பி.டி. கத்திரியை எதிர்த்த எல்லா குரல்களில் மிகவும் முக்கியமான குரல் இவருடையது. இவரது பெயர் டி.வி.ஜெகதீசன் (84). இருபத்தெட்டு ஆண்டுகளாக மான்சாண்டோ நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார், அதிலும் கடைசி எட்டு ஆண்டுகள் மான்சாண்டோவின் தெற்காசிய பிராந்திய தலைமை நிர்வாக இயக்குநராக பணிபுரிந்தார். இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்று இருபது ஆண்டுகள் ஆகின்றன. தற்பொழுது பெங்களூரில் வாழும் டி.வி.ஜெகதீசனுடன் ஒரு நேர்காணல்:
சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் பி.டி. கத்திரிகாய் பற்றி நடத்திய கருத்து கேட்கும் கூட்டத்தில் இந்திய அரசின் நிர்வாகம், அதன் ஒப்புதல் வழங்கும் முறைகளைப் பற்றியும் கருத்து கூறி இருக்கிறீர்கள். அதைப் பற்றி விளக்கமாகக் கூறமுடியுமா? நீங்கள் மான்சாண்டோ இந்தியாவின் தலைவராக இருந்தபொழுது எந்த பொருள்களுக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது?
நான் பணிபுரிந்தபோது பல களை எதிர்ப்பு விதைகளை இந்தியாவில் கொண்டு வந்தோம். இதற்கெல்லாம் அந்த விதைப் பற்றிய வேதியியல் தரவுகளை மத்திய பூச்சிக்கொல்லிகள் அமைப்புக்கு நாங்கள் தரவேண்டும். அதை வைத்துதான் அவர்கள் ஒப்புதல் அளிப்பார்கள். இந்தியாவில் உள்ள இது போன்ற அரசு அமைப்பிடமோ, இது போன்ற சோதனைகளை மேற்கொள்வதற்கான கருவிகளோ, நேரமோ இல்லை என்பதால், நாங்கள் கொடுக்கும் தரவுகளை மட்டும் வைத்துக் கொண்டே அந்த விதைக்கோ அல்லது பூச்சிக்கொல்லிக்கோ ஒப்புதல் அளிக்கின்றனர். இந்த காரணத்தினால் எங்களைப் போன்ற நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் பற்றிய நல்லதொரு சோதனை அறிக்கையையே கொடுக்கின்றனர்.
பி.டி. கத்திரிகாய் போன்ற பொருள்களை நீண்ட கால சோதனைக்கு உட்படுத்திய பின்னரே அதை அனுமதிக்கவேண்டும். இப்பொழுது பி.டி. கத்திரிகாயை கொண்டு வருவதற்கு எந்தவொரு அவசர தேவையும் இல்லை.
மான்சான்டோவின் நிர்வாக பண்பாடு எவ்வாறு இருக்கும்? நீங்கள் உங்கள் பொருள்களை சோதனை செய்வீர்களா?
ஆம், பூச்சிக்கொல்லிகளைப் பொருத்த வரை எங்கள் ஆய்வகங்களில் நாங்கள் சோதனைகளை செய்தோம். ஆனால் சில முறை எங்கள் நிறுவனம் மற்ற நாடுகளில் தயாரித்த ஆய்வறிக்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு, அதை இங்கு அரசிடம் கொடுத்து ஒப்புதல்களைப் பெற்றுள்ளோம். ஏனென்றால் எங்கள் ஆய்வறிக்கைகளை அவர்களால் முழுமையான பரிசீலினைக்கு உட்படுத்தமுடியாது என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
அப்படியானால் நீங்கள் தலைமை பொறுப்பு வகித்த நேரங்களில் சில ஆய்வறிக்கைகளில் சரியானவற்றை கொடுக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கின்றீர்களா?
எனது பிராந்தியத்திற்குள் அவ்வாறு நடக்கவில்லை. ஆனால் எந்த ஒரு நிர்வாகமும் தான் தயாரித்த பொருளைப் பற்றிய தவறான அறிக்கையை கொடுக்காது என்பதை மட்டும் உறுதியாகக் கூறுகிறேன்.
