தமிழ்ச் சமூகத்தில் வரி - 4
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி திப்புசுல்தானுக்கு எதிராகப் போர் நடத்தியது. மைசூர் யுத்தம் என்றழைக்கப்பட்ட இப்போர் மூன்று கட்டங்களாக நிகழ்ந்தது. மூன்றாம் மைசூர்ப் போருக்குப்பின் (1790) இந்தியாவின் தென்பகுதியில் கிழக்கிந்தியக் கம்பெனி தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.
என்றாலும் தமிழ்நாட்டில் இருந்த பாளையக்காரர்கள் சுயேச்சைத் தன்மையுடன் ஆங்காங்கே ஆண்டு வந்தனர். ஆற்காடு நவாபிற்கு வரி செலுத்தி வந்த இவர்கள் நவாப் பல வீனமான நிலையில் வரி செலுத்துவதை அறவே நிறுத்தி விட்டனர். இத்தகைய சூழலில் இவர்களிடம் வரி வாங்கும் உரிமையை ஒப்பந்தம் வாயிலாக ஆற்காடு நவாபிடமிருந்து பெற்றனர்.
இவ்வொப்பந்தத்தை மதிக்காத பூலித்தேவர், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் தீரன் சின்னமலை ஆகியோர் நடத்திய கிளர்ச்சி கொடூரமாகப் படைபலத்தின் துணையுடன் ஒடுக்கப்பட்ட பின்னர், அன்றையத் தமிழ்நாடு முழுவதும் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியின் கீழ் வந்தது.
இதன் பின்னர் சில நிர்வாகச் சீர்திருத்தங்களை கி.கம்பெனி நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. இதன் முதற்கட்டமாகப் பாளையக்காரர் முறை ஒழிக்கப்பட்டது. இதற்கு மாறாக ‘சமின்தார் முறை’ என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஜாகிர்தார்கள், மிட்டாதாரர்கள், பட்டக்காரர்கள் என்ற பெயரிலும் இவர்கள் விளங்கினார். இம்முறையின்படி ஆண்டுக்கு ஒரு முறை ஆங்கில மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இவர்கள் வரி செலுத்த வேண்டியதாயிற்று. இது முதலில் தானியமாகவும் பின்னர் பணமாகவும் செலுத்தப்பட்டது. வாங்கப்படும் வரியில் முப்பது விழுக்காடு சமின்தாருக்கும் எழுபது விழுக்காடு கி.கம்பெனிக்கும் சென்றது. ஆயினும் முன்னாள் பாளையக்காரர்களாயிருந்து சமின்தாரர்களாக மாற்றப்பட்டவர்களும் புதிதாக நியமிக்கப்பட்ட சமின்தாரர்களும் தமக் குரிய முப்பது விழுக்காட்டுடன் நிறைவடையவில்லை. கி.கம்பெனியின் அதிகாரிகளின் துணையுடன் அவர்கள் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சான்றாக மதுரை மாவட்டத்தில் குற்றச்செயல்களை அரசு ஆவணங்களின் துணையுடன் முனைவர் வர்கிஸ்ஜெயராஜ் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
“1842 -ல் கன்னிவாடி ஜமின்தாரி நிலுவைகளை செலுத்துவதன் பேரில் அதன் உரிமையாளரே வைத்துக்கொள்ள அரசு அனுமதி அளித்தது. ஜமின்தாரியைத் தக்கவைத்துக் கொள்ளப் பெருந்தொகையைச் செலுத்த வேண்டி இருந்ததால் சுப்பராயச் செட்டி என்பவரின் வீட்டிலிருந்து அப்பைய நாயக்கர் என்பவரின் இரகசிய ஆதரவு டன் ரூ 10,000 களவாடப்பட்டது. இதன் விபரம் பிரிட்டிஷார் அறிந்திருந்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1843ல் தேவாரத் தின் ஜமீன்தாரும், அவர் கூட்டாளிகளும் சேர்ந்து நெடுஞ்சாலைக் கொள்ளையில் ஈடுபட்டனர். சமூக விரோதச் செயல்பாடுகள், தாசில்தார் ஷாம்ராவ் என்பவரால், விசாரிக்கப்பட்டன. அவர் 100 ரூபாயைக் கையூட்டாகப் பெற்றுக் கொண்டு உண்மைகளை மறைத்து விட்டார். அதிகாரிகளிடம் செல்வாக்குப் பெற ஜமீன்தார்கள் எல்லாவித சட்ட விரோதச் செயல்களையும் மேற்கொண்டனர். மீண்டும் 1844ல் விருப்பாட்சியின் முன்னாள் பாளையக்காரர் உள்ளுர் தாசில்தாருடன் இரகசியத் தொடர்பு வைத்துக் கொண்டு சதி செய்து தவறான முறையில் அரசுத் தொகைகளைக் கையாண்டார். விசாரணையில் ஜமீன்தாருக்கு சாதகங்களைச் செய்வதற்காக தாசில்தார் ஒரு பங்கினைப் பெற்றது தெரிய வந்தது.
