முதுமையின் காரணமாக செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, கோவையில் சொந்த இல்லத்தில் ஓய்வு பெற்றிருந்த “சரஸ்வதி” வ.விஜயபாஸ்கரன் என்ற கம்யூனிஸ்ட் இலக்கிய இதயம் 9.2.2011ல் சுவாசிப்பதையும் சிந்திப்பதையும் நிறுத்திக் கொண்டது. 26.9.1926-ல் பிறந்த அவர் எண்பத்தைந்தாண்டு காலம் இந்த மண்ணில் உயிர் வாழ்ந்திருக்கிறார். அவரது வாழ்வின் பெரும் பகுதியான காலமெல்லாம் கம்யூனிஸ்ட் ஊழியராகவும், தமிழிலக்கிய மகாநதிகளை உற்பத்தி செய்கிற இமயமாகவும் பயணப்பட்டிருக்கிறார். அவர் சகலராலும் சரஸ்வதி விஜயபாஸ்கரன் என்றே அழைக்கப்படுகிற அளவுக்கு அவரும், சரஸ்வதியும் புகழ்பெற்றிருக்கின்றனர். தமிழ் முற்போக்கிலக்கியத்திற்கு புதிய தடம் போட்டிருக்கிறார்.

தாமரை, செம்மலர் போன்ற கம்யூனிஸ்ட் இயக்கம் சார்ந்த இலக்கிய இதழ்களுக்கு இன்றைக்கு மதிப்பும் மரியாதை யுமான பயணிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது என்றால், அதற்கான ராஜபாட்டையை போட்டு வைத்தவர், விஜயபாஸ்கரன்.

கோவை மாவட்டம் தாராபுரம் பா.து.வடிவேல் என்ற புகழ்பெற்ற சுதந்திரப் போராட்டத் தீரரின் காங்கிரஸ் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்தவர். பால்ய வயதில் காந்தியச் சிந்தனையுடன் இருந்தவர். காங்கிரஸ்காரராக சிந்தித்தவர். அந்தக் காலத்து பியூசியான இண்டர்மீடியட் படிக்க சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்தவர். நிர்வாகம் தலையிட்டு பாதியில் துரத்துகிற அளவுக்கு அவர் தீவிரப்போர்க் குணமிக்க -இளமைத்துடிப்புமிக்க-மார்க்சிய சித்தாந்தப் பிடிப்புமிக்க போராளியாக பரிணமித்துவிட்டார்.

வை.கோவிந்தன் அவர்களின் “சக்தி” இதழில் கு.அழகிரிசாமி, சுப.நாராயணன், தி.ஜ.ர.ஆசிரியராக பணியாற்றிய மிக முக்கிய ஆளுமைகள். அவர்களுக்குப் பிறகு அதன் ஆசிரியப் பொறுப்பேற்றார் விஜயபாஸ்கரன்.

‘சக்தி’ தளர்ச்சியுற்று தள்ளாடித் தடுமாறிய காலம். இவர் விலகி வெளியே வந்து “சரஸ்வதி” முற்போக்கு இலக்கிய இதழை துவக்கினார். “கைவருந்தி உழைப்பவர் தெய்வம்; கவிஞர் தெய்வம்; கடவுளர் தெய்வம்” என்ற மகாகவிபாரதியின் வரிகள் இதழின் இதய வாசகமாக இடம்பெற்றிருந்தது.

சரஸ்வதி இதழுக்கு முன்பும் பின்பும் பல பத்திரிகைகளில் பணியாளராகவும், ஆசிரியப் பொறுப்பேற்றவராகவும் செயல்பட்டிருந்த போதிலும் அவர் தனித்துவச் சாதனைச் சரித்திரம் படைத்தது, சரஸ்வதி இதழில்தாம். நவஇந்தியா, தினத்தந்தி, விடிவெள்ளி, சக்தி, ஹனுமான், சமரன், சோவியத்நாடு ஆகிய இதழ்களுடன் செயல் பட்ட நீண்ட நெடிய அனுபவம் அவரது வாழ்வாகி இருந்தது.

