அப்பாவின் பார்வைதான் சந்தேகப்படுத்தியது இவனை. குறுகுறு வென்று அவர் யாரையும் பார்த்து இதுநாள் வரை இவன் கண்டதில்லை.

ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. அதுதான் அப்பாவின் சிறப்பு. நினைப்பதைப் பட்டென்று கேட்டு விடுபவரல்ல அவர். ஒன்றுக்குப் பத்து முறை யோசித்து, பாதகமில்லை என்று அவருக்கு அவரே தீர்மானம் செய்த பிறகுதான் கேட்பார். ஒரு முடிவுக்குப் பிறகு கேட்காமல் விட்டவையும் கூட பலவுண்டு அவரிடம்.

“நிறைய இந்த மனசுக்குத் தோணும்தான். ஆனா ஒன்றைக் கேட்கிறதை விடக் கேட்காமல் இருக்கிறதுதான் லாபம். அதுதான் பாதகமில்லாம முடியும். அநாவசிய மனத்தாங்கல், வருத்தம், கோபம், சண்டை, பிரிவு இப்டிப் பலதையும் தவிர்த்திட வாய்ப்பிருக்கு அமைதி காக்குறதுல. எல்லாத்துக்கும் மேல எதிராளி மேலே நாம வச்சிருக்கிற அன்பு அதைத் தடுத்திடும். அதுதான் பண்பாடு என்னைப் பொறுத்தவரைக்கும்...” - அப்பா அடிக்கடி சொல்பவை இவைகள்.

“யேய்... வா... வா... வா... உன்னத்தான் எதிர்பார்த்திண்டு இருக்கேன் ரொம்ப நேரமா... பாலன் எல்லாமும் சொன்னான். நாந்தான் உடனே அவளக் கூட்டிண்டு வான்னு சொன் னேன்... வா... இப்டி உட்காரு...” - அருகில் இழுத்து வைத்து அமர்த்திக் கொண்டாள் அம்மா. அப்பா அமைதி யாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ராஜியின் கைகளை ஆதுரமாய்ப் பிடித்துக் கொண்டாள் அம்மா. அவள் கண்கள் கலங்கியிருப்பதைக் கண்டு துணுக்குற்றாள்:

“டேய் பாலா... நீ என்னமாச்சும் சொன்னியா... ஏனிப்படி சோகமா இருக்கா?”

“நா என்னமா சொல்லப் போறேன்... அம்மா கூப்பிடுறாங்கடா வான்னு கூப்பிட்டேன்... எங்கயும் நீ போக வேண்டாம்... பேசாம இங்கயே கிடன்னு அவுங்கம்மாதான் சத்தம்போட்டாங்க. அத மீறித்தான் இழுத்திட்டு வர்றேன்...” - சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டதுபோல் இருந்தது பாலனுக்கு. டா போட்டு அவனை அழைக்கக் கூடாதென்பது ராஜுவின் (ராஜியின்) கோரிக்கையாக இருந்தது.

“எனக்கு என்னவோ இப்டியிருக்கிறது பிடிச்சிருக்குடா... இதுல மனசுக்கு ஒரு கிளர்ச்சி இருக்கு... உடம்புல எதோ ஒரு சொகம் ஊர்ற மாதிரி அனுபவம்... வீட்லதான் என்னத் திட்டுறாங்க எப்பப் பார்த்தாலும். அதுலயும் எங்கப்பா இருக்கிறாரே அவுரு என்னப் பார்க்கவே கூச்சப் படுறாருடா. அருவருக்குற மாதிரிப் பேசுறாரு... சீச்சீ... போ அந்தப் பக்கம்... நா திரும்பக் கடைக்குப் போற வரைக்கும் என் முன்னால நீ வரக் கூடாதுன்னு விரட்டிட்டாரு. வாடிக்கை யாளுங்களுக்கு ஒரு ரெண்டு வரி கார்டு எழுதிப் போடுறதுன்னாலும் என்னையே கூப்பிட்டுக்கிட்டு இருந்தவரு... இப்போ கண்லயே முழிக்காதங்கிறாரு. கை ஒடிய ஒடிய அவுரே எழுதறாரு. அம்மாகூட சொல்லிப் பார்த்தாங்க. பேசாதன்னுட் டாரு.”

