உழவுக்கு வந்தனம்
சொன்ன காலம் போச்சு
இப்போ உழவுத் தொழில் எல்லாம்
நொந்து நூலாச்சு

காப்பாத்தி வச்சிருக்கும்
ரெண்டு ஏக்கர் நஞ்ச
அதில் விவசாயம் செய்யப்போனா
அடைக்குதுப்பா நெஞ்ச

வாடகைக்கு டிராக்டர் வாங்கி
சேடவச்சி உழுதேன்
மணிக்கு ஐநூறு ரூபான்னு
தெண்டத்துக்கு அழுதேன்
 
மேல் ஊத்து கோச்சுகிட்டு
கெணத்த விட்டுப் போச்சு
தண்ணிக்கு என்ன பண்ண
மழை வந்தாதான் ஆச்சு

ராட்சஸ போர் ஒண்ணு
வச்சிருக்கார் மிராசுதாரு
வாடகைக்குத் தண்ணி தர
முன் பணம் கேக்கறாரு

வெதையில தப்போ?
வெதச்ச நெலம் தப்போ?
ஒரத்துல தப்போ?
ஊத்து தண்ணியில தப்போ?

ஏக்கருக்கு நாலே நாலு
மூட்ட தான் அறுத்தேன்
விவசாயம் செய்யறத
மொத்தமா வெறுத்தேன்

எந்த ஊரு சந்தைக்கு
நான்போய் நிக்க
கட்டுப்படியாகும் ஒரு
வெலசொல்லி விக்க

முன்னப்போல சந்தையில
உள்ளூராளு இல்ல
கோட்டு சூட்டு போட்டவங்க
கொடுக்கறாங்க தொல்ல

வெளிநாட்டு காரில் வர்றான்
சந்தையில நிக்கறான்
வெங்காயம் - வெள்ளப்பூண்டு
இவன் எதுக்கு விக்கிறான்?

கையில் ஒரு மிசின வச்சி
தட்டித் தட்டிப் பார்க்குறான்
கடைசியில அடிமாட்டு
வெலைக்குத்தானே கேக்குறான்

என்னென்ன பாடுபட்டு
நான் வெளைய வைக்கிறேன்
என்னோட பொருளுக்கு
அவன் வெலைய வைக்கிறான்

அவனத்தாண்டி எம்பொருள
விக்கறத தடுக்கறான்
சொற்பப் பணம் கொடுத்து
முழு சந்தையையே எடுக்கறான்

நம்மகிட்ட பொருள வாங்கி
ஆள வச்சி தொடச்சு
பத்து மடங்கு வெலைக்கு விற்பான்
பொட்டிக்குள்ள அடச்சு

சொட்டு வேர்வ சிந்தாத
அவனுக்குத்தான் லாபம்
உழப்பெடுத்த எனக்கு
கடங்காரன்னு சாபம்

உழவுக்கு வந்தனம்
சொன்ன காலம் போச்சு
இப்போ உழவுத் தொழில் எல்லாம்
நொந்து நூலாச்சு.

Pin It