“நடைப்பயணமும் உண்ணாவிரதமும் பார்ப்பதற்கு லேசான எளிய செயல்பாடுகள் போலவும்,நிரம்பவும் எளிய போராட்டங்கள் போலவும் தோன்றும்.ஆனால் அவற்றை நெறிபிசகாமல் செயல்படுத்தினால் அவை இரண்டும் கடுமையான போராட்டங்கள் என்பது தெரியும். தனிமனித உறுதியை சோதிக்கக் கூடியவை அவை” என்பார் தோழர் பெ.ம.(2004 டிசம்பர் த.க)

உண்ணாப் போராட்டம் காந்தியின் அகிம்சைப் போராட்டம் என்பதாக,எள்ளி நகையாடுவோர் சிலர் உள்ளனர். சென்னை மாகாணத்திற்கு தமிழ் நாடு என்ற பெயர் வைக்கக்கோரி தியாகி சங்கரலிங் கனார் 78 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 1963 ஆகஸ்ட் 27 அன்று உயிர் துறந்தார்.

அயர்லாந்து விடுதலைப் போராட்ட வீரர் பாபி சான்ட்ஸ் சிறைக்குள் உண்ணாப் போராட்டம் நடத்தி உயிர்நீத்தார். இப்போதும் மணிப்பூரில் இந்திய அரசின் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (ARMED FORCES SPECIAL POWERS ACT 1958) திரும்பப் பெற வலியுறுத்தி இரோம் சானு சர்மிளா 2000 நவம்பர் 5 முதல் முதல் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகிறார்.

அகிம்சை வழியில் போராடியவர்கள் மட்டுமல்ல,ஆயுதம் தாங்கிப் போராடியவர் களும் உண்ணா நிலையைப் போராட்ட வடிவமாக மாற்றியுள் ளனர்.பகத்சிங்கும் அவரது தோழர்களும் வெள்ளை ஏகாதி பத்தியத்தைக் கண்டித்து சிறையில் உண்ணாப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.யதிந்திரநாத் தாஸ் என்ற பகத்சிங்கின் தோழர் கல்கத்தாவை சேர்ந்தவர். 63 நாட்கள் உண்ணா நிலை இருந்து 1929 டிசம்பர் 13 அன்று லாகூர் போர்ஸ்டன் சிறையில் உயிர் நீத்தார்.

1904ல் பிறந்து தன்னுடைய 25வது வயதில் உயிரி ழந்த யதிந்தரநாத் தாஸ் உண்ணாநிலை குறித்து கூறி யதை சிவவர்மா சொல்கிறார். “எங்களில் அஜா யைத் தவிர வேறு யாருக்கும் உண்ணாவிரதம் இருந்த அனுபவம் கிடையாது.எந்த வொரு தோழரும் உணர்ச்சி வசப்பட்டு உண்ணாவிரதம் மேற்கொள்வதை அவர் எதிர்த்தார்.யதிந்திர நாத் தாஸ் கூறினார். “உண்ணா விரதம் அறிவித்து நாம் ஒரு கடினமான போராட்டத்திலே குதிக்கிறோம்.இது ஒரு வகையில் ரிவால்வார்களுடன்.

பிஸ்டல்களுடன் செய்யும் போராட்டத்தை விட மிகவும் கஷ்டமானது.உண்ணா விரதமிருந்து சிறுக.சிறுக நம்மை நாமும் கரைத்துக் கொண்டு.அங்குலம்.அங்குலமாக மரணத்தை நோக்கி சறுக்கு வதைக் காட்டிலும் போலிசாரின் குண்டுகளுக்குப் பலியாகிவிடுவதும்.தூக்குக் கயிற்றில் தொங்கி விடுவதும் மிகவும் சுலபமாகும்.ஒரு தடவை உண்ணாவிரதப் போரில் குதித்துவிட்டு.பின்வாங்குவது புரட்சியாளரின் கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்துவதாகும்.அதைவிட முதலிலேயே போராட்டத்தில் இறங்காமலிருப்பதே மிகவும் நல்லது.’’

