நவீன நாகரீகம் என்றப் பெயரில் உலகமயப் பண்பாடு, தேசிய இனங்களின் தனித்தன்மை வாய்ந்த பண்பாடுகளையும், அடையாளங்களையும் அழித்துவிடத் துடித்துக் கொண்டிருக்கிறது. பெரும் நிதி மூலதனத்துடனும், வல்லாதிக்க பேரரசுகளுடனும் நிற்கும் உலகமயத்தை எதிர்கொள்ள, ‘தமிழ்த் தேசியம்’ என்ற வலிமையான அடித்தளத்தை நாம் ஏற்படுத்தியாக வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். அதுதான் நமது அடையாளத்தையும், தாயகத்தையும் பாதுகாக்கும்.
ஊடகத்தின் அவசியம்
புரட்சிகரத் தமிழ்த் தேசிய சக்திகள் ஊடகங்களால் புறக்கணிக்கப்படுகின்றன. இதற்கு அரசும் பின்புலமாகச் செயல்படுகின்றது. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கருத்தியலை மக்கள் மனதில் வளர்த்தெடுக்க நமக்கான ஊடகம் தேவை. தமிழ்த் தேசியத்தை பெருவாரியான தமிழர்களிடம் கொண்டு செல்லும் ஊடகங்களைக் கட்டியமைக்க, புதிய வழிமுறைகளையும், உத்திகளையும் நாம் உருவாக்க வேண்டியிருக்கிறது.
தமிழ் இணையம்
ஊடகங்களுடன் தொடர்பு கொண்டு ஒரு தகவலை அல்லது செய்தியை வெளியுலகிற்கு கொண்டு வர கடந்த காலத்தில் இருந்த இடையூறுகள், தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்று உடைக்கப்பட்டுள்ளன. தற்போதைய உலகில், ஊடகங்களே மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அவ்வூடகங்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவையாக இணையதளங்கள், வலைப்பதிவுகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் விளங்குகின்றன. வெகு மக்களைத் தொடர்பு கொண்டு செய்திகளைத் தெரிவிக்கும் அச்சு ஊடகங்கள் பலவும் கூட அதன் செய்திகளுக்காக இணையதளங்களை சார்ந்திருக்கிற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், எதிர்கால ஊடகமாக உருவாகி வருகின்ற இணையத்தை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம் என்பது குறித்தத் திட்டமிடல்கள் நமக்குத் தேவை.
இணையதளங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக செய்திகளை உலகறியச் செய்யும் வசதிகள் மலிந்து விட்டதற்கு, அதன் எளிமையான பயன்பாட்டு முறையே காரணம். ‘ஒருங்குறி’(Unicode) எனப்படுகின்ற எழுத்துக் குறியீட்டு முறையின் கண்டுபிடிப்பால், இணையதளங்களில் ஆங்கிலம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை உடைந்து போயுள்ளது. இது, தமிழ், சீனம் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகள் இணையதளப் பயன்பாட்டிற்கு வர வழிவகுத்தது. இதன் காரணமாக பல்வேறு தமிழ் இணையதளங்களை அறிஞர்களும், ஆர்வலர்களும், கணினி நிறுவனங்களும் தன்னிச்சையாக உருவாக்கினர்.
