வள்ளலார் சமத்துவ சங்கம் நிறுவிய வடலூரிலிருந்து த.தே.பொ.க. கொடிகளும் பதாகைகளும் கட்டிய வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நெய்வேலி நோக்கி விரைந்து சென்ற அழகு சாலை நெடுக மக்களின் கவனத்தை ஈர்த்தது. உரிமை மீட்புப் போராட்டக்களம் காண ஊர்திக்குள் அமர்ந்திருந்த தோழர்கள் உற்சாகப் பெருக்கு கொண்டனர்.

“தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் தடுத்து வைத்துள்ள கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் தராதே! அன்றாடம் கர்நாடகம் செல்லும் 11 கோடி யூனிட் மின்சாரத்தை, மின் வெட்டில் தவிக்கும் தமிழ்நாட்டிற்குத் திருப்பிவிடு” என்ற முழக்கத்துடன் 10.8.2012 அன்று நெய்வேலி நிறுவனத் தலைமையகத்தை முற்றுகையிடச் சென்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள், - உழவர்கள், - இன உணர்வாளர்கள் சென்ற ஊர்திகளே அவை!

காவிரிப் பாசன மாவட்டங்களில் ஐந்து லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய வேண்டிய நிலங்கள் தண்ணீரின்றித் தரிசாய்க் கிடக்கின்றன. ஊருக்கெல்லாம் உணவு உற்பத்தி செய்யும் உழவர்கள் இலவச அரிசிக்கு ஞாயவிலைக் கடைகளில் நிற்கின்றனர். பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு, திருமணச் செலவுக்கு உறவுகளுக்குச் செய்ய வேண்டிய பண்பாட்டு நிகழ்வுகளுக்குக் குறுவை நெல்விளைச்சல் தான் எப்போதும் கைகொடுக்கும். இன்று கைபிசைந்து நிற்கிறார்கள் உழவர்கள். பல இலட்சம் உழவர்கள் செய்யும் செலவுகளால் இயங்கி வந்த ஊர்ப்புற, அதை ஒட்டிய நகர்ப்புற பொருளாதார இயக்கமே ஊனப்பட்டுக் கிடக்கிறது.

“கர்நாடக அணைகள் வறண்டு கிடக்கின்றன, அவர்கள்தான் என்ன செய்வார்கள்” என்ற நிலை இல்லை. கிருஷ்ணராஜ சாகர், ஏமாவதி, கபினி அணைகளில் சூலை மாதம் மொத்தக் கொள்ளளவில் 60 விழுக்காடுத் தண்ணீர் நிரம்பியிருந்தது. காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரைத் திறந்துவிட்டிருக்க முடியும். கர்நாடகம் மறுத்துவிட்டது.

“பங்குத் தண்ணீர் கேட்காதே! வெள்ளம் வந்து எங்கள் அணைகளில் அதைத்தேக்க முடியாத நிலைவரும் போது எங்கள் அணைகளின் பாதுகாப்புக் கருதி, மிகை நீரைத் திறந்து விடுவோம்” என்பதுதான் கர்நாடகத்தின் நிலைபாடு. எப்போதும் இதுவே அதன் செயல்பாடு.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியானாலும் அ.தி.மு.க. ஆட்சியானாலும் தில்லிக்குத் கடிதம் எழுதும், உச்ச நடவடிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் மனுபோடும். அதற்கு மேல் அவை, தமிழக உரிமை மீட்க நகர்வதில்லை.

ஆட்சியில் இல்லாத கட்சிகளுக்கு தமிழக உரிமையை மீட்கப் போராட வேண்டிய கடமை இல்லையா? இருக்கிறது. ஆனால் அக்கடமையைச் செய்யமாட்டா. ஆட்சியாளர்களைப் போல் அவையும் அறிக்கை வெளியிட்டுவிட்டு, அடுத்த சிக்கலுக்கான அறிக்கை தயாரிப்பதில் ஈடுபடும் இவ்வாண்டும் அதுதான் நடந்தது. இந்த இக்கட்டான சூழலில்தான் த.தே.பொ.க. இருள் கிழித்து வெளிவரும் கதிரவனைப் போல் ஒரு போராட்டம் அறிவித்தது. அது கர்நாடகத்திற்கு பதிலடி கொடுக்கும் போராட்டம். நீதியையும் ஞாயத்தையும் துச்சமாகத் தூக்கி எறியும் பகைவனிடம் தர்க்கம் செய்து பயனில்லை, பதிலடி கொடுக்க வேண்டும். பகைவனை பணிய வைக்க வேண்டும்.

