வீடு வந்து சேராமல்
பறந்து போனது
வாக்குறுதிகள் யாவும்
காற்றோடவர்கள்
கடமைகள் செய்ததால்.

தேர்ந்த அறிவின்
குற்றச்சாட்டுகளுக்கு
குறை கூற முடியவில்லை
எவரையும்
விவரக்கணக்குகளில்
விவாதங்கள்
இருபுறமும் இருந்ததால்.

கடந்த நாளின்
சட்டமியற்றலுக்கு
தேவைப்பட்டது
ஏமாளியானவர்களை
கௌரவப்படுத்தப்படும் பாவனைக்கு
ஜனநாயகக் கடமைகளாற்ற
சம்பிரதாயமாகவொரு
ஜனநாயகத் திருவிழா
இப்பொழுதும்
அதிகார துஷ்பிரயோகத்தில்.

அறுவடையின் பலனடைய
மகுடிகள் ஒலித்தது.
மனக்கிறுக்குகள் பிடித்தலையுமாறு
சமூக ஊடகங்களில்
சலைத்திடாத பொய்
பிரயத்தனங்களில்.

சலிக்காமல் சாத்தான்கள்
வேதங்கள் ஓதியது
தாளக்கட்டு குறையாத
ஆலாபனையில்
ஒன்றியப் பெருந்தலைகள்.
தத்தளித்து தவித்த பொழுதுகளில்
வராது
ஓய்வற்று உழைப்பதாக
ஒப்பாரிகளுடன்
ஓயாமல் இப்பொழுது வந்து.

நடுநிலைப் பொய்யர்களுக்குள்ளும்
சாதி முளைவிட்டது
வலதுசாரி மெய்யர்களின்
வாகானதொரு ஏற்பாட்டால்
பாசிச எதிர்ப்பாக.

பிரதி வாத பேதத்தில்
இனப்பற்றும்
எழுந்து நின்றது
தனி ஆவர்த்தனத்தில்
புள்ளிகள் கூட்ட
கர்ஜித்து.

இருளகழுமென
இடதுசாரி சிந்தனைகள் நம்பியது.
குறைந்தபட்ச நல்லவர்களைக்
கோட்டையிலேற்ற
வழக்கமான வழிகளில்
தோழமை கொண்டு.

சட்டமியற்றிய சமூகம்
சாதுர்யத்தில்
பிரிந்து கிடந்தது.
ஆட்கள் பலமிருந்தும்
அதிகாரம் கைவரப்பெறாமல்
தலைமைகள்
தங்களைத் தற்காக்கும்
வழக்கமானதொரு போக்காக
வடிவெடுத்து.

இப்படியானதொரு நாளில்
இயந்திரம் தொடும் முன்
எதுவாகிலும் நடக்கலாம்
பொத்தானை அழுத்துவதற்கு
புதுக்காரணமொன்று
நேர்மையாளரென
தன்னை முன்நிறுத்த
தேர்தல் வேலையில்.

- ரவி அல்லது

Pin It