சென்னையை எப்படியாவது சீர்மிகு சிங்கார சென்னையாக மாற்றிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி களம் இறங்கியிருக்கும் முதல்வர் கருணாநிதியும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் அதற்காக முதலில் கை வைத்தது சென்னையில் உள்ள குடிசைகள் மீதுதான்.

சென்னை நகரில் பொருத்தவரையில் அதிவிரைவு மேம்பால நெடுஞ்சாலை (துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை) அதிவேக நெடுஞ்சாலை (அடையாறு ஆற்றிலிருந்து போரூர் நந்தம்பாக்கம் பாலம் வரை) வெளி வட்டச் சாலை (வண்டலூரிலிருந்து மீஞ்சூர் வரை), கடலோர மேம்பாலச்சாலை (திருவொற்றி யூரிலிருந்து எண்ணூர் வரை) ஆறுவழிச்சாலை, கூவத்தைச் சுத்தம் படுத்துதல் போன்ற அதி முக்கியமான சென்னை நகரை அழகுபடுத்தி, போக்குவரத்தை விரிவாக்கி சீர்மிகு சிங்காரச் சென்னையாக மாற்றுவதற்கு இந்தத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் வெளியேற்றப்பட்ட சேரி மக்கள், குன்றத்தூர்-திருப்பெரும்புதூர் நெடுஞ்சாலையில் குன்றத்தூரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலையில் நல்லூர், பழைய மகாபலிபுரம் சாலையில் துரைப்பாக்கத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் கண்ணகி நகர், பெருங்களத்தூர் அருகே எருமையூர் கூட்டு ரோடு செல்லும் வழியில் தாம்பரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் கன்னடபாளையம் என்று குடியமர்த்தப்பட்டுள்ளனர். கண்ணகி நகரில் 15 ஆயிரத்து 656 வீடுகள் கட்டி முடித்திருப்பதாகக் கூறி, 14 ஆயிரத்து 509 வீடுகளை இதுவரை ஒதுக்கியிருக்கிறார்கள். இன்னும் எட்டாயிரம் வீடுகள் கட்டப்போவதாகவும் அரசு தரப்பில் கூறிவருகிறார்கள்.

நகரின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக சேரி மக்களை நகருக்கு வெளியே எங்காவது தூக்கி எறியும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுடைய நடவடிக்கையை நமது நடுத்தர, மேல்வர்க்க மக்கள் வரவேற்கவே செய்கின்றனர். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வரும் விதிமுறை மீறிக் கட்டப்பட்ட ஒரு நட்சத்திர விடுதியால் நீதிமன்ற உத்தரவை மீறியும் பிரமாண்டமாக இன்றும் நிற்கமுடிகிறது! செயல்பட முடிகிறது!! இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஒட்டுமொத்த நகரவாசிகள், சேரிகளால்தான் சென்னை நகரின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்கிறார்கள்.

‘நகரம் வளர்ச்சி அடைய சேரி மக்களை விரட்டுவதில் என்ன தவறு’ என்று கேட்கிறார்கள். கூவத்தைச் சாக்கடையாக்கி, நகரின் தூய்மையைக் கெடுப்பவர்கள்தானே சேரி மக்கள் என்று படித்த நடுத்தர, மேல்தட்டு மக்களின் புத்திக்குள் ஏற்றப்பட்டிருக்கிறது. கூவம் உண்மையில் சேரி மக்களால்தான் கெட்டுப் போனதா? யமுனை நதிக் கரையில் வாழ்கிற மூன்று லட்சம் குடிசைவாசிகளால் அந்நதியில் சேரும் மாசு வெறும் 0.33 சதவிகிதம் மட்டும்தான். மீதமுள்ள 99.67 சதவிகித மாசு மற்றவர்களால் தொழிற் சாலைகளால் ஏற்படுகின்றன. (ஆதாரம்: மாசுதீங்கு ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளி விவரம்) கூவத்துக்கும் இது பொருந்தும்தானே.

நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் அடுக்குமாடி கட்டடங்களால் வெளியேறும் கழிவுகள், உணவுவிடுதிக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், குப்பைகள் என கூவத்தில் கொட்டப்படுபவை குறித்து என்றைக்குமே இந்த நடுத்தர, மேல்தட்டு மக்கள் கவலைப்பட்டது கிடையாது. பொதுவாக ஆறு ஆறாக இருக்கும் வரை அதன் கரைகளில் வாழ்பவர்களால் அந்த ஆற்றுக்கு என்ன தீங்கு வந்துவிடப் போகிறது? காவிரி ஆற்றின் கரைகளில் இன்றும் வீடுகள் இருக்கின்றன. அதில் மக்கள் வசித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.

இவர்களை ஆக்கிரமித்து இருக்கிறார்கள் என்று காரணம் காட்டி அகற்றுகிறார்கள் என்றால், சென்னையில் தியாகராயர் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட துணிக்கடைகள், வணிக வளாகங்கள், கல்யாண மண்டபங்களை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் அந்த உத்தரவை அரசு நிறைவேற்றாமல் இருப்பது ஏன்?

நகரில் வசித்து வந்த குடிசை வாழ் மக்கள் வளர்ச்சிப் பணி என்கிற பெயரில் இங்கிருந்து அகற்றப்பட்டு எங்கோ ஒரு மூலையில் குடியமர்த்தப் படுகிறார்கள். இதனால் இடம் பெயரும் மக்களின் சமூக, பொருளாதார வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என்று சிந்திக்கப்படுவதே இல்லை. நகரம் என்பதை பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் வாழ்வதற்கான இடமாக மாற்றுகிறார்கள்.

குடிசைகளை அகற்றி விட்டு அதில் வசித்த மக்களை எந்த அடிப்படை வசதியும் இல்லாத பகுதிகளில் நகருக்கு வெளியே குடியமர்த்தப்படும் சேரி மக்கள், தினமும் அங்கிருந்து கூலி வேலைக்காக நகரை நோக்கி வந்து செல்வ தால் அவர்களின் வருமானத்தில் பெரும் பகுதி பயணத்துக்கே போய்விடுகிறது. எந்த வளர்ச்சித் திட்டத்திற்காக அவர்கள் வெளியேற்றப்பட்டார்களோ அந்தத் திட்டத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசு அதையொட்டி வெளியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய எந்த நிதி ஒதுக்கீடும் செய்வதில்லை என்பதுதான் வேதனையான உண்மை.

நகருக்கு ஒதுக்குப்புறத்தில் இவர்கள் குடியமர்த்தப்படும் இடங்களில் பள்ளிகளோ அரசு மருத்துவமனைகளோ இல்லை. ஒரு தலைமுறையை கல்வி அறிவு அற்றதாக உருவாக்குவதில் இந்த அரசுக்கு அப்படியென்ன மகிழ்ச்சியோ தெரியவில்லை. (சென்னை எழும்பூரில் கூவம் கரையில் இருந்து அகற்றப்பட்ட குடிசைவாசிகளுக்கு நகருக்கு வெளியே இடம் ஒதுக்கப்பட்டது. எழும்பூரில் இந்தச் சேரிக் குழந்தைகள் படித்து வந்த மாநகராட்சிப் பள்ளியும் மாணவர்கள் யாரும் வருவதில்லை என்ற காரணத்தால் மூடப்பட்டு விட்டது. அந்தக் குழந்தைகள் புதிதாக வசிக்கப் போன இடத்தில் பள்ளிக்கூடங்கள் கிடையாது. சேரி மக்களின் பெரும்பாலானோர் தலித்துகள்.

ஆண்டுக்கு நூறு நாட்கள் கூட நடக்காத, அப்படியே நடந்தாலும் அதனால் ஏழை, எளிய பாமர மக்களுக்குப் பயன்படாத சட்டப்பேரவை கூட்டத்திற்கான பிரமாண்ட கட்டடம் நகரின் மத்தியில் கட்டப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்துச் சிக்கல், பாதுகாப்பு ஏற்பாடுகளால் மக்களுக்கு ஏற்படும் அசௌரியங்கள் பற்றியெல்லாம் யாரும் அரசுக்கு கவலையில்லை. சட்டப் பேரவை கட்டடத்தை நகரில் இருந்து தொலையில் வண்டலூருக்கு அருகே கட்டியிருந்தால் என்ன குறைந்து போய்விடும்?