கம்யூனிஸ்ட் ஊழியர், பத்திரிகையாளர் மட்டுமல்ல, புனைவிலக்கியமல்லாத கட்டுரைகள் எழுதுகிற எழுத்தாளராகவும் திகழ்ந்தார். ‘ஈழத்தைக் கண்டேன்’, ‘தமிழுக்குப் பெருநஷ்டம்’, ‘நோக்கமும் செயலும்’, ‘பாரதியும் தமிழ் வளமும்’, ‘சிறு கதை சாம்ராட்’ போன்ற நூல்கள் அவரது எழுத்து வன்மைக்கும் சிந்தனை வீச்சுக்கும், அனுபவப் பரப்புக்கும் அடையாளங்களாக இருக்கின்றன.

ஆசிரியையாக பணியாற்றிய அவரது துணைவியார் பெயர் சரஸ்வதி. துணைவி யாரின் பெயரையும் மாத ஊதியத்தையும் நம்பித்தான் இதழையே துவக்கினார். சிற்றிதழ் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தையும், சரித்திரச் சாதனைகள் நிறைந்த ஒளிமிக்க முத்திரை யையும் பதித்திருக்கிற சரஸ்வதி முற்போக்கு இலக்கிய இதழ், நிகரற்ற புகழுக்குச் சொந்த மானது. முற்போக்கு இலக்கியத்தின் உள்ளடக்கத் தையும், வடிவத்தையும் சரஸ்வதி இதழ் முழுப் பரிமாணம் பெற உதவிற்று. விவாதங்களையும், சர்ச்சைகளையும் விரிவாகவும், சுதந்திரமாகவும் நடத்தியது. இயக்கம் சார்ந்த இதழுக்குரிய புதிய இலக்கணத்தை உருவாக்கியது. பல முக்கிய இலக் கியப் படைப்புக் கங்கைகள் உதயமான இதழாக சரஸ்வதி திகழ்ந்ததற்கு காரணம், விஜய பாஸ்கர னின் லட்சியப் பற்றுறுதியும், தத்துவச் செறிவும், தனித்துவச் சிந்தனையுமே காரணங்கள்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் மணிக்கொடிக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விடவும் ஒருபடி கூடுதலானது, சரஸ்வதியின் உயரம். 1955 மே மாதம் துவங்கப்பட்ட சரஸ்வதி, ஏழரை வருட காலம் பயணித்து, அளப்பரிய புகழ்மிக்க படைப் பாளிகளை தமிழுக்கு கண்டெடுத்து வழங்கியது.

அவர் துவக்கிய எல்லா இதழ்களையும் போலவே ‘சரஸ்வதி’யையும் மே மாதமே துவக்கி னார். போராடும் உழைப்பாளி வர்க்க அரசியல் சித்தாந்தத்தின் மீது அவர் கொண்டிருந்த அழுத்த மான-அடர்த்தியான-பற்றுறுதிக்கு ஆதாரமாக இருப்பது, அவர் மே தினத்தை நல்ல நாளாக நினைக்கிற செயல்பாடு. அவர் குறித்த அஞ்சலியும் மே தினச் செம்மலரில் பிரசுரமாவது சோகமான பொருத்தமாகும்.

மார்க்சிய சித்தாந்தத்திலும் தத்துவத்திலும் தாம் அழுந்தக் காலூன்றியிருக்கிற தன்னம்பிக்கையில், மாற்றுக் கோட்பாட்டாளர்களுக்கும் தமது இதழில் இடம் தந்தார். குறிப்பாக, ‘சுத்த’ இலக்கியக்காரர் களான க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா போன்றோரின் படைப்புகள் இடம்பெற்று வந்தன. சாமி.சிதம்பரனார், ஆர்.சூடாமணி போன் றோரின் படைப்பாக்கம் தாங்கி சரஸ்வதி வந்தது.

பிற்காலத்தில் பொதுவுடைமைச் சிந்தனை யாளர்களும் மற்ற வெளிவட்டாரத்து வாசகப் பரப்பும் போற்றிப் புகழ்ந்து கொண்டாடிய எழுத் தாளர்கள் கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, தொ.மு.சி.ரகுநாதன், பேரா.க.கைலாச பதி, கார்த்திகேசு சிவத்தம்பி போன்ற மிகப்பெரிய ஆளுமைகளுக்கெல்லாம் நாற்றங்காலாக திகழ்ந் தது, சரஸ்வதி.

ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும் தமக்கு சரஸ்வதி வழங்கிய முழுமைமிகு வாய்ப்புகளை யும், பரிபூர்ண சுதந்திரத்தையும் மிகுந்தமன நெகிழ்ச்சியுடன் பிற்காலத்து எழுத்துகளில் பதிவு செய்திருக்கின்றனர். ஜெயகாந்தனின் புகழ்மிக்க படைப்புகளும், தமிழகத்தின் கவனத்தையே சர்ச்சைகளில் ஈர்த்த சிறுகதைகளும் சரஸ்வதியில் விஜய பாஸ்கரனால் மிக்க துணிவுடன் பிரசுரம் செய்யப்பட்டன.

சுந்தர ராமசாமியின் ஆரம்ப காலத்து முற்போக்குச் சிறுகதைகள் யாவும் சரஸ்வதியில் தான் அச்சேறிற்று. தகழியின் ‘தோட்டிமகன்’ என்ற தலித்திய நாவலை 1956லேயே சுந்தர ராமசாமி மொழி பெயர்த்தார். குடலைப் புரட்டும் மல நாற்றமெடுக்கிற அந்தத் தொடரை தமிழில் பிரசுரிக்கிற துணிச்சல் பலருக்கும் இல்லாமலிருந்த அந்த நாளில் விஜயபாஸ்கரன் தான் அதைத் தொட ராக சரஸ்வதியில் பிரசுரித்தார், சுந்தர ராமசாமியின் அமரத்துவப் புகழ்பெற்ற ‘புளியமரத்தின் கதை’ என்ற நாவலும் தொடராக சரஸ்வதியில் தாம் பிரசுரமாயிற்று.

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் எண்ணிறந் தோர் தமிழுக்கு அறிமுகமானது, சரஸ்வதியின் மூலம் தான். செ.கணேச லிங்கன், அ.முத்துலிங்கம், எச்.எம்.பி.முஹதீன், ஏ.ஜெ.கனகரட்னா, க.கைலா சபதி, சிவத்தம்பி போன்று இன்னும் பல இலங்கைத் தமிழ் முற்போக்குப் படைப்பாளிகள் சரஸ்வதி வாயிலாகவே தமிழுக்கு அறிமுகமா யினர். தமிழையும், தமிழ் முற்போக்கிலக்கியத்தை யும் வளப்படுத்தியதில் சக்திமிக்க பணியாற்றியிருக் கிறார், விஜயபாஸ்கரன்.

‘சரஸ்வதி களஞ்சியம்’ என்ற பெயரில் அதன் சேகரம் முழுவதும் பின்னாளில் வெளிவந்தது. ‘சரஸ்வதி காலம்’ என்றொரு நூல், அதன் தனித் துவச் சிறப்புகளை வரலாற்று பூர்வமாக முன் வைக்கிறது.

விஜயபாஸ்கரனின் சாதனைகள் பெரிது. அந்த அளவுக்கு அவர் கொண்டாடப்பட வில்லை. ஆயினும் தமிழ்கூறு நல்லுலகம் அவரை மறந்து விடவுமில்லை.

கோவை மாநகரில் தமுஎகச மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டுத் திருவிழா பெருங் கூட்டமேடையில் சரஸ்வதி விஜயபாஸ்கரனை ஏற்றி, உரிய முறையில் பாராட்டி கௌரவித்தது. வல்லிக் கண்ணன், தி.க.சி, ஜெயகாந்தன், பொன்னீலன் போன்ற மிக முக்கிய ஆளுமைகளும் அந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு தஞ்சையிலிருந்து வெளிவருகிற ‘சுகன்’ என்ற சிற்றிதழ் சரஸ்வதி விஜயபாஸ்கரன் குறித்த விரிவான நேர்காணல் பிரசுரித்து கௌரவித்திருந்தது.

செம்மலர் தமது மூத்த சகோதரி சரஸ்வதிக்கு (வ.விஜயபாஸ்கரனுக்கு) புகழஞ்சலி செலுத்தி மரியாதை செய்கிறது.

மார்க்சிய முற்போக்கிலக்கியத்துக்கு புதுத்தடம் போட்டுத்தந்த விஜயபாஸ்கரன், ஜீவா, கே.முத்தையா போன்ற தத்துவப் போராளிகளின் பேரன்பு மிக்க அரவணைப்பை வரலாறு ஒரு சிலிர்ப்புடன் நினைவில் பதிவு செய்து கொள்ளும்.

Pin It