எங்கு பெண்கள் தன்முயற்சியில் முன்னேறி வந்தாலும் அவர்களுக்குரிய இடத்தைத் தர மறுப்பது ஆண்களின் இயல்புதான்.

இதற்கு பிரித்தானியக் கலைக் களஞ்சியமும் விதிவிலக்கன்று. இந்தக் கலைக்களஞ்சியத்தில் 1911ஆம் ஆண்டு பதிப்பு எப்படி நிறவெறியுடன் செயல் பட்டது என ஏற்கெனவே கண்டோம். அதே காலக் கட்டத்தில் வாழ்ந்த ஒரு மாமனிதர் மேரி கியூரி ஆவார். இந்தப் பெண் மணி மனித நேயத்துடன் வாழ்ந்த மாபெரும் அறிவியலாலர் ஆவார். ரேடியம் என்னும் தனிமத்தைக் கண்டு பிடித்தவர். தன் உடற்கேட்டையும் பொருட் படுத்தாது புற்றுநோய்க்குத் தீர்வு காணும் வகையில் ரேடியக் கதிர்வீச்சு குறித்து ஆய்வு செய்தவர். கதிர்வீச்சுடனான இந்தத் தீவிர ஆய்வே அவர் உயிரையும் குடித்தது. அவர் தமது கண்டுபிடிப்புகள் எதற்கும் காப்புரிமை வாங்கி வைத்துக் கொள்ள வில்லை. எனது அறிவனைத்தும் இந்த மாந்தக் குலத்துக்குச் சொந்தம் என அறிவித்தார். பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் தான் பிறந்து வளர்ந்த நாடான போலந்து நாட்டின் மீதும், போலந்து மொழியின் மீதும் பற்று வைத்திருந்தார். அதனால் தாம் கண்டுபிடித்த இன்னொரு தனிமத்துக்குப் பொலானியம் எனப் பெயர் சூட்டினார். அறிவியலின் இருவேறு துறைகளில் நோபல் பரிசு பெற்ற ஒரே மனிதர் இவர்தான்.

1903இல் இயற்பியலுக்கும், 1911இல் வேதியலுக்கும் நோபல் பரிசு பெற்றார். ஆனால் 1911ஆம் ஆண்டு பிரித்தானியக் கலைக் களஞ்சியத்தில் இவர் பெயரே இடம்பெற வில்லை! ஆனால் ஒரே ஓரிடத்தில் இவருக்கு அந்தக் கலைக்களஞ்சியம் இடமளித்தது. அவர் கணவராகிய பியரி கியூரி என்னும் தலைப்பின் கீழ், பியரியின் மனைவி மேரி என்று மட்டும் குறிப்பிட்டிருந்தது பிரித்தானியக் கலைக்களஞ்சியம்!

அலுவலகப் பணியிடங்களில் உயர்ந்த இடங்களைப் பிடித்த பெண்களை கேட்டி வுமன் எனச் சராசரி ஆண் கிண்டலடிக்கிறான் என்றால், மாபெரும் அறிவியல் சாதனை படைத்த ஒரு பெண்மணியின் பெயரையே மறைக்கிறது பிரித்தானியக் கலைக்களஞ்சியம்.

இப்படிச் சமுதாயமும் இலக்கியங்களும் சாதனை படைத்த பெண்களுக்குக் கூட அவர்களுக்குரிய இடத்தைத் தர மறுக்கின்றன. அலுவலகத் தளத் தில் மட்டுமல்லாது, அரசியல் தளத்திலும் ஆண் களின் வசைபாடலிலிருந்து ஆங்கிலப் பெண்கள் தப்புவதில்லை.

அமெரிக்காவில் நடைபெறும் தேர்தல்களில் ஆண் வேட்பா ளர்கள் பெண் வேட்பாளர்களை இழிவாகக் கிண்டலடிப்பது வழக்கம். கடந்த 2010 நவம்பர் 2 அன்று அமெரிக்க செனட் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலுக்கான பரப்புரையில் ஆண் வேட்பாளர்கள் பெண் வேட்பாளர்களை எப்படி எல்லாம் கிண்டலடித்தார்கள் என யு.எஸ்.எ டுடே (இன்றைய அமெரிக்கா) என்னும் நாளிதழ் பதிவு செய்கிறது. இத்தனைக்கும் இதில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் ஏற்கெனவே செனட் உறுப்பினர்கள் ஆவார்கள்.

