உணவுக்கு அடுத்து மனிதர்க்கு அவசியம் தேவைப்படுவது ஆடை. “ஆடையில்லாதவன் அரை மனிதன்” என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. உனக்காக உணவு; ஊருக்காக உடை” என்கிறது ஒரு சீனப் பழமொழி.

இத்தகைய பெருமை பெற்ற ஆடை உற்பத்தியின் ஜவுளித் தொழில் இன்று கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. சொந்த நாட்டின் தேவையையோ, மக்கள் நலனையோ சிறிதும் கருத்தில் கொள்ளாத மத்திய அரசின் தாராளமயக் கொள்கையாலும், வர்த்தகத்தில் கொள்ளை லாப சூதாட்டத்திற்கு உதவும் முன்பேர வர்த்தகத்தாலும் இன்று பஞ்சின் விலையும் நூலின் விலையும் என்றும் காணாத உயரத்திற்கு எகிறிவிட்டது.

இதுதான், நாட்டின் பின்னலாடைத் தொழில்கள், விசைத்தறி, கைத்தறித் தொழில்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துள்ளதற்குக் காரணம். குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு ,சேலம், நாமக்கல், கரூர், உள்ளிட்ட ஜவுளி மையங்கள் பெருத்த பாதிப்புக்கு இலக்காகியுள்ளன.

இந்த ஆண்டு டிசம்பருக்குள் 55 லட்சம் பேல்கள் பஞ்சு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளதால் பஞ்சு விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துவிட்டதென்று ஜவுளி உற்பத்தியாளர் தரப்பில் கூறப்படுகிறது. பஞ்சு, நூல் ஏற்றுமதியை மத்திய அரசு தடுத்தால் மட்டுமே - முன்பேர வர்த்தகத்திற்கு ஒரு முடிவுகட்டினால் மட்டுமே - இந்தத் தொழிலின் நெருக்கடிக்குத் தீர்வு கிடைக்கும்.

இந்த நெருக்கடியினால் தமிழகத்தில் ஜவுளி சார்ந்த 30 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், கடந்த 4 மாதங்களில் திருப்பூரிலிருந்து மட்டும் 25 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து தங்களின் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர் என்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இந்த நெருக்கடியினால் சிறு, நடுத்தர உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்தியாவில் 60 சதவிகித ஜவுளித் தொழில்கள் நடைபெறுவது தமிழ் நாட்டில்தான்.

விவசாயி பருத்தி உற்பத்தி செய்யாவிட்டால் பஞ்சும் இல்லை; நூலுமில்லை - என்றாலும் இதன் விலை உயர்வின் பலன் மட்டும் பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்குப் போய்ச் சேருவதில்லை.

மத்திய அரசு பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு உடன் தடைவிதிக்க வேண்டும். இவற்றின் விலை உயர்வைக் குறைக்க மத்திய அரசு உடன் நடவடிக்கை யெடுக்காமல் இந்த நெருக்கடிக்குத் தீர்வு இல்லை.

பெரும் பகாசுர பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு ரொம்ப தாரளமாய்க் கதவு திறந்துவிட்டுள்ள மத்திய அரசின் தாராளமயக் கொள்கைக்கும், சூதுமிக்க முன்பேர வர்த்தக அனுமதிக்கும் முடிவு கட்டாமல் விலை உயர்வைக் குறைப்பதோ, கட்டுக்குள் கொண்டு வருவதோ சாத்தியமில்லை; ஜவுளித் தொழில் நெருக்கடிக்கும் தொழிலாளர் களின் வேலையிழப்புக்கும் வேதனைக்கும் ஒரு தீர்வு இல்லை!

Pin It