“தி சோஷியல் நெட்வொர்க்’’ படம் இந்தியாவில் நவம்பர் மாதம் இரண்டாம் வாரம் வெளியானது. இப்படம் அமெரிக்காவில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பே வெளியாகிவிட்டது. இப்படம் நியூயார்க் சினிமா அறிவுஜீவிகளால் பெரிதும் விவாதிக்கப்பட்ட படம்.

இப்படம் பேஸ்புக் இணையத்தை உருவாக்கிய மார்க் ஸக்கர்பெர்க் பற்றியது. தன் 20ஆவது வயதில் 2004ஆம் ஆண்டில் (வெறும் 6 வருடங்களுக்கு முன்பு) ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கம்ப்யூட்டர் மென்பொருள் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மார்க் ஸக்கர்பெர்க் தன் ஹாஸ்டல் அறையில் விளையாட்டாய் ஆரம்பித்த இணையம், ஆறே வருடங்களில் உலகெங்கும் 50 கோடி உறுப்பினர்களைப் பெற்று இன்று ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் உள்ளது (நம் ஸ்பெக்ட்ரம் ஊழலின் மதிப்பைவிட குறைவு தான்!) மார்க் ஸக்கர்பெர்க் இன்று உலகின் மிகஇளைய மகா கோடீஸ்வரராக இருக்கிறார்.

பேஸ்புக்கின் ஐடியா தங்களின் சொந்த ஐடியா. அதை மார்க் திருடிவிட்டான் என்று இரு வேறு மாணவர்கள் வழக்குப் போடுகின்றனர். ஆரம்பத்தில் இணையத்தைத் துவக்க உதவி செய்த மார்க்கின் அறை நண்பனை, பின்னர் மார்க் எப்படி நயவஞ்சகமாக ஏமாற்றிவிட்டான் என்பதும் படத்தின் கதையின் ஓர் அம்சம்.

டேவிட் பின்ச்சர் இயக்கிய இப்படத்தின் திரைக் கதையை எழுதியது ஆரோன் சோர்க்கின்.

சென்ற அத்தியாயத்தில் கதை, திரைக்கதை என்பதே ஒரு கருத்துத் திட்டத்தில் இருந்து தொடங்குகிறது என்று பார்த்தோம். ‘தி சோஷியல் நெட்வொர்க்’ படத்தின் கதையும், திரைக்கதையும் இதற்கான அருமையான உதாரணம். படத்தின் கதையே, எப்படி ஒரு ஐடியா , இளைஞன் ஒருவனை ஆறே வருடங்களில் உலக மகா கோடீஸ் வரனாக்குகிறது என்பதுதான். இப்படத்தின் திரைக்கதை ஆசிரியர் வெறும் மூலப் புத்தகத்தை மட்டும் நம்பவில்லை. ஃபேஸ்புக்கைச் சேர்ந்த, பல ஊழியர்களிடம் இவர் பேசியிருக்கிறார். மார்க்கின் பல நண்பர்களிடமும் பேசியுள்ளார். மார்க் ஹார்வர்டில் இருந்தபொழுது எப்படி இருப்பான், எந்த உடை உடுத்துவான், எப்படி பழகுவான், எந்த வகை உணவு உண்பான், எந்த பியரை அதிகம் சாப்பிடுவான்... போன்ற பல விவரங்களைச் சேகரித்துள்ளார். ஃபேஸ்புக்கைச் சேர்ந்த பலர் தங்கள் பெயரை வெளியிடாமல் திரைக்கதை ஆசிரியருக்கு உதவி செய்துள்ளனர்.

உண்மையில் பார்க்கப் போனால், படத்தின் அடிப்படையாய் இருந்த புத்தகத்தைவிட, திரைக் கதை ஆசிரியர் திரட்டிய இந்தத் தகவல்கள்தான் படத்தின் திரைக்கதைக்குப் பெரிதும் வலுகூட்டி யிருப்பது தெரியும்.

மார்க் ஒரே நேரத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து சிந்திப்பான், பேசுவான் என்பது நண்பர் களிடமிருந்து திரைக்கதை ஆசிரியர் பெற்ற தகவல். அவனது இந்தத் தன்மையால் அவன் விரும்பிய ஒரு சக மாணவி அவனை விட்டு விலகுகிறாள் என்பதும் திரைக்கதை ஆசிரியர் பெற்ற இன்னொரு தகவல். இந்த இரு தகவல்களை திரைக்கதை ஆசிரியர் ஆரோன் ஸோர்க்கின் மிக அற்புதமாக தன் திரைக்கதையின் துவக்கத்திற்கும், முடிவிற்கும் உபயோகப்படுத்தியுள்ளார்.