“சரி... வா போவோம்...” வண்டியின் பின்னால் அவனை அமர்த்திக் கொண்டு ஓட்டி வரும்போது பலரின் பார்வையும் தவிர்க்க முடியாமல் அவன் மேல் விழு வதையும், கேலியாக எழும் சிரிப்புக் களையும் கண்ணுற்றவனாகவேதான் வந்தான் இவன். தினமும் பார்க்கும், பழகும் அவர்களா இவர்கள்?

அட, அம்மாகூட எவ்வளவு அழகாக அழைத்து விட்டாள் அவனை. எடுத்த எடுப்பிலேயே ராஜி என்று கூப்பிட்டு விட்டாளே! எத்தனை அருமையான யோசனை அம்மாவுக்கு! ஏற்கனவே யோசித்து வைத்திருந்தால்தானே இதெல்லாம் சாத்தியம்? ராஜூவை ராஜி என்று அன்பொழுக அழைக்க வேண்டும் என்று அவளுக்கு எப்படித் தோன்றிற்று? மனதில் பூரண அன்பிருந் தால்தானே இது சாத்தியம்? அம்மாவுக்குத்தான் எத்தனை நல்ல எண்ணம்! எவ்வளவு நாசூக்கு!

“எங்கம்மா உன்னத்தான் எதுக்கெடுத்தாலும் அழகு அழகுன்னு சொல்வாங்க... என்னை, நீயுந்தான் இருக்கியே, குரங்குன்னுவாங்க... அதான் அவுங்களுக்கு இப்பயும் உன்னப் பிடிக்குது...” - ராஜுவின் முகத்தில் மெல்லிய புன்னகை.

“நயன்த் வரைக்கும் ஸ்கூல் ட்ராமா எல்லாத்துலயும் இவன் பெண் வேஷம்தான் போடுவான்னு சொல்லியிருக் கேன்லம்மா... நானே நடிக்கிறேன்... நானே நடிக்கிறேன்னு சொல்லி பி.டி. மாஸ்டர் ரூமுக்குப் போயி அவுருக்கே தெரியாம நாடகத்துக்குன்னு வச்சிருந்த ஒரு சேலையை எடுத்து கசமுசன்னு சுத்திக்கிட்டு வந்திட் டாம்மா. கடைசில உட்கார்ந்திருக்கிறது யாருன்னு டீச்சரே தற்செயலா உன்னிப்பாக் கவனிச்சபோதுதான் எல்லாருக்குமே தெரிஞ்சது க்ளாஸ்ல. அதுவரைக்கும் ராஜுவக் காணலியேன்னு யாருமே கவனிக்கல. அப்டி அசத்தினான் எல்லாரை யும்.”

இப்போது ராஜு அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டிருந்தான். அவன் கண்களிலிருந்து விடாமல் கண்ணீர்.

“எதுக்கு வருத்தப்படணும்? நீபாட்டுக்கு உன் இஷ்டப்படி இருந்திட்டுப் போ. அவ்வளவு தானே? இதுனால யாருக்கு என்ன நஷ்டம்? யார் சொத்த நீ கொள்ளையடிக்கப் போறே? நீ உன் பாட்டுக்கு இருக்கப்போறே. அதுனால மத்தவங் களுக்கு என்ன கஷ்டம்? பெத்தவாளுக்கு மனக் கஷ்டம்னு இருக்கும்தான். அத நாம ஒத்துக்கத்தான் வேணும். ஆனாலும் ஒதுக்குற அளவுக்கு என்ன இருக்கு? இப்போ எனக்கு நீ பிள்ளையாப் பொறந்து இப்டி ஆகியிருந்தேன்னு வச்சிக்கோ. சரி இருக்கட்டும்னு கொண்டாடிடுவேன் நான். இல்லைங்கிறதுனால இந்த வார்த்தை வருதுன்னு நினைக்க வேண்டாம். ஆத்மார்த்தமாத்தான் சொல் றேன். நர்த்தகி நட்ராஜ் இல்லையா? அவுங்க மட்டும் மனசு சோர்வடைஞ்சிருந்தாங்கன்னா இன்னைக்கு இப்டிப் பேர்சொல்ற மாதிரி ஆகி யிருக்க முடியுமா? அதுனால எதுக்கும் வருத்தப் படுறதுக்கு ஒண்ணுமில்லே. நான் சொல்றேன் உங்க அம்மா அப்பாட்ட. பேசறவா எல்லாத்துக்கும்தான் பேசுவா. வெறும் வாயவே மெல்லுற மனுஷா, விஷயம் கிடைச்சா சும்மாயிருப்பாளா? நீ எப்பயும்போல இரு... படி... உனக்குப் பிடிச்சதெல் லாம் செய்யி. யாரு என்ன சொல்றது?” - அம்மா வின் முகத்தில்தான் என்ன ஒரு உறுதி! எத்தனை அழுத்தமான வார்த்தைகள் அவை!

