பெற்றோர்கள், தம் பிள்ளைகள் எல்லோருமே நூற்றுக்கு நூறு எடுத்து முதல் நிலைக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். பள்ளியில் இருக்கும் அதே நிலைதான் வீட்டிலும். எந்த வீட்டிலும் நூலகங்கள் கிடையாது. வாஸ்து பார்த்து வீட்டை இடித்துக் கட்டும் நாம் வீட்டில் நூலகங்களைப் பற்றி யோசிப்பதே இல்லை.

Booksகவிஞர் பச்சியப்பன் தனது கல்லூரி ஆசிரியர் இளவரசு அவர்களின் மணிவிழா மலருக்கு ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ‘அடிக்கிற வாத்தியார்’ என்பது அக் கவிதை. அடித்தட்டு மக்கள் திரளில் இருந்து எழுந்து வந்த ஒரு கவிஞனின் பள்ளி அனுபவம் அது. விவசாய வேலைகளை காலம்பரமே எழுந்து செய்துவிட்டு பள்ளிக்கு ஓடும் ஒரு மாணவனின் அனுபவத்தை சொல்கிறது அக்கவிதை. பள்ளியில் எந்தெந்த வாத்தியார் எப்படியெப்படி நடந்துக் கொண்டார் என்பதை கசப்போடு நினைவு கூறுகிறார். கவிதையின் ஓரிடத்தில் இப்படி வருகிறது.

ஆக்டிவ் வாய்சும் பேசிவ் வாய்சும்
முள்புதரில் பின்னி வளர்ந்த ஓணான் கொடிபோல
எனக்கு மட்டும் புரியாது.
ஆங்கிலேயன் மட்டும் தானா
ஆங்கிலம் கொள்ளும் அனைவருமே கொடுங்கோலரே.
ரெண்டு மணி வெயில்
பொரிசலான வராண்டாவில் முட்டியிடனும்.
வியர்வை எரியும் கண்ணீர் எரியும்
காற்று எரியும் கல்வியே எரியும்
எவரிடம் சொல்ல
வாத்தியார்னா அடிக்கத்தான் செய்வார்...
(மழை பூத்த முந்தானை 78)

கல்வி, எரியும் அனுபவத்தைத் தான் மாணவர்கள் பலருக்கும் தந்து கொண்டிருக்கிறது. பேரழிவுச் செய்திகளோ, பரபரப்புச் செய்திகளோ அனைத்துப் பரிமாணங்களோடும் நம் கவனத்துக்கு வந்து சேர்வது போல் சில வந்து சேர்வதில்லை. ஆனால் அவை ஒரு மனிதனின் உள்ளிருந்தே கொல்லும் புற்றுநோய்ப் போன்றவை. அத்தனை தீவிரமும், முக்கியத்துவமும் வாய்ந்தவை. அப்படி சில செய்திகள் அண்மையில் சில நாளேடுகளில் வெளியாயின. மன அழுத்தம் காரணமாகவும் தேர்வில் தோல்வி அடைந்ததாலும் மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்வது அதிகரித்து வருகிறது என்கிற அந்தச் செய்தியைப் படித்த போது நெஞ்சு அதிர்ந்தது.

கடந்த ஆண்டு மட்டும் இப்படி தற்கொலை செய்துக் கொண்ட மாணவர்கள் 19 பேர். 2003ல் இந்த எண்ணிக்கை 18. 2005ம் ஆண்டின் தொடக்க மாதத்திலேயே சென்னையில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரும், பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரும் தற்கொலை முடிவை மேற்கொண்டிருக்கிறார்கள். இதில் ஆச்சர்யம் என்னவெனில் இருவரில் ஒரு மாணவி மாநில அளவிலான தடகள விளையாட்டு வீராங்கனை! இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வந்த போது சென்னையைச் சுற்றிய சில பகுதிகளில் சில மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டனர். ஏன் இம்மாணவர்கள் இதுபோன்ற மோசமானதொரு முடிவினை மேற்கொள்கிறார்கள் என்பதனை மிகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டிய தேவை நம்முன்னால் இருக்கிறது.