1929 சூலை13 அன்று உண் ணாநிலை தொடங்கப்பட்டு பத்து நாட்கள் கழித்து சிறை அதிகாரிகள் பகத்சிங் தோழர்கள் மனஉறுதியை குலைப்பதற்காக நல்ல நல்ல சுவையான உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டு வந்து வைப்பார்கள்,அதிகாரிகள்,உணவு வகைகள்,பழங்கள்.பால் வைத்து விட்டு வெளியே சென்றதுமே பெரும்பான தோழர்கள் அவற்றை உடன் வெளியே வீசி எறிந்து விடுவார்கள்.யதிந்தரநாத் தாஸ் ஒருவர்தான் அற்புதமான மனக் கட்டுப்பாடுடையவர்.அவர் உணவு வகைகளை வெளியே வீசுவது கிடையாது. அவருடைய அறையிலிருந்து சிறை அதிகாரிகள் நாள் தோறும் தாம் வைத்து விட்டு போன சப்பாத்திகளையும். பழங்களையும் சரியாக திரும்ப எடுத்து சென்றனர்.

உண்ணாப் போராட்டத்தை முடிப்பதற்கு மூக்கு துவாரத்தில் ரப்பர் குழாய் செலுத்தி பாலை ஊற்றினர். பால்உணவு குழாய்க்கு செல்லாமல் மூச்சு குழாய்க்கு சென்றதால் பாதிக்கப்பட்டு உயிர் நீத்தார்யதிந்திரநாத் தாஸ்.

சிறைக் குள்ளே மட்டு மல்ல, சிறைக்கு வெளியிலும் நடை பெற்ற போராட்டங்களை புரிந்து கொள்வோம்.

1986 நவம்பர் மாதம் தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது காவல்துறை அதிகாரி மோகன் தாசு புலிகளின் தகவல் தொடர் புக் கருவிகளை பறிமுதல் செய்தார். புலிகளின் தங்கும் இடங்கள். செயலகங்கள், பயிற்சி முகாம்கள்,படைமுகாம்கள் இவற்றிக் கிடையேயான தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. பிரபாகரன் சென்னை இந்திரா நகரில் இருந்த ஆண்டன் பாலசிங்கம் வீட்டுக்குச் சென்றார். “நரம்பு மண்டலத்தில் கை வைத்துவிட்டார்கள். இதை அனுமதிக்க முடியாது. இதனை எப்படியாவது திரும்ப பெற வெண்டும்; என்றவர் தகவல் தொடர்புக் கருவிகள் கிடைக்கும் வரை சொட்டுத் தண்ணீர் அருந் தமாட்டேன் என்று உண்ணா நிலையை அறிவித்தார்.

உடன் இருந்தவர்கள் இன்றைக்கு ஊடகங்களுக்கு தெரிவித்துவிட்டு நாளை முதல் உண்ணா விரதம் இருக்கலாமே என்ற போது, பிரபாகரன் “நீங்கள் அரசியல் நாடகம் நடத்த நினைக் கிறீர்கள். விளம்பரம் செய்து விட்டுப் போராட விரும்புகின் றீர்கள். அதை என்னால் செய்ய முடியாது’’என்று தெரிவித்து விட்டு உண்ணாநிலையைத் தொடங்கினார்.48 மணிநேரம் ஒரு சொட்டு தண்ணீர் அருந் தாமல் போராடினார்.எம்.ஜி.ஆர் தலையிட்டு தகவல் தொடர்புக் கருவிகளை பிரபாகரனிடம் ஒப் படைத்தார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பழச்சாறு தந்து உண்ணாப் போராட்டத்தை 23.1.1986அன்று முடித்து வைத்தார்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட திலீபன்.தலைவர் வழியில் நின்று போராடியர்.ஐந்து அம்சகோரிக்கைகளை இந்திய அரசிடம் முன் வைத்து திலீபன் 16.09.1987 அன்று உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கினார். போராட்டத் தைத் தொடங்குவதற்கு முன், உடன் இருந்தவர்களிடம் “என்ன நடந்தாலும் யாரும் ஒரு சொட்டு நீர்கூட கட்டாயப்படுத்தியோ,சுய நினைவற்ற நிலையிலோ எனக்குத் தரமுயற் சிக்கக் கூடாது.

