ஏகாலி வந்து கூப்பிடும்போது வீட்டில் ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தான் சந்திரன். வளர்மதி கூட மாட ஒத்தாசை பண்ணிக் கொண்டிருந்தாள். ஓட்டு வீடு அது... சீமை ஓடு... ஓட்டைப் பற்றுக்கோடாய் வைத்து தனது இழைவலைகளைப் பின்னிருந்தன சிலந்திகள். வீட்டுக்குள் வீடு கட்டியிருந்தன. சில இடங்களில் படை படையாய் நூலாம் படைகள்... சில இடங்களில் சிக்கு நூலைப் போல தொங்கியபடி இருந்தன. அந்துப்பூச்சிகள் ஓடுகளிடையே புகுந்து கொண்டு துடைப்பதற்கு அகப்படாமல் ஒலிப்பான் காட்டின. எட்டுக்கால் சிலந்திகள் அடிபட்டு விழுந்தன. துடைப்பக்கட்டையால் மொத்து மொத்தென்று மொத்தினாள் வளர்மதி. இந்த வீட்டைத்தான் சுத்தப்படுத்த வேண்டுமென்று எத்தனை நாளாய் நினைத்த நினைப்பு... இன்று தான் கைகூடி இருக்கிறது. கோடை எரிவெயிலின் தீட்சண்யம் உடம்பை கசகசக்க வைத்திடினும் முற்றத்து வேப்பம் சாமரம் வீசி வீசி கனலை ஆற்றியது. ஊர் முழுக்க வெய்யில். வானம் நெற்றிக்கண்ணைத் திறந்துவிட்ட மாதிரி... உஸ், உஸ் என்று அவஸ்தைப் பெருமூச்சுகள் ஊரெங்கும் கேட்டபடி... ஊர் அல்ல காலனி. பறைச்சேரி என்ற பழைய பெயர் துறந்து காலனி என்ற கௌரவப் பெயர் கொண்ட புதுக்காலனி எங்கும் கேட்டபடி மூச்சுகள்.. பெருமூச்சுகள்.. வெய்யிலுக்கும், மழைக்கும், வறுமைக்கும் பசிக்குமான பெருமூச்சுகள்..

அந்த மாதிரி வகைப் பெருமூச்சு ஒன்றை விட்டபடி சைக்கிளில் வந்து பெல்லடித்தான்...

"நீதாப்பா... சந்திரா, இன்னிக்கி சாயங்காலம் பள்ளிக்குடத்தாண்ட ஊர் கூடப்போவுது. உன்ன வரச் சொல்லியிருக்காங்க... வர்றியாப்பா..."

அந்த ஏகாலி போன தலைமுறைக்காரன்...இன்னும் ஊர் என்றும் கட்டுமானம் என்றும் தன்னை கட்டுக்குள் வைத்திருப்பவன். இன்னும் சொன்னால் பறைச்சேரி என்னும் காலனிக்குள் உள்நுழைவதே கேவலம் என்று நினைப்பவன்... தான் ஏதோ வானத்து சாதி போலவும் காலனிக்காரர்கள் சாக்கடை இனம் போலவும் இன்னமும் நினைத்துக் கொண்டிருப்பவன்... இன்னும் கூட ஊர்க்காரர்களின் துணியை வெளுத்துக் கொண்டு கல்லாற்றங்கரையில் கழுதை மாதிரி அலைந்து கொண்டிருப்பவன்... வண்ணார்கள் நிறையபேர் படித்து வேலைக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். சிலர் லாண்டரி கடை வைத்து ஒரு துணிக்கு ஒண்ணரை ரூபாய் வாங்கி கறாராகப் பிழைத்துக் கொண்டிருந்தார்கள்... யாரையும் முன்மாதிரி ராத்திரி சோறு போடறேன். பதிலா ஊர் துணி துவைச்சி போடு என்று ஏமாற்ற முடியாது. போன நூற்றாண்டுக் கட்டுமானத்தை இப்போது கொண்டு வர முடியாது... இது இருபத்தி ஓராம் நூற்றாண்டு ஆனாலும் இந்த ஏகாலி மட்டும் இன்னும் ஊர்த்தொழிலாளியாகவே, எடுப்புச் சோறாகவே வாழ்ந்து வந்தான். இருபதாம் நூற்றாண்டை விட்டு வலுக்கட்டாயமாக வர மறுத்துக் கொண்டு வாழ்பவன். படிப்பு வாசனை முகராதவன்... கலியடா.. கலி.. கலிகாலம்.. பறப்பசங்களுக்கு வந்த வாழ்வு பாரடா... என்று முதுகுக்குப் பின்னால் புலம்பிக் கொண்டிருப்பவன்..