செய்திகள் சொல்வதெல்லாம் பெற்றோர்கள் திட்டினார்கள் என்பதைத்தான். ஆனால் அப்படி ஒரு முனை காரணம் மட்டுமே இப்படியான அவலச்சாவுகளின் பின்னணியில் இல்லை. இன்னும் சற்று நெருங்கிப் போனால் இன்றைய கல்வி முறையின் பாடத்திட்டமும், மாணவர்களின் தற்கொலை சாவுகளோடு பாடச்சுமையும் பெற்றோர்களின் அதிக எதிர்பார்ப்பும் சேர்ந்துக் கொண்டுள்ளன.

வெகு நாட்களுக்கு முன்பு ‘பவுனுக்குஞ்சு’ என்றொரு வீதி நாடகத்தை சென்னைக் குழுவினர் நிகழ்த்த, பார்த்த நினைவு வருகிறது. இன்றைய கல்வி முறையைப் பற்றி விமர்சிக்கும் நாடகம் தான் அது.

பவுனுக்குஞ்சு என்கிற ஒரு கிராமத்து மாணவன் நன்றாகப் படிப்பதில்லை. வகுப்பறைகளில் அவன் மூளையைத் திறந்து ஆசிரியர்கள் திணிப்பதை அவனால் தேர்வு சமயத்தில் அப்படியே வெளியே எடுக்க முடிவதில்லை. எனவே அவன் முட்டாள் என்று முத்திரைக் குத்தப்பட்டு விடுகிறான். ஆனால் அவனுக்கு அவன் வாழும் இயற்கைச் சூழல் சார்ந்த பல செய்திகள் நகரத்து மாணவர்களான பிறரை விடவும் அதிகமாகத் தெரிகிறது. பருவத்துக்கேற்ற பயிர்வகைகள், பறவைகள் மற்றும் விலங்குகளின் வழக்குப் பெயர்கள், பழவகைகள், மர வகைகள் இப்படி அவனுக்குப் பலவும் தெரிகின்றன. இங்கு அந்நாடகம் ஒரு கேள்வியை எழுப்புகிறது. இயல்பான அனுபவ அறிவினையும், திறமைகளையும் கொண்ட மாணவன் முட்டாளா? கற்பித்ததை கிளிப்பிள்ளையைப் போல திரும்பச் சொல்லி மதிப்பெண் வாங்கும் மாணவன் முட்டாளா? இந்த நாடகம் என்னை பல நாள் சிந்திக்க வைத்தது.

மாணவர்களின் சிக்கல்கள் வேறு புள்ளியிலிருந்து தொடங்குகின்றன. சிக்கல்கள், குழந்தைகளிடத்தில் இல்லை. நம்மிடம் தான், ‘குழந்தைமைய்ய’ சிந்தனை இல்லாமல் இருக்கிறது. சில ஆண்டுகள் இடைவெளி விட்டு மாணவர்களுக்கு புதுப்புது பாடத்திட்டங்கள் வந்துக் கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் மாணவர் விரும்பும் பாடத்திட்டம் வருகிறதா? பாடத்திட்டத்தை அமைப்பதற்கு முன்பு மாணவர்களிடமே, அதன் மாதிரி பாடங்களைக் கொண்டு போக வேண்டும். மாணவர்களின் விருப்பத்துக்கேற்ற பாடங்களை அவர்களின் துணை கொண்டே சிறப்பாகத் தயாரிக்கலாம். தயாரிக்கப்படும் பாடங்களைப் பற்றிய சுருக்கத்தையோ, அறிமுகத்தையோ, முன்னமே அளித்து பரிசோதித்து அவர்களின் விருப்பத்துக்கு உகந்த முறையிலே திருத்தியமைக்கலாம். இப்படி தயாரிக்கப்படும் பாடங்கள் அவர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்படும் என்பது உறுதி.