படத்தின் துவக்கத்திலேயே மார்க் தான் விரும்பும் சக மாணவியுடன் ஒரு பப்-ல் பியர் சாப்பிட்டுக் கொண்டிருப்பான். அப்போது பரபரவென்று ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்திற்குத் தாவி பேசிக் கொண்டே யிருப்பான். அவள் கேட்கும் கேள்விகளுக்கும் அதே முறையில் பதில் சொல்வான். அவள் வெறுத்துப் போய் நமக்குச் சரிப்பட்டு வராது என்று எழுந்து சென்று விடுவாள். அவனுக்கு ஒரு கணம் கோபம், வெறுமை. அதே கோபத்தோடு தன் அறைக்கு வந்து, அவளை பற்றி தனது பிளாக் - ல் எழுதுவான்.

பின்னர், ஹார்வர்டு இணையத்தில் தன் மென்பொருள் திறமையை உபயோகப்படுத்தி ஹார்வர்டு பல்கலைக் கழக மாணவிகளை விளையாட்டாய் மதிப்பீடு செய்வான். அப்படி உண்டாக்கிய இணையத்திற்கு Facegash.com என்று பெயரிடுவான். இரண்டே மணி நேரத்தில் 12000 பேர் அந்த இணையத்திற்கு வருகை புரிகின்றனர். விடியற்காலை 4 மணிக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக இணைய ஒருங்கிணைப்பு ஸ்தம் பித்துப் போகிறது.

படம் இப்படித்தான் ஓர் அசுர வேகத்தோடு தொடங்குகிறது.

படம் முடியும்பொழுது மார்க் மகா கோடீஸ் வரனாகி, சமூக ஒருங்கிணைப்பு இணைய தளத்தின் முடிசூடா மன்னனாய் திகழ்கிறான். ஆனாலும், அதன் பாதிப்பு எதுவுமே இல்லாமல் தான் உரு வாக்கிய குயஉநbடிடிம இணையத்தில் படத்தின் துவக்கத் தில் அவனை விட்டுச் சென்ற பழைய சிநேகிதி யின் விவரங்களை அமைதியாய் படித்துக் கொண் டிருப்பான்.

இது போன்றதொரு துவக்கத்தை, முடிவை எந்த கதாசிரியனாலும் சிந்திக்க முடியாது. சினிமா அறிந்த திரைக்கதை ஆசிரியனுக்கே இது சாத்திய மாகும்.

கதையை தேர்ந்தெடுத்ததோடு நிற்காமல், திரைக்கதைக்காக, கதையின் கருப்பொருளை ஒட்டி பல்வேறு விவரங்களை திரட்டியதால்தான் திரைக் கதை ஆசிரியனால் இவ்வாறு செய்ய முடிந்தது.

இதைத்தான் சென்ற இதழில் நாம் பார்த் தோம். திரைக்கதை அமைக்க முதலில் தேவைப் படுவது கருத்துத் திட்டம். பளிச்சென்ற ஒரு கருத்துத் திட்டத்தைப் பெற நான்கு செயல்முறைத் திட்டம் என்ற ஒன்று உள்ளது என்பதையும் பார்த்தோம். முதல் செயல்முறைத் திட்டமான “விவரங்களைத் திரட்டுவது’’ என்பது குறித்து ஓரளவு விரிவாகப் பார்த்தோம்.

அடுத்த செயல்முறைத் திட்டம் என்பது என்ன? விவரங்களைச் சேகரித்த பின் அந்த “விவரங்களை முறைப்படுத்துவது’’தான் அடுத்த செயல்முறைத் திட்டம்.

நம் முன்னே ஏராளமான விவரங்கள் குவிந்து கிடக்கும். அதிலிருந்து ஒரு கருத்துத் திட்டத்தை பெறுவதுதான் நம் நோக்கம். ஏற்கனவே இத்தனை விவரங்களைத் திரட்டியது கடினமானதாகவும், சலிப்பூட்டுவதாகவும் இருந்திருக்கும். இப்போது இதனை முறைப்படுத்த வேறு வேண்டுமா? என்ற கேள்வி மனதில் எழும்.