இத்தகைய இடத்தில் இருப் பவர்களையே ஆண் வேட்பா ளர்கள் தேவடியா எனப் பொருள்படும் வகையில் கேலி செய்ததை மிகவும் அதிர்ச்சியுடன் குறிப்பிடுகிறது யு.எஸ்.எ டுடே. செனட் பெரும்பான்மைத் தலைவராகிய ஹேரி ரீட் ஒரு பேட்டியில் புது யார்க் செனட் டராகிய கிரிஸ்டன் கில்லி பிராண்ட் என்னும் பெண்மணி பற்றிப் பேசும் போது, இருக்கும் பெண் செனட்டர்களிலேயே இவர்தான் ‘மிகக் கிளு கிளுப்பான உறுப்பினர்’ ((hottest member)) என ஆபாசமாகப் பேசினார். குடிசரசுக் கட்சியின் அலாஸ்கா செனட்டராகிய லிசா முர் கோவ்ஸ்கி என்னும் பெண் உறுப்பினரை “a member of the world’s oldest profes sion” எனக் குறிப்பிட்டார் ஓர் ஆண் வேட்பாளர், அதாவது “உலகின் பழம்பெரும் தொழி லின் உறுப்பினர்” என ஒரு பெண்ணைப் பார்த்துக் குறிப் பிட்டால், ஆங்கிலத்தில் இடக் கரடக்கலாக ‘தேவடியா’ என்று பொருள்.

ஒரு தொலைக்காட்சியில் தேர்தல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்திய ஒருவர் சனநாயகக் கட்சியின் லூவ்சியானா செனட்டராகிய மேரி லேன்ட்ரியூ என்னும் பெண்ணை ‘உயர்தர விபச்சாரி’ (high-class prostitute) எனப் பச்சையாகவே குறிப்பிட்டார். மற்ற உறுப்பினர்களிடம் அதிகம் பேசாத பெண்ணைக் கிண்டலாக ice queen (ஐஸ் க்வீன்) என்றும் (தமிழில் கண்ணகி பரம்பரை எனக் கிண்டலடிப்பது போல), மற்ற உறுப்பினர்களிடம் அதிகம் பேசிப் பழகும் பெண்ணை mean girl (மீன் கேள்) என்றும் (தமிழில் அலட்டல்காரி என்பது போல்) மிகச் சாதாரணமாக பல ஆண் வேட்பாளர்களும் தங்கள் தேர்தல் பரப்புரைகளில் குறிப் பிட்டுப் பேசியதை வருத்தத்துடன் பதிவு செய்கிறது யுஎஸ்எ டுடே. அமெரிக்க நாளிதழ்கள் விற் பனையில் முதலிடத்தில் இருக் கும் இந்த நாளிதழ் தேர்தல் களுக்குச் சில நாள்களுக்கு முன்பு (செப்டம்பர் 1-8) வாக்காளர்களிடம் இத்தகைய ஆணாதிக்க வசைபாடல்கள் குறித்துக் கருத்துக் கேட்டது.

இப்படிப் பழித்துப் பேசப்பட்ட பெண் வேட்பாளர்களுக்கு முன்பிருந்ததை விட வாக்காளர் களிடம் ஆதரவு குறைந்து விட்டது என்ற உண்மை அந்தக் கள ஆய்வில் வெளிப்பட்டது. இந்தத் தேர்தல் கணிப்புகள் அமெரிக்கப் பண்பாட்டில் பெண்மைக்கு எதிரான ஆங்கில இழிச்சொற்கள் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. தமிழகத் தலைவர்களை விஞ்சி விட்டனர் அமெரிக்கத் தலைவர்கள்!

இப்படி வம்படியாகப் பேசி பெண்களை அலுவலகத்திலும், அரசியலிலும் வதைபடுத்தும் ஆண்களை எதிர்த்துப் பெண்ணி யர்கள் போராடுகிறார்கள், ஆனால் இந்தப் பெண்ணியர் களின் தலையிலும் அமெரிக்க ஊடகர்கள் கை வைத்து விடு கிறார்கள்.

அமெரிக்காவிலிருந்து நமக்கு ஏற்கெனவே அறிமுகமான ரஷ் லிம்பாவ் தமது ரஷ் லிம்பாவ் ஷோ என்னும் வானொலி நிகழ்ச்சியில் பெண்ணியர்களை இவ்வாறு கிண்டலடித்தார்: “கேளுங்கள் நேயர்களே! பாலியல் வன்கொடுமையால் அல்லல்படுவதாக அலட்டிக் கொள்ளும் இந்தக் குட்டிகள் உள்ளபடியே கவலைப்படுவது எதற்குத் தெரியுமா? நமக்கும் அப்படி ஏதும் நடக்கவில்லையே என நினைத்துதான்!”

அமெரிக்க நிலைமை இப்படி என்றால் ஆஸ்திரேலிய ஆங்கி லத்தின் ‘முற்போக்கு’ என்ன வென்று சற்றே பார்ப் போம்.

