கர்நாடக் காவல்துறை தொடுத்த பொய் வழக்கை உடைத்து சிறை மீண்ட ‘தமிழ்த்தேசப் புகழொளி, பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கும், சிறைமீட்ட மூத்த வழக்கறிஞர் திரு.சு.க.மணி அவர்களுக்கும் பாராட்டு விழா , திருச்சியில் 17.07.2013 புதன் கிழமை மாலை 5.00மணி, புத்தூர் நால்ரோடு அருகில் வெக்காளியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்க்கலை இலக்கியப்பேரவையும் மக்கள் உரிமை பேரவையும் இணைந்து நடத்திய இந் நிகழ்ச்சிக்கு மக்கள் உரிமைப்பேரவை ஒருகிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி தலைமை தாங்கினார்.
தமிழ்க்கலை இலக்கியப் பேரவை திருச்சி செயலாளர் தோழர் நா. இராசரகுநாதன் வரவேற்புரையாற்றினார்.

திருச்சி மாவட்டத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு பொறுப்பாளர் ‘தமிழ்த் தேசச் செம்மல் தோழர் வீ.ந.சோ, உலகத் தமிழர் பேரமைப்பு திரு ம.பொன்னிறைவன், பேராசிரியர் இரா.சக்குபாய், அருள்தந்தை சேவியர் ஆரோக்கியசாமி, திருக்குறள் கல்வி மையம் திருக்குறள் சு.முருகானந்தம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பேராசிரியர் க.நெடுஞ்செழியன், மூத்த வழக்கறிஞர் சு.க.மணி ஆகியோரை இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் இரா.நல்லகண்ணு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பாராட்டிச் சிறப்புரையாற்றினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர் சா.செல்வக் குமார் நன்றியுரையாற்றினார்.

 இந்நிகழ்வில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள் பேசியதாவது:

 “பேராசிரியர் அவர்கள் சிறையிலிருக்கும் போது வழக்காடிய வழக்கறிஞர்.சு.க.மணி அவர்கள் மூலமாகத் தான் வழக்கின் தன்மையையும் விவரங்களையும் அறிந்து கொண்டேன்.பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களின் நீண்ட கால ஆய்வுப்பணியை பற்றி அறிந் திருந்த போதும் அவருடன் பணியாற்றிய பல்கலைக் கழக ஆசிரியர்கள், மற்றும் அவரிடம் படித்த மாணவர் கள் மூலமாக அவரின் பெருமைக்குரிய பண்பு நலன்களைப்பற்றி தெரிந்து ஆச்சரியப்பட்டேன் .ஏனென்றால் தமிழ் ஆசிரியர்கள் ஒருவரை ஒருவர் பாராட்டமாட்டார்கள். படைப்பாளிகளும் கூட ஒருவரை ஒருவர் பாராட்டமாட்டார்கள்.மணியரசன் அவர்கள் சொன்னது போல தமிழ் இனத்துக்குள் ளேயே சாதிகளின் பெருமை, சிறுமைப் பற்றி பேசிக் கொள்வார்களே ஒழிய தமிழ் இனம் என்று பேசிக் கொள்வதுமில்லை, பேசப்படுவதுமில்லை. இதுதான் இன்றைய நிலை.

இந்நிலையில்தான் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களைப்பற்றி பெருமைப்படு கிறேன். 32 மாதங்கள் சிறையில், அதுவும் பிறமொழிப் பேசுகின்ற, நமக்கு எதிராக இருக்கின்ற கர்நாடக சிறையில். அதுவும் தங்கள் ஊரையும் சேர்த்துக்கொள்ள திட்டம் போடுபவர்கள் என்று சிறைப்பட்ட நிலையில் அதிலிருந்து மீள்வது சாதாரண விசயமில்லை. அதுவும் தனிமைக் கொட்ட டியில் சிறையிலிருப்பது எவ்வளவு கொடுமையானது என்பது எங்களைப் போன்றோருக்கு நன்கு தெரியும். பிரதமர் நேரு அவர்கள் சொல்லியவாறு “தனிக் கொட்டடி சிறை என்பது மரணத்தைவிட மோசமா னது.” (solitary confinement is worse than death sentence). நம் முடைய நாட்டில் படித்தவர்களுக்கு எல்லாம் எதற்கு அரசியல்? என்று கேட்கும் சூழல் உள்ளது. அரசிய லுக்கு வந்தாலும் பிழைக்கத் தெரியவில்லை என்று சொல்வதும், அரசியலை ஏதோ ஒரு தொழில் போல் பார்க்கும் சூழல் உள்ளது.