இதைச் சொல்லும்போது அம்மாவின் கைகள் ராஜுவின் தலையைக் கோதிக்கொண்டிருந்தது.

“ஆசையா இருந்தா முடியை நீளமா வளர்த் துக்கோ... பூ வச்சிக்கோ... பொட்டு வச்சிக்கோ... பார்க்கிறவா நாலு தரம் ஒரு மாதிரிப் பார்க்கத்தான் செய்வா... பிறகு எல்லார் வாயும் அடைச்சிடு மாக்கும். என்னடா இவ இப்டிச் சொல்றாளேன்னு பார்க்கிற. அதானே... நாம இன்னைக்கு சாயந்தி ரம் கோயிலுக்குப் போறோம். டே பாலா... நீயும்தான் வர்றே... சரியா?”

அம்மாவுக்கு எப்படி இப்படி ஒரு தைரியம்? தன்னிடம் இருந்த ஆறு கெஜம் புடவையை எடுத்துக் கொடுத்து கட்டிக்கொள்ளச் சொன்னாள் ராஜுவிடம். ராஜு ராஜியாய் நின்றபோது அங்கங்கே புடவையைச் சரி செய்து கொசுவத்தை சரியாக இடுப்பில் சொருகி விட்டாள் அம்மா. ‘புறப்படு, போவோம், யாரு என்ன சொல்றா பார்ப்போம்’. அம்மா அன்று அப்படிப் புறப்பட் டது சற்று அதீதமாகத்தான் தெரிந்தது. அப்பாகூட ஏன் இவள் இதெல்லாம் செய்கிறாள் என்று நினைத்திருப்பாரோ என்னவோ? தனது அமைதி அவருக்கே ஒப்பாமல் வாயைத் திறந்தார்.

“வந்தான்னா, பேசிட்டு வீட்டுக்கு அனுப்பிச்சிட வேண்டிதானே? எதுக்கு இதெல்லாம் செய்றே நீ? அவா அப்பா அம்மா கேட்டா என்ன பதில் சொல்லுவே? தேவையில்லாத வம்பையெல்லாம் ஏன் விலைக்கு வாங்கறே?”

“இதிலென்ன வம்பிருக்கு? அவுங்க வீட்டுல அவனை என்னென்னவோ சொல்றான்னு புலம்பி அழுதான். மனசுக்குக் கஷ்டமாயிருந்தது. இப்டி ஆனவாளோட மனநிலை எப்டியிருக்கும்னு நா நிறையப் படிச்சிருக்கேனாக்கும். நீங்களும் படிச் சிருந்தேள்னாத்தான் உங்களுக்கும் அந்த ஆழ்ந்த வருத்தமும் ஆதங்கமும் தெரிய வரும். இந்த மாதிரி மாறினவாளை சமூகத்திலேர்ந்து ஒதுக்கிறதுங்கிறது என்ன நியாயம்? பம்பாய் மாதிரி மாநிலத்துலே இவாளைக் கொண்டாடுறாளாக்கும். இவா கையால புதுசு புதுசா கடைகளைத் திறக்கிறதும், வியாபார ஸ்தலங்களைத் துவக்கிறதும், குழந்தை பிறந்த அன்னைக்கு இவா கைல கொடுத்து வாங்கிக்கிறதும், புது மனைப் புகுவிழாவுல இவா காலடி பட்டா அதிர்ஷ்டம், வீடு நல்ல விளங் கும்னு இவாளை வரவேற்கிறதும், இருக்க வைக்கி றதும், இப்படி எத்தனையோ இருக்கு. அதெல் லாமும் இல்லாட்டாலும், மனுஷ ஜாதிக்கே ஆகாதுன்னு ஒதுக்காமயாச்சும் இருக்கலா மில்லயா? அவன் ஆசையை நிறைவேத்துவோ மேன்னு கோயிலுக்கு அழைச்சிண்டு போனேன். அவன் சொல்லாம ஒண்ணும் நானா எதுவும் செய்துடலை. என்னால அப்டி ஒருத்தரை சட்னு வெறுக்க முடியாதுன்னா... நான் பார்க்க வளர்ந்த பிள்ளை அவன். இன்னைக்கு என்னவோ உடற்கூறு மாறிப்போச்சேன்னு அவனை மூலைல தூக்கிப் போட முடியுமா? மனுஷாளுக்கு ஈவு இரக்கம்ங் கிறது அப்டியா சட்டுன்னு வத்திப் போயிடும்?” - அம்மாவின் ஆளுமை என்னை ஆச்சரியப்படுத் தியது.

