மாற்றத்தை நோக்கும் எழுத்தாளர்கள்

தனி மனித அனுபவங்களோடு இன்றைய சமூகச் சூழல்கள், பிரச்சனைகள், தீண்டாமை, சாதி - மத ஒடுக்குமுறைகள், ஏழைகளைச் சுரண்டிக் கொள்ளையடித்தல் போன்றவற்றை முற்போக்கு எழுத்தாளர்கள் எழுதி வருகிறார்கள். இந்த எழுத்துக்கள் மாற்றங்களை நோக்கிப் பயணிக்க வேண்டியுள்ளது. மற்றொரு புறம் பெருமளவு சந்தைப்படுத்தும் நோக்குடன் எழுதுவோரே அதிகமாய் இருக்கிறார்கள்.

இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மண்ட்டோ, பிரேம்சந்த், கிஷன் சந்தர், ராஜேந்தர்சிங் பேடி, இஸ்மத் சுக்தாய், பிஷம் சகானி, பிராக் கோரக்பூரி போன்ற எழுத்தாளர்கள் காலனி ஆட்சியை எதிர்த்தும், அக்கால வாழ்வு குறித்தும் எழுதினர். இவை வாசகர்களை மகிழ்விப்பதை விட மாற்றம் குறித்தே வலியுறுத்தின. மாற்றம் என்பது ஏகாதிபத்திய ஆட்சியை மாற்றுவதே லட்சியமாக இருந்தது. அவர்களின் கதாநாயகர்கள் கவர்ச்சிமிக்க மேட்டுக்குடி ஆட்களாக இல்லாமல் வாசகர்களின் அனுதாபத்தைப் பெறும் விதத்தில் இருந்தனர். அவர்களது அவல வாழ்வுக்குக் காரணமானவர்கள் மீது ஆத்திரம் கொப்பளித்தது.

அன்றைய எழுத்தாளர்கள் வாழ்க்கையின் மெய்யான எதார்த்தக் கதைகளையே எழுதினர். அவை வாழ்வின் உண்மைகளைப் பிரதிபலித்தமையால் பெரும்பான்மையான வாசகர்களைச் சென்றடைந்தது. அவை வாசகர்களின் சிந்தனைகளைத் தூண்டின. மாற்றத்திற்காக ஏதேனும் செய்தாக வேண்டும் என்று ஊக்குவித்தன. அவர்கள் தங்களுக்காக எழுதாமல் அடிப்படையான நாட்டின் பிரச்சனைகளுக்காக எழுதினர். எழுத்தாளர்களிடம் இன்றுள்ள வணிகச் சிந்தனைகள் அன்று இல்லை. அவர்கள் நாவலாசிரியர்களானாலும் கவிஞர்களானாலும் தங்கள் சொந்த ஆதாயத்துக்காக எதையும் எழுதவில்லை. இந்திய அறிவு ஜீவிகள் அவைகளை வாசித்து அரசியல் களத்தில் இறங்கினர். 1930 ம் ஆண்டுகளில் இந்திய இலக்கிய பாரம்பரியம் தொடர்ந்தது.

அதுவரை இந்திய இலக்கியங்கள் பெரும்பாலும் வெளிநாட்டுக்காரர்களின் பயணநூல்கள், அரசர்களின் பெருமைகள் பற்றியவையாகவே இருந்தன. எனினும் சில எழுத்தாளர்கள் நடப்பு விசயங்களைப் பற்றி எழுதத் துவங்கினர். அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்திருந்தனர். இந்த அமைப்பு 1936 முதல் 1940 வரை உச்சத்திலிருந்தது. புரட்சிகர சிந்தனைகள், சோசலிசப் பார்வை கொண்டவர்களாக இந்த எழுத்தாளர்கள் இருந்ததால், இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி அவர்களை ஆதரித்தது. குறிப்பாக கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பி.சி.ஜோசி,  அவர்களை ஒருங்கிணைத்து இந்தியன் பீப்பிள்ஸ் தியேட்டர் அசோசியேசன் (ஐஞகூஹ) என்ற அமைப்பு உருவாகச் செய்தார். மேலும் நாடு முழுவதும் முற்போக்கு எழுத்தாளர்களை அடிமட்டத்திலிருந்து கொண்டுவந்து அமைப்பை பலப்படுத்தினார்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (ஞறுஹ)