என் கோரிக்கைகள் நிறைவேறா விட்டால் நான் இறக்கும் மட்டும் எவ்விதமான சிகிச்சையும்அளிக்கக்கூடாது.சுயநினைவோடு என்றாலும் சரி.சுயநினைவு இல்லை யென்றாலும்சரி இதற்கு சம்மதிக் கிறேன்’’என்று சத்தியம் வாங்கி விட்டுதான் போராட்டத்தைத் தொடங்கினார். 265 மணிநேரம் தனது சாகும் வரையிலான போராட்டத்தை நடத்திய திலீபன் 26.09.1987 காலை 10.48 மணிக்கு உயிர்நீத்தார்.தியாக தீபம் திலீபன் குறித்து தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் 2005டிசம்பர் 25ல் ஆற்றிய உரை தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

“திலீபனின் மரணம், புத்தர் பிறந்த புண்ணிய பூமி இந்தியா. காந்தி பிறந்த அகிம்சைநாடு இந்தியா என்னும் இந்தியாவின் போலிமுகத்தை அம்பலப்படுத்தியது. இந்தியா வங்கதேச விடுதலையைப் போல் தமிழீழத்தைப் பெற்றுத்தராது என்பதை தமிழர்களுக்கு உணர்த்தியது.தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் இனப்பகை முகத்தை திலீபனின் மரணம் தமிழர்களுக்கு உணர்த்தியது.

 “எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான தியா கங்களைப் புரிந்திருக்கிறது. வீர காவியங்களைப் படைத்திருக்கிறது.அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கிறது.இவை எல்லாம் எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் ஈட்டிய வீரசாதனைகள்.ஆனால் எனது அன்பான தோழன் திலீபனின் தியாகமோ வித்தியாசமானது.வியக்கத்தக்கது.எமது போராட்ட வர லாற்றில் புதுமையானது.சாத்வீகப் போராட்டக்களத்தில் தன்னைப் பலிக்கொடுத்து ஈடு இணையற்ற ஒரு மகத்தான தியாகத்தைத் திலீபன் புரிந்தான்.

அவனது மரணம் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சி.தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி. தமிழர் தேசிய ஆன்மாவைத் தட்டி எழுப் பிய நிகழ்ச்சி. பாரத நாட்டைத் தலை குனியவைத்த நிகழ்ச்சி. உல கத்தின் மனச்சாட்சியைச் சீண்டி விட்ட நிகழ்ச்சி. திலீபன் யாருக் காக இறந்தான், அவனது இறப் பின் அர்த்தமென்ன? அவனது இறப்பு ஏன் ஒரு மகத்தான நிகழ்ச்சியாக மக்கள் எல்லோ ரையுமே எழுச்சிக் கொள்ளச் செய்த ஒரு புரட்சிகர நிகழ்ச்சி யாக அமைந்தது.திலீபன் உங்க ளுக்காக இறந்தான். உங்கள் உரிமைக்காக இறந்தான். உங்கள் மண்ணுக்காக இறந்தான். உங்கள் பாதுகாப்பிற்காக, உங்கள் சுந்ததிரத்துக்காக உங்கள் கௌரவத்திற்காக இறந்தான்.

“தான் நேசித்த மக்களுக்காக, தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னதத் தியாகத்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான் அவன் செய்திருக்கிறான். ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை. எமது கௌரவம். நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதி வாய்ந்தஒரு இலட்சியப் போராளி என்ற ரீதியில் அவன் மீது அளவு கடந்த பாசம் எனக்குண்டு.அவன் துடித்துத் துடித்துச் செத் துக் கொண்டிருக்கும் போதெல் லாம் என் ஆன்மா கலங்கும்.

“திலீபன் ஒரு சாதாரண மனி தப் பிறவியல்ல. தன்னை எரித்துக் கொண்டிருக்கும் ஓர் இலட்சிய நெருப்பு.இலட்சிய உறுதியின் உச்சக் கட்டமாக திலீபன் தன்னை அழித்துக் கொண்டான்.அவன் உண்மையில் சாக வில்லை.காலத்தால் அழியா வர லாற்று நாயகனாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

திலீபன் மரணம் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித் திருக்கிறது. இது அர்த்தமற்ற சாவு என இந்தியத் தூதர் சொல்லியிருக்கிறார்.ஆனால் உண்மை யில் நடந்தது என்ன? நடந்து கொண்டிருப்பது என்ன?என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.எமது உரிமைகள் வழங்கப்படும்.எமது மக்களுக்கும் எமது மண்ணுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும். தமிழ் மக்கள் தமது பாரம்பரிய தாய கப்பூமியில் தம்மைத் தாமே ஆளும் வாய்ப்பு அளிக்கப்படும்.இப்படியெல்லாம் பாரத அரசு எமக்கு அளித்த வாக்குறுதிகளை நம்பி நாம் எமது ஆயுதங்களைக் கையளித்தோம்.எமது மக்களின தும் மண்ணினதும் பாதுகாப்பை இந்தியாவுக்குப் பொறுப்பளித்தோம்.