தொடக்கநிலை மாணவர்களுக்கு சரித்திரங்கள், படங்கள் அதிகம் கொண்ட பாடங்களே சிறந்தது என்பதைப் போல வளர்ந்த மாணவர்களுக்கான எளிய வழி பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். போதிய பாடங்களோ, சுவாரஸ்யமான குறிப்புகளோ இன்றி பாடங்கள் இருக்கும்போது வெறும் எழுத்துக்கள் மாணவர்களை களைப்படைய செய்கின்றனவாக உள்ளன.

பாடங்களால் களைப்படைந்து நிற்கும் மாணவர்கள் இளைப்பாறும் இடமாக திறன்களை வளர்க்கும் பிற செயல்பாடுகள் அமைகின்றன. ஓவியம், இசை, கைத்தொழில் விளையாட்டு போன்ற இத்துறைகளுக்கென தனி ஆசிரியர்களும், நூலகம் பாடத்திட்டமும் இருந்தாலும் இவை முழுவீச்சில் கற்பிக்கப்படுவதில்லை. இத்துறை ஆசிரியர்களை முழுமையாக பள்ளிகளில் நிரப்புவதில்லை. ஏற்கனவே இருக்கும் இவ்வாசிரியர் பணியிடங்களில் பணியாற்றுகிறவர் ஓய்வு பெற்றால் அவை அப்படியே காலாவதியாகி விடும் பணியிடங்களாக கருதப்படுகின்றன. இவைகளுக்கு அத்தனை முக்கியத்துவம் தருவதில்லை.

படைப்பூக்கம், மெல்லுணர்வு, அறமதிப்பீடு, ரசனை, உடல் வலிமை, பல்துறை அறிவு ஆகியவைகளையெல்லாம் தருகின்ற இப்பாடங்களை அலட்சியமாகக் கருதி அவைகளில் ஈடுபடாமல் மாணவர்களைத் தடுப்பதால் எப்பக்கம் திரும்பினாலும் சுவர்போன்று நிற்கும் பாட நூல்களில் முட்டிச் சரிகிறான் மாணவன்.

மேற்கத்திய நாடுகளின் கல்வி முறையில் இன்று பல மாறுதல்கள் வந்துவிட்டன. அறிவு நிரம்பிய மாணவனை விட, அறம் சார்ந்த மதிப்பீடுகள் கொண்ட மாணவனே வேண்டும் என்று அங்கு பேசத் தொடங்கியுள்ளனர். இங்கும் அப்படி ஒரு நிலை வருவதற்கு முன் நாம் தடுப்பது நல்லது. இன்றும் நம்முடைய பல்வேறு பள்ளிகளில் விளையாட்டு மைதானமோ, நூலகமோ, ஆய்வுக் கூடமோ இல்லை என்பது கசப்பானதொரு உண்மை. அப்படியே இருந்தாலும் இவ்வழிகளைப் பயன்படுத்தி மாணவர்கள் மாற்றுச் செயல்களிலும் ஈடுபடுத்தப்படுகிறார்களா என்றால் அது அதைவிட கசப்பானது.