வெள்ளை ஏகாதிபத்தியம் கொண்டு வந்த மெக்காலே கல்விமுறையின் அடிப்படை நோக்கம் இந்திய மொழிகளை அழித்துவிட்டு ஆங்கில மொழியில் பற்று ஏற்படுத்தி, தாய்மொழிப் பற்று இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதுதான். ஒரு நாட்டை அடிமைப் படுத்த முற்படும் பொழுது அந்நாட்டின் படைத் தளபதிகளை விட அறிஞர் பெருமக்கள்,கருத்தியல் வல்லுனர்களைத்தான் தளைப்படுத்த, அழிக்க முனைவார்கள். இதைத்தான் பாரதி “மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து மடிவதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ” என்று பாடினார். இந்தியாவில் எந்த ஒரு அரசியல்வாதியும் வ.உ.சி.யைப் போல செக்கிழுத்தவர் அல்லர். அவர் நூல் பல எழுதிய அறிஞர். அதைத்தான் பாரதி குறிப் பிட்டார். அப்படிப் பட்டவர்தான் நம்முடைய சிறந்த ஆய்வாளர் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள்.

அவருடைய “ஆசீவகம்” என்ற நூலைப் படித்த பொழுதுதான் சமணம் வேறு, அமணம் வேறு என்பதையும் வைதீகத்தை எதிர்த்த தமிழரின் தத்துவப் போராட்டங்களையும், தமிழரின் தத்துவப் பெருமிதங்களையும் அறிந்துகொண்டேன். ஆசீவகம் நமது மதம், வைதீகத்தை எதிர்த்து நமது முன்னோர்கள் அதனை தோற்றுவித்தார்கள் என்பதை பேராசிரியர் ஆழ்ந்து ஆய்ந்து சொல்லி இருக்கிறார்கள். அவரின் ஆய்வுப் பணியும், தமிழ் சமூகத்திற்கு அவரின் பங்களிப்பும் தொடர என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வழக்கறிஞர்.சு.க.மணி அவர்களை இளம் வயது முதலே நான் அறிவேன். எங்களோடு இணைந்து இயக்கப் பணி ஆற்றியவர். சுறுசுறுப்பானவர். ஆழமாக விவாதிக்கக் கூடியவர். ஒரு முறை என்.டி. வானமா மலை யோடு கடுமையாக விவாதித்தவர். தொழில் திறமையும், மக்கள் பற்றும் கொண்டவர். நம்முடைய பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களின் வழக்கு அவருக்கு ஒரு இலட்சிய வழக்கு. தோழர். வானமா மலை அவர்கள் தமிழ் மக்களின் உள்ளங்களிளெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய பிரபாகரன் அவர்களுக் காக வழக்காடி பிணை பெற்றுக் கொடுத்தார். கட்டணம் தர அவர் விரும்பியபோதும் வாங்க மறுத்து “இது என் கட்சி கடமை” என்றார். அந்த பயிற்சிக் களத்தில் வந்தவர் சு.க.மணி அவர்கள். ஒரு இலட்சிய வாதியை காப்பாற்ற வேண்டிய கடமை உணர்வோடு வழக்காடி கர்நாடகக்காரர் களின் சதியை முறியடித்து வெற்றிபெற்றுள்ளார் இன்னும் பல வழக்குகள் நடத்தி லட்சியவாதிகளுக்கு உறுதுணையாக நிற்கும்படி அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள் கிறேன்.

இறுதியாக என் மன உளைச்சலை சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் தோழர். பெ.மணியரசன் அவர்கள் பேசியதில் பெரும்பகுதி எனக்கு பிடித்த மானதே. இருந்தாலும் என் மன உளைச்சலை சொல்கிறேன். தமிழன் என்று பெருமையாக எத்தனையோ சொல்கிறோம். சுருக்கமாக இரண்டு மூன்று விசயங்களை சொல்கிறேன்.

மகாத்மா காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்த பொழுது சொன்னார்.”இந்தியாவில் எத்தனையோ மொழி பேசக்கூடிய மக்களிடையே கூட தமிழ் மொழி பேசக்கூடிய மக்கள் நல்ல நாட்டுப் பற்று உடைய வர்கள். நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் என்னோடு துணையாக நிற்கிறார்கள்.” காலனி நாடுகளில் அதிகமாக கூலியாக உள்ளவர்கள் தமிழ் மக்கள். எனவே அவர்கள் பேசுகின்ற தமிழ்மொழியை ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகத்தில் நீங்கள் பாடமாக வைக்கவேண்டும் என்று 1906-ல் எழுதினார் . தமிழ் மொழியில் தான் நீதிநெறிப் பாடல்கள் (ethical versus) அதிகமாக உள்ளது, அதை அதன் மூலமொழியில் படிக்க விரும்புகிறேன் என்றும், தன்னோடு சிறையில் இருந்த சீர்காழியைச் சேர்ந்த தமிழர்கள் மூலமாக திருக்குறளையும், தமிழ் மொழியில் கையெழுத்து இடவும் பயிற்சி பெற்றார் என்பதும் அவரின் வரலாற்றின் மூலம் அறியலாம்.