பி.டி. பருத்தி நீங்கள் பொறுப்பு வகித்த நேரத்தில் உருவானது தானே? அது சார்ந்து உங்களுக்கு மாற்று கருத்து உண்டா?
நான் அமெரிக்காவின் செயிண்ட் லூயிசில் பணியாற்றியபோது பி.டி. பருத்தி அங்கு உருவாக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் அது அறிமுகப்படுத்தப்பட்டபோது நான் பணியில் இல்லை. அதனால் எனக்கு அதைப் பற்றி முழுமையாகத் தெரியாது. சில விவாசாயிகள் இரண்டு மடங்கு பி.டி. பருத்தியை அறுவடை செய்தார்கள், மற்றவர்களின் அறுவடை மிகவும் குறைந்து போனதால் தற்கொலை செய்து கொண்டார்கள். அதன் வர்த்தக அறிமுகத்துக்கு பின்னர் அது தோல்வியை தழுவியது. குறிப்பாக 2002 அறுவடை மிகவும் குறைந்தது. நாங்கள் தவறான பருத்தி விதையை தேர்வு எய்து விட்டோம் என்று விவசாயிகள் அப்போது கூறினர்.
பி.டி. பருத்தி விதைகளை ஒவ்வொரு விதைப்புக்கும் புதிதாக வாங்க வேண்டும் என்று ஒரு கருத்துள்ளதே?
ஆம். அவை மலட்டு தன்மையுள்ள ஜீன்களை கொண்ட விதைகள். இந்த வகை விதைகளை ஒரு விதைப்புக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். பி.டி. பருத்தி விதைகளை ஒவ்வொரு விதைப்பின்போதும் மான்சாண்டோவிடம் விவசாயிகள் வாங்கித்தான் ஆக வேண்டும். அதுவும் முன்பைவிட சற்று கூடுதல் விலையில்.
இதுபோன்ற கேள்விகளை உங்கள் நிர்வாகத்திடம் நீங்கள் கேட்டது இல்லையா?
நான் சகபணியாளர்களிடம் பேசியபோது, மலட்டுத் தன்மை வாய்ந்த ஜீன் பற்றி கூறினார்கள். மான்சாண்டோவின் பி.டி. பருத்தி விதைகளை இப்பொழுது 63 நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. அவர்களிடம் இருந்து மான்சாண்டோ காப்பு தொகையை பெற்றுக்கொள்கின்றது.
மான்சாண்டோ பூச்சிக்கொல்லிகளையும். பூச்சிக்கொல்லிகளைத் தடுக்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகளையும் உற்பத்தி செய்கின்றது, இது மிகப்பெரிய முரண்பாடாக உள்ளதே?
மான்சாண்டோ முதலில் பூச்சிக்கொல்லிகளை அறிமுகம் செய்தது. ஆனால் அவை பூச்சிகளுடன் சேர்த்து சோயா பீனின் விதையையும் அழித்துவிட்டன. அதனால் பூச்சிக்கொல்லிகளுக்கு தாக்குபிடிக்கும் மரபணு மாற்றப்பட்ட சோயா பீனின் விதையையும் உற்பத்தி செய்தது. முதலில் பூச்சிக்கொல்லி மூலம் விதையை அழித்து, பின்னர் பூச்சிக்கொல்லிக்கு தாக்குப்பிடிக்கும் விதைகளை உருவாக்குவதால் மான்சாண்டோவுக்கு இரட்டை வசூல் கிடைக்கின்றது.
அரசின் தவறான அனுமதி அளிக்கும் முறையை தவிர்த்து பி.டி.கத்திரிகாய் சார்ந்து உங்களுக்கு வேறு என்ன முரண்பாடு?
