இரவு படுத்தபின்பு நன்றாக எனக்கு நித்திரை போய்விட்டது. காலையில் நித்திரை விட்டெழுந்து வெளியே நான் வந்து பார்த்தபோது, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று முடிவில்லா மனிதர் கூட்டம் காலைச் சாப்பாடு வாங்கிக் கொள்ள நிரையில் நின்று கொண்டிருந்தார்கள்.

அந்தப் பரிதாபகரமான நிலையில் எல்லோரையும் அங்கே நான் கண்டபோது, என் மனம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. நான் துயரத்தில் மேலே உள்ள வானத்தை நீண்ட நேரம் வெறித்துப் பார்த்துக் கொண் டிருந்தேன். முகாமெங்கிலும் பெரும் சத்தங்கள்! அவையெல்லாம் என் காதில் விழுந்து கொண்டிருந்தன. என்றாலும் சத்தங்கள் எதையும் உள் வாங்கிக் கொள்ளாது, செவிடானது போல என் காதுகள் ஒதுக்கித் தள்ளியபடி இருந்தன.

நான் மண்டையைப் பிளக்கும் கவலையில் மூழ்கியிருந்தேன். என் சிந்தனைகள் மரத்துப் போய்க்கிடந்தது. என் மொத்த இருப்பும் சூனியத்தில் இருந்தது.

எந்தக் காரணமும் இல்லாமல் சாம்பல் நிறவானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என் கண்கள், திடீரென சூரிய ஒளியால் தாக்குப்பட்டது. அதன் பிரகாசமான ஒளிக்கீற்று என்னில் தாக்குப்பட என் நினைவுகள் விழித்துக் கொண்டது. மூளைக்குள் முன்பு என்கண் முன்னே நடந்த அந்தக் காட்சிகள் ஒன்றின் பின் ஒன்றாய் நகர்ந்து சென்றன.

யுத்தம் நடக்கும் காலமெல்லாம் வீடுவாசல் களிலே நானும் என் மனைவியும் பிள்ளையும் நிம்மதியாகவா இருந்தோம்? தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் நான், ராணுவம் ஊருக்குள் வந்துவிட்டது என்று எல்லாரும் கிடந்து கலவரப்படும்போது வீட்டைப் போய்ப்பார்க்க முடியுமா? ஷெல் வந்து விழுந்துகொண்டிருக்கும் போது என் உயிரைத் தப்பித்துக் கொள்வதற்கு எங்காவது திசையை நோக்கி நான் ஓடிவிட வேண்டுமல்லவா? இப்படித்தான் இடம் பெயர்ந்து எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கும் போது, தன்னுடைய தாயை, தன்னுடைய மனைவியை, தன்னுடைய மகனை, தன்னுடைய மகளை என்று ஓடிக் கொண்டிருக்கும் சனத்துக் குள்ளே பிரிவைச் சந்தித்தவர்களெல்லாம் நின்று கொண்டு தேடிக் கொண்டிருப்பார்கள்.

இவ்வாறாகத்தான் ஒரு நாள் நான் அவ்விடத் தில் வந்து ஷெல் விழுகிறது என்ற பயத்தில் ஓடிவர, என் மனைவியும் மகளும் என்னைப்போலவே பயந்து கொண்டு வீட்டிலிருந்து எங்கேயாவது போவோம் என்ற நினைப்பில் வெளிக்கிட்டு ஓடி வந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வெறுங் காலோடுதான் ஓடி வந்திருக்கிறார்கள். அந்நேரம் மனைவியின் மண்டைக்குள் மட்டும் என்னைப் பற்றிய கேள்விகள் இருந்ததாம்!

மகள் பிறகு அதைப் பற்றியெல்லாம் எனக்குச் சொன்னாள்.

“அவர் எங்க போனாரோ? என்ன ஆனாரோ? எங்கள எங்கயும் இதுகளுக்க தேடுறாரோ?”

மகள் அதை எனக்குச் சொல்ல, நான் கேட்டு விட்டுக் கத்தினேன். அதற்குப் பிறகு அவளை நினைத்து நான் அழுது அழுதுதான் என் கண்ணீ ரெல்லாம் எனக்கு வற்றிப் போனது. உடலே எதை யும் செய்வதற்கு உதவ மறுத்தது.