தமிழ்த் தட்டச்சு முறைகள்
தமிழ் எழுத்துகளை தட்டச்சு செய்யும் வழிமுறைகளில் நவீன முறைகளும் வந்து விட்டன. தமிழ்த் தட்டச்சு பயிற்சி (பாமினி விசைப்பலகைப் பயிற்சி) பெற்றிருந்தால் மட்டுமே தமிழில் தட்டச்சு செய்ய இயலும் என்ற நிலையும் உடைபட்டுள்ளது. ஆங்கிலத்தில் ‘ammaa' என்று தட்டச்சு செய்தால் அதனை அடுத்த நொடியே ‘அம்மா’ என்று தமிழில் உருமாற்றம் பெறச் செய்யும் மொழிமாற்றக் கருவிகள் (Transliterate tools) இணையத்தில் இலவயமாக பயன்பாட்டிற்குக் கிடைக்கின்றன. இத்தட்டச்சு முறையின்படி, தமிழ் எழுத்துகளை ஆங்கில எழுத்துகளை மனதில் வைத்துக் கொண்டு தான் தட்டச்சு செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, தட்டச்சு முறையை மேலும் எளிமைப் படுத்த, கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழக அரசு ஒரு குழுவை நியமித்தது. அக்குழு "தமிழ்-97" என்ற தட்டச்சு முறையை சிங்கப்பூரில் நடந்த "தமிழ்நெட் 97" மாநாட்டின் போது அறிவித்தது. அம்முறையின்படி தட்டச்சு செய்வதில் சிரமங்கள் நீடித்திருந்ததால், அம்முறை கைவிடப்பட்டு, 1999 ஆம் ஆண்டு "தமிழ்-99" என்ற விசைப்பலகை முறை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இம்முறையின்படி, ‘கா’ என்ற மெய் எழுத்தைத் தட்டச்சு செய்ய வேண்டுமானால், ‘க’ + ‘ஆ’ ஆகிய எழுத்துகளைத் தட்டச்சு செய்தால் போதும், என்று தமிழ் இலக்கண புணர்ச்சி விதிமுறைகளின் படியான தட்டச்சு முறை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இத்தட்டச்சு முறை மிகவும் எளிமையானதாகவும், அறிவியல் முறைப்படியும் வடிவமைக்கப் பட்டிருந்ததால், இதனைக் கற்றுக் கொள்வதும் எளிதாகியது. இத்தட்டச்சு முறையைக் கற்றுக் கொள்ள ‘டபிள்யூ3 தமிழ்’ (http://www.w3tamil.com), தமிழ் 99 விழிப்புணர்ச்சி மையம் (http://www.tamil99.org) போன்ற பல்வேறு இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறான எளிதான தமிழ்த் தட்டச்சுக் கருவிகளால் இணைய தளங்களில் தமிழ் மொழியை உள்ளீடு செய்வதில் இருந்த தடைகள் நீங்கியுள்ளன. இச்சூழலில், வலைப்பதிவுகளின் அறிமுகம் தமிழ் இணையதளப் பயன்பாட்டில், சாதாரண மனிதர்களின் பங்களிப்பை அதிகப்படுத்தி தமிழ் இணையத்திற்கு புத்துயிர் ஊட்டியுள்ளது எனலாம்.
வலைப்பதிவுகள்
வலைப்பதிவுகள் எனப்படுபவை, நமக்கான இணையதளப் பக்கங்களை நாமே இலவயமாக உருவாக்கிக் கொண்டு, அதில் நமது கருத்துகளை சுதந்திரமாகப் பதிவு செய்து கொள்ள வழிவகுக்கும் இணையச் சேவையாகும். பிளாக்கர்(Blogger.com), வேர்ட்பிரஸ் (wordpress.org), பிளாக்டிரைவ் (blogdrive.com) என பல்வேறு தனியார் நிறுவனங்கள் இவ்வாறான இலவச வலைப்பதிவு சேவையை வழங்குகின்றன. பெரும்பாலான அயல்நாடுகளில் வலைப்பதிவுகள் மக்கள் ஊடகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. டெக்னோராட்டி (Technocrarti.com) வலைப்பதிவு நிறுவனத்திவ், கடந்த சூன் 2008 வரை மட்டும் சுமார் 112.8 மில்லியன் வலைப்பதிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஈராக் போரின் போதும், ஆப்கான் படையெடுப்பின் போதும் அமெரிக்கப் படைகள் செய்த பல அத்துமீறல்களையும், மக்களின் பாதிப்புகளையும் வெளி உலகிற்குத் தெரிவித்த ஊடகங்களாக வலைப்பதிவுகளே பெரிதும் விளங்கின. மக்கள் ஊடகமாக வளர்ந்து வரும் வலைப்பதிவுகளின் வளர்ச்சியைக் கணக்கில் கொண்ட இஸ்ரேல் அரசு, தனது அரசிற்கான வலைப்பதிவை தொடங்கியது. உலகின் முதல் அரசு சார்வு வலைப்பதிவாகும் அது. மேலும், பாலஸ்தீனத்தை எதிர்த்து எழுதப்படும் வலைப்பதிவுகளுக்கு இஸ்ரேல் அரசு நிதி அளித்து ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன.