பதிலடி கொடுக்கும் திசையில்தான் நெய்வேலி மின்சாரத்தைக் கர்நாடகத்திற்கு அனுப்பாதே, அதைத் தமிழ்நாட்டிற்குத் திருப்பிவிடு என்று இந்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். இக்கோரிக்கையத் தமிழக அரசு ஆதரித்துத் தனது கோரிக்கையாக எழுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினோம். அ.தி.மு.க ஆட்சி இக்கோரிக்கையைக் கண்டுகொள்ளவே இல்லை. “நடுவண் தொகுப்பிலிருந்து 1000 மெகவாட் மின்சாரம் கொடு” என்று பொத்தாம் பொதுவில் கோரிக்கை வைத்துக் கொண்டுள்ளார் முதல்வர் செயலலிதா. எனவே, நாமே களமிறங்குவோம், என்று முடிவு செய்து நெய்வேலி முற்றுகைப் போராட்டம் அறிவித்தோம்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் அணிவகுத்துச் சென்ற தோழர்கள், நெய்வேலி நிறுவனத்தின் தலைவாயில் கடந்து, தலைமையகத்தின் முன் குவிந்தார்கள். நடுவண் அரசின் நயவஞ்சகத்தைக் கண்டித்தும், கர்நாடகப் பகைவர்களின் கயமைத் தனத்தைக் கண்டித்தும் முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. சூழ்ந்து கொண்ட காவல் துறையினர் சினந்து சீறினார்கள். “எங்களுடைய எசாமானன் இந்திய அரசு, பங்காளிகள் கன்னடர்கள் அவர்களையா குற்றம் கூறிகிறீர்கள்” என்பது போல் ஆவேச பட்டார்கள். இதற்கு மேல் ஓர் அடி நகரக்கூடாது என்று போராட்டத் தலைவர் வெங்கட்ராமனைப் பிடித்துத் தள்ளினார்கள். அவர் கீழே படுத்துக் கொண்டு “உங்கள் கைதுக்கு உடன் பட முடியாது” என்று போராடினார். போராட்டத் தலைவரிடம் முரட்டுத்தனம் காட்டிய காவல்துறையினரை தள்ளிவிட்டு, முன்னேற முயன்றனர் தோழர்கள். தள்ளு முள்ளு நீடித்தது. பின்னர் ஒரு வழியாகத் தளைப்படுத்தலுக்கு உட்பட்டனர் தோழர்கள். மகளிரும் தளைப்படுத்தப்பட்டனர்.

தளைப்படுத்தப்பட்ட 223 தோழர்களும் நெய்வேலி நகரம் 10-ஆம் வட்டம் சமுதாயக் கூடத்தில் வைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தோழர்கள் வந்து இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தளைப்பட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, சென்னை, கடலூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ஆகிய மாவட்டங்களிலிருந்து தோழர்கள் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். காவிரி உரிமைப் போராட்டமானாலும் முல்லைப் பெரியாறு உரிமைப்போராட்டமாலும் அவை பகுதி போராட்டங்களல்ல தமிழனத்தின் தமிழ்த் தேசியப் போராட்டங்கள் என்பதை நம் தோழர்கள் நிலை நிறுத்தி வருகிறார்கள். அந்த உணர்வால்தான் பல பகுதிகளிலிருந்து தோழர்கள் வந்து போராட்டத்தில் பங்கு கொண்டார்கள்.

திருப்பூர் மூத்த இளைஞர் தோழர் க. இரா. முத்துச்சாமி(அகவை74), தஞ்சை மாவட்டம் சக்கர சாமந்தம் கிராமத்திலிருந்து கட்சி சார்பற்ற முறையில் ஓர் ஊர்தியில் வந்து கலந்து கொண்ட உழவர்கள், மற்றும் இன உணர்வாளர்கள் ஆகியோரின் பங்கேற்பு - போராட்டத்தின் தமிழ்த் தேசியத் தன்மைக்குச் சான்று.

இன உணர்ச்சிப் பாடல்களும், இன எழுச்சி உரைகளுமாய் த.தே.பொ.க மாநாட்டு மண்டபம் போல் அச்சமூகக் கூடம் மாறியது.

ஐயா. பழ.நெடுமாறன், தோழர் தியாகு, தோழர் செந்திலதிபன் (ம.தி.மு.க) தோழர் ஆ.வந்தியத் தேவன் (ம.தி.மு.க.) ஆகியோர் தொலைபேசி வழியாகப் போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பிற்பகல் மண்டபத்துக்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை வாழ்த்திப்பேசினார்.

மாலை 6 மணிக்கு அனைவரையும் விடுவித்ததாகக் காவல் துறையினர் அறிவித்தனர். உணர்ச்சிப் பெருக்கான முழக்கங்களுடன் அடுத்தகளத்தில் சந்திப்போம் என்ற உறுதியுடன் தோழர்கள் கலைந்து சென்றனர்.

