தேர்தல் கட்சிகள் தேர்தல் காலங்களில் போட்டி போட்டுக் கொண்டு சுவர் விளம்பரங்கள், வாண வேடிக்கைகள், விடாத ஒலிபெருக்கி இரைச்சல்கள், வானத்தை மறைத்துப் பந்தல் போட்டது போன்ற பதாகைகள், கொடிகள் என சனநாயகத்தின் பெயரில் அராசகங்களை அரங்கேற்றி வந்தன.

வாக்காளர்களுக்குக் கொடுக்கும் கையூட்டுத் தொகை உயர்ந்து கொண்டே போனது. நாகரிக மக்கள் அனைவரையும் இந்த சனநாயகக் களியாட்டங்கள் அருவருக்க வைத்தன. பொது மக்களின் சராசரி வாழ்க்கைக் கடமைகளைச் செய்ய விடாமலும் இந்தக் கூத்தடிப்புகள் நடக்கும்.

இவற்றிற்கு ஒரு வரைமுறை வேண்டும் மக்கள விரும்பினர். சேசன் தேர்தல் ஆணையராக இருந்த போது தொடங்கி வைத்த சில கட்டுப்பாடுகள் வரைமுறைகள் அடுத்தடுத்து வந்தவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு இறுக்கப்பட்டன.

ஆனால்  இப்பொழுது சனநாயகத்தின் மூச்சுத் திணறும் அளவிற்குக் கழுத்தை இறுக்கிவிட்டது தேர்தல் ஆணையம்.

தனியார் சுவரில் அதன் உரிமையாளர் அனுமதி கொடுத்தால்கூட தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் எந்தச் சுவர் விளம்பரமும் கூடாது என்பது, சுவரொட்டிகளே ஒட்டக் கூடாது என்பது, எந்த வகைத் தட்டி விளம்பரங்களும் செய்யக் கூடாது என்பது, மண்டபங்களிலோ, அனுமதிக்கப்பட்ட திடல்களிலோ, கூட்டம், கருத்தரங்கம் கூடாது என்பது போன்றத் தடைகள் தேர்தல் ஆணையத்தால் செயல்படுத்தப்படுகின்றன. தேர்தலுக்குத் தொடர்பில்லாத அரங்கக் கூட்டங்களுக்குக் கூட தடைபோடப்படுகிறது. 

கொடுமையிலும் கொடுமையாக ஏற்கெனவே இருந்த கட்சிக் கொடிகளைக்கூட அதிகாரிகள் இறக்கிவிட்டு, கொடிக் கம்பங்களில் வெள்ளை வண்ணம் பூசிவிடுகின்றனர்.

இப்படிப்பட்ட தடைகள், சனநாயகப் பறிப்பாகும். இப்படித் தடைகள் போடுவதற்குத் தேர்தல் ஆணையத்திற்குத் தனிச்சட்டம் ஏதுமில்லை. அரசமைப்புச் சட்டவிதி 19(1) வழங்கும் கருத்துரிமை, அமைப்பு நடத்தும் உரிமை அனைத்தையும் இரண்டு மாதங்களுக்கு செயல்படாமல் நிறுத்தி வைக்கத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமுண்டா? இல்லை.

அடுத்து, சிறுவணிகர்களும் மற்றவர்களும் தங்களின் தேவைக்காக எடுத்துச் செல்லும் 80,000 ரூபாய், 2 இலட்சம் ரூபாய், 5 இலட்சம் ரூபாய் போன்ற சிறுதொகைகளைப் பறிமுதல் செய்வது மிகப்பெரிய வன்முறையாகும். இத்தொகைகளை எடுத்துச் செல்ல சட்டப்படி என்ன ஆவணம் தேவைப்படுகிறது? அப்படி ஏதுமில்லை. தேர்தல் ஆணையம் சட்டப்படி செயல்பட வேண்டுமே தவிர, தனது ஆசைப்படியெல்லாம் செயல்படக் கூடாது.

தேர்தல் ஆணையத்தின் இந்தக் கெடுபிடிகளால் வணிகர்கள்தாம் பாதிக்கப்பட்டுள்ளனரே தவிர தேர்தல் கட்சியினரை இதுவரை அது ஒன்றும் செய்துவிடவில்லை.

இரண்டு மாதங்களுக்கு எதேச்சதிகாரம் நடத்துவதில் தேர்தல் ஆணையர்களுக்கு அற்ப ஆசை இருக்கும் போல் தெரிகிறது. அப்படி ஒரு அதிகார வெறி அவர்களுக்கு இருக்கக் கூடாது.

அரசமைப்புச் சட்ட வரம்பிற்குள்தான் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். மக்களை அது மதிக்க வேண்டும்.

வாக்குப்பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் ஒருமாத இடைவெளி என்பது தானடித்த மூப்பாக தேர்தல் ஆணையம் செயல்படுவதைக் காட்டுகிறது. தமிழகப் பள்ளித் தேர்வுகள், ஆசிரியர்களின் தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் ஆகியவற்றைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தேர்தல் நாளை ஏப்ரல் 13 என்று அறிவித்தது.

கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் ஏப்ரல் கடைசியிலோ, மே முதல் வாரத்திலோ தேர்தலை வைத்துக் கொள்ளுமாறு கோரியதை ஆணையம் சட்டை செய்யவில்லை. மேற்கு வங்கத் தேர்தலைக் காரணம் காட்டி வாக்கு எண்ணும் பணியை ஒரு மாதம் தள்ளி மே13இல் வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களை தேர்தல் ஆணையம் துச்சமாக மதிப்பதையே காட்டுகிறது.

கட்சிகளின் அராசகங்களைத் தடுக்கப் புறப்பட்டு தனது அராசகத்தை அரங்கேற்றக்கூடாது ஆணையம்.

அதேவேளை, கட்சிகளின் தேர்தல் கால அராசகங்களைத் தடுக்க, வாக்காளர்களுக்குக் கையூட்டுக் கொடுப்பதைத் தடுக்க, வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி, தங்கள் விருப்பப்படி வாக்களித்துக் கொள்ளும் அரசியல் அரம்பர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எல்லா முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு, தலையீடு ஆகிய நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்.

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஏப்ரல் 1-15 இதழுக்கான தலையங்கம்)

Pin It