அதற்குக்கூட . . .

கவிதை எழுத உட்கார்ந்தேன்
சிட்டுக்குருவியொன்று வந்தது
என்னைப்பற்றி எழுது என்றது
எழுதினால் என்ன தருவாயென
பேரம் பேசினேன் மனித மூளையாக!
ஒரு நெல்லைத் தருவேன் என்றது
அதை என்ன செய்வது நான்
நிலத்தை உழுது விதை என்றது
பிறகென்ன செய்வதென்றேன்
நாற்று நட்டு களை எடுத்து
 நீர்பாய்ச்சி வேலியிடென்றது
அதன்பிறகு என்ன என்றேன்
எங்கிருந்தோவரும் வியாபாரி
விளைச்சலைக் கொண்டு போவான்
என்று அது சிரித்துச் சொன்னது
அதற்குக் கூடத் தெரிந்திருக்கிறது.


இனிமை?

காலைப்பொழுதுகள் இனிமையானவை!
கூடுவிட்டுக் கிளம்பும்
பறவைகளின் உல்லாசக் குதூகல ஒலிகள்!
வரப்போவதாக முன்னறிவிக்கும்
ஆதவனின் சிறு வெளிச்சம்
உடலையும் உள்ளத்தையும்
வருடும் இனிமைக்காற்று
கலகலவெனச் சிரித்து
தனிப்பயிற்சி காணச் செல்லும்
புத்தகத் தாங்கியாம் மாணவர்கள்
ஊரையெல்லாம் பால்மயமாக்க
ஒட்டக்கறந்து வரும் பால்காரர்கள்
எல்லாமே இனிமைதான்
தெருவோரம் முடங்கிக் கிடக்கும்
நொண்டிப் பிச்சைக்கார மனிதனைக்
காணாதவரை!

நம்பித்தான். . .

தினம்தோறும் சோறு வைப்பேனென
நம்பி வருகிறது நாயொன்று.
இன்றும் சன்னல் திறந்திருக்குமென
நம்பி வருகிறது திருட்டுப்பூனை.
மழைக்காலம் வந்து தீருமென்று
நம்பிக் கூடுகட்டுகிறது காகம்.
கட்டுப்படாவிடில் அடிப்பானென்று
நம்பிக் காசு கேட்கிறது யானை
ஒரு நெல்லாவது கிடைக்கட்டும் என
நம்பி சீட்டு எடுக்கிறது கிளி
வெளியூர் மகனிடமிருந்து
மணியாடர் வரும் என
நம்பிக் கிடக்கிறார் தாத்தா
இந்தக் கவிதை சிறந்ததென்று
நம்பி எழுதிக் கொண்டிருக்கிறேன்
நானும்

Pin It