தமிழகத்தின் தஞ்சை, திண்டுக்கல் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்றி, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கடந்த 10.04.2013 அன்று சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் செல்வி செயலலிதா வெளியிட்டார்.தமிழகத்தில் ஏற்கெனவே 10 மாநகராட்சிகள் உள்ள நிலையில், தற்போது மாநகராட்சிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகையில் 50 விழுக்காட்டிற்கும் மேலானோர், 3 வேளை உணவு கிடைக்காமல் வறுமையில் வாடும் நிலையில்,இந்திய அரசு எப்படி புதிய புதிய ஆயுதங்களை வாங்கியும்,அதனை சோதனையில் ஈடுபடுத்தியும் தமது ‘அந்தஸ்தை’, பறைசாற்றிக் கொள்கிறதோ,அதைப் போன்றதொரு ‘அந்தஸ்து’தான் இந்த மாநகராட்சி அறிவிப்பு.

நகராட்சிகளாக செயல்பாட்டில் உள்ள தஞ்சை,திண்டுக்கல் ஆகிய நகரங்கள், மாநகராட்சியாக உயர்த்தப்பட்ட காரணத்தால்,அங்குள்ள மக்களுக்கு பல சலுகைகள் கிடைக்கும் என்றும், மாநகராட்சி அறிவிப்பு அங்கு வாழ்கின்ற மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

ஆனால் கொண்டாடியவர்கள் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் தானே தவிர மக்கள் அல்லர். மாநகராட்சி அறிவிப்பு வந்ததும் தஞ்சை மக்கள் சோகத்தில் ஆழ்ந்துவிட்டார்கள். வீட்டுவரி, தண்ணீர் கட்டணம்,தொழில் வரி,திரையரங்குகளின் கேளிக்கை வரி ஆகியவைப் பன்மடங்கு உயர்ந்துவிடும் என்பதே அவர்களின் அச்சத்திற்குக் காரணம்.

ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் கொண்டாடியதற்குக் காரணம்,அவர்களுக்குப் பெரிய பதவிகள் கிடைக்கும்; மனை உயர்ந்து மனை வணிகத்தில் கொள்ளை லாபம் பார்க்கலாம் என்தாகும்.

 தமிழக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எல். அதிகாரிகளும் கொண்டாட்டத்தில் திளைக்கிறார்கள். பலபேர்க்குபதவி உயர்வு கிடைக்கும்.தஞ்சை மாவட்டத்திற்கு ஒரு காவல் கண்காணிப்பாளர் இப்பொழுது உள்ளார்.இனி தஞ்சை மாநகரில் மட்டும் காவல் கண்காணிப்பாளர் தகுதியில் பலர் அமர்த்தப்படுவர்.அவர்களுக்கு மேல் ஐ.ஜி. தகுதியில் ஒரு அதிகாரி வருவார். அதே போல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் பெருகுவர்.

அமைச்சர் பதவி கொடுக்க முடியாதவர்களுக்கு மேயர் பதவி கிடைக்கும்.அத்துடன் இன்னும் பல அரசியல் பதவிகளை உருவாக்கிக் கொள்ளலாம்.அரசியல்வாதிகள் – அதிகாரிகள் கூட்டம் கொழுத்திட பல வாய்ப்புகள் பெருகும். மக்களோ, தாங்க முடியாத புதிய சுமைகளைச் சுமப்பர்! குடியிருப்புகள் பல அகற்றப்படும்.

பத்து இலட்சம் மக்கள் இருந்தால்தான் நகராட்சியை மாநகராட்சியை ஆக்கலாம் என்று ஏற்கெனவே இருந்த நிபந்தனையை நீக்கி,மூன்று இலட்சம் மக்கள் தொகை இருந்தால் போதும் என்று ஆக்கினர்.

தஞ்சாவூர் நகராட்சியின் இப்போதைய மக்கள் தொகை இரண்டே கால் இலட்சம்.இதை மூன்று இலட்சமாக உயர்த்த சுற்று வட்டார கிராமங்களை மாநகரட்சியுடன் இணைப்பர். அந்த ஊர்களின் தனித்தன்மை,அடையாளம்,பெயர் அனைத்தும் மாநகராட்சிச் சாக்கடைக்குள் கரைந்து எண் குறிக்கப்பட்டு, ‘வார்டு’ என்று குறுக்குப்படும்.

