விவசாயியின் வாழ்க்கையையும் விவசாய முறையையும் ஒருசேரச் சித்தரிக்கும் மேலாண்மை பொன்னுச்சாமியின் “இனி” எனும் படைப்பு செம்மலரில் ஒரு தொடராக வெளிவந்து வாசகர்களின் நல்ல பாராட்டுதலைப் பெற்றது. பின்னர் அது நூலாகவும் வெளிவந்தது. தற்போது அது மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு நூலாக வெளிவந்திருக்கிறது.

“சாகித்ய அகாடமி விருது உள்பட இருபத்தைந்து விருதுகளைப் பெற்ற புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச் சாமியின் ‘இனி’ என்கிற முக்கியமான நாவலின் மலையாள மொழியாக்கம்” என்று, முகப்பு அட்டையின் அறிமுகச் சொற்கள் சிறப்பிக்கின்றன.

‘இனி’யை மலையாள மொழியாக்கம் செய்தவர் கே.எஸ்.வெங்கடாசலம். அவர் தனது உரையில் கூறுகிறார்:

“மேலாண்மை பொன்னுச்சாமியைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் அவரது படைப்புகளைப் படிக்கத் துவங்கியது இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான். அவரை நான் நேரடியாகச் சந்தித்ததில்லை; பேசியதில்லை. தொலைபேசி மூலம் அவருடன் நிறைய பேச ஆரம்பித்தேன். பிறகு, முதல் தடவையாக அவரது சிறுகதையொன்றை “யுவதாரா” பத்திரிகைக்காக மலையாளத்தில் மொழியாக்கம் செய்து பிரசுர மானது. தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தைப் பின்னணி யாக வைத்து எழுதப்பட்டதே ‘இனி’ நாவல்.

‘கிராமத்தின் பெயர்? காலம்?’ - நான் கேட்டேன் இரவு 11மணிக்கு. சிரித்துக் கொண்டே, ஒரு கிராமத்து மனிதனின் களங்கமில்லா மனசோடு அவர் கேட்டார்: ‘கிராமத்தின் பெயரும், கதையின் காலமும் அவசியம்தானா? உலகத்தில் எல்லா கிராமங்களும் கிராம மக்களும் விவசாயிகளும் ஒரே மாதிரிதானே? வாழ்க்கை முறைகளிலும், சிந்தனைகளிலும் வித்தியாசம் உண்டா? பிரச்சனை களில் வித்தியாசம் உண்டா? பேசுகிற மொழியில் மட்டும்தானே வித்தியாசம் உள்ளது?’

உண்மை.

விவசாயம் ஒரு தொழில் அல்ல; அது ஒரு கலாச் சாரம் என்று ‘இனி’ நாவல் எனக்கு உணர்த்துகிறது. எக்காலத்திலும் நிலைத்திருக்க வேண்டிய கலாச் சாரம் அது” -என்று இந்நாவல் குறித்து மனம் தோய்ந்த ஈடுபாட்டுடன் கூறுகிறார் மொழி பெயர்ப்பாளர்.

கோழிக்கோட்டில் உள்ள “பியானோ பப்ளி கேஷன்ஸ்” இந்நூலை அழகாகவும் நேர்த்தி யாகவும் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

முகவரி: PIANO PUBLICATIONS, EDUMART, TIRURANGADI TOWERS, JAFFER KHAN COLONY ROAD, CALICUT – 673004

விலை ரூ.85

Pin It