மேற்கூறிய ஜமீன்தார்கள், மிட்டாதாரர்கள், பட்டக்காரர்கள் போன்ற இடைத்தரகர் வாயிலாக அன்றி கி.கம்பெனியே நில உரிமையாளர்களிட மிருந்து நிலவரி வாங்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இவ்வரி ‘இரயத்துவாரி முறை’ எனப்பட்டது. இதன் படி நிலங்களை தரம் பிரித்து அளந்து வரி விதித்தனர். வரியை ஒழுங்காகச் செலுத்தும்வரை நிலத்தின் உரிமை அதன் உரிமையாளரிடமே யிருந்தது.
நில உடைமையாளர்கள் வரியை ஒழுங்காகச் செலுத்தி வரும்வரை அவர்களின் நிலஉரிமை அவர்களிடமேயிருந்தது. இம்முறை மன்னராட்சிக் கால நிலஉடைமை முறையிலிருந்து வேறுபட்டது. ‘தேவதானம்’ என்ற பெயரில் சைவ வைணவக் கோவில்களுக்கும் ‘பள்ளிச்சந்தம்’ என்ற பெயரில் சமணப் பௌத்தப் பள்ளிகளுக்கும் (வழிபாட்டுத் தலங்களுக்கும்) ‘பிரம்மதேயம்’ என்ற பெயரில் பிராமணர்களுக்கும் தானமாக நிலங்களை வழங்கும்போது குடியானவர்களின் நிலஉரிமை பறிக்கப்பட்டதை, சிலகல்வெட்டுகள் குறிப்பிடு கின்றன.
இதுபோல் ஜமிந்தார்களும், மிட்டாதாரர்களும் தங்கள் பொறுப்பில் உள்ள கிராமங்களில் வாங்கும் வரியில் அரசுக்கு உரிய பங்கை ஒழுங்காகச் செலுத்தி வரும்வரை அவர்களுடைய பதவிக்கும் வருவாய்க்கும் பாதிப்பில்லை.
உப்பு உற்பத்தி செய்யுமிடத்தில் மன்னராட்சிக் காலத்தில் வரிவாங்கப்பட்டது என்பதை முன்னர் கண்டோம். ஆனால் உப்பிற்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை உப்பு உற்பத்தியாளரிடமேயிருந்தது. அவ்வரி பெரிய அளவில் நுகர்வோரைப் பாதிக்கவில்லை. ஆனால் உப்பு உற்பத்தியைத் தன் ஏகபோக உரிமையாக ஆக்கிக்கொண்ட கிழக்கிந்தியக் கம்பெனி உப்பின் விலையை தானே நிர்ணயித்ததுடன் அதை வாங்கும் உப்பு வணிகர்களி டமிருந்து ‘உப்பு வரி’ என்ற வரியையும் வாங்கி யது. பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா வந்த பிறகு இவ்வரி விதிப்பு தொடர்ந்தது டன் படிப்படியாக வரியின் அளவு உயர்ந்து கொண்டே சென்றது. ஆங்கிலேயர் நிர்ணயித்த உயரிய விலையும் வணிகர்களிடம் வாங்கிய உப்பு வரியும் நடைமுறையில் சாதாரண மக்களைப் பாதித்தன.
நில வருவாயுடன் நிறைவடையாத காலனிய அரசு, சில புதிய வரிகளையும் உருவாக் கியது. வெற்றிலை, புகையிலை ஆகியனவற்றை விற்கும் உரிமை ஏலத்தில் விடப்பட்டது. கள், சாராயம் ஆகியவற்றின் உற்பத்தியும் விற்பனையும் இதுபோன்றே ஏலத்தில் விடப்பட்டது.
ஏலமெடுத்தோர் குத்தகைத் தொகையை உட்படுத்தியே விற்பனை செய்தனர். இதனால் இப் பொருட்ளைப் பயன்படுத்தியோர் அரசுக்கு மறை முகமாக வரி செலுத்தினர். இம்மறைமுக வரிகள் தவிர உப்பு உற்பத்தி, சந்தன மர விற்பனை ஆகியனவற்றை அரசின் ஏகபோக உரிமையாக்கி அதன் விலையை நிர்ணயம் செய்து கொள்ளை லாபம் கண்டனர்.
பல்வேறு தொழில்புரிவோரிடம் தொழில் வரி என்ற வரியையும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருவாய் பெறுவோரிடம் வருமான வரியையும் அறிமுகப்படுத்தினர்.