காந்தியடிகள் சொன்ன உள்ளாட்சிக் கோட்பாட்டிற்கு நேர் எதிரானர்,செயற்கையான மாநகராக்கல் கொள்கை! அதிகாரப்பரவலுக்கு மாறாக அதிகாரக் குவியல் இது!

இந்தியாவில்,மக்கள் வாழக்கூடியத் தகுதியை இழந்து விட்ட நகரங்களை பட்டியலெடுத்தால்,அதில் முக்கியமான நகரங்களாக முன்வந்து நிற்பவை அனைத்தும் மாநகராட்சிகளே என்ற உண்மை தெரிய வரும். அந்தளவிற்கு மாநகராட்சிகள், குப்பைகளின் கூடாரமாகவும், மாசடைந்த மனிதவாழ்விடமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.

உலகமய முதலாளிகளின் தலைமைப்பீடமான அமெரிக்காவில் தற்போது நீடித்து வரும் பொருளியல் நிலையற்றத்தன்மை காரணமாக,அமெரிக்காவில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில்,தமது உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைக்கின்றன.

தேசிய இனத் தாயகங்களையும்,அதன் இயற்கை வளங்களையும் அழித்தொழிக்கத் துடிக்கின்ற இந்திய அரசு,இப்பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாராளமான அனுமதிகளை வழங்குவதோடு,அவர்களுக்காகஆயுதமேந்திப் போராடி மக்களையும் ஒடுக்க முனைகின்றது.

அவ்வகையில்,தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்கள் அனைத்திலும் உள்ள முக்கிய நகரங்கள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு,அந்நகரங்களின் இயற்கை வளங்கள் தாராளமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது.

வெளியாரால் திணிக்கப்படும் தொழில் வீக்கமும் அதனுடன் நிகழும் நகர்மயமாதலுமே ‘வளர்ச்சி’ என்பதாக ஊடகங்களும் படித்த நடுத்தர வர்க்கத்தினரும் தம்பட்டம்அடிக்கின்றனர். பெரும்பாலான மக்களை விழுங்கிக் கொழுக்கும் ‘வளர்ச்சி’ஒட்டுமொத்த சமூகத்தின் ‘முன்னேற்றம்’ ஆகாது. ஆனால் இவ்வகையில் நகர்மயமாக்கலில் இந்தியாவிலேயே முதன் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

கடந்த 30ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையைச் சுற்றியமைந்துள்ள திருவள்ளூர் உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்றுக் கொண்டு வந்த வேளாண்மை இன்று முற்றிலும் அழிந்து,சென்னை மாநகராட்சி,மிகப்பெரும் மாநகராட்சியாக(‘கிரேட்டர் சென்னை’) மாற்றப்பட்டுவிட்டது. ஓரளவு வேளாண்மை நடைபெற்றுக் கொண்டிருந்த திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல மாநகராட்சிகளிலும் இது தான் நிலைமை.

 இவ்வாறு விளை நிலங்களை இழப்பதென்பது, வெறும் பொருளியல் நடவடிக்கை மட்டுமன்று.எதிர்காலத்தில் இதன் காரணமாக ஏற்படப்போகும் மிகப்பெரும் உணவுப் பஞ்சமும், பண வீக்கமும்தான் இதை பறைசாற்றும்.

 இந்தப் பின்னணியில் தான், தமிழகத்தின் நெற்களஞ்சியமாக பறைசாற்றப்படும் தஞ்சை மாநகராட்சியாகத் “தரம் உயர்த்தப்பட்டதை” நாம் பார்க்க வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைக் கூலியாக செயல்பட்டு வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், உழவர்கள் வேளாண்மையை விட்டுவிட்டு வேறு வேலைகளுக்கு செல்ல வேண்டும் என சொல்கிறார். அதை நடைமுறைப்படுத்தும் விதமாகத்தான், அ.தி.மு.க. அரசின் மாநகராட்சி அறிவிப்பு உள்ளது.

