ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைக்கற்றை விற்பனையில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதை அமைச்சர் ராசா செய்திருக்கிறார் என்பதை 18 மாதங்களுக்கு முன்பே மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். இந்த மெகா ஊழல் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற அவரது வேண்டுகோளை பிரதமரும் சோனியாகாந்தியும் ஏற்க மறுத்துவிட்டனர். காரணம் இந்த ஊழல் பிரதமரின் ஒப்புதலின்றி நிகழ்ந்திருக்க முடியாது என்பதுதான்.

அண்மைச் செய்திகளைப் பார்த்தால் இதில் கலைஞர் குடும்பமும் சம்பந்தப்பட்டிருப்பதாக ச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தயாநிதி மாறன் பிரதமருக்கு எழுதிய கடிதம் , கனிமொழி- நீரா ராடியா உரையாடல் , அமைச்சர் ராசா - நீரா உரையாடல் கள் ஊடகங்களில் பகிரங்கரமாக வெளிவந்துவிட்டன. மேலும், பத்தரிகையாளர் வீர்சங்வி- நீராராடியா உரையாடல், என்டிடிவி செய்தி ஆசிரியர் - நீரா உரையாடல்கள் அதை அம்பலமாக்குகின்றன.

முழுக் கடப்பாரையை விழுங்கிவிட்டு சுக்குக் கசாயம் குடித்தது போல என்ற பழமொழி க் கேற்ப அமைச்சர் ராசாவும் கலைஞரும் அப்படி ஒரு ஊழல் நடக்க வேயில்லை என்று வாய் ஓயாமல் கூறி வந்தனர். இப்போது கடப்பாரை குடலைக் கிழித்துக் கொண்டு வெளிவந்துவிட்டது. அரசியல் புகை மூட்டத்தால் ஊழல் பெருச்சாளி வெளியே வந்து தெருவில் பொதுமக்கள் பார்வையில் நிற்கிறது. உச்சநீதிமன்றம் பிரதமர் மீது குற்றம் சாட்டியுள்ளது. மன்மோகன்சிங்கை மிகவும் யோக்கியமானவர் என்று கருத்துத் தெரிவித்த பத்திரிகைகள் உட்பட இப்போது சந்தேகிக்க ஆரம்பித்துவிட்டன.

நாடாளுன்றத்தில் இடதுசாரிக்கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நாடாளு மன்றக் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டுமென்று கூறி வருகின்றன. ஆனால் இது குறித்துப் பிரதமரும் காங்கிரஸ் கட்சியும் மௌனம் சாதிக்கின்றனர். நாடாளு மன்றம் செயல்பட விடாமல் ஸ்தம்பித்து நிற்பது நல்லது என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் தோழர் சீத்தாராம் யெச்சூரி இப்படி 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஈடு செய்ய, பணத்தை வசூலிக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கேள்வி கேட்டார். மேலும், இத்தனை பெரிய தொகையை கட்டாயம் வசூலித்தாக வேண்டும். இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்குவதற்கு ஒரு ஆண்டுக்குத் தேவையான தொகை 85 ஆயிரம் கோடி ரூபாய் தான். ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊ ழலில் ஏற்பட்டுள்ள இழப்பு அதைப் போல் இரு மடங்காகும் என்று யெச்சூரி கூறியுள்ளார். ராசா மீது கிமினல் வழக்குத் தொடுத்து பெருந் தொகையான பணத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்ஜெட் பற்றாக்குறை ரூபாய் 40 ஆயிரம் கோடிக்காக பொதுத்துறைப் பங்குகளை விற்றுக் கமிசன் அடிக்கத் துடிக்கும் மத்திய அரசு இவ்வளவு பெரிய தொகையைத் தனியொரு அமைச்சரும் ஒரு குடும்பமும் கொள்ளையடிக்க எப்படி அனுமதித்தார்கள் என்பதுதான். இன்றைய கேள்வியாகும். நேர்மையாளர் என்று வர்ணிக்கப்படும் பிரதமரும் அவரது எஜமானர்களும் இதில் என்ன பங்கு வகித்தார்கள் என்பது நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரித்தால் தெரிய வரும். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்தது ஏன் என பிரதமருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதே நேரத்தில் காங்கிரஸ்- திமுக கூட்டணி தொடரும் என்று மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜியும், வீரப்ப மொய்லியும் அறிவித் துள்ளனர். யாருக்கும் வெட்கமில்லை!