உலகின் மிகப்பெரும் சனநாயக நாடு என்று பீற்றிக் கொள்ளும் இந்திய அரசு, 2006 ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு நிகழ்வை சாக்கிட்டு, பிளாகர் இணையதளங்களை முடக்குமாறு நாட்டின் 153 முக்கிய இணையதளச் சேவை வழங்குநர்களுக்கு (Internet Service Providers) உத்தரவிட்டது. அவ்வாறு முடக்கப்பட்ட தளங்களில், இந்துத் தீவிரவாத இயக்கங்களின் இணையதளங்களும் அடக்கம். வலைப்பதிவுகள் தடை செய்யப்பட்ட நிகழ்வு, நாடு முழுவதும் வலைப்பதிவர்கள் மத்தியில் பெரும் சினத்தை ஏற்படுத்தியது. இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக இந்திய அரசு செயல்படுகின்றது என்று குற்றம் சாட்டி வலைப்பதிவர்கள் சிலர், நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்தனர். பின்னர், வலைப்பதிவுகள் மீதான தடையை சில நாட்களிலேயே அகற்றியது இந்திய அரசு. இந்தியாவின் ஒற்றுமைக்கு விரோதமாக வலைப்பதிவுகளில் கருத்துகள் உள்ளன என்றும் இதனாலேயே அவற்றைத் தடை செய்ய நேரிட்டதாகவும், பின்னர் விளக்கமளித்தது, நடுவண் தகவல் தொழில்நுட்பத் துறை.
இவ்வாறான நிகழ்வுகள் மூலம் வலைப்பதிவுகள் பெற்றிருக்கும் வாய்ப்பையும் அது மக்கள் ஊடகமாக வளர்ந்து வருவதைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ளலாம்.
தமிழ் வலைப்பதிவுகள்
தமிழ் மொழியில் வலைப்பதிவுகளின் வளர்ச்சி, எளிமையான தமிழ்த் தட்டச்சு முறையுடன் தொடர்புடையது. முன்பெல்லாம் அறிஞர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், கணினி பயன்பாட்டாளர்கள் மட்டுமே ஈடுபட்டு வந்த தமிழ் கணினி பயன்பாட்டுத் தளத்தில், வலைப்பதிவுகளின் வருகை சாமான்ய மக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தியது. ஏனெனில், அவற்றை உருவாக்க பெருந்தொழில்நுட்ப அறிவோ, புலமையோ தேவைப்படவில்லை. கணினி குறித்த அடிப்படை அறிவு மட்டும் போதும். இவ்வாறு உருவாக்கப்படும் வலைப்பதிவுகளில் நாம் பதிவு செய்யும் கருத்துகளை உடனுக்குடன் உலகிற்குத் தெரிய படுத்த திரட்டிகள் எனப்படும் இணையதளங்களும் உள்ளன. தமிழில் திரட்டி சேவைகள் வழங்கும் தமிழ்மணம் (thamizmanam.com), திரட்டி.காம் (thiratti.com), தேன்கூடு, தமிழ்வெளி(tamilveli.com), தமிழ்ப் பதிவுகள்(tamilblogs.com) உள்ளிட்ட இணையதளங்கள் இதற்கென செயல்படுகின்றன.
இத்திரட்டி இணையதளங்களில் நமது வலைப்பதிவை ஒருமுறை பதிவு செய்து விட்டால், நாம் பதிவுகள் எழுதிய பிறகு அதனை அத்திரட்டித் தளங்களின் முதல் பக்கத்தில் தலைப்பிட்டு வெளியிடும். திரட்டி இணையதளங்களைக் காணும் வாசகர்கள் அவற்றைப் படிப்பர். இவ்வாறு ஒரு வலைப்பதிவு பல்வேறு திரட்டிகளில் பதிவு செய்யப்படும் பொழுது நாம் எழுதும் ஆக்கங்களை சில நிமிடங்களிலேயே உலகறியச் செய்து விடலாம். இவ்வலைப்பதிவுகள் மட்டுமல்லாமல் நாமே இணையதளங்களை ஏற்படுத்தி அதில் நம் கருத்துக்களை பதிவு செய்து இணையதளப் பக்கங்களை உருவாக்கலாம்.