“அவனுக்குப் பொடவையைக் கட்டி, பொட்டை வச்சி, இதெல்லாம் உன்னை யாரு செய்யச் சொல்றா? உங்களுக்கென்ன எங்க பையனைப் பார்த்தா வேடிக்கையாப் போச்சான்னு அவுங்க வீட்ல வந்து நின்னா என்ன பதில் சொல் லுவே? என்ன வேணாலும் பேசலாமில்லே? ஏற் கனவே வியாபாரத்துல அவுங்களுக்கும் நமக்கும் பிரச்னையிருக்குன்னு உனக்குத் தெரியும். எப்பவும் சூரத் கொள்முதலுக்கு சேர்ந்து போற நாங்க போன வாட்டி தனித் தனியாப் போயிட்டு வந்தமே மறந் திட்டியா? நம்மளோட சுமுகமான உறவு இருந்தா நீ சொல்றது சரி. அநாவசியமா வம்பை விலைக்கு வாங்குறியோன்னு எனக்குத் தோணுது...”

“ஒரு வம்புமில்லை... தும்புமில்லை... நீங்களா எதையாச்சும் நினைச்சிக்காதீங்கோ.”

“உனக்கென்னடி நீ சொல்லிட்டுப் போயிடுவே. அவங்கப்பன் ஏற்கனவே ஒரு மாதிரி. நம்ம கடைல வேலை பார்த்த ரெண்டு பையன்க சொல்லாமக் கொள்ளாம ஓடிப் போனானுங்களே அது எப்டின்னு நினைக்கிறே? எல்லாம் அந்த நாகரத்னம் வேலதான். அந்தாள் பேரு மட்டும்தான் நாகம்னு நினைச்சிடாதே. ஆளே அப்டித்தான். எப்போ விஷம் கக்கணும்னு அவனுக்குக் கரெக்டாத் தெரியும். நீ உன் பொழப்பப் பாரு, நாபாட்டுக்கு என் சோலியப் பார்க்கிறேன்னு நா ஒதுங்கி இருந் திட்டிருக்கேன். நீ என்னடான்னா எல்லாத்தையும் கெடுத்து விட்ருவ போலிருக்கு.”

“நீங்க ஆம்பிளைங்க எப்படியோ, ராஜுவோட அம்மா எங்கிட்ட எப்பவும் போலத்தான் இருக்கா. அதில ஒண்ணும் வித்தியாசமா எனக்குத் தோணலை. ராஜுவைப் பத்தி எவ்வளவோ புலம்பி வருத்தப்பட்டா. எல்லாம் பக்குவமா எடுத்துச் சொல்லியிருக்கேன். என்னானாலும் தாய் மனசு அப்டி உடனே உதறிடுமா?”

