மார்கழியின் அதிகாலையில்
ஆண்டாளின் பாசுரம்
பதியப்பட்ட "மெமரி கார்டுகள்'
ஒலிக்கிறது தெருவெங்கும்

பேஸ்ட்டைப் போல்
பிதுக்கினால் வெளியேறும்
நவீன கோலப்பொடிகள்
அலங்கரிக்கும் வாசல்களை.

செயற்கைப் பூசணிப்பூக்களை
ஏற்றுக்கொண்ட
சாணப்பிள்ளையார்கள்
அருள் பாலிக்க...

ஏழு வருட உத்தரவாதத்தோடு
கணினியின் உதவியுடன்
கலக்கப்பட்ட வண்ணங்களை
புத்தம் ... புதிதாக ... உள்வாங்கும்
வீட்டுச் சுவர்கள்.

பழையன எரிக்கும் போகியை
பொங்கி வரும் புத்தம் புது
பொங்கல் பானையை...
'கரும்பு கசக்கும்... வெல்லம் துவர்க்கும்'
வாதப்பிரதிவாதங்களை
'டமிழர்களுக்கு' வாழ்த்து தரும்
வசீகரப் புன்னகையை...

முன்பதிவு செய்து
வீடுகளுக்குள் கொண்டு வரும்
தமிழ் கூறும் நல்லுலக ஊடகங்கள்.

தமிழர்களின் திருநாள்..
விவசாயிகளின் பெருநாள்...
இவ்வாறாக இவ்வாண்டும்
கடக்கலாம்...

பிளாட்டிடப்பட்ட ஆழ்நிலங்களில்...
பயிர் உயிர்கள் புதைத்த
கனவுகளோடும்...
பஞ்சம் வரவேற்கும்
கொடும் யதார்த்தத்தோடும்...

பொங்கலோ பொங்கலென
பொங்கிப் பெருகும்
கொஞ்சம் நம்பிக்கையோடும்.

Pin It