1.

அப்போதெல்லாம்

கண்ணாடிச்சட்டம் போட்ட
தாத்தா ஆச்சி படத்தின்
பின்னுறை நிழலிலிருந்து
சடசடவென்று சிறகடித்து
ஜிவ்வென்று பறந்துபோகும்
ஜோடியாகச் சிட்டுக்குருவிகள்
புலரும் கீழ்வானம் நோக்கி.

வாசலுக்கு வந்திருக்கும்
சூர்யத் தூசிச்சாரலில்
உதிரும் பூஞ்சிறகுகள்
நூலாம்படை
நவீன ஓவியம் தீட்டும்
சிற்பம்போல்.

சாணம் தெளித்த முற்றத்தின்
அடர் வண்ண விரிப்பில்
அம்மா இழுத்த
கம்பிக்கோலத்தில்
சிட்டுக்குருவியின் பஞ்சு விரல்களும்
பச்சைக்குழந்தையின் பிஞ்சுப்பாதங்களும்
இன்னொரு கோலம் தீட்டியிருக்கும்.

முதல் மழைக்குப் பிந்திய நாள்
மண்சுவர் விளிம்புகளில்
சாலையோரங்களில்
இளம்பச்சை நீர்த்தாரைபோல் ஒழுகி
ஓடிக்கொண்டிருக்கும்
பசும்புற்கள்.

காலெல்லாம் சகதி அழுந்த
மழையில் நனைந்தபடி
கம்மாய்க்கரைவழி போனால்
ஆவாரம்பூக்கள் சிரித்திருக்கும்-
பாப்பாக்கள்
எறிந்து விளையாடி விட்டுப்போன
தங்கக் கம்மல்கள் போல.

லட்சியக்கனவுபோல்
உச்சியைத் தொட்டிருக்கும்
தேவாலயங்களிலும்
கோபுரப்பொந்துகளிலும்
காற்று சடசடக்க
மாடப்புறாக்கள்
சிறகடித்து விளையாடும் வான் வெளியோடு.

‘அந்தா இருக்கு பாரூ...’ என்று
மாரியப்பன் கைநீட்டிய
வேப்ப மர உச்சி தேடினால்
இனிமையாகப் பயமுறுத்தும்
கறுப்பாகத் தேன்கூடு.
கனவில் தேன் ஒழுகும்
கசப்போடு இனிமை.

வெறுமையோடு இப்போதெல்லாம்
நடுநிசியில் வீடு திரும்பும்போது
இரவின் பதாகையில் நிழலாய்
கலையின் கோபுரங்கள் சரிந்திருக்க
கங்குகளை எறிந்ததுபோல்
பாயும் ஒளியில் கண்கள் கூச
விறைத்து நின்று பார்க்கின்றன
‘செல் ஃபோன்’ கோபுரங்கள்
அந்நியநாட்டுச் சிப்பாய்போல.

மேடேறும் குளங்களைப் பார்த்தபடி
மண்ணையும் மணலையும் தொலைத்துவிட்ட
ஆற்றை வெறித்தபடி
ஒருதோளில்
கனத்துத்தொங்கும் மடிக்கணினி
மறுதோளில் கொஞ்சும் செல்பேசி
ஒற்றை ஒற்றை ஆளாய்த் திரிகிறோம்
அவரவர் அசரீரியோடு.

பிரியம்பொங்க
குழந்தையின் கேசம் வருட
அன்போடு
இளம் முதுகைத் தட்டிக்கொடுக்க
அகல்விளக்குச் சுடரிலிருந்து
ஒரு துளி வீழ்ந்ததுபோல்
காதலின் விழியோரம் மினுங்கும்
நீரைத்துடைத்துவிட
எந்த விரல்கள் இருக்கின்றன
இப்போது நம்மிடம்.

 2
எப்போதாவது வாய்க்கும்
நட்சத்திர உணவு விடுதிகளில்
டிஷ்யூ பேப்பர்களில்
கைதுடைக்க நேர்கிறபோது
உறுத்துகிறது
குற்றமனம்.
பட்டை உரித்து உரித்து
பட்ட மரமாகி
ஒவ்வொன்றாய்ச் சரிகிற
துயரம்.

Pin It