நிறைய முரண்கள் உள்ளன. முதலாவதாக, நம்மிடம் உள்ள பல்வேறுபட்ட விதைகள் அழிந்துவிடும். இந்தியாவில் ஏற்கனவே 2400 வகை கத்திரி வதைகள் உள்ளன. கத்திரி ஒரு மகரந்த வகை விவசாய முறையைச் சார்ந்தது. நீங்கள் பி.டி.கத்திரியை உங்களது நிலத்தில் பயிரிடும்போது அதன் மகரந்த துகள்கள் காற்றின் மூலமாகவோ அல்லது பறவை, பூச்சிகள் மூலமாகவோ மற்றொரு நிலத்தில் விதைக்கப்பட்டுள்ள விதைகளையும் பாதித்து மாற்றும் தன்மைகொண்டது. இதற்கு உதாரணமாக, கனடாவில் ஒரு விவசாயியின் மேல் மான்சாண்டோ தொடுத்த வழக்கே போதுமானது. தங்கள் அனுமதி இல்லாமல் கனடாவில் பலர் பி.டி. விதைகளை பயன்படுத்துகின்றனர் என்பதே அந்த வழக்கு. இதற்காக நாம் காற்றையும் பூச்சியனங்களையும் குற்றம் சுமத்தமுடியாது. அதே போல இங்கும் நடக்கலாம்.
அப்படியானால் அரசிடம் சரியான சோதனை முறைகளும், ஒப்புதல் வழங்கும் முன் செய்யப்பட வேண்டியவற்றை சரியான முறையும் இல்லை என்கிறீர்களா?
ஆம், இது போன்ற விதைகளை நீண்டகால சோதனக்கு உட்படுத்தி, அதன் முடிவுகள் அனைத்தும் சரியாக வந்த பின்னரே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிருக்கு அனுமதி வழங்கவேண்டும். ஏனெனில், இவையெல்லாம் மலட்டுத் தன்மையுள்ள ஜீனை கொண்ட விதைகள். அதே மலட்டுத்தன்மை அதை உண்ணும் மனிதனுக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
உங்களைப் பொருத்தவரை பி.டி. கத்திரிக்கு ஏதேனும் தேவை உள்ளதா?
எனக்கு பி.டி. கத்திரியின் அறிமுகமே ஐயத்தை எழுப்புகிறது. பிரதமருக்கு ஆலோசனை வழங்கக் கூடிய அறிவுசார் குழுவில் மூன்று நிரந்தர நிறுவனங்கள் உள்ளன. அவைகளில் மான்சாண்டோவும், டவ் வேதியியல் பொருட்களை தயாரிக்கும் நிறுவனமும் (போபால் விபத்துக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியுள்ளது டவ்) உள்ளன. இயல்பாகவே அவர்கள் தங்களது பொருட்களை வெளியிடுவதற்கு அழுத்ததை கொடுப்பார்கள். பி.டி. கத்திரி என்பது வெறும் அறிமுகம் மட்டுமே. இன்னும் பி.டி. அரிசி, கோதுமை, உருளைகிழங்கு போன்ற எல்லாமே உள்ளன. ஹிலாரி கிளிண்டனின் சமீபத்திய வருகைகூட இந்தியாவின் விவசாயத்தை அமெரிக்காவின் விருப்பத் தெரிவாக மாற்றுவது என்ற முக்கிய கொள்கையை கொண்டதே (ஹிலாரிக்கு மரபணு மாற்றப்பட்ட விதைகள் ஏற்படுத்தும் பாதிப்பை பற்றி ஒன்றும் தெரியாது, ஏனென்றால் அவருக்கு இதைப் பற்றி அறிவுரை சொல்பவர்கள்கூட மான்சாண்டோவில் வேலை பார்க்கும் அறிவியலாலர்களே).
மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலமாக தற்போதைய உணவுத் தேவையை ஈடுகட்டவிட முடியும் என்று கூறுகிறார்களே?
இரண்டு தலைமுறைக்கு முன் பசுமைப்புரட்சி கொண்டு வரப்பட்டபோதுகூட அவர்கள் இதைத்தான் சொன்னார்கள். அப்பொழுது பசுமை புரட்சியை வானளாவ பாராட்டியவர்கள்கூட இன்று அதன் தோல்வியை ஒப்புக்கொள்கின்றனர்.
நீங்கள் ஏன் இப்பொழுது மட்டும் பேசுகிறீர்கள்? முன்னரே ஏன் பேசவில்லை?
எனக்கு இதுவரை அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்பொழுது அரசு மக்களின் கருத்தைக் கேட்க ஆரம்பித்திருப்பதால் நானும் எனது கருத்தை வெளியிடுகிறேன்.
நன்றி: தெகல்கா வார இதழ்