கற்றல் குறைபாடு உடையவர்களை மெல்லக் கற்பவர்களாக உளவியல் கூறுகிறது. மாணவர்களை அடிப்பதும், பலர் முன்னிலையில் இழிவாகத் திட்டுவதும் அவர்களை கடுமையாய் பாதிக்கும் என்றும் உளவியல் கூறுகிறது. உருப்படாதவன், முட்டாள் என்ற வார்த்தைகளும், பிரம்புகளும் இன்னும் பள்ளி வளாகங்களை விட்டு வெளியேறவில்லை. ஆசிரியர்கள், பாடத்திட்டம் மற்றும் பெற்றோர்களின் ஒரே எண்ணமாக இருப்பது ‘கற்பிப்பதை மாணவன் எப்படியாவது படித்துவிட வேண்டும்’ என்பது தான். அப்பாடம் அவர்களின் புரிதல் திறனுக்கும், வயதுக்கும் ஏற்றதா என்பதல்ல. அவர்கள் கவலை அவைகள் அவர்களின் உற்சாகத்தைத் தூண்டும் வகையில் இருக்கிறதா என்பதல்ல. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாற்றியமைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு அறிவியல் பாடங்களை ஒரு மாதிரிக்காக வைத்துப் பரிசீலித்தால் இவ்வுண்மை புரியும்.

சுமார் 312 பக்கங்களை கொண்ட இப்பாட நூலில் ஒவ்வொரு பிரிவும் பல பக்கங்களையும், நூற்றுக்கும் அதிகமான கேள்விகளையும் கொண்டிருக்கின்றன. கல்லூரி மாணவர்கள் படிப்பதற்கு இணையான பாடங்கள். இப்பாடங்களை உருவாக்கியவர்களில் சுமார் 12 பேர் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள். நான்கு பேர் மட்டுமே ஆசிரியர்கள். அவர்களும் கூட மேல்நிலை வகுப்பு ஆசிரியர்களும், தலைமையாசிரியர்களுமே. இக்குழுவினரால், உருவாக்கப்பட்டிருக்கும் பாடங்கள் மாணவர்களின் வயது மற்றும் கற்றல் நிலையை கருத்தில் கொள்ளவில்லை. எனவே மாணவர்கள் விழி பிதுங்கிக் கிடக்கிறார்கள்.

இப்படியான சூழலில் இருந்து விடுபட்டு வீட்டுக்கு வரும் மாணவர்களுக்கு வேறொரு நெருக்கடி பெற்றோர் வடிவில் இருக்கிறது. எப்போதும் நூலும் கையுமாகவே தம் பிள்ளைகளைப் பார்க்க விரும்பும் பெற்றோர்கள், தம் பிள்ளைகள் எல்லோருமே நூற்றுக்கு நூறு எடுத்து முதல் நிலைக்கு வர வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார்கள். பள்ளியில் இருக்கும் அதே நிலைதான் வீட்டிலும். எந்த வீட்டிலும் நூலகங்கள் கிடையாது. வாஸ்து பார்த்து வீட்டை இடித்து கட்டும் நாம் வீட்டில் நூலகங்களைப் பற்றி யோசிப்பதே இல்லை. விளையாட வசதியோ, நேரமோ வழங்கப்படுவதில்லை. பிற திறன்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்படுவதில்லை. பிற திறன்கள் வேலை வாங்கித் தராது. உதவாது என்பது அவர்கள் நினைப்பு. இப்படி பல முனை நெருக்கடிகளில் சிக்கித் திணறும் மாணவர்களில் சிலர்தான் தற்கொலை என்கிற அவலமான முடிவுக்குப் போகின்றனர்.

கதை சொல்ல பாட்டி தாத்தாக்களோ, நட்புடன் பழக தோழமையோ, கரிசனையுடன் கேட்க பெற்றோரிடம் பொறுமையோ, நேரமோ இல்லாத காலத்தில்தான் நம் மாணவர்கள் இன்று இருக்கிறார்கள். வாழும் கலையையும், வசதிகளையும் மட்டும் மாற்றிக் கொள்ளும் நாம் சிந்தனைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை மறந்துவிடுகிறோம். முதுகில் அழுத்தும் பாடச்சுமையை இறக்கி வைத்து அவர்கள் இளைப்பாற மாற்றுவழிகளை ஏற்படுத்தித் தந்து அவர்களோடு பேசத்தொடங்கினாலே மாற்றங்கள் வரும்!.

Pin It