சந்திரன் வளர்மதியை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு கேட்டான்.

இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே தெரு நாய் ஒன்று மெதுவாய் ஓடி அந்த மின் கம்பத்தில் காலைக் தூக்கி சிறுநீர் கழித்தது..

அந்தத் தெருநாயை அதன் சேட்டையை நோக்கியபடியே ஏகாலி.. "ஏம்பா...உனக்குத் தெரியாதா ஏன் ஊரக்கூட்டுறாங்கன்னு? பிரச்சனையைப் பேசி தீர்த்துகலாம்பா... "

நம்ம தலைவரும் கவுன்சிலரும்தான் ஊரைக் கூட்டுனாங்க. .. வாப்பா.. வந்து சுமூகமாக பேசி தீர்த்திடலாம்.

சந்திரன் வளர்மதியைப் பார்த்தான். அவள் "ஏகாலி - நீ போ, சாயந்திரம் ஊர்க்கூட்டத்துக்கு இது வரும்.." என்றாள்.

"யம்மா.. உன்னையும் கூப்படிறாங்கம்மா.. பிரச்சனைல சம்பந்தப்பட்டது நீ தானே..?"

சந்திரன் வெடித்தான் "பிரச்சனைதான் போலீஸாருக்கு போயிருச்சே.. அப்புறம் இன்னாத்துக்கு பஞ்சாயத்து?"

ஏகாலி பின் வாங்கினான். "என்னவோபா.. சொல்லச் சொன்னாங்க.. சொல்லிடேன்.." என்று சைக்கிள் மிதித்துக் கொண்டு புறமுதுகு காட்டினான்."

"வளரு.. இப்ப என்ன செய்லாண்டி..?

"போய்த்தான் பார்ப்பமே... என்னதான் சொல்றாங்கன்னுட்டு.."

இதோ பாரும்மே.. விசயம் மேல போயிருச்சி.. இனி எவனும் ஒண்ணும் பண்ண முடியாதும்மே.. நீ எதுக்கும் பயப்படாத.."

"பயமா.. எனக்காடி.. அடி போடி இவளே.." என்று பரிகாசமாச் சிரித்தான்.


அந்த தொடக்கப்பள்ளி வராண்டாவில் மெல்ல மெல்ல ஊர் கூடிக் கொண்டிருந்தது. ஊரிலிருந்து வந்திருந்த பொண்டு பிள்ளைகள் பள்ளி மைதான வேப்பமர நிழலில் கருங்காலி நாற்காலிகளில் (பள்ளிக்கூடத்து நாற்காலிகள் அவை) ஊர்த்தலைவரும் கவுன்சிலரும் அமர்ந்திருந்தனர். இன்னொரு நாற்காலி காலியாய் இருந்தது... அது சேர்மேனுக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலி. இன்னும் அவர் வரவில்லை.

நடந்துவிட்ட சம்பவங்களை குசுகுசுவென பேசிக்கொண்டே மணலைக் குச்சிவைத்து கீறிக் கொண்டிந்தார்கள் ஊர் மக்கள்.

இன்னும் காலனிக்காரர்கள் வரவில்லை..

"இன்னா அநியாயம் பாத்தியா... காலம் அப்படி.. கவுருமென்ட்டுதான் ஒரே சலுகையான சலுகை குடுத்தா அவங்க என்ன பண்ணுவாங்க. தலைக்கு மேல ஏறி ஒக்காந்துட்டாங்க... ம்" என்று இயலாமைக் கோபம் அவர்களை ஆதங்கப்படுத்திக் கொண்டிருந்தது.

"எல்லாம் இந்த அரசியல்வாதிங்க பண்ற வேல... ஓட்டுக்கோசரம் இப்படி பள்ளுப் பறையனை எல்லாம் தலைகால் தெரியாம ஆட வச்சிடானுங்க.." என்று அரசியல் பக்கம் சாய்ந்தார் ஒருவர்.

"இந்த கருணாநிதி வந்துதான் இவங்களுக்கு இவ்ளோ சலுகை கொடுத்து கெடுத்துட்டாரு.." என்று திமுகவைச் சாடியது ஒரு பெரிசு...