1936ம் ஆண்டு ஏப்ரலில் துவக்கப்பட்டது. 2011ல் அதன் 75வது ஆண்டு துவங்குகிறது. எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், முற்போக்கு நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள அனைவரும் இந்த ஆண்டைக் கொண்டாடி வருகிறார்கள். சமகால இலக்கியத்தை முற்போக்குத் திசையில் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் உலகமயத்திற்குப் பின்பு தோன்றிவரும் "ஆன்மாவற்ற" இலக்கியங்களைக் கடுமையாய் விமர்சனம் செய்கிறார்கள். இக்காலத்தில் பதிப்பகங்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் அறிவை, சிந்தனையைத் தூண்டும் நூல்களைப் பதிப்பிப்பது மிகவும் குறைவாகும்.

அண்மையில் டில்லியில் சப்தர்ஹஸ்மி நினைவு ட்ரஸ்ட் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் எழுத்தாளர்களும் கலைஞர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சமகாலத்திற்கான தலைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. கலந்துகொண்ட எழுத்தாளர்களுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (ஞறுஹ) மற்றும் இந்திய மக்கள் நாடக மன்றத்தின் வழிகாட்டியாய் திகழ்ந்த தத்துவம், வரலாறு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. கம்யூனிஸ்டு கட்சியின் வழிகாட்டுதலில் துவக்கப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முதலில் இந்துஸ்தானி மட்டுமே பேசியது. பின்பு அது மலையாளம், அசாம், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளுக்கும் இந்தியாவின் அனைத்து வட்டார மொழிகளுக்கும் பரவியது.

ஆரம்பநாட்கள்

முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (ஞசுடீழுசுநுளுளுஐஏநு றுசுஐகூநுசுளு ஹளுளுடீஊஐஹகூஐடீசூ) முன்ஷி பிரேம் சந்த் தலைமையில் 75 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. ஆனால் அதற்கான விதை லண்டனில் ஊன்றப்பட்டது. விதை போட்டவர் முல்க்ராஜ் ஆனந்த். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கொள்கை அறிக்கையை அவரே உருவாக்கினார். உருது இலக்கியவாதியான சஜ்ஜத் ஜாகீர், முல்க்ராஜ் ஆனந்துடன் அதில் இணைந்து, அறிக்கை தயாரிப்பில் உதவினார்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதல் மாநாடு 1936 ஏப்ரலில் லக்னெவ் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் வைக்கப்பட்ட அறிக்கை லண்டனிலுள்ள டென்மார்க் தெருவில் நான்கிங் ஓய்வு விடுதியில் விவாதித்து இறுதிப்படுத்தப்பட்டதாக முல்க்ராஜ் ஆனந்த் குறிப்பிட்டுள்ளார். அதே இடத்தில் கட்டுரைகள், கதைகள், கவிதைகள் வாசிக்கப்பட்டு சொற்பொழிவுகளும் நடந்தது. பதினைந்து நாட்களுக்கொரு முறை இந்த இலக்கியச் சந்திப்புகள் நிகழ்ந்ததென்றும் அவர் கூறியுள்ளார். லக்னெவ் மாநாடு முடிந்தபின் இந்தியாவின் இதர மொழிபேசும் மாநிலங்களில் முற்போக்கு எழுத்தாளர் சங்கங்கள் துவக்கப்பட்டு, அவற்றில் அம்மாநிலங்களின் முக்கிய எழுத்தாளர்கள் இணைந்தனர். இந்த அமைப்பு உலகின் மிகப்பெரிய கலாச்சார பாதுகாப்புக் குழுவாக இருந்தது.