“அந்தம்மா உதறாட்டாலும் அந்த நாகன் கண் டிப்பா உதறிடுவாண்டி. அவன் தன்னை உசரமான ஸ்தானத்துலயே எப்பயும் நினைச்சிண்டிருக் கிறவன். ஓடி ஓடி உழைக்கிற இந்தத் தொழில்ல முதலாளி என்ன தொழிலாளி என்ன? நா என்னைக் கும் அதெல்லாம் பார்த்ததில்லே. என் மனசுல அப்படியெல்லாமும் தோணினதுமில்லே. ஆதி காலத்திலேர்ந்து நா அப்படித்தான். எல்லாரும் ஒண்ணுதான் எனக்கு. கை கோர்த்திட்டு அலைஞ்சு காரியம் ஆனாச் சரின்னு தாராளமா விட்ருவேன் எப்போதும். ஆனா அவன் அப்படியில்லே. தன்னத் தானே மேலே தூக்கி உட்காத்திக்குவான். அங்கே யிருந்துதான் கீழ பார்ப்பான். உயரத்துல இருந் தாலே உரத்துப் பேசணும்னு நினைக்கிறவன். தன் கௌரவத்துக்குக் குறைச்சலா ஒரு இஞ்ச்கூட விட்டுக் கொடுக்க மாட்டானாக்கும். எல்லாம் தெரிஞ்சிதான் சொல்றேன்.”

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க பேசறதே எனக்குப் புரியலே...?”

“சம்பந்தம் இல்லாமலா? இது அவனுக்குக் கௌரவப் பிரச்னையாக்கும். அதுக்குச் சொல் றேன். அவனோட பழகின பழக்கம் எனக்கு இதை உணர்த்துது. வேணும்னாப் பாரு அந்த வீட்ல சீக்கிரம் ஏதாச்சும் ஒண்ணு நடக்கும்...”

அப்பா தான் நினைத்ததைச் சொல்லி முடித்து விட்டார். அந்தப் பேச்சிற்குப் பிறகு ராஜுவும் ஏனோ வீட்டுப் பக்கம் வரவில்லை. அம்மா அமுந்துபோனாள் அத்தோடு. அவரின் அனுபவத் தின் முன்னால் தன்னோடது ஒன்றுமில்லையோ என்று நினைத்திருப்பாளோ என்னவோ?

என்ன ஆச்சரியம்? அப்பா நினைத்ததுபோல் ஒன்று நடந்துதான் விட்டது அந்த வீட்டில்.

“டேய் பாலாக்கண்ணு...எம்பிள்ளையைப் பார்த்தியாடா? நேத்து ராத்திரிலேர்ந்து அவனக் காணலைடா...” - அழுதுகொண்டே ராஜுவின் அம்மா வந்து நின்றபோது, சர்வ நாடியும் ஒடுங்கிப் போனது இவனுக்கு.

“இனிமே தொடர்ந்து எங்க வீட்ல என்னால இருக்க முடியாதுடா...” - மனசு இறுகிப் போன நிலையில் கடைசியாக அவனைச் சந்தித்த அன்று ராஜு சொன்னது இவனுக்கு ஞாபகம் வந்தது. ஆனால் இத்தனை சீக்கிரம் அதை நடத்திக் காட்டு வான் என்று இவன் எதிர்பார்க்கவேயில்லை.

கையில் பிடித்திருந்த அந்தக் கடிதத்தினைப் படிக்க ஓடாமல் பழைய நினைவுகளில் முழுக்க மூழ்கிப் போயிருந்த பாலன் ராஜுவின் இழப்பு தனக்குப் பெரும் நஷ்டம் என்று தன் மனது தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதை எண்ணிக் கொண்டான்.

எத்தனை புத்திசாலி அவன்? உலக விஷயங் களையெல்லாம் எப்படி அலசுவான்? எந்த விஷ யத்தைப் பற்றிப் பேசினாலும் எல்லாவற்றிற்கும் அவனிடம் பதில் இருக்குமே? இதையெல்லாம் எங்கடா படிக்கிற நீ என்று எத்தனை முறை கேட்டி ருக்கிறார்கள் அவனின் நண்பர்கள்?