"ஏன் ஜெயலலிதா அம்மா மட்டும் குடுக்கலியா? (அவங்களும் தான் நிறைய்ய) அவங்களும் தான் எஸ்.சி.காரங்களுக்கு நிறைய்ய செஞ்சி ஏத்தி வுட்டுடாங்க" என்று பதிலுக்கு பதில்அரசியலைப் பேசியது இன்னொரு பெருசு..

"எவன் வந்தாலும் அப்படித்தான்.. அவங்ககிட்ட தான் ஓட்டு இருக்குதே.." என்று புதிதாய் கண்டுபிடித்த மாதிரி இன்னொன்று பேசியது...

"போற போக்கப்பாத்தா நாமெல்லாம் அவங்களுக்கு கைகட்டி சேவகம் பண்ற நிலைமை வந்தாலும் வரும் போலக் கீது.." என்று வெடித்தது மற்றொன்று..

"டேடேய்.. அடக்கி வாசி.. அதோ அவனுங்க வர்றானுங்க..." என்று எச்சரிக்கை செய்தது ஒரு நடுத்தர வயது..

சந்திரனின் தலைமையில் காலனிக்காரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் வளர்மதியும் வந்தாள்..

ஊர்க்காரர்கள் கோபம் கலந்த பார்வையில் அவர்களை வெறித்தார்கள்.. குறிப்பாய் சந்திரனையும் வளர்மதியையும் நற நற வென்று பார்த்தார்கள்.

நேராய் தலைவர் பக்கம் போய் "தலைவரே...கூட்டுனு வரச்சொன்னிங்களாம் என்ன விசயம்...?"

தலைவர் நடுத்தர வயதுக்காரர்.. வழுக்கையாய் நெற்றியோடு ஒன்றிய தலை.. சிவப்பு உடம்பு... வெள்ளைக் கதர் வேட்டி சட்டை...

'வா.. சந்திரா.. உட்காரு.. தோ... நம்ம சேர்மன் வந்துடட்டும், பேசலாம்."


"சீக்கிரம் ஆரம்பிங்க. எங்களுக்கு வேலை இருக்குது.." என்று சீறினான் பாஸ்கரு...

"எல்லாம் நேரன்டா... உங்ககிட்ட நாங்க கொஞ்சற நெலமை.."என்று உள்ளுக்குள் நொந்து கொண்டார் தலைவர்.

சிறிய நேரம் கனத்த மௌனம் பேசியது...அந்த மௌனத்தின் குசுகுசுப்பில் ஒரு கொதிக்காற்று உஸ்ஸென்று வீசிவிட்டுக் கடந்தது.

கவுன்சிலர் சட்டை பட்டன்களைத் திறந்துவிட்டுக் கொண்டார்.. அவரது சிவந்த முடிநிறைந்த மார்பில் வியர்வை கொடி... கொடியாய் கீழிறங்கி ஓடிக் கொண்டிருந்தது.

பாஸ்கரு வெடித்தான் "முதலியாரே..இந்த மாதிரி குத்தற பேச்செல்லாம் வேணாம்... எதுக்கு வந்தியோ அத மட்டும் பேசு.."

"நான் இன்னடா தப்பா பேசிட்டேன். இந்த குதிகுதிக்கிற.." என்று அந்த முதலியார் எகிறினார்..

பதிலுக்கு காலனிக்காரர்களும் எகிற, ஊர்க்காரர்கள் குதி குதியென்ற குதிக்க சற்று நேரத்திற்கு முன்னிருந்த மௌனம் அவர்களைத் தள்ளிவைத்துவிட்டு ஓடியது.

பிரச்சனை ரசபாசமாகிவிடப் போகிறதே என்ற கவலையில் தலைவர் அவர்களைச் சமாதானம் செய்ய எவ்வளவோ முயன்றார்.

வள வள வென்ற பேச்சு 'வாதங்களும் எதிர் வாதங்களும்' கை வீச்சுகள்.. மிரட்டல்கள்.. இப்போது கவுன்சிலரும் பயந்தார். எங்கே கை கலப்பு வந்துடுமோ.. அடி, தடி ரத்தக்களரி என்று ஆகிவிடுமோ .. எனவே அவரும் கூடிய மட்டும் அதட்டியும் மிரட்டியும் கெஞ்சியும் எவ்வளலோ கூத்தாடினார். கூட்டத்தை அமைதிப்படுத்த முயன்றார்.

அதற்குள் அங்கு அரசாங்கம் அளித்த சுமோ ஜீப்பில் சேர்மன் ஓடிவர.. அவரது வாகனத்தைக் கண்டு இரு தரப்பாரும் அமைதியடைந்தனர்.

