அறம் சார்ந்த மக்கள் போராட்டத்தின் முன் மாபெரும் வல்லரசும் மண்டியிட்டே தீரும் என்பதை மீண்டும் ஒரு முறை பெங்களூரு ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள்  மெய்பித்திருக் கிறார்கள்.

உழைப்பாளர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் இந்திய அரசு அண்மையில் பிறப்பித்த திருத்தங்கள், தொழிலாளர்களின் உழைப்பு நிதியை எடுத்து அரசின் பற்றாக் குறையை ஈடுகட்டிக்கொள்ளும் சதித்திட்டமாகவும் அமைந்தது.

இந்த நிதி ஆண்டு வரவு - செலவு அறிக்கையை முன்வைத் துப் பேசிய இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) 60 விழுக்காடு தொகை மீது வரி விதிக்கப்படும் என அறிவித்தார். நாடாளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அடுத்த நாளே அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றார்.

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மீது அடுத்த ஒரு பெருந்தாக்குதலை தொழிலாளர் துறை  இணை அமைச்சர் பங்காரு தத்தாத்திரேயா 2016 மார்ச்சு 10ஆம்- நாள் ஓர் சுற்றறிக்கையின் மூலம் அறிவித்தார்.

இதுவரை உள்ள சட்டப்படி தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 12 விழுக்காடு தொகையை வருங்கால வைப்பு நிதிக்கு பிடித்தம் செய்வார்கள். இதற்கு இணையான தொகையை தொழிலாளர்கள் பணியாற்றும் முதன்மை நிர்வாகம் வழங்கும் இந்த ஒட்டுமொத்த தொகை தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் சேமித்து வைக்கப்படும். இதற்கு 8.8 விழுக்காடு வட்டி கிடைக்கும்.

ஏற்கெனவே கடந்த 2004-இல் செயலுக்கு வந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி நிர்வாகம் அளிக்கும் 12 விழுக்காடு பங்குத் தொகையில் 8.33 விழுக்காடு தொகை ஓய்வூதிய நிதிக்கு எடுத்துச் செல்லப்படும். தொழிலாளர்கள் 58 வயது நிறைவுப் பெற்றப் பிறகு அந்நிதியிலிருந்து மாதம் தோறும் ஒரு சிறு தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும். நிர்வாகம் வழங்கும் தொகையில் 3.67 விழுக்காடு மட்டுமே வருங்கால வைப்பு நிதி கணக்கில் தொடரும்.

இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் அனைத்து தரப்பு உழைப்பாளர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது. தமிழக சட்ட மன்றத் தேர்தலில் கூட அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடு வோம் என தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கின்றன.

தொழிலாளர்கள் தங்களது ஒட்டுமொத்த வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து தங்கள் தேவைக்காக 90 விழுக்காடு வரை கடனாகப் பெறலாம். தொடர்ந்து 2 மாதங்கள் பணியிலிருந்து வெளியே இருந்தால் ஒட்டுமொத்த வருங்கால வைப்பு நிதி தொகையையும் திரும்பப் பெறலாம். வீடு கட்டுதல், திருமணச் செலவு, பெரிய மருத்துவச் செலவு போன்றவற்றிற்கும் வேலை இழந்த காலத்தில் வாழ்க்கையை ஓட்டுவதற்கும் மேற்சொன்ன வாய்ப்பு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்போது இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்த உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

இனி தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியிலிருந்து 58 வயதாகும் வரை 90 விழுக்காடு கடன் பெற முடியாது. வேலை இழந்து இருந்தாலும் தங்கள் பி.எப். கணக்கை 58 வயது வரை முழுத் தொகையைப் பெறமுடியாது என பங்காரு தத்தாத் திரேயாவின் அறிவிப்புக் கூறியது. அதுமட்டுமின்றி 7 ஆண்டு வரை தங்கள் பி.எப். கணக்கை முடிக்காத வர்களின் வைப்புத் தொகை முழுவதும் இந்திய அரசின் நிதியில் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் கூறியது.

தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை எடுக்க முடியாது என்றால் அதன் பொருள் ஒரு தொழிலாளி 58 வயது அடையும் வரை அவரது சேமிப்பில் சேரும் தொகையை அரசு தான் விரும்பியபடி கையாளும். இந்த வகையில் பி.எப். நிதியில் உள்ள ஏறத்தாழ 6 இலட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் கருவூலத்தில் சேரும். இந்திய அரசு தனது பற்றாக்குறையை ஈடுசெய்து கொள்ள, ஊதாரிச் செலவுக்கு பணம் எடுத்துக்கொள்ள இந்த நிதியைப் பயன்படுத்தும்.

வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் அறிவிக்கப்பட்ட மேற்சொன்ன திருத்தங்கள் 2016 ஏப்ரல் 01 முதல் செயலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. தொழிற்சங்கங்களின்  எதிர்ப்பு காரணமாக மேற்சொன்ன திருத் தத்திற்கும் ஒரு திருத்தம் வெளியி டப்பட்டது. அதன்படி தொழிலா ளர்களின் பங்களிப்பு நிதியிலிருந்து ஒரு சில வரம்புக்குட்பட்ட தேவை களுக்கு மட்டும் பி.எப். கடன் பெறலாம் என்றும், இப்புதிய திருத்தம் 2016 மே 01 முதல் செயலுக்கு வரும் என அறிவிக்கப் பட்டது.