 “அதனையடுத்து என்ன நடை பெற்றது என்பதெல்லாம் எமது மக்களாகிய உங்களுக்குத் தெரி யும்.தமிழர் அகதிகள் தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்ல முடியாது. முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்க சிங்களக் குடி யேற்றம் துரிதகதியில் தமிழ் மண்ணைக் கபளீகரம் செய்தது.சிங்கள அரசின் போலீஸ் நிர் வாகம் தமிழர்ப் பகுதிகளில் விஸ் தரிக்கப்பட்டது.’’

“அவசர அவசரமாக சிங்கள இனவாத அரசயந்திரம் தமிழர் பகுதிகளில் ஊடுருவியது. சமா தான ஒப்பந்தம் என்ற போர் வையில் சமாதானப் படையின் அனுசரணையுடன் சிங்கள அரச ஆதிக்கம் தமிழீழத்தில் நிலை கொள்ள முயன்றது.இந்த பேராபத்தைஉணர்ந்து கொண்ட திலீபன் இதற்கு ஒரு முற்றுப் புள்ளிகாணத் திடசங்கற்பம் கொண்டான்.

“சிங்கள அரசுடன் உரிமைக் கோரிப் போராடுவதில் அர்த்த மில்லை. பாரதம் தான் எமது இனப்பிரச்சனையில் தலையிட்டது.பாரதம் தான் எமது மக்களின் உரிமைக்கு உத்தரவாதமளித்தது.பாரதம்தான் எம் மிடம் ஆயுதங்களை வாங்கியது. பாரதம் தான் எமது ஆயுதப் போராட் டத்தை நிறுத்தி வைத்தது.ஆகவே பாரத அரசிடந்தான் நாம் உரிமை கோரிப் போரிட வேண்டும். எனவேதான் பாரதத்துடன் தர்ம யுத்தம் ஒன்றைத் தொடுத்தான் திலீபன்.அத்தோடு பாரதத்தின் ஆன்மீக மரபில் பெறப்பட்ட அகிம்சை வடிவத்தை ஆயுதமாக எடுத்துக் கொண்டான். மக்களின் ஒன்று திரண்ட சக்தி மூலமே மக்களின் ஒருமுகப்பட்ட எழுச்சி மூலமே நாம் எமது உரிமைகளை வென்றெடுக்கலாம். திலீபனின் ஈடு இணையற்ற தியாகத்திற்கு நாம் செய்யும் பங்களிப்பு இது தான்.’’

இவ்வாறு வரலாற்றுச் சிறப்பு மிக்க, கருத்துச் செறிவு மிக்க உறையாற்றினார் பிரபாகரன்.

பாரதம் என்கிற இந்திய அரசுடன் திலீபன் தொடுத்த அறப்போரை நம்முடைய மாணவர்கள் இப்போது தொடங்கியுள்ளார்கள்.மாணவர்கள் மூட்டிய போராட்ட நெருப்புதான் ஒட்டு மொத்தத் தமிழகத்தையும் போராட வைக்கிறது.பல்வேறு இயக்கங்களும் உண்ணாப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

உணர்வுகளை வெளிப்படுத்த நடைபெறும்உண்ணாப் போராட்டத்தை சிறுமைப் படுத்தி சீரழித்த பெருமை கலைஞர் கருணாநிதிக்கு உண்டு.

முதல்வராயிருந்த கலைஞர் சேது சமுத்திர திட்டத்தை செயல் படுத்த வலியுறுத்தி 1.10.2007 அன்று திடீரென்று உண்ணாப் போராட்டம் அறிவித்தார். உச்ச நீதிமன்றம் உண்ணாவிரதம் இருப்பது சட்டவிரோதம் என்றவுடன் உண்ணாப் பந்தலில் இருந்து வெளியெறி கோட்டைக்குச் சென்று கையெழுத்திட்டார்.மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாநிலை இருந்த அமைச் சர்களும். உடன்பிறப்புகளும் கலைந்து சென்றனர்.