ஜீப்பை விட்டு கீழிறிங்கினார் சேர்மன். .. இளைய வயது தான் ஆயினும் அனுபவம் வாய்ந்தவராகத் தோன்றினார். அவருடன் கதர்சட்டை வேட்டியில் பளிச்சென்று வெள்ளைத்தோலுடன்... எல்லாரும் வணங்கினார்கள்.

நாற்காலியைத் துடைத்து அந்த தெய்வத்தை அமரச் செய்தனர்.

தலைவரைப் பார்த்து சேர்மேன் கேட்டார்:

"என்னப்பா, இப்ப சொல்லு உங்க ஊர் பிரச்சனை இன்னாயின்னுட்டு.."

"நம்ம நல்லாமூர்காரர் பையன் மூர்த்தியில்ல. நம்ம ஊர்ல ரேசன் கடைல வேலை செய்யறான்."

"சரி..."

"தோ.. இவரு சந்திரன்... இவரோடு சம்சாரம் ரேசன் வாங்க கடைக்கு போயிருக்குது. அரிசி சக்கரை எல்லாம் வாங்கியிருக்குது. பருப்பு கேட்டதுக்கு ஸ்டாக் தீந்து போச்சின்னு சொல்லியிருக்கிறான்..."

"சரி.."

"அதெப்படி.. சென்னையில எல்லாம் எப்பக்கேட்டாலும் பருப்பு குடுக்கிறான். .. நீ ஒரே ஒரு நாள் குடுத்துட்டு இல்லைன்றியேன்னு கேட்டுச்சான். அதோட, பிளாக்கில பருப்பு விக்கிறன்னு சொல்லி அபாண்டமா பேசுச்சாம்... அதுக்கு மூர்த்தியும் அடக்கமாகவே பதில் சொல்லி இருக்கிறான். எப்படியோ வார்த்தை முத்திப் போச்சு. இந்தம்மா.. ஏன் இந்த நாய்ப்பொழைப்பு அப்படின்னு கேட்டிருக்குது. கேக்கலாமா...? ஒரு ஆம்பிளையைப் பார்த்து கேக்கலாமா..?"

காலனிக்காரர்கள் இடையே சலசலப்பு ஆவேசம்.

சந்திரன் அடக்கினான்..."சரி மேல என்ன நடந்தது சொல்லு தலைவரே.."

தலைவர் தடுமாறினார்.

"அ.. அது.."

சேர்மேன் அதட்டினார். "மேல சொல்லுங்க... எதுவா இருந்தாலும் யார் மேல தப்புன்னாலும் தைரியமா சொல்லுங்க.. நாமெல்லாம் மக்கள் பிரதிநிதிங்க. பொதுவாத்தான் இருக்கணும் சொல்லுங்க.."

தன்னை நாய்ப் பொழைப்பு பொழைக்கிறவன்னு ஒரு காலனிக்காரப் பொம்பளை சொல்லிட்டாளேன்னு அந்த ஆத்திரத்தில் தவறுதலா பற நாய்க்கு இவ்வளவு கொழுப்பான்னு கேட்டுட்டான். "ம்"

"ஏதோ கோவத்தில் ஒருத்தரை ஒருத்தர் திட்டிக் கிறதுதான். தெரியாத்தனமா ஜாதிப் பேரைச் சொல்லி திட்டிட்டான்.. அதுக்காக அந்தம்மா சென்னையில இருக்கிற தன் பெரியப்பா பையன் மாஜிஸ்திரேட்டாம்... அவனுக்குப் போன் பண்ணி சொல்லியிருக்கு... அவரு அங்கிருந்தே ஹைகோர்ட்ல மனு குடுத்து கேஸ் பைல் பண்ணி மூர்த்தியை அரெஸ்ட் பண்ண லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு பேக்ஸ் அனுப்பியிருக்காங்க... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உள்ள தள்ள அரெஸ்ட் வாரண்ட் வந்திருக்குது.."

சேர்மேன் சற்று நேரம் கண்மூடி யேசித்தார். சிந்தனையில் ஆயிரம் எண்ணங்கள். ஜாதி... ஏரியா... அரசியல் ஓட்டு தனக்கு எது சாதகம்... தனக்கு எது பாதகம்.. என்றெல்லாம் சிந்தனை செய்தார். அந்த நல்லாமூரார் அவருக்கு வேண்டியவபட்டவர்... காலனிக்காரர்கள் இவ்வளவு துணிச்சலாய்ப் போவார்கள் என்று எண்ணவில்லை. இவர்களைப் பகைத்தால் தனது அரசியல் செல்வாக்கு அஸ்தமனமாகிவிடும்.. அதே சமயம் இவர்கள் இந்த அளவிற்கு மேலே போவது ஊருக்கே - ஏன் சமுதாயத்திற்கே ஆபத்து. அப்புறம் மேல்ஜாதிக்காரன் எவனும் தன்மானத்தோடு உலாத்த முடியாது. .. பக்குவமாய் இந்த விசயத்தை டீல் பண்ணணும்... நைச்சியமாகப் பேசி இவ்விசயத்தை சுமுகம் ஆக்கணும்...

