற்கொலைகளின் விகிதம் இருமடங்காக உயர்ந்துள்ளது. 2011ஆம் ஆண்டு, அந்நாட்டு சுகாதாரத் துறை எடுத்த ஆய்வின்படி, கடந்த ஆண்டை விட 40 விழுக்காடு அளவிற்கு தற்கொலை விகிதம் உயர்ந்திருப்பதாகக் கூறியது.

கிரேக்கத்தைப் போலவே, போர்த்துகல், அயர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும் இதே போன்ற நிலை நீடிக்கிறது.

உழைக்கும் மக்களைத் தற்கொலைக்குத் தள்ளிய உலகமயத்தை, என்றைக்கு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, தண்டிப்பது என்பதை, ஐரோப்பிய உழைக்கும் மக்கள் உணர்ந்து, முடிவெடுக்க வேண்டும்.

Pin It