இன்றுள்ள நிலையில் பெரும் பாலான தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகவும், தற்காலிகத் தொழிலாளர்களா கவும், வெளிப்பணி (அவுட் சோர்ஸ்) தொழிலாளர்களாகவும் நிரந்தரமற்ற நிலையில் இருக்கி றார்கள். இவர்கள் அடிக்கடி வேலை இழப்பதும், வெவ்வேறு நிறுவனங்களுக்குமாறிச் செல்வதும் தொடர் நிகழ்வாக உள்ளது. இந்நிலையில் 58 வயது வரை தங்கள் பி.எப். நிதியை  எடுக்க முடியாது என்றால் வேலை இழக்கும் காலத்தில் கையில் காசில்லாமல்திண்டாட வேண்டிய நிலை ஏற்படும்.

குறிப்பாக இளம் பெண் தொழிலாளர்கள் திருமணம் ஆன உடன் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும். அப்போதும் வேலையிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். அந்த நிலையிலும் தங்கள் பி.எப். பணத்தை எடுக்க முடியாது என்று தடை விதிப்பது கொடுமையானது.

தொழிலாளர் துறை அறிவுறுத்தலின் படி தொழிலக நிர்வாகங்கள் பல தங்களது அறிவிப்புப் பலகையில் இத்திருத்தச் சட்ட நகலை ஒட்டின. அந்த வகையில் பெங்களூருவுக்கு அருகில் உள்ள கொடிச்சிக் கின ஹள்ளி பகுதியில் அமைந்துள்ள ஷாகி ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்திலும் இந்த அறிவிப்பு ஒட்டப்பட்டது.

இதைக் கண்ணுற்ற அந்த ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் ஏறத்தாழ 5,000 பேர் கடந்த 2016 ஏப்ரல் 18 அன்று தொழிற்சாலைக்கு வெளியில் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்செய்தியை அறிந்த அக்கம் பக்கத்து தொழிலாளர்களும் குவிந்தனர். பெங்களூரு - ஓசூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தைத் தொடங்கினர்.

காரேபாவிபாளையம், கோரமங்களம், கொரகு கச்சி பாளையம், ஆனைக்கல், ஹர்பகோடி, மைசூர்- தும்கூர் சாலை என பல பகுதிகளுக்கும் இப் போராட்டம் பரவியது.

அடுத்த நாள் 19.04.2016 அன்று ஏறத்தாழ 20 ஆயிரம் தொழிலாளர்கள் அவர்களில் மிகப்பெரும் பாலோர் பெண்கள், கடும் அடக்குமுறைகளைத் தாண்டி பெங்களூரு - ஓசூர் சாலையில் மறியல் போராட்டம் செய்தனர். தமிழகத் திலிருந்து ஓசூர் வழியாகக் கர்னாடகம் செல்லும் அனைத்து ஊர்திகளும் ஓசூரிலேயே நிறுத்தப் பட்டன. பெங்களூரு நிலைகுலைந்தது.

கர்னாடக காங்கிரசு அரசு போராடிய தொழிலாளர்களோடு கண்துடைப்பாகக் கூட பேச்சு வார்த்தை நடத்தாமல் கடும் அடக்குமுறைகளை ஏவியது. தடியடி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச்சூடு என அடுத்தடுத்து காவல்துறை அடக்குமுறைகள் மட்டுமின்றி, சீருடை அணியாத குண்டர்களும் கூட காவல்துறையி னரால் பெண்கள் மீது ஏவிவிடப் பட்டனர்.

எந்த பெரிய தொழிற்சங்கமும் தலைமைதாங்காத, பெண் தொழி லாளர்களே நடத்திய தன்னெழுச் சியான இந்த போராட்டம் வியக் கத்தக்க வகையில் காவல்துறையின் அனைத்து அடக்குமுறை களையும் எதிர்கொண்டு உறுதி யாக நடைபெற்றது.

இந்த நிலையில் மோடி தலைமையிலான இந்திய அரசு மக்கள் போராட்டத்திற்கு அடி பணிய நேர்ந்தது.

முதலில் ஆகஸ்ட் 1 முதல் இப்புதிய திருத்தங்களை செய லுக்கு கொண்டு வருவதாகவும் இதற்கு இடையில் நடுவண் தொழிற்சங்கங்களோடு இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவ தாகவும், இந்திய அரசு அறிவித் தது. இதனை ஏற்க மறுத்து பெங்களூரு ஆயத்த ஆடை பெண் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி னர்.

இதனால் வேறு வழியின்றி இந்திய அரசு பின் வாங்கியது. வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் மார்ச் 10 அன்று முன்மொழியப்பட்ட அனைத்து திருத்தங்களையும் திரும்பப் பெறுவதாகவும் முன்பு போல் வருங்கால வைப்பு நிதியிலிருந்து தொழிலா ளர்கள் கடன் பெறலாம், வேலை இழக்கும் தொழி லாளர்கள் பி.எப். கணக்கிலிருந்து முழுத் தொகையை திரும்பப் பெறலாம் எனவும் 19.04.2016 இரவில் அறிவித்தது.

இந்த மகத்தான வெற்றி, இந்தியத் துணைக்கண்டத் தொழிலாளர்களுக்கு பெங்களூரு பெண் தொழி லாளர்கள் அளித்த மேநாள் பரிசு ஆகும்.

Pin It