தமிழகத்தில், கடந்த 30 ஆண்டுகளில் 15 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் தற்பொழுது விளைநிலங்களாக இல்லை. 1980 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலும் ஆண்டுக்கு 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இப்படி வேளாண் பாதையிலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கின்றன.(காண்க:‘வீட்டு மனைகளாகும் விவசாய நிலங்கள்!’,விகடன் இணையம், 02.11.2011)

இந்த அறிவிப்புக்குப் பின்னால் நிலவேட்டை முதலைகளும், பன்னாட்டு திமிங்கலங்களும் உள்ளன.

 மாநகராட்சி தவிர்த்த, பிற ஊராட்சி அமைப்புகளின் கீழ் உள்ள வேளாண்விளை நிலங்களை மொத்தமாக வாங்க வேண்டுமெனில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல கட்ட அனுமதி தேவை.

 ஆனால், மாநகராட்சிகளில் அவ்வாறான நிலை கிடையாது. மாநகராட்சியிடம் மட்டும் அனுமதி வாங்கிக் கொண்டு,பல நூறு ஏக்கர் நிலங்களை வாங்கிக் கொள்ளும் வசதிகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்கெனவே சட்டப்படி செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

 எனவே தான்,பன்னாட்டு நிறுவனங்களும், அதன் ஊழியர்களுக்கான கேளிக்கை நிறுவனங்களும் மாநகராட்சிகளைக் கொண்டாடுகின்றன.

அனைத்துத் தேர்தல் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் மனைத் தொழிலில் கொகட்டிப் பறப்பவர்கள் மாநகராட்சியாக தரம் உயர்வது இவர்களது செல்வத்தை தரம் உயர்த்தவே பயன்படும்.ஏனெனில் மாநகராட்சியாக மாறிய பிறகு தஞ்சை,திண்டுக்கல் நகரிலும் அவற்றை ஒட்டி புறநகரிலும் மனைகளின் விலை உயரும்.

இந்த அதிஉயர் விலையில் மனை வாங்குவதற்கு தமிழ்நாட்டில் பிறந்த பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினருக்கு இயலாது. வடநாட்டாரும், பன்னாட்டு நிறுவனங்களும் தான் அதிக விலை கொடுத்து வாங்கப் போகின்றன. இது வெறும் கற்பனை அல்ல. சென்னை, கோவையைப் பார்த்தாலே இது புரியும். சென்னையின் மவுண்ட் ரோடுக்கு அண்ணா சாலை என்ற தமிழ்ப் பெயர் மட்டும்தான் உண்டே தவிர மவுண்ட் ரோடு மார்வாடி ரோடாக மாறி, அண்ணா சாலை அயலார் சாலையாக மாறி வெகுகாலமாகிவிட்டது.கோயம்பேடு மாநகராட்சிக்கு வெளியில் இருந்தவரையிலும் தமிழர் கிராமமாக இருந்த்து.அது பெரு மாநகரத்திற்குள் இணைக்கப்பட்டு பேருந்து நிலையமும் வந்ததற்குப் பிறகு, வானுயர்ந்தக் கட்டடங்கள் அயலவர் ஆதிக்கத்தின் சின்னங்களாக நிற்கின்றன.

கோவை மாநகரம் மலையாளமயமாகிவிட்டதை நாடறியும். இதே நிலைதான் தஞ்சைக்கும் திண்டுக்கல்லுக்கும் நிகழப்போகிறது.

தமிழக அரசு,நகரங்களை உண்மையில் தரம் உயர்த்த விரும்பினால்,நகரங்களை நாசமாக்கி, மாசுபடுத்தி வருகின்ற பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தும்,இயற்கை வளங்கள் வரம்பின்றி உறிஞ்சப்படுவதற்கு தடை விதித்தும், மக்கள் வாழும் சூழலை முதலில் பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு, அவரவர் வாழ்விடங்களிலேயேபணிபுரியும்வகையில்,வேளாண்மை உள்ளிட்ட பிற சிறுதொழில்களை ஊக்குவிக்க வேண்டும்.

இவ்விரண்டையும் செய்யாமல், பன்னாட்டு நிறுவனங்களின் கையூட்டுக்காக, நகரங்களை மாநகராட்சிகளாக்கினால்,பெருமையும் ‘அந்தஸ்து’ம் வேண்டுமானால் கிடைக்கலாம், ஆனால், நல்ல காற்றும், குடிநீரும் இல்லாத, கான்கிரீட் சுடுகாடாகத்தான் அது அமையும்.

Pin It