"இப்ப எங்க மூர்த்தி?"

"அவன் குடும்பத்தோட வெளியூர் போயிருக்கான்."

சேர்மேன் சந்திரனைப் பார்த்தார்... "நீ என்னப்பா சொல்றே..?"

'சொல்றதுக்கு என்ன இருக்குதுங்க'. அதான் போலீஸ் கேசாயிடுச்சே... சட்டப்படி நடந்துக்க யாரை ஏமாற்றும் தந்திரம் இது.. "சந்திரன் கேட்கவில்லை மனசுக்குள் நினைத்துக் கொண்டான்.

"ஏங்க... போலீசுக்குப் போகாம அந்தக் காலம் மாதிரி செம்புல தண்ணி குடிக்கிற நாட்டாமை கிட்ட ஆலமரத்தடியில பஞ்சாயத்துல பிராது குடுக்கச் சொல்றிங்களா? பதினெட்டுப் பட்டி பஞ்சாயத்துன்னு டயலாக் பேசச் சொற்றீங்களா..?"

காலனிக்காரர்கள் கேலியாய்ச் சிரித்தார்கள்.

"அதெல்லாம் இல்லப்பா... இவ்வளவு காலமா இந்தப் பக்கம் நாம அவ்வளவா ஜாதி பேதம் பார்க்கிறதில்லையே... சௌத் சைட்ல டீக்கடையில ரெட்டை டம்ளர் வைக்கிற மாதிரியா இங்க நடக்குது... இங்கு உங்களுக்கு யார் அநியாயம் பண்றாங்க...? எங்க அளவுக்கு நீங்களும் தானே வசதியாகவும் மரியாதையாகவும் வாழறீங்க..?"

பின்னால் ஒரு காலனிக்காரன் முணுமுணுத்தான்... "இதப் பார்ரா.. என்னவோ மேல் ஜாதிக்காரன் லாம் நம்ம கூட சம்பந்தம் பண்ணிப்புட்ட மாதிரி பேசறாரு...?

சேர்மேனுக்குக் கோபம் வந்தது.

"யார்ரா அவன் மரியாதை இல்லாம... இதப் பாருங்கடா ஏதோ வாய்த்தவறி ஒருத்தன் ஜாதிப் பேரைச் சொல்லி திட்டிப்புட்டான். ஒத்துக்கிறேன். அதுக்காக போலீஸ் அது இதுன்னு போனா போலீஸ் எங்களுக்கும் தெரியும். அவங்களை எப்படி சமாளிக்கணும்னு தெரியும்!"

"தெரியும்தானே...பின்ன எதுக்கு இந்த கட்டப் பஞ்சாயத்து..? முடிஞ்சா சட்டத்தால மோதவேண்டியதுதானே.." - நேரடியாகவே சவால் விட்டான் சந்திரன்.

கட்டப்பஞ்சாயத்து என்ற வார்த்தையைக் கேட்டு சற்று எச்சரிக்கை அடைந்தார் சேர்மேன். சமாதான தொனியில் "தோ பாரு சந்திரன், உன்னைப் பார்த்தா படிச்சவனாட்டம் இருக்குற... நல்லா சிந்திச்சி பாரு.. ஒரு சின்ன தப்புக்கு இது மாதிரியெல்லாம் பண்ணலாமா..?"

"எது சார் சின்ன தப்பு..? காலம் காலமா எங்களை நாய விட கேவலமா நடத்துனது அந்த ஒரு சொல்லுதானே..? நாங்க எந்தவிதத்தில் உங்களுக்குத் தாழ்ந்திட்டோம்...? இன்னும் அந்தக் காலம் மாதிரியே எங்களை அடக்கிக் கேவலப்படுத்தணும்னு பாக்கறிங்களா..? அதான் இனிமேல் நடக்காது.. சின்னத்தப்பாமே சின்னத்தப்பு.."