ஆஸ்திரேலிய நீதித்துறையின் ஆணாதிக்கச் சொல்லாடல் மிகக் கொடுமையானது என்று பல ஆஸ்திரேலிய ஊடகங்களும் பதிவு செய்கின்றன.

சில நீதிபதிகள் உதிர்த்த முத்துக்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவில் விக் டோரியா நீதிமன்றத்தின் நீதிபதி ஜான் எவன் பிளண்ட் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான பெண்ணைப் பார்த்துச் சொல் கிறார்: “என்னைப் போன்று வெகு காலமாக நீதித்துறையில் செய லாற்றி வருவோரின் அன்றாட அனுபவத்திலிருந்து நன்றாகவே தெரிந்த செய்தி, ஒரு பெண் ‘வேண்டாம்’ என்றால் பெரும்பாலும் ‘வேண்டும்’ என்றுதான் அர்த்தம்.”

தெற்கு ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்ற நீதிபதி டெரக் போலன் கணவனிடம் அடி வாங்கிய மனைவியைப் பார்த்துக் கூறுகிறார்: “உங்கள் கணவர் செய்ததில் தவறேதும் இல்லை, உடலுறவுக்கு வரத் தயங்கும் மனைவியை வேறென்ன செய்ய முடியும்? அத்தகைய சூழலில் அவளை எப்போதும் போலவே கையாள முடியாது, அவள் மனத்தை மாற்றுவதற்குக் கொஞ்சம் வன்முறையாகத்தான் நடந்து கொள்ள வேண்டியுள் ளது.”

ஒரு வழக்கில் குற்றம் சாற்றப்பட்டுக் குட்டைப் பாவாடை அணிந்து நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்து சிட்னி நீதிமன்ற நீதிபதி ஒருவர் சொல்கிறார்: “உன் பாவாடை உயரத்தை உன் அறிவு தொடும் போது நீ இங்கு வந்தால் போதும்.”

ஆஸ்திரேலியாவில் இல்ல வன்முறை குறித்து 1999இல் அமைக்கப்பட்ட நீதித்துறைக் குழுவில் இடம்பெற்ற நீதிபதி ஒருவர் கூறிய கருத்து: “பெண்கள் நச்சரித்தும், வசை பாடியும் ஆண்களை உணர்வு வகையில் துன்புறுத் துகிறார்கள். சில ஆர் மோன் களின் செயல் பாட்டால் ஆண் களும் பதிலுக்கு இப்படி வசைபாட முடியாது. எனவே தான் பலநேரங்களில் அவர் களுக்கு வன்முறையைக் கையாள்வது தவிர வேறு வழியில்லாது போகிறது.”

ஜூலியா ஜில்லார்ட் இன்றைய ஆஸ்திரேலியத் தலைமை அமைச்சர் ஆவார். தொழிலாளர் கட்சியை சேர்ந்த இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். முன்பு அவர் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த போதே தலைமை அமைச்சராகும் வாய்ப்பு உள்ளவராகக் கருதப் பட்டவர். அப்போது இது குறித்து தன்னுரிமைக் கட்சியை (Liberal Party)) சேர்ந்தவரும் அன்றைய தலைமையமைச்சர் ஜான் ஹோவர்டுக்கு மிக நெருக்கமாக இருந்தவருமான பில் ஹெஃ பர்னன் தி புல்லடின் எனப்படும் ஆஸ்திரேலிய வார இதழுக்கு மே 2007இல் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்: “ஒரு தரிசு நிலமாகத் தன்னை வைத்துக் கொண்டிருக்கும் ஜூலியா ஒரு நாட்டைத் தலைமையேற்றுச் செல்வதற்குத் தகுதியில்லாதவர். நான் சொல்ல வருவது என்னவென்றால், குழந்தை இல்லாத பெண்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன? சமூகம் என்றால் என்ன? எனத் தெரியாது.”

அரசியலில் உயர்ந்த இடத்தில் இருக்கும் குழந்தையில்லாத ஒரு பெண்ணைப் பார்த்து, அவருக்கு நாட்டை ஆளும் தகுதியில்லை என்கிறார் ஹெஃபர்னன். அதுவும் அவரைத் தரிசு நிலம் என ஆணாதிக்க வெறியுடன் கூறுகிறார். இதனை அன்றைய ஆஸ்திரேலியத் தலைமைய மைச்சர் ஜான் ஹோவர்டு எதிர்க்கவில்லை.

ஹோவர்டும் சாமானியப் பட்டவர் அல்லர். ஒருமுறை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் இவர் தன்னை விடாது குடைந்து கொண்டிருந்த பெண் செய்தி யாளர்களைப் பார்த்து எரிச் சலுடன் கூறினார்: “எந்தப் பத்திரிகையாளரும் என்னை எப்படி வாட்டி எடுத்தாலும் நான் மனந்தளர மாட்டேன், அவர்கள் உங்களைப் போன்ற அழகுப் பதுமைகள் ஆயினும் சரி!”