“தெனம் லைப்ரரில நாங்களெல்லாம் சிந்து பாத்தும், ஆண்டிப் பண்டாரமும் மேய்ஞ்சிக் கிட்டிருக்கைல நீ வேற என்னென்னமோ படிச்சிருக்கே... இவன் என்னடா அந்த ரூம்லயே போய் புஸ்தகங்கள நோண்டிட்டேயிருக்கா னேன்னு நினைச்சா இப்பதான் தெரியுது விஷயம். தெருவுல இருக்கிற வீடுகளோட லைப்ரரி டோக் கன் பூராவும் இவங்கிட்ட இருக்கேன்னு நினைச்சா இந்த வேலையா நடக்குது...?” - இரவில் வீட்டு வாசலில் தெருக்கம்ப விளக்கு வெளிச்சத்தில் காற்றாட உட்கார்ந்து ஊரே உறங்கினப் பிறகும் வெறியாய்ப் படித்துக் கொண்டிருக்கும் ராஜுவை நினைத்துக் கொண்டான் பாலன். அவனோடு சேர்ந்ததனால்தானே தானே படிப்பில் முனைப்புக் காட்டியது. இல்லையென்றால் அப்பாவின் வியா பாரத்தில்தானே தன்னின் முழுக் கவனமும் இருந் தது. மூன்று மாதத்திற்கொரு முறை கொள்முதலுக் காக அப்பா சூரத்திற்குக் கிளம்புகையில் ஒற்றைக் காலில் நானும் வருவேன் என்று தவமிருந்தது மாறி படிப்பில் கவனம் பிறந்தது அவனால்தானே?

பெருத்த சோகத்தோடு கடிதத்தின் வரிகளில் கண்களை ஓடவிட்டான் பாலன். மும்பை என்கிற இடக் குறிப்பினைப் பார்த்தவுடன் மனது திடுக் கிட்டது. அந்த நீண்ட கடிதத்தை மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்தபோது தனது சோகத்தையும் மறந்து மும்பையின் புதுமையான பல விஷயங்கள் அவன் பார்வைக்குப் பட்டிருப்பதும் அதைத் தனக்குத் தெரிவிப்பதில் அவனின் முனைப்பும் சந்தோஷமும்தான் அவனுக்கு முதலாகத் தெரிந் தது. கடிதம் இப்படி ஆரம்பித்திருந்தது:

அன்புள்ள நண்பா, நலமாயிருக்கிறாயா? உனக்கு வணக்கம் சொல்வது வெறும் சம்பிரதாய மாகப் போய்விடும். அதனால்தான் நல விசாரிப் போடு ஆரம்பித்தேன். எங்கள் வீட்டில் என் நிலைமை எப்படியாக இருந்திருக்கும் என்பதை நான் சொல்லி நீ தெரிந்துகொள்ள வேண்டிய தில்லை. அப்பாவின் கோபம் அடங்குவதா யில்லை. பேச்சுக்குப் பேச்சு அவர் என்னை இகழ்ந்து கொண்டேயிருந்தார். நான் அவருக்கு மகனாக வந்து பிறந்ததும், இப்பொழுது இப்படி யாக இருப்பதும் அவருக்குப் பெருத்த அவமான மாக இருப்பதாகவும், வீட்டிலிருந்து வெளியில் யாரையும் சுதந்திரமாகச் சென்று சந்திக்க முடிய வில்லை என்றும், எவருடனும் மனம் விட்டுப் பேச முடியவில்லையென்றும், மானம் போகிற தென்றும், எந்த ஜென்மத்துப் பாவமோ என்றும் இப்படியொரு பிள்ளையைப் பெற்று என் மானத்தை வாங்கி விட்டாயே என்றும் அம்மாவை யும் அவர் ஏசாத நாளில்லை. எத்தனை நாளைக்குத் தான் அதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டி ருக்க முடியும்? என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும் நீ பேசாமல் இரு என்று என் அம்மா சொன்னார்கள். ஆனாலும் என்னால் பொறுக்க முடியவில்லை. என் மீது அன்பைப் பொழிய வேண்டாம். கொஞ்சமேனும் ஈவு இரக்கம் காட்ட லாமில்லையா? அதற்குக்கூட என் தந்தை தயாரா யில்லை என்பதை நினைக்கும்போது என் மனது விட்டுத்தான் போனது. எந்த வழியிலாவது என்னை நானே துரத்திக் கொள்ளும்படியாகச் செய்துவிட வேண்டும் என்பதே என் அப்பாவின் நோக்கமாக இருக்குமோ என்கிற அளவுக்கு எனக்குச் சந்தேகம் வந்தபோதுதான் அது அவர் வாயாலேயே எனக்கு உறுதிப்பட்டது.