நான்காம் கட்ட ஈழப்போர் நடந்தபோது 27.04.2009அன்று காலையில் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாநிலை இருந்தார். பகல் பன்னிரெண்டு மணிக் கெல்லாம் உண்ணா நிலையை முடித்துக் கொண்டார்.காலை சிற்றுண்டிக்குப் பின் பிற்பகல் உணவுக்கு முன் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய ஒரே தலைவர் கலைஞர்தான்.

“கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடக்காது என்று ப.சிதம்பரமும், பிரணாப் முகர்ஜி யும் சொன்னார்கள். எனவே உண்ணாநிலையை முடித்துக் கொண்டேன்’’ என்றார். மறுநாள் செய்தியாளர்கள் கலைஞரிடம் கேட்டார்கள் கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடக்காது என்கிறீர்கள்.ஆனால் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டு 2700பேர் இறந்துள்ளார்களே, கலைஞர் சொன்னார் “மழை விட்டும் தூவானம் விடவில்லை”என்றார். 2700பேர்களின் உயிர் வெறும் மழைத் தூவானமாகத் தெரிந்தது அவர்க்கு! 

ஈழத் தமிழர் நலனுக்காக கலைஞர் பேசும் பேச்சுகள் வின்னர் படத்து கைப்புள்ள நகைச் சுவைகளை விஞ்சக் கூடிய ஒன்றாக உள்ளது. அமெரிக்கத் தீர் மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்.அமெரிக்கத் தீர் மானத்தை இந்தியா திருத்தம் செய்து கொண்டு வரவேண்டும். இந்திய அரசு திருத்தம் செய்து கொண்டு வராவிட்டால் அமைச் சரவையில் இருந்து வெளியே றுவோம். கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்.நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் கூடபோதும் எங்கள் முடிவை மறு பரிசீலனை செய்வோம். என்றெல்லாம் மாற்றி மாற்றிப் பேசி இன்று விலகியுள்ளார்.ஈழத்தமிழர் உரிமைக்காக கலைஞரின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது இந்த நகைச் சுவைக் காட்சிதான் நினைவுக்கு வருகிறது.

தலைவர்: “மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யலாம்னு இருக்கேன். என்ன பண்றது?”

தொண்டர்:    பேசாம கட்சிய கலைச்சிடுவோம் தலைவரே!

அரசியல் தலைவர் கலைஞர் நடத்திய உண்ணாநிலைப் போராட்டங்கள் இப்படியென் றால் திரைப்பட நடிகர்கள் நடத்திய உண்ணாநிலைப் போராட்டம் வெறும் நாடகமாக அரங்கேறியுள்ளது.

கடந்த 02.04.2013அன்று தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாப் போராட்டம் நடைபெற்றது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணா போராட்டம் என்று அறிவிக்கப்பட்டது. முழுமையாகஉணர்வுடன் கலந்து கொண்டவர்கள் மிகக் குறைவு. நடிகர் ரஜினிகாந்த் காலை 11.30 மணிக்கு வந்தார். பிற்பகல் 1 மணிக்குப் புறப்பட்டுச் சென்றார். நடிகர் கமலஹாசன் மாலை 4.15 மணிக்கு வந்தார். மாலை 4.25க் குப் புறப்பட்டுச் சென்றார். நடி கர்கள் விசால், ஆர்யா, விஷ்ணு, ஜித்தன் ரமேஷ் சாந்தனு, ஜீவா, உதயநிதி உள்ளிட்ட பலர் ஊட கங்களுக்குப் போஸ் கொடுத்து விட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.

இதற்கு சில நாட்களுக்கு முன்பு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாப்போராட்டம் நடந்தது. நடிகர்கள் ஒப்பிட அது ஓரளவு கட்டுப்பாட்டுடன் நடந்தது. பொதுவாக இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத இசைஞானி இளையராஜா இந்த உண்ணாப்போராட்டத்தில் கலந்து கொண்டு சென்றார்.ஏற்கெனவே இனத்துரோகிகள் ஏற்பாட்டில் கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்த முன்வந்த இளையராஜாவுக்குத் தமிழின உணர்வாளர்கள் மற்றும் ஈழத் தமிழர்கள் கண்டனம் தெரிவித்தனர்.அந்நிகழ்ச்சி பிறகு நிறுத்தப்பட்டது.இந்நிலையில்தான் இளையராஜாவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார் என்பதை உணரவேண்டியிருக்கிறது.