அவ்வாறு விவரங்களை முறைப்படுத்துவதில் இறங்கும்போதுதான் தேவையானது, தேவை யற்றது என்பதை பிரிக்கமுடியும். அவ்வாறு செய்யும் பொழுது நாம் எல்லா விஷயங்களையும் உற்று நோக்குகிறோம்.

இவ்வாறு நாம், திரட்டப்பட்ட மொத்த விவரங்களின் சாரம் போல குறைவான விவரங் களை முறைப்படுத்துதல் மூலம் பெற்றிருப்போம். இப்போது மெல்ல நம் கருப்பொருள் பற்றி மேலும் தெளிவு உண்டாகும்.

‘குறைந்து வரும் பிறப்பு விகிதம் : கேரளா விடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்’ என்ற சிக்கலான எனது ஆவணப்படத்தைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதற்காக பத்து நாட்கள் இடைவிடாமல் உழைத்து நான் திரட்டிய தகவல்களைப் பார்த்து எனக்கே மலைப்பாக இருந்தது, அந்த விவரங்களை மீண்டும் ஒரு முறை படித்தபோது. தலைப்புக்கான பிரதான காரணங் களைக் குறித்துக் கொண்டேன். கேரளாவில் குறை வான பிறப்பு விகிதத்துக்கான காரணங்கள் என்ன வென்று வரிசைப்படுத்தினேன். இறுதியில் பிரதான மூன்று காரணங்களை படத்தில் உபயோகப் படுத்தலாம் என தேர்ந்தெடுத்தேன். அந்த மூன்று காரணங்கள் பின்வருவன:

1. கேரளாவில் நிலவிய கல்வியின் அளவு. குறிப்பாக, பெண்களிடையே நிலவிய கல்வியின் அளவு.

2. திருமணத்தின்போது பெண்களின் வயது.

3. ஆரோக்கியம், சுகாதாரம் பற்றிய மக்களின் விழிப்புணர்வு.

இந்த மூன்று பிரதான காரணங்களின் பங்களிப்பால்தான், கேரளாவில் குறைவான பிறப்பு விகிதம் நிலவுகின்றது என்பதை பத்து நாட்கள் திரட்டிய தகவல்களிலிருந்து கண்டறிந் தேன்.

முதல் காரணத்தைப் பார்ப்போம். “கல்வி அளவு, குறிப்பாக பெண்களிடையே கல்வி அளவு’’. நூறு சதவிகித எழுத்தறிவு பெற்ற முதல் மாநிலம் இந்தியாவில் கேரளாதான் என்பது எல்லோருக்கும் தெரியும். பெண்களிடையே இருந்த இந்த எழுத்தறிவு காரணமாக, பல்வேறு விஷயங்கள் குறித்த விழிப்புணர்வும் அதிகமாக இருந்தது. குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல் வேறு குடும்ப சமூக விஷயங்களில் முடிவு எடுப் பதில் பெண்களின் பங்கு கணிசமாக இருந்தது. 70களில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்காக இந்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவு செய்தது. ஆனால், அதன் காரணமாக பலனேதும் பெரிதாக ஏற்படவில்லை. அதே பணத்தைப் பெண்களுக்கான கல்விக்காக செலவிட் டிருந்தால் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் அரசு விரும்பிய பலன் தானாகவே கிடைத்திருக்கும் என பின்னாளில் பல சமூகவியலாளர்களும், பொருளா தார வல்லுநர்களும் கூறினர்.