‘நீ பேசாம இரு... அவனை எப்படி வெளில தள்ளணும்னு எனக்குத் தெரியும்...’ என்று என் அம்மாவிடம் அவர் சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்க நேரிட்டது. அதற்கு எந்தவித எதிர் வினையும் இல்லாமல் அம்மா அமைதி காத்தது தான் என்னை யோசிக்க வைத்தது. நான் படிக்க வைக்கிறேன் அவளை என்று உரிமையோடு கூட்டிக்கொண்டு போய் பட்டணத்தில் ஹாஸ்ட லில் சேர்த்து, கண்ணும் கருத்துமாகக் கவனித்து, தற்பொழுது இறுதி ஆண்டில் இருக்கும் என் சகோதரியின் திருமணம் அவள் முறை மாமாவின் ஒப்புதலிலிருந்து எந்தவிதத்திலும் பிறழ்ந்து விடக் கூடாது என்கிற எண்ணத்தின் அடிப்படையில்கூட அம்மாவின் அமைதி காரணமாயிருக்கலாம் என்று எனக்குத் தோன்றிய வேளையில்தான் என்னால் என் சகோதரியின் வாழ்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப் பட்டுவிடக் கூடாது என்கிற உறுத்தல் என்னிடம் அதிகமாக நான் இந்த முடிவை உடனடியாக எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன்.

என்னைப் போன்று இருப்பவர்களுக்கெல்லாம் மும்பை ஒரு பெரிய புகலிடமாக இருக்கிறதாக எனக்குத் தோன்றியது. சமீபத்தில் நான் இது குறித்த பலத்த சிந்தனையில் இருந்தபோது, இது சம்பந்த மான சில புத்தகங்களை நமது நூலகத்தில் காண நேரிட்டது.

என்னை நான் எத்தனைதான் மறைத்துக் கொள்ள முயன்றாலும், என்னையறியாமல் எனது நடையும், பார்வையும், பாவனைகளும் என்னை எனது தற்போதைய சந்தோஷ நிலைக்குத் தள்ளி விடுகின்றன என்பதுதான் என்னால் தவிர்க்க முடியாத உண்மையாயிருக்கிறது. அப்படியான ஒரு நாளில்தான் எனது புதுவிதமான புத்தகத் தேடல் நமது நூலகருக்கும் ஒரு விதமான சந்தேகத்தை ஏற் படுத்த அவர்கூட என்னை ஒரு விதமான ஒதுக்க லோடு பார்க்க ஆரம்பித்தார். இதை இங்கே நான் உன்னிடம் மட்டும் சொல்லிக் கொள்ள விரும்பும் ஒரு வேதனையாகவே பதிவு செய்கிறேன். புத்தகங் களுக்கு நடுவே இருப்பவர் அவை ஊட்டிய ஆழ்ந்த முதிர்ச்சியின்பாற்பட்டு விளங்க வேண்டும் என்பது விதியா என்ன? புத்தகங்களை வெறும் சுமை களாகக் கருதும் ஒரு சாதாரண நபராக அவர் ஏன் இருக்கக் கூடாது? நான் சமீபத்தில் படித்த நூல்கள் தான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக் கின்றன.

இங்கே நான் என் கூட்டத்தோடு, பாதுகாப்பாக, என் மீது பரிபூரண அன்பு செலுத்துபவரோடு என்றோ சேர்ந்து விட்டேன். அது என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் என்னை மிகவும் பிரியமாகவும், முழு அன்போடும் நடத்து கிறார்கள். அன்பு என்னும் வலையினால் பின்னப் பட்டது இந்த சமூகம் என்பதை நான் படித்த புத்தகங் கள் எனக்குச் சொல்லித் தந்திருக்கின்றன. அதை இங்கே பரிபூர்ணமாக உணர்கிறேன். தங்களில் ஒருவளாக, அவர்கள் கூடவே வெகு காலமாய் இருப்பவளாக என் மீது பாசத்தைப் பொழிகிறார் கள்.

இங்கே நான் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லித் தான் ஆக வேண்டும். மும்பையில் எங்களைப் போலிருப்பவர்கள் பெரிதும் மதிக்கப்படுகிறார் கள். புதிய வியாபார ஸ்தலங்களை நாங்கள்தான் ரிப்பன் வெட்டித் திறந்து வைக்கிறோம். எவர் வீட்டிலாவது குழந்தை பிறந்திருந்தால் அங்கே நாங்கள் மதித்து வரவேற்கப்படுகிறோம். எங்களுக்குப் பெரிய எண்ணிக்கையிலான தொகை வழங்கப்படுகிறது. நம் தமிழகத்தில்கூட நல வாரியம் இருப்பதாக் அறிய நேர்ந்தது.