மற்றொரு அமைப்பாளரான சஜ்ஜத் ஜாகீர் இதுபற்றி தனது நினைவுக் குறிப்புகளில்-

"பொருளாதார நெருக்கடியின் அரசியல் தாக்கம் 1935ல் உலகைக் குலுக்கியது. ஜெர்மனியில் இட்லரும் அவனது நாஜிக்கட்சியும் ஆட்சியைப் பிடித்தனர். லண்டனிலும், பாரீசிலும் ஜெர்மனியிலிருந்து தப்பிவந்த அகதிகளையும் நாங்கள் அன்றாடம் சந்தித்தோம். ஒவ்வொருவரிடமும் பாசிச அடக்குமுறை பற்றி அறிய முடிந்தது. ஒருகாலத்தில் அறிவுச் செல்வத்தைச் சேர்த்து வைத்திருந்த ஜெர்மனி இன்று அழிவு வேலையைத் துவக்கி ஐரோப்பாவை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஜெர்மனியில் போராடும் ஆலைத் தொழிலாளர்கள் மீதும் இதர உழைப்பாளி மக்கள் மீதும் காட்டுமிராண்டித்தனம் ஏவிவிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதல் மாநாட்டை பிரபல உருது எழுத்தாளர்களும், இலக்கிய மகுடங்களான ரவீந்திரநாத் தாகூர், சரோஜினி நாயுடு, முன்ஷி பிரேம்சந்த் போன்றோர் பெரிதும் வரவேற்றனர். முற்போக்கு எழுத்தாளர்களின் தத்துவம், அரசியல் மற்றும் கடமைகள் பற்றி மாநாட்டில் பிரேம்சந்த் பேசினார்.

"இன்று இலக்கியம் புதியதோர் கடமையை மேற்கொண்டிருக்கிறது. அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட தனிநபர்களையும் குழுக்களையும் மீட்பதற்கு வழக்காடுவது எழுத்தாளர்களின் கடமையாகும். வாதாடுவது மட்டுமல்ல, நீதி வழங்கவும் வேண்டும். கதைகள் மனித உணர்வுகளையும், அவர்களது மனவியல்புகளையும் பிரதிபலிக்க வேண்டும். மனிதர்களின் சிறப்பியல்புகளைப் கதாபாத்திரங்கள் மூலம் எலும்பும் சதையுமாய் இணைக்க வேண்டும். வெறும் கற்பனையாக உருவாக்கப்படும் மனிதர்களை நாம் நம்புவதில்லை. கற்பனை மனிதனால், அவனது சிந்தனையால் நம்மைக் கவர முடியாது. இந்தியாவிலுள்ள அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகளை இந்த மண்ணுக்கேற்ற முறையில் எழுதவும் பேசவும் வேண்டும். மேற்கத்தியக் கட்டுமான முறைகள் நமது இலக்கியத்துக்குப் பயன்படாது" என்றார் பிரேம்சந்த்.

புரட்சிகரத் தீர்மானம்

1930ம் ஆண்டு காலத்தில் அரசியல் சூழலில் எழுத்தாளர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென்று லக்னெவ் மாநாடு வலியுறுத்தியது. மு.எ.ச.வை நிலைநிறுத்தவும், வளர்க்கவும் இந்தியாவின் அனைத்து  மொழி எழுத்தாளர்களையும் ஒன்றுதிரட்ட வேண்டும். இவர்களுக்குள் இணைப்பை ஏற்படுத்த வேண்டும். இலக்கியங்களை வெளியிடுவது, மாநாடுகள் நடத்துவது, மத்திய அமைப்புடன் ஒருங்கிணைந்து செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டது. மாநாடு வரையறுத்த கோட்பாடுகளை மீறி, அடிப்படைக் குறிக்கோள்களுக்கு எதிராக எழுதிடக்கூடாது. இலக்கியங்களைப் படைப்பது, மொழியாக்கத்தில் ஈடுபடுவது, முற்போக்காக இயங்குவது, கலாச்சாரப் பிற்போக்குத்தனங்களை எதிர்த்துப் போராடுவது அவசியமாகும். இந்தியாவின் சுதந்திரம், சமூகப் புனரமைப்பு, முற்போக்கு ஆசிரியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது போன்றவை முக்கியமாகும். மேலும் கருத்து மற்றும் எழுத்துச் சுதந்திரத்திற்காகவும் போராட வேண்டும் என்று மாநாடு வலியுறுத்தியது.

