மருத்துவர் செ.நெ.தெய்வநாயகம் அவர்கள் சென்னையில் 20.11.2012 திங்கள்கிழமை காலமானார்.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக 1981ம் ஆண்டு நெஞ்சக நோய் மருத்துவப் பிரிவை ஏற்படுத்திய பெருமை டாக்டர் தெய்வநாயகத்துக்கு உண்டு. இலண்டனில் உள்ள ராயல் மருத்துவக் கல்லூரியில் எம்.ஆர்.சி.பி., எஃப்.ஆர்.சி.பி. பட்டங்களைப் பெற்றவர்.

அலோபதி மருத்துவராக இருந்தாலும், தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தின் சிறப்பைப் பரப்பியவர்.

சித்த மருத்துவக் குழுவினருடன் இணைந்து "ஹெல்த் இந்தியா பவுண்டேஷன்' அமைப்பை ஏற்படுத்தி பொது மக்களுக்கு அலோபதி-சித்த மருத்துவத்தை இணைத்து ஒருங்கிணைந்த முறையில் சிகிச்சை அளித்து வந்தார்.

இத்தகைய சிகிச்சை முறை காரணமாக ஆயிரக்கணக்கான எய்ட்ஸ் நோயாளிகள் பலன் அடைந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மருத்துவக் கல்லூரியில் நெஞ்சக நோய்த் துறையின் தலைவராகவும், போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.

மருத்துவப் பணியுடன் சேர்த்து மருத்துவர் தெய்வநாயகம் கல்விப் பணியிலும் ஈடுபட்டு வந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள செ.தெ.நாயகம் பள்ளியின் செயலாளராக இருந்தார்.

இலாப நோக்கமின்றி 3 மேல்நிலைப் பள்ளிகள், ஓர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, குழந்தைகள் இல்லம் ஆகியவற்றைச் சென்னையிலும், திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்திலும் நடத்தி வந்தார்.

வெளிநாடுகளில் ஆங்கில மருத்துவத்துறையில் உயர்க்கல்விக் கற்று பொறுப்புகள் வகித்த அவர், சித்த மருத்துவத்தின் மேன்மையை உலகறியச் செய்தார். இனியத் தமிழில் பேசுவதில் மதிப்பும் மகிழ்ச்சியும் கொண்டவர் அவர். ஒரு துடிப்புள்ளத் தமிழ்த் தேசியராக வாழ்ந்தார். தமிழின உணர்வுக் கருத்துகளைப் பரப்பினார். ஈழத் தமிழர்களுக்கு துணையாய் செயல்பட்டார்.

இந்திய அரசின் துணையோடு, சி்ங்கள இனவெறி அரசு, தமிழின அழிப்புப் போர் நடத்திய 2008-2009ஆம் ஆண்டுகளில், போர் நிறுத்தம் கோரியோ, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுத் தெரிவித்தோ, பொதுக் கூட்டங்கள் நடத்த சென்னையில் தி.மு.க. அரசு அனுமதி மறுத்தது. அப்போது, தனது தலைமையிலுள்ள தியாகராயர் நகர் செ.தெ. நாயகம் மேனிலைப் பள்ளி வளாகத்தில் ஈழத்தமிழர் ஆதரவுக் கூட்டங்களையும், தமிழின உணர்வுக் கூட்டங்களையும் நடத்த அனுமதி தந்தார். இந்த வகையில் தமிழினத்திற்கு ஆதரவான கருத்துப் பரப்பலுக்குப் பெருந்துணையாய் நின்றார்.

கொடிய எய்ட்சு நோயிலிருந்தும், நெஞ்சக நோய்களிலிருந்தும் பலரின் உயிரைப் பாதுகாத்த மக்கள் மருத்துவர் தெய்வநாயகம் ஆவார்.

21.12.2012 அன்று நடைபெற்ற அவரது இறுதி நிகழ்வில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர்மணி, பேராசிரியர் பி.யோகிசுவரன், இயக்குநர் புகழேந்தி தங்கராசு உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் தோழர்கள், க. அருணபாரதி(தலைமைச் செயற்குழு) பழ.நல் ஆறுமுகம் (பொதுக்குழு உறுப்பினர்), கவிபாஸ்கர் (த.தே.தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு) பாலா, கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மருத்துவர் தெய்வநாயகம் அவர்களுடைய இறப்பு, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமின்றி ஈழத்தமிழர்களுக்கும் பேரிழப்பாகும். மருத்துவர் செ.தெ.தெய்வநாயகம் அவர்களுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்துகிறது.

Pin It