இராமநாதபுரம் சேதுபதியின் உதவியால் சிகாகோவிற்கு சென்று திரும்பி வந்தபின் விவேகானந்தர் பிராமணர்கள் கொடுத்த வரவேற்பை மானா மதுரை யில் ஏற்க மறுத்துவிட்டார். தமிழ் நாட்டில் 100 இடங்களுக்கு மேல் பேசி உள்ளார். “சிகாகோவிலிருந்து அல்மோரா வரை” என்ற நூலில் உள்ளது. விவேகானந்தர் கேரளாவைப் பார்த்துவிட்டு சொன்னார் (lunatic asylum of castism) "அடுக்குகளில் சாதி உள்ளது. பார்க்காதே!தொடாதே! என்று இருக்கும் சாதிய சூழலில் 20நூற்றாண்டின் தொடக் கத்தில் எல்லோரும் கிறுக்கர்கள் ஆகிவிடுவார்கள்” என்று. ஆனாலும் கூட “தமிழ்நாட்டில் உள்ள என் நண்பர்கள் தான் ராமகிருஷ்ண மடம் அமைய உதவினார்கள், அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்”. என்றார் விவேகானந்தர்.

அதேபோல நேதாஜியின் படையில் தமிழர்கள்தான் அதிகமாக இருந்தார்கள். நேதாஜி "நான் மீண்டும் பிறந்தால் தமிழ்நாட்டில் தமிழனாகப் பிறக்க வேண்டும் "என்று சொன்னார். இவ்வளவு பெருமை நவீன காலத்தில், விடுதலைப் போராட்ட காலத்தில் நமக்கு இருந்தது.

ஆனால் இத்தகைய பெருமைக்கு உரியவர்களாக தமிழர்கள் இப்போது இருக்கிறார்களா?. நான் அரசியலுக்காகப் பேசவில்லை.கல்வியில் சிறந்த தமிழர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், அறிஞர்கள், பண்பாளர்கள் நிறைந்த தமிழகம் இன்றைக்கு எப்படி இருக்கிறது? தோழர் மணியரசன் சொன்னபடி நம்முடைய உரிமைகளைப் பெற வேண்டும். லெனினே சுயநிர்ணய உரிமையென்று சொல்லும்போது பல மொழிகள் பேசக்கூடிய நாடுகள் இணைந்திருக்க வேண்டும். ஆனால் பிரிந்து போக விரும்பினால் பிரிந்துபோக உரிமை உண்டு என்றார். பலர் எதிர்த்தார்கள். பிரிந்து செல்வதென்றால் பலர் அப்படியே போய் விடமாட்டார்களா? என்று கேட்டார்கள். லெனின் மறுத்து சொன்னார் விவாகரத்து உரிமை இருப்பதனாலேயே தம்பதிகள் பிரிந்து போய் விடுவதில்லை. தனி மனிதனுக்கும், மொழிவழி தேசிய இனத்திற்கும் இது பொருந்தும். அந்த நிலைமை இருக்கிறதா ? அதே நேரத்தில் அதைப் பெறுவதற்குரிய வலு இருக்கிறதா ? ஏனென்றால் பிச்சைக்காரர்களிடம் கூட சாதி கேட்டு பிச்சையிடக்கூடிய சமூகமாக உள்ளது. சாமியாராயினும், அறிஞர்களாயினும் சாதிப் பார்க்கக்கூடிய நிலை தமிழ்நாட்டில் உள்ளது. தமிழன் எங்கே இருக்கிறான்? தமிழன் எப்படி ஒன்று சேருவான்? இதை முதலில் ஒற்றுமைப்படுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு ஈழத் தமிழர்களின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்று இருந்தேன். அப்போது முள்வேலி முகாம்களுக்கு சென்று வந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும்படி கேட்ட பொழுது அவர் கேட்டார் உங்களுடைய இந்தியநாட்டினுடைய கருத்து என்ன? தமிழ்நாட்டினுடைய ஆளும் கட்சியின் கருத்து என்ன? தமிழருடைய கட்சிகள் என்ன ஆதரவு கொடுக்கின்றன? இதையெல்லாம் அறிய விரும்பு கிறேன் என்றார். நம்மால் பதில் சொல்ல முடிய வில்லை. ஏன் இந்த நிலை?