"ஏம்ப்பா... எங்களைக் கூடத்தான் ஜாதிப்பேரைச் சொல்லி திட்டறாங்க.. ரெட்டியாரப் பள்ளின்னு சொல்றாங்க...முதலியார் கெக்லபுர்ரன்னு ஏசறாங்க... செட்டியார கோமுட்டிப் பையான்னும் ஐயரை பாப்பான்னும் மந்திரிய அம்பட்டன்னும் சொல்றாங்களே... இதுக்கெல்லாம் நாங்க எங்க போய் புகார் சொல்றது?"

"சேர்மேன் சார் நல்லா பேசறீங்க.. மற்ற ஜாதியத் திட்டினாலும் அவங்களை அடிமையா யாராலும் நடத்த முடியுதா..? சொல்லுங்க... ஆனா பறையன்னு சொல்லிச் சொல்லியில்ல எங்களை அடிமை ஆக்கறீங்க... ஏதா எந்த பாப்பான் சேத்துல கால வச்சி வேலை செய்றான்..? எந்த செட்டி சாக்கடை அள்றான்.? எந்த முதலி மலத்தை வார்றான்? நாங்க மட்டும் ஏன் காலங்காலமா செஞ்சிக்கிட்டு வந்தோம்? நாங்க மட்டும ஏன் காலகாலமா ஒதுக்கப்பட்டோம்? நீங்க சொல்ற எல்லாம் ஒருத்தரு ஒருத்தரு ஜாதி வச்சி திட்டிக்கினாலும் ஊர்லதான் ஒற்றுமைய வாழறீங்க... ஒருத்தரு ஒருத்தர் தொட்டுப் பழகிக்கிறீங்க..? ஆனா நாங்க அப்படியா... எங்களை இன்னும் ஊரை விட்டு ஒதுக்கித் தானே வச்சிருக்கிறீங்க...சின்ன தப்பாம்இல்ல சின்னத்தப்பு எங்களை படுகுழியில் தள்ளினதே அந்த வார்த்தைதானே.."

"எத்தனை ஆண்டுகளா... எத்தனை தலைமுறையா அந்த வார்த்தையச் சொல்லி எங்களைக் கேவலப்படுத்தியிருப்பீங்க... இந்த சட்டம் வந்த பிறகுதான கொஞ்சம் கன்ட்ரோல் ஆச்சு... ஆனாலும் முதுகுக்குப் பின்னாலே பேசிக்கிறிங்கதானே..?" சந்திரன் பொரித்த பொரியில் அவலாய் வெந்து நூலானார் சேர்மேன்.

பாஸ்கரு வாயைத் திறந்தான். "உங்க ஜாதிய திட்டறாங்கன்னு சொல்றீங்களே... நீங்களும் வேணா ஜாதி பேரைச் சொல்லித் திட்டாத இன்னொரு வன்கொடுமை சட்டத்தை உருவாக்கிடுங்க.."

சேர்மேன் தனது கடைசி அஸ்திரத்தை எடுத்தார்:

"தோ... பாருங்கப்பா... சாதி பேரால ஒரு பிரச்சனை வரக்கூடாது.. அப்புறம் அது கலவரமா மாறி வெட்டுகுத்துன்னு போகக்கூடாது. அதுதான் என் பயம். மக்கள் பிரதிநிதின்ற முறையில உங்ககிட்ட கேக்கிறன். வேண்ணா அந்த மூர்த்திய உங்ககிட்ட நேர்ல வந்து மன்னிப்பு கேக்கச் சொல்றேன். கேஸை வாபஸ் வாங்கிடுங்க."

சந்திரன் கூட சற்று யேசித்தான்...

'மன்னித்துத்தான் விடுவோமா...? ஏன் பிரச்சனை? அந்த நாய் தான் அப்படிப் பேசினால் நாமும் ஏன் முறைத்துக் கொண்டு, ஒரே ஊரில் நாளை அவன் முகத்தில் விழிக்க நேரிடுமே... சேர்மேன் சொல்வது மாதிரி ஜாதிக் கலவரம், அது இது என்று தெற்கே நடப்பது போல ஏதானும் தன் பொருட்டு நடந்துவிட்டால்.. இத்தனை பெரிய மனிதர்கள் சொல்கிறார்களே."

வளர்மதியைப் பார்த்தான்.