இன்று இங்கே நாங்கள் வந்தது முதலாய், எவ்வளவு நாட்கள் கழிந்துவிட்டன. கமலம் நிறத்தில் ரொம்ப அழகுதான்! இப்போது என்மகள் அவளின் அச்சுத்தான்! அம்மா மாதிரித்தான் அவள். என்னைப் போல் இல்லை. இவளுக்குப் பதினேழு வயதாகிறது. பெரிய கண்களும், கறுத்த முடியும் வலது கன்னத்தில் பெரிய மச்சமும் இருக்கிறது தாயைப்போல! இந்தச் சந்தோஷத்தோடு மீண்டும் அதை நான் நினைக்க, என் முகம் வெளிரிப் போகிறது. எந்த நம்பிக்கையில் நான் இந்த உலகத்தில் இனி வாழ்வேன்? என்றாலும் மத நம்பிக்கையில் நான் எதை எதையோவெல்லாம் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் எதுவுமே எனக்கு ஆறுதலளிக்கவில்லை. ‘என் ஆன்மாவை எப்பொழுது அழைப்பாய்’ என்று நான் இப்போது கடவுளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்படி நான் கேட்டும் கடவுள் என் ஆன்மாவை அழைப் பதுபோல் இருக்கிறதாகவேயில்லை.

விதியைப்பற்றியெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூட அக்கறையில்லை. ஷெல் வந்து விழுந்து அதில் சிக்குண்டுதான் என் மனைவி இறந்தாள் என்பது உறுதி. அவளோடு அவள் எண்ணங்களும் மரணம் கொண்டு விட்டன. இந்த யுத்தம்தான் என் மனைவியைக் கொன்றது. அந்தச் ஷெல்லை என் மனைவி மீது ஏவிவிட்டவன் கைது செய்யப்பட வில்லை. விசாரணைக்காக அழைத்துச் செல்லப் படவில்லை.

இந்த முகாமில் நான் இருந்தாலும் என் வேட்டிக் கட்டுக்குள்ளே சிறுபொட்டலம் இருக் கிறது. அதில் கொஞ்சம் நகைகளும் ஐம்பதினா யிரம் ரூபாய்களும் இருக்கின்றன. என் உடல் நிலை மோசமாகிக் கொண்டு வரும் போது இதை யெல்லாம் என் மகளிடம் நான் கொடுத்து விட வேண்டும். என் மனநலமும் குன்றிவிட்டது. என் மனைவி இறந்த அந்த நினைவுகளை விட வேறெதி லும் என் நினைவுகள் நகர மறுக்கின்றன. என் மனைவியும் பிள்ளையும் வீட்டை விட்டு ஓடிவரும் போது கொஞ்சம் தள்ளியதாய் உள்ள ஒரு வீட்டுச் சுவர்க்கரையில் அந்தச் ஷெல் வீழ்ந்ததாம்.

அப்படித்தான் நடந்தது என்று என் மகள் சொன்னாள்.

தன் மகள் மீது அந்தத் தாய்க்கு எவ்வளவு பாசம்! ஷெல் விழுந்து குடல் தனியே கிடக்கிற நிலையி லும் “என்னை விட்டு ஓடி விடு வேகமாய் நீ ஓடிப் போய்விடு” என்று அவள் சொல்லியிருக்கிறாளே? என்றாலும் என் மகள் தாயை விட்டு எங்கும் போவதற்கு அசையவே இல்லை. அவளின் கண் களுக்கு முன்பாகத்தான் என் மனைவி தன் கடைசி மூச்சை விட்டாள்.

மகளுக்கு அன்று அசதியுற்ற மூளை இன்னும் வருந்திக் கொண்டுதான் இருக்கிறது. எங்கள் இருவருக்கும் விடிவு என்பதே இல்லாமல் போய் விட்டது. திரும்பத்திரும்ப முகாம்களுக்கும் அலுவ லகங்களுக்கும் நாங்கள் அலைந்து கொண்டு தான் இருக்கிறோம். இவ்வளவு பாடுகளையும் நாம் பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் எல்லோ ரும் ஒத்த குரலில் “சமாதானம் வரும் சமாதானம் வரும்” என்று தான் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கூறுகிற சமாதானம் வருமா? என் மனம் இதை நினைத்து சோர்ந்து போகிறது. இன்று இரவும் முகாமில் நான்படுத்துக் கிடக்கிறபோது, நல்ல நித்திரையிலும் என் உடல் சில அசைவு களைக் காட்டியது. செயலற்றுக் கிடந்த என் கைகள் வேட்டி இடுப்புக்குள் கட்டி வைத்திருந்த பொட் டலத்தைத் தடவிப்பார்த்துக் கொண்டது கவனத்துடன்.

Pin It