பயணம்

சாலை ஒர மரங்களற்ற
நாற்கரச் சாலையில் பயணித்து
ஆங்காங்கே தடுத்த சுங்க
சாவடிக்கு வரிசெலுத்தி
குண்டும் குழியுமான மாநில நெடுஞ்சாலையில் திரும்பி
பல ஆண்டுகளாய்க் கட்டி
முடிக்கப்படாத பாலத்தின் மீதேறி
வீட்டடி மனைகளாக மாறி நின்ற
முன்னாள் விளை நிலங்களைக் கடந்து
ஒத்தையடி மண்பாதையில் நடந்து,
எப்படியெல்லாமோ
தூரங்களைக் கடந்தும்
உன்னைப் பார்க்க முடியாத
பயணக் களைப்போடு
திரும்பி வந்தது
முத்தம்
சாதியைக் கடக்க வழி
இல்லையென்று!


அருள்

அமராவதி ஆற்றை
கடந்து செல்கையில்
அம்மா கூறினாள்:

இங்கே நடந்த
திருவிழா கூட்டத்தில்தான்
நீ காணாமல் போனாய்.
மாரியின் அருளால்
மீண்டும் கிடைத்தாய்!

ஆளில்லாத
ஆற்றங்கரையை
கண்ணால் தேடிய
குழந்தை கேட்டாள்:

என் பலூன் மட்டும்
கிடைக்கவே
இல்லையேம்மா!

Pin It