இரண்டாவது காரணம், “திருமணத்தின் போது பெண்களின் வயது’’. இந்தியாவிலேயே, திருமணத்தின்போது பெண்களின் வயது மிக அதிகமாக இருப்பது கேரளத்தில்தான். இந்தியா வில் சராசரியாக திருமணத்தின்போது பெண்களின் வயது 16 -18ல் இருந்தது. ஆனால், கேரளாவில் திருமணத்தின்போது பெண்களின் வயது 22 - 24ஆக இருந்தது. காரணம், பெரும்பாலான பெண்கள் பள்ளிப் படிப்பு முடித்து, கல்லூரி வரை சென் றதுதான். படித்த பெண்கள், தங் களுக்கு பொருத்த மானக் கணவரைத் தேர்ந்தெடுக்க சில காலம் காத்திருக்கத் தயாராக இருக் கிறார்கள். இதன் காரணமாகத்தான் திருமணத்திபோது, பெரும்பாலான பெண்களின் வயது 22 - 24 ஆக இருந்தது. திருமணமான பெண்கள் பெரும்பாலும் 30 வயதுக்குள் குடும்பக் கட்டுப் பாடு செய்து கொள்கின்றனர். இதன் காரணமாக குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடிய பருவம் என்பது அவர்களுக்கு வெறும் 6 - 8 வருடங்கள்தான் உள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெரும்பாலும் பெற்றுக் கொள்வதில்லை.

மூன்றாவது காரணம், “ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு’’. அந்தக் காலங் களில் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்குச் சொல்லப்பட்ட ஒரு காரணம், பிறக்கும் எல்லா குழந்தைகளும் கடைசி வரை உயிரோடு இருப்ப தில்லை. தங்கள் கடைசி காலம்வரை ஒரு சில குழந்தைகளாவது இருக்க வேண்டும் என்பதற் காகத்தான் பெற்றோர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொண்டனர்.

பெற்ற இரு குழந்தைகளும் கடைசி வரை உயிரோடு இருக்கும் என்பதுதான் பெரும்பாலான பெற்றோர்களின் நம்பிக்கை. கேரளாவின் வரலாறு மற்றும் அரசியல் பின்னணி காரணமாக பொதுவாகவே அடிப்படை சுகாதார வசதி என்பது மாநிலம் முழுவதும் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது.

குழந்தைகளுக்கு சிறு உடல்நலக் கோளாறு என்றாலே, வசதியற்ற தாய்மார்கள்கூட அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று விடுவர்.

இப்படி, படத்தின் கருப்பொருளுக்குத் தேவையான முக்கிய விஷயங்களை எடுத்தாகி விட்டது. ஆனால், இதை வைத்துக்கொண்டு படத்திற்கான திரைக்கதையை எப்படி எழுதுவது என்று முழித்தேன். அதற்கான பளிச்சென ஒரு கருத்துத்திட்டம் வராமல் தவித்தேன்.

விவரங்களை சேகரிப்பது

விவரங்களை முறைப்படுத்துவது

இந்த இரு செயல்முறை திட்டங்களையும் ஒழுங்காக செய்துவிட்டால் அற்புதமான கருத்துத்திட்டம் வந்துவிடுமா என்ன. அப்படி வரா விட்டால் மூன்றா வது செயல்முறைத் திட்டம் என்பது என்ன?

மூன்றாவது செயல்திட்டமாக பேராசிரியர் சொல்வது இதுதான். “ஒன்றும் செய்யாமல் வெறுமனே இரு.’’

வெறுமனே இருந்தால் கருத்துத்திட்டம் வந்துவிடுமா என்ன? அவர் சொல்வது இதுதான்:

அதுவரை சேகரித்து முறைப்படுத்திய விவரங்களை அமைதியாக அடை காக்க வேண் டும் என்பதைத்தான் அவ்வாறு சொல்கிறார். அவ்வாறு செய்தால், திடீனெ உங்கள் மனதில் ஒரு பளிச் கருத்துத் திட்டம் தோன்றும். உங்கள் மூளையில் மின்னல்போல் ஒரு மின் வெடிப்பு ஏற்பட்டு அற்புதமான கருத்துத் திட்டம் தோன்ற லாம். அப்படியானால், இப்படி செய்கின்ற எல்லோருக்குமே அற்புதமான கருத்துத் திட்டம் தோன்ற வேண்டுமே. ஏன் ஒரு சிலருக்கு மட்டும் அற்புதமான கருத்துத்திட்டங்கள் வருகின்றன. பலருக்கு வருவதில்லை. காரணம், முதல் இரு செயல்முறைத் திட்டங்களை ஆழமாக, தீவிரத் தன்மையோடு அந்த ஒரு சிலர் செய்ததுதான். எந்த அளவுக்கு முதல் இரு செயல்திட்டங்களை ஆழமாக, தீவிரமாக செய்கிறோமோ அந்த அளவுக்கு வேகமாக, பளிச்சென்று கருத்துத்திட்டம் உருவாகும்.