2001-ம் ஆண்டு கணக்கின் படி குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 79 ஆயிரம் பேர். (உலகமயமாயதால், விவசாயிகளுக்கு எதிரான விவசாயக் கொள்கை, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்ற திட்டங்களால் கிராம மக்கள் அவர்களின் சொந்த நிலத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு சென்னை போன்ற பெரு நகரங்களில் நடைபாதை வாசிகளாக, சேரிவாசிகளாக ஆக்கப்பட்டு வருவதால் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டேதானிருக்கிறது)

குடிசை மாற்று வாரியம் மூலம் இதுவரை சேரி மக்களுக்கு நிறைவேற்றப்பட்ட ஆக்கப் பூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை. ஆனால் சேரி மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் ஜவஹர்லால் நேரு தேசிய நகரபுறப் புனரமைப்புத் திட்டத்தின் பலகோடி ரூபாய் நிதியை நகரை அழகுபடுத்துவதற்கே இந்த அரசு பயன்படுத்தி வருகிறது என்று தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

சென்னை குடிசைப் பகுதிகளில் தீ விபத்துகள் மற்றும் இடம்பெயர்த்துக் குடியமர்த்தப் பட்டவர்களின் வாழ்நிலை குறித்த உண்மையறியும் குழு (அ.மார்க்ஸ் தலைமையில்) அளித்துள்ள அறிக்கையில்,

1. வளர்ச்சித் திட்டங்களுக்காகவோ, கார்ப்பரேட்களுக்காகவோ குடிசைப் பகுதி மக்கள் இடம் பெயர்த்துக் தொலைதூரத்தில் குடியமர்த்தப் படுவது நிறுத்தப்பட வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் ஏற்கெனவே வசித்த இடங்களில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் குடியிருப்பு, வசதி செய்து தரப்பட வேண்டும்.

2. குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் குடிநீர், பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன்கடை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

3. இப்போது வாழும் சுகாதாரக் கேடான அடிப்படை வசதிகளற்ற நிலையிலேயே அவர்கள் தொடர்வதா என்கிற கேள்வி எழுகிறது. கோட்பாடுகளின் அடிப்படையில் இந்தக் கேள்விக்கு ஒன்றை வரியில் பதில் சொல்லிவிட முடியாது. இவை எல்லாவற்றையும் விட அடிப்படை வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு முதலியன அமையாதபோது அவை இரண்டாம் பட்சமாகி விடுகிறது.

4. தீப்பற்றி எரிந்த இடங்கள் அனைத்திலும் மக்கள் வெளியேற்றப்படுவது குறித்து மறைமுகமாகவும் நேரடியாகவும் காலி செய்யுமாறு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆதாரங்கள் இல்லாதபோதும் ரசாயனப் பொடி ஏதோ பாவிக்கப்பட்டு தீ உண்டாக்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

5. தீ முற்றாக அனைத்தையும் அழித்து விடுகிறது. பாடநூல்கள், சீருடைகள், குடும்ப அட்டை, வரி கட்டிய ரசீது, டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி.புக் முதலான அடிப்படை ஆவணங்கள் அழிந்துள்ளன.

6. சென்னை நகரில் திட்டமிடப் பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள், இதனால் ஏற்பட உள்ள பாதிப்புகள், பாதிக்கப்படுவோர் குறித்த மதிப்பீடு, மாற்றுத் திட்டங்கள் ஆகியன குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

எனக் கோரியுள்ளது.

நகரை அழகுபடுத்த, வளர்ச்சிக்கு உட்படுத்த குடிசைகள் இல்லாத நகரம் அமைப்போம் என்பதை கருணாநிதி அரசு கொள்கையாகக் கொண்டிருக்கு மேயானால், முதலில் நகரின் அழகைக் கெடுக்கும் வகையில் கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு உடன்பிறப்புகள் வைக்கும் ஃபிளக்ஸ் போர்டுகளுக்குத் தடை விதிக் கட்டுமே! முடியுமா இவர்களால்...

முடியாவிட்டால், குடிசை களில் பற்றும் தீ, கோட்டை, கோபுரங்களுக்குப் பரவும் நாள் வந்தே தீரும்!

-பொன்னுசாமி

Pin It