அவள் பேசினாள்: "ஏங்க கேஸை வாபஸ் வாங்க என்னமா நைச்சியம் பேசறீங்க... இது நாள் வரைக்கும் நீங்க எல்லாரும் எங்களை பறையா பறைச்சின்னு கேவலமா பேசனிங்களே... நாங்க எத்தனை நாள் மனசுல வச்சி குமுறியிருப்போம். இனி வருங்காலத்தில யாரும் எங்களை இப்படி கேவலமாக பேசக்கூடாது. அதுக்கு ஒருத்தனாவது தண்டனை அடைஞ்சாத்தான் மத்த எல்லாருக்கும் புத்திவரும். இல்லன்னா கொஞ்சநாள்ல நடந்த இந்த பஞ்சாயத்தை மறந்துடுவாங்க.. திரியும் பற நாயேன்னு கேவலமா பேசுவாங்க... அதனால் இந்த ஊர்க்காரங்களுக்கு வாய்ப்பூட்டு போடணும்னா அந்த சேல்ஸ்மேன் தண்டனை அடைஞ்சே தீரணும்.."

ஊர்க்காரர்களுக்கு கொதித்தது.

"போங்கடா. போங்க ஏதாவது ஒரு விவகாரத்தில மாட்டாமயா போப்போறீங்க.. " அப்ப பாத்துக்கிறோம்" என்று தூற்றினார்கள்.

இந்த கட்டைப் பஞ்சாயத்து, தீர்ப்பு ஏதுமின்றி மொட்டையாய் முடிந்த சில நாட்களில் அந்த சேல்ஸ்மேன் மூர்த்தி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். சிறையில் அடைக்கப்பட்டான். விசாரணை வழக்கு எல்லாம் முடிந்தது.

ஆறுமாதம் சிறைத் தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

சேல்ஸ்மேன் உத்யோகமும் பறிக்கப்பட்டது. ஊரே அசந்து போனது... அவனுங்ககிட்ட பாத்து நடந்துக்கணும் என்று எச்சரிக்கை அடைந்தது. அவனுக்குத் தண்டனை வழங்கப்பட்ட அன்று மாலை மூர்த்தியின் மனைவி கமலம்மாள் கண்ணீரும் கம்பலையுமாக மதுரை எரிக்க வரும் கண்ணகி மாதிரி காலனியை நோக்கி ஓடி வந்தாள். அவளைத் தடுத்து நிறுத்தும் சாக்கில் அவளது உறவினர்கள் சிலரும் பாதுகாப்புக்குக் கூடவந்தார்கள்.

சந்திரன் அப்போதும் வீட்டுக்குள் ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தான். வளர்மதி கூட மாட ஒத்தாசை செய்து கொண்டிருந்தாள்.

மின் கம்பத்தில் காலை தூக்கி ஒண்ணுக்கு அடிக்கும் நாயும் வேப்ப மர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தது.

கமலம்மாள் நடுத்தெருவில் மணலை வாரி வாரித் தூற்றினாள்.

"என் குடிய கெடுத்தவளே நீ நல்லாயிருப்பாயா.. ஊரை.. தவளே... நீ. நல்லாயிருப்பியா... உன்ன மாரியாத்தா வந்து தூக்காதா.. என் ஆம்படையானை... தவளே என் சக்களத்தி, தேவூடியா பேபர்ஸி என் சாண்டைய குடிச்சவளே... என் வூட்டுக்காரனைக் கூப்பிட்டுட்டு அவன் வரமாட்டான்னுதும் போலீஸ்ல தள்ளிட்டியே உன்.. யில ஊரு...க உன்னை அம்பட்ட பயன்..க" என்று வண்டை வண்டையாய் ஏசினாள்.

அதைக்கேட்டு எரவானத்தில் சொருகியிருந்த கத்தியை எடுத்தான் சந்திரன். "அவளை ஒரே போடு... மாட்டை வெட்ற மாதிரி போட்டுடறேன்..."

"ஏம்மே கொஞ்சம் சும்மா இரும்மே... அவ தான் ஊட்டுக்காரனை வுட்டுட்ட சோகத்தில் கண்டபடி பேசறா.. பேசிட்டு போவட்டும்.."

"இன்னாடி சொல்ற... எம்மா பேச்சி பேசறா... உன்னை பச்சைத் தேவடியான்னு சொல்றாடி.."

"சொல்லிட்டு போவட்டும்.."

"இல்ல இதக் கேட்டுக்கினு சும்மா இருந்தால் என்னை மாதிரி பொட்டப்பய எவனும் இல்ல. நாளைக்கு தலை நிமிர்ந்து தெருவூல நடக்க முடியாதுடி.."