செல்லபாண்டியன் கும்பலைக் கைது செய்யக் கோரி கீரனூர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோயில் ஒன்றியச் செயலாளரும், பொதுக்குழு உறுப்பினரு மான தோழர் சி.ஆரோக்கியசாமி மீது அப்பகுதி தி.மு.க. வைச் சேர்ந்த பினாமி ஒப்பந்தக்காரர் வழக்குரைஞர் செல்லப் பாண்டியன் என்பவர் தனது அடியாட்களைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். செல்லப்பாண்டியன் வன்முறைக் கும்பலனின் கொடுஞ்செயலைக் கண்டித்து, 31.07.2012 அன்று கீரனூரில் த.தே.பொ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பினாமி பெயர்களில் ஒப்பந்தம் எடுத்து தார்ச்சாலை போட்டு வந்ததில், சரிவர சரளைக் கற்களை (கறுங்கல் ஜல்லி) போடாமல் தரமற்ற தார்ச் சாலைகள் போட்டு வந்தார். செல்லப்பாண்டியனின் மேற்கண்ட ஊழல் நடவடிக்கையை அவ்வட்ட வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள், கவனத்திற்குக் கொண்டுசென்றார் தோழர் சி.ஆரோக்கியசாமி.

அதேபோல் மேற்படி செல்லப்பாண்டியன் அரசின் அனுமதியின்றி பாசன ஏரியிலிருந்து செம்மண் சரளைகளை (Gravel) லாரி லாரியாக அள்ளிச் சென்றிருக் கிறார். இதுகுறித்தும் அதிகாரிகளுக்கு தோழர் சி.ஆரோக்கியசாமி புகார் மனு அளித் திருக்கிறார்.
இதனால் ஆத்திரமுற்ற க.செல்லப்பாண்டியன் கடந்த 23.07.2012 திங்களன்று காலை கீரனூரில் அவரது வீட்டிலிருந்த தோழர் சி.ஆரோக்கியசாமியை ஏதோ அடியாட்களைக் கொண்டு இழுத்துச்சென்று கொலைவெறித்தனத்தொடு தாக்கிடச் செய்தார். அன்றே கீரனூர் காவல் நிலையத்தில் தோழர் ஆரோக்கியசாமி புகார் மனு அளித்தார்.

காவல்நிலைய துணை ஆய்வாளர் அழகம்மை, செல்லப்பாண்டியனை விசாரணைக்கு காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்த போது, 30க்கும் மேற்பட்ட ஆட்களுடன் காவல்நிலையத்திற்குள் நுழைந்து “எப்.ஐ.ஆர். போட்டால் போட்டுக் கொள்ளுங்கள். நான் மேலே பார்த்து கொள்கிறேன்” என மிரட்டி விட்டு வெளியேறிவிட்டார்.

செல்லப்பாண்டியன் தனது ஆள் ஒருவர் மூலம் பொய் புகார் ஒன்றை தோழர் சி.ஆரோக்கியசாமியின் மீதே காவல்நிலையத்தில் கொடுக்கச் செய்தார். மீண்டும் 25.7.2012 அன்று கீரனூர் பேருந்து நிலையத்தில் சென்று கொண்டிருந்த தோழர் ஆரோக்கியசாமியை செல்லப்பாண்டியனின் கும்பல் வலுவந்தமாக இழுத்துக் காரில் கடத்த முயன்றனர். முருகேசன், ரமேஷ் ஆகியோர் பெயரைப்பிட்டு புகார் கொடுத்தார் ஆரோக்கியசாமி.

இத்தனைக்குப் பிறகும் குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்யவில்லை. புதுக்கோட்டைக் கவல் கண்காணிப்பாளரிடம் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் குழ.பால்ராசு, பழ.இராசேந்திரன் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.

செல்லப்பாண்டியன் கும்பலை கைது செய்ய வலியுறுத்தி 31.07.2012 அன்று கீரனூர் தேரடித் திடலில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தோழர் பெ.லெட்சுமணன் தலைமையேற்றார். மக்கள் உரிமை பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி, த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந் திரன், த.தே.பொ.க. தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, பூதலூர் ஒன்றிய தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் அ.தேவதாசு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். தோழர் லெ.திருப்பதி நன்றி நவின்றார்.

இக்கண்டன ஆர்ப்பட்டத்தில், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, த.தே.பொ.க. தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இராசு. முனியாண்டி, துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், திருச்சி த.தே.பொ.க. செயலாளர் கவித்துவன், வழக்கறிஞர் கரிகாலன், த.இ.மு. முன்னணித் தோழர்கள் செந்தில்குமார், ந.கருப்புசாமி, ச.காமராசு, ரமேசு, தெட்சிணாமூர்த்தி, செபஸ்டின், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்

Pin It