ஒரு முறை நான் திருவனந்தபுரத்தில் சமூக, அறிவியல் ஆவணப் படத் தயாரிப்பாளனாக பணிபுரிந்த நேரத்தில், கணித மேதை ராமானுஜம் பற்றி ஓர் ஆவணப்படம் எடுப்பதற்கான ஆலோசனை வந்தது. ஏற்கனவே இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ஒரு சிலர் ராமானுஜம் பற்றிய ஆவணப்படம் எடுத்திருந்தனர். அந்தப் படங்களை நான் தேடிப் பிடித்து பார்த்தேன். அதில் ஒரு படத் தின் துவக்கக் காட்சி என்னை வெகுவாக வியக்க வைத்தது. அப்படத்தை எடுத்தவர் எத்தனை புத்தி சாலித்தனமாக சிந்தித்திருக்கிறார் என வியந்தேன். அந்தப் புத்திசாலித்தனம் சினிமாவுக்கே உரிய புத்திசாலித்தனம்.

 

ராமானுஜம் ஒரு மேதை. கணித மேதை களால் உலகெங்கும் போற்றப்பட்டவர். இதை துவக்கக் காட்சியிலேயே உணர்த்தவேண்டும். ராமானுஜம் மறைந்து பல வருடங்கள் ஆகி விட்டன. ஒரு சில பழைய புகைப்படங்கள் தவிர அவரைப் பற்றிய வேறு எந்த காட்சி ஆவணங்களும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் காட்சிரீதி யாக ராமானுஜம் ஒரு பிரபல மேதை என்பதை படத்தின் துவக்கத்திலேயே எப்படி உணர்த்துவது? இதற்காக படத்தின் இயக்குநர் எத்தனை சிந்தித் தாலும், கற்பனை செய்தாலும் பளிச் கருத்துத் திட்டம் கிடைக்காது. அதற்கான ஆய்வை மேற்கொண்டு அதன் மூலம் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் சிந்தனை, கற்பனை செய்தால்தான் பளிச் ஐடியா கிட்டும். அப்படித்தான் ராமானுஜம் படத்தின் துவக்கக் காட்சியை அமைத்திருந்தார்.

படத்தின் துவக்கக் காட்சி இதுதான் :

“கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் முகப்பு காண்பிக்கப்படுகிறது. பின்னர், பல்கலைக் கழகத் தின் மிகப்பெரிய அரங்கின் முகப்பு. பின்னர் க்ளோசப்பில், ஒரு பேராசிரியர் அந்த அரங்கில் ராமானுஜத்தின் மேதைமை பற்றி பேசுகிறார். அவ்வாறு அவர் பேசும்பொழுது அவ்வரங்கின் உள் அமைப்போ, எத்தனை பேர் அவர் பேச்சைக் கேட்கிறார்கள் என்பதோ காட்சி ரீதியாக தெரி யாது. ஆழமான அமைதியில் க்ளோசப்பில் பேராசிரியர் மட்டும் சீராக பேசிக்கொண்டிருக் கிறார். அவர் பேசி முடிக் கவும், கேமரா மெல்ல பக்கவாட்டில் திரும்பு கிறது. அப்போதுதான் அவர் எத்தனை பெரிய அரங்கத்தில் பேசுகிறார் என்பது தெரிகிறது. ஓராயிரம் மாணவர் களும் பேராசிரியர் களும் எழுந்துநின்று, அதுகாறும் நிலவிய ஆழ மான அமைதியை தூக்கியெறிவதுபோல், மேற் கத்திய இசையில் காணும் சீர்மையோடு கை தட்டுகிறார்கள். கைதட்டும் ஒலி ராமானுஜம் புகைப்படத்தின் க்ளோசப் மீது முடிகிறது. அங்கிருந்துதான் படம் தொடங்குகிறது.

நான் ஏற்கனவே பல முறை சொன்னது போல், இதுபோன்றதொரு சிந்தனை, கற்பனை, புத்தி சாலித்தனம்தான் சினிமாவுக்கானது. சினிமாவுக் கான எழுத்துக்கானது. அதற்கு பலர் நினைப்பது போல் வெறும் கற்பனையும், சொந்த வாழ்க்கை அனுபவங்கள் மட்டும் போதாது. பிரபஞ்சத்தையே உள்ளிழுத்துக் கொள்வதுபோல் ஒரு வெறியுடன் படத்திற்கான கருப்பொருள் பற்றி ஆராய வேண்டியுள்ளது.

