சுதந்திர இந்தியாவில்

பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்படாத

தனிநாடாய் வலம் வந்த

அந்தப் புதுகை பூமியில்

மீண்டும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

மகாத்மாவின்

இறுதிநிகழ்ச்சி நாளில்

புதுக்கோட்டை சமஸ்தானத்திற்குட்பட்ட

கோயில் எல்கையில்

சேரிமக்கள் நுழையலாமென

மன்னர் ராஜ கோபால தொண்டமான்

அன்று உத்தரவிட்டும்

அவர் சொல்கூடச் செல்லுபடியாகாத

அந்த பூமி

முதல் முதலாகப் பல்லாயிரக்கணக்கான

கருத்தக் கால்களின் தடம் பட்டு

பேரதிர்வைச் சந்தித்தது.

சமஸ்தானத்துப் பூமியில்

சரித்திரத்தைப் புரட்டும்

படை திரண்டதில்

கோட்டை கொத்தளமற்ற பூமி

குலுங்கித்தான் போனது.

கிணற்றில் நீரெடுக்க

பொதுப்பாதையில் நடக்க

தோளில் துண்டணிய

சைக்கிளில் செல்ல

ஆண் நாய் வளர்க்க

காலில் செருப்பணிய மறுக்கப்பட்ட

- மொத்தத்தில்

மனிதர்களாக மதிக்கப்படாத

வஞ்சிக்கப்பட்ட மக்கள் கூட்டம்

செங்கொடி நிழலில்

முறுக்கேறிய கரங்களின்

முஷ்டியை உயர்த்தி

அதிர அதிர உதிர்த்த வார்த்தைகள்

ஒரு புதிய தேசியகீதத்தின்

துவக்க வரிகளானது.

அடித்தால் திருப்பி அடி எனக்

கற்றுக்கொடுத்த

மாவீரன் சீனிவாசராவின் தடம்பற்றி நடக்கும்

செம்படைகளுடன்

தோள் கண்ட தலித் அமைப்புகளின்

முழக்கங்கள்

புதிய விடியலுக்கான கீதங்களாயின.

உத்தப்புரம்

உத்தமபுரமாய் மாறும் எனக்

கோட்டையில் இருந்து

வசனம் வரும் வேளையில்

விலங்கொடியாது வாராது விடுதலையென

தீண்டாமைச்சுவரை இடித்து

உத்தப்புரத்தில்

அரசு எந்தப்புறம் எனக் கேள்வி எழுப்பிய

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநாடு

சரித்திரத்தின் பக்கங்களில்

புதிய வெற்றிகளைப் பதிவு செய்யச்

சில தேதிகளைக் குறிப்பிட்டது.

நெருப்பு - யாகம் வளர்க்க மட்டுமல்ல

உயிரையும் எடுக்க என மெய்ப்படுத்தி விட்டு ஜோதியில் கலந்தான் நந்தன்

என ஜோடித்தவர்களால் கட்டப்பட்ட

சிதம்பரம் சுவரைப் பாதுகாக்கும்

அரசு அதிகாரங்களின் கேளாச் செவிகளுக்குச்

சில சேதிகளைச் சொல்லிய மாநாடு.

நந்தன் நடந்து வந்தபாதையில்

நாங்கள் வருகிறோம் . . .

சாதியின் பெயரால்

கட்டப்படும் வர்ணாசிரமக்கோட்டைகளின்

அடித்தளம் தகர்க்கும் போராட்டம்

விரைவில் வெடிக்குமென்ற

போர்ப்பிரகடனத்துடன்

புதுகையைக் குலுக்கிய மாநாடு

பூமிக்குப் புதுச் சேதிகளைச்

சொன்ன மாநாடு.

Pin It