"நீ பேசாம இரும்மே.. நீ இப்ப வெளிய போனே அபண்டாமா பேசற அவ, அப்புறம் அபாண்டமா பழி சொல்லுவா... நீ அவளை மானபங்கப் படுத்திட்டதா கேஸ்குடுப்பா.. நம்மள மாதிரி மானத்துக்கு பயந்தவ இல்ல அவ..."

வளர்மதி பேசப்பேச பேயறைந்தமாதிரி நின்றான் சந்திரன்.

"ஆமாம்மே.. வன்கொடுமைச் சட்டத்தில் ஆறுமாதம் தான். மானபங்க சட்டத்தில் ஆறு வருசம். புரிஞ்சிக்க. நம்மை பழி வாங்கத்தான் இப்படி எல்லாம் பண்றா.."

"இப்படியெல்லாம் கூட பண்ணுவாளுங்களா... அப்புறம் நாங்க உசந்த ஜாதின்னு சொல்லிக்கிறாங்க..."

வானத்திலிருந்து குதிச்சாங்க..

"மலையப்பாத்து நாய் குலைக்கட்டும் நீ வேலயப் பாரும்மே.."

"ஒரு விசயம் எனக்குப் புரியலடி. ஒரே ஒரு வார்த்தை பறநாய்னு சொன்னான்றதுக்காக போராடி அவனை உள்ளேயே தள்ளிட்ட. ஆனா, அவம் பொண்டாட்டி இத்தனை பேச்சு பேசறா... தேவடியான்னு ஏசறா. எல்லாத்தையும் பொறுத்துக்கிறியே.. உன்னைப் புரிஞ்சிக்க முடியலியே.. பொம்பளைக்குப் பொம்பளைங்கிற இரக்கமா..? ஓரினப் பற்றா...?"

"அதெல்லாம் இல்லம்மே.. அவ இன்னிக்கெல்லாம் திட்னாலும் என்னோட ஒழுக்கத்தையும் கற்பையும் தானே திட்டப் போறா, நாறடிக்கப்போறா."

"ஆமாம்."

"அதை நீ நம்பறியா? நான் தேவடியாளா..?"

"இல்லியே.."

கட்டின நீ என் ஒழுக்கத்தை சந்தேகப்படல. எந்த நாய் என்ன சொன்னா எனக்கின்னா..? அதப்பத்தியெல்லாம் கவலையில்ல. .. ஆனா அந்த சேல்ஸ்மேன் சொன்னது அந்த வார்த்தை அதை மட்டும் என்னால மன்னிக்க முடியாது... ஏன்னா.."

"ஏன்.. ?"

"அது என்னை மட்டும் பாதிக்கிற சொல் இல்ல.. ஒரு சமுதாயத்தையே பாதிக்கிற சொல்லு... ஒரு சமுதாயத்தையே நசுக்கி சாக்கடையிலே தள்ற வார்த்தை.. என் சுயநலத்துக்காக நான் போராடல... என்னோட சமூகத்துக்காகத்தான் நான் இவ்வளவு பெரிய போராட்டத்தையே நடத்தினேன். இப்ப புரியுதா..?"

தெருவில் இன்னமும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

அவர்கள் வந்தால்தானே அவர்களுக்குச் சப்போட்டாக இவளை ஒரு கை பார்க்கலாம். ஏன் பதுங்கி விட்டார்கள்.

கமலம்மாள் கூட வந்தவர்கள் "அக்கா.. அவங்க பாவத்துக்கு ஆண்டவன் கூலி குடுப்பான் நீ வாக்கா. .. ஏன் ஆவிபோக பேசற..?" என்று கூப்பிட்டார்கள்.

கமலம்மாள் வளர்மதியை எவ்வளவோ ஏசினாள்...அவளது அங்கத்தைக் கூறு போட்டாள். அவளது பெண் உறுப்புகளை ஏலம் போட்டாள்.அவள் ஒழுக்கத்தையும் சேறு பூசினாள்.. அவள் பெயரை மலத்தில் தோய்த்தெடுத்தாள். இருப்பினும்...

ஒரே ஒரு வார்த்தை மட்டும் அவளது வாயிலிருந்து வெளிப்பட்டு விடாதபடிக்கு சிறைப்படுத்திக் கொண்டாள்... உள்ளே வைத்துப் பூட்டிக் கொண்டாள்.

அது....

எந்த வார்த்தை அவளது புருஷனை சிறையில் தள்ளியதோ..... அந்த வார்த்தை மட்டும் அவளுடைய இமாலயக் கோபத்திலும்கூட வெளிப்படவே இல்லை.....

Pin It