குஷ்வந்த் சிங் 60 ஆண்டுகளுக்கு முன் எழுதி ஆங்கிலத்தில் வெளிவந்த இந்த நாவல் இப்போது தமிழில் வந்துள்ளது. ராமன்ராஜா மொழிபெயர்ப்பில் கிழக்கு பதிப்பகம் இந்நாவலை வெளியிட்டுள்ளது.

நாடு விடுதலை பெற்று, இந்தியா, பாகிஸ்தான் எனப் பிரிந்தபோது வட மாநிலங்களில் பெரும் மதக்கலவரம் ஏற்பட்டது. இந்தியாவிலிருந்து முஸ்லிம்களும், பாகிஸ்தானிலிருந்து இந்துக்களும், சீக்கியர்களும் லட்சக்கணக்கில் அகதிகளாக வந்தனர். கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை எனக் கொடுமைகள் நிகழ்ந்தன. இந்தப் பின்னணியில் உருவானதுதான் இந்த நாவல்.

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மாநிலத்தில் சட்லெஜ் நதிக்கரையில் உள்ள ஒரு சிறிய கிராமம் மானோ மஜோரா. சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமம். இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் வாழும் கிராமம்.

மால்லி என்பவன் தலைமையில் ஒரு திருட்டுக் கும்பல் இந்த கிராமத்து வட்டிக் கடைக்கார இந்துவைக் கொலை செய்து, வீட்டைக் கொள்ளையடிக்கிறது. மதுவும், மாதுவுமாக உள்ள மாஜிஸ்திரேட் ஹீகம்சந்த் அதிகார வர்க்க பிரதிநிதியாக சித்தரிக்கப்பட்டுள்ளார். அன்றைய கொலை, கொள்ளையில் ஈடுபடாத ஜக்காசிங் கைது செய்யப்பட்டு, அதிகார வர்க்கத்தின் சதிக்கு பயன்படுகிறான். இக்பால் என்ற இளைஞன் கம்யூனிஸ்ட் போல் சித்தரிக்கப்படுகிறான். ஆனால் கதையில் முக்கிய பாத்திரம் எதுவும் இல்லை. இந்த கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு மதக் கலவரத்தின் பின்னணியில் அமைதியான கிராமத்தில் மதக் கலவரம் எப்படி தூண்டப்படுகிறது என்பதை நாவல் விவரிக்கிறது.

முஸ்லிம்கள் ஊரை விட்டு வெளியேறும் போது சீக்கிய பெண்களும் குழந்தைகளும் பகிர்ந்து கொள்ளும் அன்பு மனிதநேயத்திற்கு சிறந்த உதாரணம். இறுதியில் விடுதலை செய்யப்பட்ட ஜக்காசிங், முஸ்லிம் அகதிகளை ஏற்றிக் கொண்டு பாகிஸ்தான் போகும் ரயில் சதியில் சிக்கி கவிழாமல் தடுக்கிறான். அந்த முயற்சியில் தன் உயிரையே இழக்கிறான்.மதவெறி தூண்டப்பட்டு இந்த அமைதியான கிராமம் மோதல் களமாக மாறுவதையும் இதற்கு பின்னணியாக அதிகார வர்க்கமும், மதவெறியும் கைகோர்த்து நிற்பதையும் இந்நாவல் விவரிக்கிறது.

பாகிஸ்தானில் இருந்து வரும் ரயிலில் இந்துக்கள், சீக்கியர்களின் பிணம் வருகிறது. பதிலுக்கு பாகிஸ்தான் போகும் ரயிலில் முஸ்லிம் பிணங்கள் அனுப்பப்படுகிறது. மானோ மஜோரா ரயில்நிலையம்தான் எல்லையில் உள்ளது. இந்த ரயில்கள் சந்திக்கும் இடமாக உள்ளது. இந்தக் காட்சிகளைப் பார்த்து அப்பாவி மக்கள் துடிப்பது படிப்பவர்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த மதக் கலவரக் காட்சிகளை குஷ்வந்த் சிங் அழுத்தமாக விவரித்துள்ளார்.

இதிலிருந்து உரிய பாடம் பெற்று, மக்கள் ஒற்றுமையை காக்க வேண்டிய கடமை இன்று நம்முன் உள்ளது. இந்திய வரலாற்றில் ஆழமான வடுவாக பதிந்துவிட்ட இந்த வரலாற்றுச் சம்பவங்களை 60 ஆண்டுகள் கழித்து ஒரு நாவலாகப் படித்தாலும் நம் மனம் பதைக்கிறது; துடிக்கிறது. என்ன விலை கொடுத்தும் மதவெறி சக்திகளை வளரவிட மாட்டோம் எனச் சபதமேற்கத் தூண்டுகிறது.

- வெ.சுந்தரம்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

177/103, முதல் தளம்

அம்பான்ஸ் பில்டிங்

லாயிட்ஸ் ரோடு

ராயப்பேட்டை

சென்னை-600014.

விலை ரூ.200/-

Pin It