செய்தியாளர்கள் சாப்பிட சென்றவுடன் நடிகர் நடிகைககள் அருகில் இருந்த நட்சத்திர உண வகத்திற்குச் சென்று உணவருந்தியுள்ளனர். உண்ணாநிலை நடை பெற்ற நேரத்தில் நடிகை திரிஷா தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர உணவகத்தில் ஐஸ்கிரீம் அறிமுக விழாவில் கலந்துக் கொண்டு ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்.இந்தச் செய்தியும் படத்துடன் செய்தித்தாளில் வெளிவந் துள்ளது.ஒரு வாரத்திற்கு முன்பே அறிவிப்பு செய்யப்பட்டுப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.தமிழர்களாக உள்ள நடிகர்களும் சரி,தமிழரல்லாத நடிகர்களும் சரி,தங்களை வாழவைக்கும் இனத்துக்கு உண்மையாக இல்லாமல் ஒப்புக்காக செயல்படுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நயன்தாரா அசின், அனுஸ்கா, கன்சிகா, தமன்னா, அமலாபால் அஞ்சலி உள்ளிட்ட முன்னணி நடிகைகள்இப்போராட்டத்தில்பங்கேற்கவில்லை.இவர்கள்அனைவரும்வெளிமாநிலத்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.அதே போல் நடிகை குஷ்பு இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

விஸ்வரூபம் படச் சிக்கலின் போது கமலுக்காக ரசிகர்கள் போராடினார்கள்.கடனை அடைக்கப் பணம் அனுப்பினார்கள்.ரஜினிகாந்த உடல் நலம் குன்றிய நேரத்தில் தமிழ்நாட்டு ரசிகர்கள் கோயில்கள் தோறும் வழிபாடு நடத்தினார்கள். நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று சொன்ன ரஜினி, இயக்குநர்கள் சீமான், அமீர், கடந்த ஆட்சியில் கைது செய்யப் பட்ட போது கண்டனமாவது தெரிவித் தாரா?

அரசியல் தலைவர்களைப் போல் அனைத்து சிக்கல்களுக் கும் நடிகர்கள் கருத்துச் சொல்ல வேண்டியது இல்லை.துறை சார்ந்த சிக்கல்களிலாவது தலையிட மறுப்பது ஏன்? உண்ணாப் போராட்டத்தில் யாரும் பேசவில்லை,எவ்வளவு எச்சரிக்கை பாருங்கள். எதற்கு வீண் வம்பு? வெள்ளித்திரையில்அனல்தெரிக்கப்பேசுபவர்கள்.அநீதிகளுக்குஎதிராகப்போராடி வெல்வார்கள். ஆனால் உண்ணாப் போராட்டத்தில், மக்களின் கனவு நாயகர்கள் மவுனமாய் இருந்தார்கள்.

உண்ணாப்போராட்டத்தில் யாரும் பேசமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தின் அடிப்படை யில்தான் நடிகர் அஜீத் போன்ற வர்கள் கலந்து கொண் டுள் ளனர். இதற்கு முன்பு நடிகை அசின் இலங்கைக்குப் போகக் கூடாது என்ற பலரின் கோரிக்கையினை மீறி இலங்கைக்குச் சென்றார்.இராச பக்சே மனைவி உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுவந்தார். தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டிக்கவில்லை.

இனி தமிழ்நாட்டு நடிகர்கள் இந்தியப் பெருமிதங்களைத் தமிழ்நாட்டுத் திரைப்படங்களில் வலியுறுத்தக் கூடாது.பாடலாசிரியர்கள் இந்தியாவை பெருமைப் படுத்தி,இந்திய ஒற்றுமையை வலியுறுத்திப்பாடல்கள் இனியும் எழுதக்கூடாது.நடிகர்கள் தங்கள் மன்றங்கள் மூலம் போராட்டங்களைமுன் மொழிய வேண்டும்.

தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கலைக்கப்பட்டு,தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் எனப் பெயர் மாற்றம் பெற வேண்டும்.தமிழர் இன உரிமைக்காகவும் தமிழர் நலனுக்காகவும் தமிழ்நாட்டு நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும்

Pin It