என்னுடைய “கேரளாவின் குறைந்து வரும் பிறப்பு விகிதம்’’ ஆவணப் படத்திற்கு முடிந்த அளவு திரட்டி பகுத் தாய்ந்த பின்னும் படத்தை எப்படி எடுப்பது என்பதற்கான ஒரு கருத்துத் திட்டம் இல்லா மல் தவித்தேன். குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் படத்தை எடுத்தாக வேண்டும். திரட்டிய விவரங்களை ஒருவித அவசரத் தன்மையோடு மனதிற்குள் அடைகாத்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென ஒரு கருத்துத்திட்டம் மனதிற்குள் தோன்றியது. நான் ஆய்ந்தறிந்த மூன்று காரணங் களை ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் கதையினூடே சொன்னால் எப்படியிருக்கும் என நினைத்தேன்.

நான்கு தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் உள்ள ஒரு குடும்பம் வேண்டும். அதில் கொள்ளு பாட்டிக்கு 10 - 12 குழந்தைகள் இருக்க வேண்டும். அவளின் மகளான பாட்டிக்கு 6 - 8 குழந்தைகள் இருக்க வேண்டும். அவளின் மகளான அம்மா வுக்கு 4 - 6 குழந்தைகள் இருக்கவேண்டும். அவளின் மகளுக்கு வெறும் 2 குழந்தைகள்தான் இருக்க வேண்டும் என கற்பனை செய்தேன். இந்தப் பெண்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் போக்கில், அவர்களோடு பேட்டி காணவேண்டும். அந்தப் பேட்டியினூடே அவர்களின் குழந்தைகளின் எண்ணிக்கைக்கான காரணங்களை கண்டறிய வேண்டும். பின்னர், இக்காரணங்களுக்கு வலு கூட்டுவதுபோல பொருளாதார வல்லுநர்கள், சமூகவியலாளர்கள் மற்றும் பிற வல்லுநர்களின் பேட்டியிலிருந்து கருத்துகளைச் சேர்க்கவேண்டும்.

என்னுடைய ஆலோசகர்களிடம் என் இந்தக் கருத்துத் திட்டத்தைச் சொன்னேன். அவர்கள் சம்மதித்துப் பாராட்டினார்கள். ஆனால், அத்த கையதொரு குடும்பத்தை எப்படி கண்டு பிடிப்பது என்பது அடுத்த பிரச்சினை.

என் ஆலோசகருக்கு அதற்கான ஐடியா வந்தது. கேரளாவில் பிரபலமான மக்கள் அறிவியல் இயக்கமான கேரள சாஸ்த்ரீய சாகித்ய பரிஷத் மூலமாக அத்தகைய குடும்பத்தை கண்டுபிடிக்கு மாறு அதன் ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்புவதுதான் அவர் ஆலோசனை.

என்ன ஆச்சர்யம்! சுற்றறிக்கை அனுப்பிய 10 நாட்களில் அத்தகைய 20 குடும்பங்களை கண்டு பிடித்து கே.எஸ்.எஸ்.பி. ஊழியர்கள் தகவல் அனுப்பினர்.

பின்னர், அந்தக் குடும்பங்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து நான் நினைத்த மாதிரியே படப்பிடிப்பு நடத்தினேன்.

பொதுவாக படத்தின் கருப்பொருள் அத்தனை சுவாரஸ்யமற்று இருந்தாலும், படத்தின் கருப்பொருளோடு பரிச்சயமானவர்கள் படத்தைப் பாராட்டினார்கள்.

இப்படம் பின்னர் டோக்கியோ திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டது. பின்னர் லண்டனில் உள்ள ஒரு நிறுவனத்தினர் இப்படத்தை உலகின் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்தனர்.

விவரங்களைச் சேகரிப்பது

சேகரித்த விவரங்களை முறைப்படுத்துவது

பின்னர், முறைப்படுத்திய விவரங்களை அடைகாப்பது

என மூன்று செயல்முறைத் திட்டங்களைப் பார்த்தோம்.

அப்படியானால், இறுதியான நான்காவது செயல்முறைத் திட்டம் என்ன? இது குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

Pin It