தஞ்சாவூரில் விவசாயிக்கு தண்ணீர் இல்லை யென்றால் மற்ற தமிழர்கள் கவலைப் படுவதில்லை. ஆனால் காவிரித் தண்ணீர் தமிழர்கள் அனைவருக்கு மான தண்ணீர். காவிரி பண்பாட்டின் பிறப்பிடம். தமிழ் நாட்டின் சிறப்பு காவிரி. அந்த காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் தமிழர்கள் கொதித் திருக்க வேண்டும். ஆனால் அந்நிலை தமிழ்நாட்டில் இல்லை. அந்த உணர்வு இல்லை.
நான் அரசியலுக்காகப் பேசவில்லை. வெண்மணி சம்பவம் நடந்தது, தோழர். அழகர்சாமி சட்டமன்றத்தில் கேட்டார் 44பேர் இறந்து போனார்களே?மேல் சாதிக் காரர்கள் 44பேர் இறந்திருந்தால் எவ்வளவு பேர், எத்தனைப் பத்திரிக்கைகள், எவ்வளவு கூப்பாடு போட்டிருக்கும்? என்றார். அச்சம்பவத்திற்கு எதிரான அசைவு இல்லை. ஏன் என்பதுதான் கேள்வி?

அதே போல் காதல் குழந்தைசாமி என்ற கவிஞர் சொன்னார் “சாதி பேசும் தமிழன் பாதி தமிழனடா “என்றார். சாதி பேசுபவர்கள் முழுமைப் பெற்ற தமிழர்களாக இருக்க முடியாது. இப்பொழுது ஒரு பையன் இறந்து போனான். அவன் எழுதி வைத்துள்ளான்”அடுத்த ஜென்மத்திலாவது நாம் ஒரு சாதியில் பிறந்து திருமணம் செய்து கொள்வோம்" என்று நாம் எங்கே இருக்கிறோம்? நம்மை நாம் தமிழன் என்று எப்படி சொல்லிக் கொள்வது? சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது குறித்து கவலைப் படவேண்டும்.

தமிழ்வழிக் கல்வி என்று வரும்பொழுது ஆங்கில வழிக் கல்வியே தரம் வாய்ந்தது என்று தமிழ் மக்கள் எண்ணும் சூழலில் தாய்மொழிக் கல்விக்கு என்ன அர்த்தம்? மணியரசன் போன்றவர்கள், அறிஞர்கள், நாம் மேல்தளத்தில் பேசுகின்றோம். ஆனால் கீழ் தளத்தில் தம் பிள்ளைகள் தாய்மொழியில் கற்காமல் “மம்மி” என்றழைப்பதையே பெருமையாகக் கருதினால் இந்த தமிழகத்தை யார் காப்பாற்றுவது? யாரை மாற்றுவது?

நமக்கு உள்ள கஷ்டம் என்னவென்றால் மீனவர்களை தமிழ் மீனவர்கள் என்பதா? இந்திய மீனவர்கள் என்பதா? இந்திய அரசிடம் சொல்கையில் இந்திய மீனவர்கள் என்று சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் தமிழ்நாட்டுக் கடற்கரையில் இருக்கிறார்கள். அவன் வாழ முடியவில்லை. அவன் தினசரி சாவதற்கு காரணம் 800 பேர் அடித்துக் கொல்லப் படும்வரையில் நாம் பார்த்துக் கொண்டிருந்ததுதான். இதையாரும் கேட்க வில்லை. ஒன்றாய் சேர்ந்து கேட்க முடியவில்லை. தமிழர்கள் எங்கே இருக்கிறார்கள்?

இப்படியான நிலையில் இது மணியரசன் பேசியதற்கு பதில் இல்லை. ஆனால் நாடு பிரிய வேண்டுமா னால் பிரிந்துதான் ஆகவேண்டும்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வார்த்தை உலகில் எந்த மொழியிலும் இல்லை. இவ்வளவு சுருக்கமாக மனிதகுலத்தை நேசிக்கக் கூடிய மொழி எதுவுமில்லை என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். அந்தப் பாராட்டுக்குரியவர்களாக அந்த மொழியில் பிறந்த நாம் உணர்கிறோமா என்பது இன்றைக்கு கேள்வியாக உள்ளது.

அந்த வகையில் இந்த மொழிக்கு அதன் பூர்வங்கள், மூலங்கள் தெரிந்து அதன் ஆய்வுக்காக பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் தம்முடைய வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள். தமிழ் நாட்டிற்கு ஆய்வுப் பணிகள் தான் முக்கியம். அப்பொழுதுதான் அடித்தளம் பலம் பெறும் . அந்த வகையில் அவரின் ஆய்வுப் பணித் தொடரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். வழக்கறிஞர்.சு.க.மணி அவர்கள் இதுபோன்ற நல்ல கொள்கையாளர்களுக்காக வாதாடி வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு தோழர் இரா. நல்லகண்ணு உரை நிகழ்த்தினார்.

Pin It