எழுதுதல் மட்டுமில்லாமல், வலைப்பதிவுகளில் புகைப்படங்கள், ஓவியங்கள், ஒளிப்படங்கள், ஒலிப்பதிவுகள் என பலவற்றையும் நாம் பதிவிட்டு வெளிப்படுத்த முடியும். ஒரு ஆக்கத்தினை ஒருவர் படித்த பின்பு அது குறித்த கருத்துக்களை, விமர்சனங்களை, எதிர்வினைகளை சில நிமிடங்களிலேயே பகிர்ந்து கொள்ளும் வசதியும் இவ்வலைப்பதிவுகளில் குறிப்பிடத் தகுந்தது. இவ்வசதி, பல்வேறு விவாதங்களை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.
இணையக் குழுமங்கள்
இணையக் குழுமங்கள் எனப்படுபவை ஒரு பெயரின் கீழ் இணைந்திருக்கும் பல்வேறு நபர்களின் மின்னஞ்சல் முகவரிகளைக் கொண்ட ஒரு குழுமம் ஆகும். இக்குழுமத்தில் உறுப்பினராகிய பின்பு, அக்குழும முகவரிக்கு நாம் அனுப்பும் மின்னஞ்சல் அக்குழுமத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு உறுப்பினர்கள் அனுப்பும் செய்திகள் மற்றும் அது குறித்த விவாதங்கள் என இணையக்குழுமங்கள் செயல்படுகின்றன. கூகிள், யாஹூ உள்ளிட்ட பல நிறுவனங்கள் இது போன்ற குழுமங்களை உருவாக்க உதவி புரிகின்றன. ஏற்கெனவே உள்ள ஒரு குழுமத்தில் உறுப்பினராகியும், புதிதான ஓர் தலைப்பில் ஒரு குழுமத்தை ஏற்படுத்தி அதில் பலரையும் இணைத்து, கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்தவும் இணையதளக் குழுமங்கள் உதவுகின்றன.
‘ஆர்குட்’ எனப்படும் சமூக குழும நிறுவனம் உள்ளது. அதில் "நாங்கள் இந்தியாவை வெறுக்கிறோம்"(We Hate India) என்றொரு இணையதளக் குழுமம் செயல்பட்டு வந்தது. அதில், பல்லாயிரக்கணக்கில் உறுப்பினர்கள் இணைந்தனர். அதன் முகப்புப் பக்கத்தில் இந்தியக் கொடி எரிக்கப்படும் புகைப்படம் இடம் பெற்றது. இக்குழுமத்தை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கிற்குத் தீர்ப்பளித்த நீதிபதிகள், அக்குழுமத்தை நிர்வகித்து வந்த கூகிள் நிறுவனத்திற்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், இணையதளங்களுக்குத் தணிக்கை முறைத் தேவை என்று நடுவண் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஆலோசனை கூறினர்.
இணையதளங்கள், வலைப் பதிவுகள், இணையக் குழுமங்கள் என தமிழ்க் கணினி வளர்ச்சி பெறுகின்ற இக்காலக் கட்டத்தில், இவற்றை நமக்கான ஊடகங்களாக கட்டியெழுப்ப வேண்டியத் தேவையும் அவசியமும் தமிழ்த் தேசியச் சிந்தனை கொண்டுள்ள இளைஞர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு உண்டு. தமிழ்த் தேசியக் கருத்தியலைக் கருவாகக் கொண்டு எழுதப்படும் அரசியல் கட்டுரைகள், செய்திகள் மீதான விமர்சனங்கள், கதை, சிறுகதை, கவிதைகள் உள்ளிட்ட இலக்கியப் படைப்புகள் என இந்த நவீன ஊடகங்களைக் கொண்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். இன்றையத் தகவல் தொழில்நுட்ப உலகில் நாம் பயன்படுத்தி வரும், கணினி, செல்பேசி உள்ளிட்டக் கருவிகள் அனைத்தும் மக்களுக்காக மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. உலகமய முதலாளிகளின் பொருளாதாரச் சுரண்டல்களை மேலும் தீவிரப்படுத்தவே அவை கண்டுபிடிக்கப்பட்டன. இருந்தாலும், அவை வாழ்வின் அங்கமாக வளர்ந்து விட்ட பின்பு, அதன் பாதகங்களையும் சாதகங்களையும் உணர்ந்து அதற்கேற்ப அவற்றை நமக்கான சாதனமாக தகவமைத்துக் கொள்ளும் திறன் வேண்டும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஆகஸ்ட் 2009
நமக்கான ஊடகத்தைக் கட்டியெழுப்புவோம்
- விவரங்கள்
- க.அருணபாரதி
- பிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஆகஸ்ட் 2009