‘கலை இலக்கியங்கள் யாவும் மக்களுக்கே’ எனும் உயர்ந்த தத்துவத்தை வரித்துக் கொண்டு படைப்புகளைப் படைக்கும் இலக்கியவாதிகளுள் ஒருவராய் மிளிர்கிறார் ஆரிசன்.

‘வேட்கையின் நிழல்’ எனும் இவரது கவிதைத் தொகுப்பு எட்டாவது நூலாய் ஏற்றம் பெறுகிறது.

‘பாடும் சின்னப் பறவை களே’ எனும் குழந்தைகளுக்கான கவிதைத் தொகுப்பினை ஏற் கனவே தனியே வெளியிட்டிருந்தாலும் குழந்தைகளைக் கொண்டாடும் கவிதைகளை இத்தொகுப்பில் காண முடி கிறது. குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றிய கவிதையில்...

கள்ளமின்றி இருப்பதால்
வசியமாகி வாழ்கிறது
தளிர்களின் உழைப்பு

என்னும் வரிகள் சிந்தையைத் தூண்டுவதாக உள்ளன. உழைக் கும் பெண்களைப் பற்றி அக் கறை கொள்ளும் தொழிற்சங்கத் தலைவனாய் ‘எங்களின் கருத்த வானம்’ எனும் கவிதையைப் படைத்துள்ளார் ஆரிசன். ஆணாதிக்கச் சமூகத்தின் பெண் சீண்டலைப் பற்றிய கவிதை பெண்ணியக் கவிதையாய் பரிணமித்துள்ளது.

‘உழுவோர் உலகிற்கு அச் சாணி’. அத்தகைய உழவர் களைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொண்டு கவிதை களைப் படைத்துள்ளார். உழவர்களின் வாழ்வை உருக் குலையச் செய்யும் உலகமயக் கொள்கைகளைச் சாடும் கவிஞர் சினமுற்று -

சுழன்றும் ஏர்ப்பின்னது
உலகத்தில்
மலட்டு விதைகளை விற்க
மல்லுக்கு நிற்கும்
கழுகுப் பறவைகளின்
இறகுகளை
இழுத்துப் பறிப்போம்

- எனச்சாடுகிறார்.

மனித சமுதாயம் மூடநம்பிக் கைகளில் மூழ்கிக்கிடப்பது அதன் முன்னேற்றத்திற்கு மா பெரும் தடையே. மூட நம்பிக் கைகளிலிருந்து விடுவித்து மானு டத்தை அறிவுப்பாதையில் அழைத்துச் செல்ல தமது வாழ் வையே அர்ப்பணித்தார் தந்தை பெரியார். அத்தகைய பகுத் தறிவுப் பகலவன் தோன்றிய தமிழ் மண்ணில். மூடநம்பிக்கை கள் அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்திருப்பதை எந்த முற் போக்கு இலக்கியவாதியாலும் சகித்துக்கொள்ள முடியாது. அவ் வாறே ஆரிசன் ‘பெயர் மாற்றம்’, ‘சாமி வேஷம்’, ‘சேதுகால்வாய்’ போன்ற கவிதைகளில் நையாண்டி தர்பார் நடத்தியுள் ளார்.

இந்திய சமூகம் எத்தனை அறி வியல் சாதனைகளைப் பெற்றி ருந்தபோதும் பல நூற்றாண்டு களாய்ப் புரையோடிப் போன தீண்டாமைக் கொடுமைகள் இன்னமும் உலவி வருவதைத் தமது கவிதைகளில் கவலையோடு பகிர்ந்து கொண்டு சாட வும் செய்கிறார்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். இப்பிரபஞ்சம், மனிதகுலம் உய்ய சுற்றுச்சூழல் பாதுகாப்பானதாக இல்லாமல் அழிந்துவரும் நிஜத்தை உணர்ந்து கவிதை படைத்துள்ள கவிஞரின் ‘சுற்றுச்சூழல் காத்து சுவாசிப்போம்’ எனும் நீள் கவிதை மனிதர்களின் மகத்தான கடமையைப் பறைசாற்றுகிறது.

இக்கவிதைத் தொகுப்பைப் பாராட்டி அணிந்துரையாற்றி யுள்ள கவிஞர் ஜீவியின் வாக்குப் படி ஆரிசனின் கவிதைகள் இத் தமிழ் கூறும் நல்லுலகின் வாசக நெஞ்சங்களில் சலனத்தை ஏற் படுத்தும்.

இத்தொகுப்பில் சில கவிதை களின் நீளத்தைக் குறைத்திருந் தால் சில இடங்களில் இடறும் சலிப்பைச் செதுக்கித் தள்ளி யிருக்கலாம். பிழைகளின்றி அழகிய முறையில் இந்நூலை உருவாக்கியுள்ளது பூங்குயில் பதிப்பகம். தள்ளாத வயதிலும் வாழ்த்துரை வழங்கி இலக் கியப் பணியாற்றியுள்ள தி.க.சி. அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வெளியீடு: பூங்குயில் பதிப்பகம், 100, கோட்டைத் தெரு, வந்தவாசி - 604408
விலை. ரூ.60

- பெரணமல்லூர் சேகரன்

Pin It