இதையெல்லாம் கேட்கும்போது மனதுக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. எங்கள் உறவு களோடு சேர்ந்து கொண்டபிறகு நான் மிகவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். இப்பொழுதுதான் என் மனம் மிகவும் நிறைந்து இருக்கிறது. இனி நான் நிச்சயம் முழு திருப்தியோடு என் நாட்களைக் கழிக்க முடியும். நம் உறவுகளும், மனிதர்களும், இந்த சமூகமும் என்று எங்களை முழு மனதோடு வர வேற்கத் தயாராகிறதோ அன்றே எங்களின் இருப்பு பற்றிய முழுமையை நாங்கள் எய்த முடியும். அந்தக் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே என் மனது எனக்குச் சொல்கிறது. கடைசியாக ஒன்று:

உன்னை விட்டு நான் பிரிய நேர்ந்தது ஒரு ஆற்ற முடியாத சோகம். என் மீது அதீத அன்பு செலுத்திய உன் அம்மாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். சமயம் வரும்போது அம்மாவிடம் பக்குவமாக நான் விசாரித்ததைச் சொல். உன்னோடு உன் வீட்டுத் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் என் இருப்பிடம் தெரிந்துவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் இந்த நீண்ட கடிதம். உன் வீட்டுக் கடிதங் களை நீதான் தினமும் அஞ்சலகம் சென்று பெற்று வருவாய் என்பதை நான் அறிவேன். உன் தந்தை யின் வியாபாரம் சம்பந்தமான கடிதங்களோடு கடிதங் களாக இடையில் நிற்கும் இக்கடிதம் உனக்கு ஒரு திடீர் மகிழ்ச்சியையே அளிக்கும் என்பதை நினைக்கும்போது இப்போதே என் மனம் ஆறுதல்படுகிறது. முகவரிகூடத் தெரிவிக்க வில்லை. என்னை இதற்காக நீ மன்னித்துத்தான் ஆக வேண்டும். இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கத்தான் செய்கிறது. இந்த அளவுக்கான மனப்பக்குவத்தையும், நிதானத்தையும் எனக்குக் கொடுத்தவைகள் நான் இதுநாள்வரை படித்து வந்த புத்தகங்கள்தான் என்பதை உறுதியாகக் கூறுவேன். மும்பையைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. அவை அடுத்த கடிதத்தில் சாத்தியமானால் மகிழ் வேன். உயிர் நண்பா என்னை மறந்துவிட மாட் டாயே? என்றும் உன் ராஜி.

கடிதத்தைப் படித்து முடித்த பாலனுக்கு ராஜு சொன்ன சமயம் அப்பொழுதே வந்துவிட்டதாகத் தான் தோன்றியது. அம்மா கோயிலுக்குப் போயிருக்கிறாள். இதுதான் சரியான சமயம். அவன் மீது களங்கமற்ற அன்பைப் பொழிந்தவள் அவள் ஒருத்திதான். ராஜுவின் தாய் தந்தையரைக் கூட அவ்வாறு கூற முடியாது. இதுவே சரியான தருணம். கோயிலில் வைத்தே அம்மாவை அந்தக் கடிதத்தை முழுமையாகப் படிக்க வைத்துவிட வேண்டியதுதான். அப்பாவுக்குத் தெரிய நேர்ந்தால் கூட சங்கடம்தான். இதைவிட வேறு நல்ல செயல் இன்றைய நாளில் எதுவும் இருக்க முடியாது என்று எண்ணினான். எண்ணியதை உடனே செயலாக்க முனைந்தான்.

நெஞ்சம் படபடக்க, ஓட்டமும் நடையுமாகச் சென்று கோயிலை அடைந்தபோது அவன் அம்மாவும், ராஜுவின் தாயாரும் கையில் அர்ச்சனைத் தட்டுக்களோடு ஒரு சேர சுற்றுப் பிரகாரத்தில் நெருக்கமாக வலம் வந்து கொண்டி ருப்பதை அவன் காண நேரிட்டபோது அவனையறி யாமல் அவன் கால்கள் சட்டெனப் பின் வாங்கின!

Pin It