நாம் கண்ட ஸ்பென்டர், உல்ஃப் உள்ளிட்ட பெண்ணியர் கள் ஆங்கில மொழியின் மீது எவ்வளவு பகைமை கொண் டாலும், பிற்போக்கு ஆங்கில மொழியையே தூக்கி எறிந்து, உலகில் வேறெதும் முற்போக்கு மொழி உள்ளதா எனத் தேடிச் செல்லவில்லை. சமூகத்தில் பெண் களுக்குக் கிடைத்துள்ள மறு மலர்ச்சி ஆங்கிலத்திலும் வெளிப் பட வேண்டும் எனக் கூறினர்.

சமூக அழுக்குகள்தான் மொழியில் படிகின்றனவே தவிர, அந்த அழுக்குகளுக்கு மொழி என்றும் பொறுப்பாகாது. சமூகம் அந்த அழுக்குகளைத் துடைத் தெறியும் போது மொழியும் மேன்மையடைகிறது. இப்படி பெண்ணிய நோக்கில் மொழியை மேன்மைப்படுத்தும் முயற்சியில் பெண்ணியர்களும் இறங் கியுள் ளனர். சான்றாக, ஒரு காலத்தில் தொழிற்பெயர்கள் எல்லாம் chairman, postman, busin essman, cameraman, fisher man என ஆண்பாலை மையப் படுத்தியே ஆளப்பட்டு வந்தன. ஆனால் இன்று பெண்ணியர் களின் முயற்சியால் இந்தத் தொழிற் பெயர்கள் எல்லாம் முறையே chair person, post person, business person, camera person, fisher என மாற்றம் கண்டுள்ளன. பெண்கள் பல்வேறு துறைகளில் நுழைய நுழைய அந்தத் துறைகளைச் சுட்டும் பெயர்களும் மாற்றம் கண்டன.

ஆங்கிலேயப் பெண்கள் இன்று தங்களின் திருமணத் தகுநிலையைக் காட்டிக் கொடுக்கும் Miss, Mrs. (மிஸ், மிசஸ்) போன்ற அடைமொழிகளைத் தூக்கி எறிந்து, Ms. (மெஸ்) என்று பொது அடை மொழியைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

நாம் ஏற்கெனவே கண்டவாறு, ஆங்கிலத்தில் படர்க்கை ஒருமைக்குப் பொதுப் பாலினச் சொல் இல்லாத காரணத்தால் hehe he என்னும் சொல் மட்டுமே இரு பாலருக்கும் பல காலமாகப் பயன்பட்டு வந்தது. ஆனால் ஆங்கிலத்தின் இந்தச் சிக்கலைப் போக்கும் பொருட்டு இன்று ஆண்கள் உட்பட பெரும் பாலான ஆங்கிலேய எழுத் தாளர்கள் படர்க்கை ஒருமைக்குப் பதிலாகப் படர்க்கைப் பன்மை யைப் பயன்படுத்து கின்றனர். காட்டாக, A student should obey his teacher (ஒரு மாணவன் அவன் ஆசிரியருக்குக் கீழ்ப்படிய வேண்டும்) என்று எழுதுவதற்குப் பதிலாக Students should obey their teachers (மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்) என்று எழுது கிறார்கள். இப்படிப் பல நிலை களிலும் ஆங்கிலக் கட்டமைப்பை மாற்றியமைத்து வருகிறார்கள்.

எனவே சரியான போராட் டங்களினால் ஆங்கிலம் தனக்கான பெண்ணிய முகத்தை இன்று அடைந்து வருகிறது.

அதாவது சமூக மறு மலர்ச்சியே மொழி மறுமலர்ச் சிக்கு அடிகோலுகிறது. எனவே சமூக இழிவுகளுக்கு ஒரு மொழி யைப் பொறுப்பாக்குவது அப் பட்டமான கருத்து முதல் வாதமாகும்.

தமிழ் மொழியைக் கொண்டு தான் தமிழரின் அழுக்குகளைத் துடைக்க முடியும். இந்த அழுக் கைத் துடைக்கப் போகிறேன் என்ற பெயரில் ஆங்கிலத்தின் பக்கம் போய் நிற்பது அறிவுடை மையாகாது. நாம் விரிவாகக் கண்டவாறு ஏற்கெனவே ஆணா திக்கச் சகதியில் மூழ்கிக் கிடக்கும் ஆங்கிலத்தைக் கொண்டு தமிழரின் மீது சேற்றைத்தான் வாரி இறைக்க முடியுமே தவிர, தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு துளி அழுக்குகளே வந்து சேர் வார்கள்!

-  தொடரும்

Pin It