வானம் தும்ம

மேகத்துக்கு ஜலதோஷம்!

பூமியின் காய்ச்சல் போய்விட்டது

புல்தரை

வானம் தந்த நேர் மழைக் காசுக்கு

தரை வாங்கி அணிந்த தாவணி

பச்சை ஊசிப் புற்கள்

பசுவின் வாய் நுழைந்து

பால் நூலாய் வெளிவரும்!

‘களங்க நிலாக்’ கண்ணீரை

காலையில் ஏந்தி நிற்கும்.

இச்சுட்டு விரல்கள்

வானழுது வளர்ந்தவை

மழை எண்ணெய் தேய்த்து

காற்று தலைசீவி விட்டாலும்

மண்ணின் முடிகள் அடங்காது

நிமிர்ந்த காரணம் என்ன?

கால்நடைக்கு உணவாகிறோம்

என்கிற கர்வமா?

தேன் இல்லை என்பதால்

வந்த தெளிவா?

இந்த நெல் மணிகள்

உழவனின் வேர்வை இறுகி

உருவான ‘கண்ணாடி’-அரிசியில்

தெரிவது முகமல்ல நம் உயிர்!

படிக்காமல் போனாலும் கடன் பட்டம்

விவசாயிக்குக் கட்டாயம் கிடைக்கும்!

அதனாலா, மஞ்சள் கதிர்முகம்

மண் பார்த்துக் கிடக்கிறது?

Pin It