விடுதலைக்குப் பின்பும், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்பும் மு.எ.ச.வும் இப்டாவும் பலவீனமடைந்தது. பலவிதமான கருத்து வேறுபாடுகளால் பிரிந்து சென்றாலும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் சங்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து விலகாமல் எழுதினர். அவை மக்களுக்கு ஆதரவான இலக்கியங்களாகவே வெளிப்பட்டன.

அண்மைக்காலமாக தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் முற்போக்கு எழுத்தாளர் சங்கங்கள் பழைய பாரம்பரியத்தின் அடிப்படையில் இயங்கி வருகின்றன. இந்தியிலும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆந்திராவிலும் பல கலைக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டலில் இயங்கிவருகின்றன. சப்தர் ஹஸ்மி உருவாக்கிய ஜனநாட்டிய மஞ்ச் சிறந்த குழுவாக இயங்கி வருகிறது. அவரது மறைவுக்குப் பின்அவரது துணைவியார் மாலாஸ்ரீ ஹஸ்மி மக்கள் மத்தியில் நாடகங்களை சிறப்புற நடத்தி வருகிறார். தமிழகத்திலும் எழுத்தாளர்களோடு நாடகக் குழுக்களும் கலைக்குழுக்களும் இயங்கி வருகின்றன. இவை இன்னும் அதிக அளவில் பரவ வேண்டியுள்ளது.

இன்றைய காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை, முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவச் சுரண்டல், ஆட்சியாளரின் ஊழல் - அராஜகம் - அட்டூழியங்களுக்கு எதிராக எழுத்தாளர்கள் தங்கள் பேனாவைத் தீட்ட வேண்டியுள்ளது.

ரஷ்யப் புரட்சி உட்பட உலகின் புரட்சிகளில் கலை இலக்கியவாதிகள் பெரும் பங்காற்றியுள்ளனர். இன்றைய உலகமய காலத்தில் ஏழை - பணக்காரன் முரண் தீவிரமடைகிறது. ஏழைகள் மிகவும் ஏழைகளாக மாறுவதும் முதலாளிகள் பெரும் முதலாளிகளாக மாறுவதும் வேகமடைந்து வருகிறது. தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகள், மதவெறி சக்திகளை எதிர்த்த போராட்டம் தொடரப்பட வேண்டியுள்ளது. இடதுசாரிக் கட்சிகள் கலை இலக்கியம் மூலம் மக்களிடம் தங்கள் கருத்துக்களை நெருக்கமாக எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. மேலும் இந்திய சமூகத்தில் நெடுங்காலமாய் நிலவும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போரையும் தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது. இந்திய சமூகத்தின் நீண்டகால நிரந்தரப் பிரச்சனைகளுக்காகவும், வறுமை, வேலையின்மை, பெண்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராகவும் செயல்பட வேண்டியுள்ளது. இடதுசாரி இயக்கங்களுக்குப் பெரும் உத்வேகமளிக்க வேண்டியுள்ளது. இதற்கு நவீனத் தொழில் நுட்பங்களையும், கருவிகளையும் கூடக் கையாள வேண்டியுள்ளது.

கலை இலக்கியவாதிகளின் இந்தப் போர் நிரந்தரமானது. இன்றைய சமூக அமைப்பைப் புரட்டிப் போடும் வரை இந்தப்போர் ஓயாது. 75 ஆண்டுகளுக்கு முன்பு உருவான மு.எ.ச. இப்டாவின் பாரம்பரியங்களைச் சுவீகரித்து மக்களுக்கான படைப்புகளை உருவாக்க வேண்டிய கடமை எழுத்தாளர்களுக்கு உள்ளது.

ஆதாரம்: 'பிரன்ட் லைன்' (டிசம்பர் 30)

அஜாய் ஆசீர்வாத் மகா பிரகஸ்தா கட்டுரை

Pin It