முதலமைச்சர்கள் ஊழல்

ஊழல்களில் ஈடுபடுவதில் காங்கிரஸ் முதலமைச்சர், பாரதீய ஜனதாக் கட்சி முதலமைச்சர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. மகாராஷ்டிர முதலமைச்சரான அசோக் சவான் கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்குக் கட்டப்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்பை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங் கினார். இதில் கையும் களவுமாகப் பிடிபிட்டார்.

செத்த பிணத்தின் வாய்க்கரிசியைத் தோண்டு பவர்கள் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு .முதலமைச்சர்களும் தோண்டுவார்கள் என்பதைக் காங்கிரஸ் கட்சி நிரூபித்துள்ளது. நாடே நாறிய பின் அசோக்சவான் முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதே போல் கர்நாடக பிஜேபி முதல்வர் எடியூரப்பா அடுக்கடுக்கான ஊழல்களில் சிக்கியுள்ளார். நூற்றுக்குக் கணக்கான ஏக்கர் அரசு நிலத்தை தனது மகனுக்கே அடிமாட்டு விலைக்கு விற்றுக் கையும் களவுமாய் பிடிபட்டுள்ளார். மேலும், எடியூரப்பா குவாரிகளை ஒதுக்கியதில் 20 கோடி , 30 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்களும் வந்துள்ளன. பிஜேபியின் அகில இந்தியத் தலைமை ராஜினமா செய்யக் கூறியும் எடியூரப்பா மறுத்துவிட்டார். 120 எம்எல்ஏக்கள் தன்னை ஆதரிப் பதால் முடியாது என்றார். இவர்களெல்லாம் மக்களிடம் ஓட்டு வாங்கும் போது ஊழலை ஒழிக்கப் போவதாய் வாக்குறுதியளித்தவர்கள்தான். எல்லாவற்றையும் உதிர்த்தவர்கள்!

குழந்தைக் கடத்தல்கள்

சமீப காலமாக தமிழகத்தில் பள்ளிக்குழந்தைகளைப் பணம்பறிக்கும் நோக்குடன் கடத்துவது அதிகரித்துள்ளது. காவல்துறை நடவடிக்கையெடுத்தும் கடத்தல் தொடர் கிறது. கோவையில் குழந்தைகளைக் கடத்திக் கொலை செய்த குற்றவாளியை காவல்துறை என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தது. இதைப் பொதுமக்களில் ஒரு பகுதி ஆதரித்தாலும் காவல்துறை மனித உரிமைகளை மீறுவதை அனுமதிக்கக் கூடாது.

முதல்வர் குடும்பத்தினர் வெளியிடும் படங்களின் திருட்டு விசிடிகளைப் பிடிக்கும் அளவுக்கு, கொடூரக் குற்றச் செயல்கள் பற்றி காவல்துறை கண்டிப்புடன் இருப்பதில்லை. இதனால் கொலை, கொள்ளை பைக் வழிப்பறிகளும், கூலிப்படைகளின் செயல்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. இதில் ஆளுங்கட்சியின் தலையீடுகளால் குற்றவாளிகள் தப்பி விடுவதாகவும் செய்திகள் வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் தமிழக மக்களிடம் அதிருப்தியையும் கோபத்தையும் வளர்த்து வருகின்றன. குழந்தைக் கடத்தல்கள் பெற்றோர்களை பீதியடையச் செய்கின்றன.

துரியோதனர்கள்

வங்கம், கேரளம் , திரிபுரா ஆகிய இடதுசாரி அரசு களின் அமைச்சர்களைத் தவிர அனைத்து மாநிலங் களிலுமுள்ள முதலாளித்துவக் கட்சிகளின் அமைச் சர்கள் மண்ணாசை வெறி பிடித்து அலைகிறார்கள். லஞ்ச ஊழலில் ஈடுபட்டுச் சேர்த்த பணத்தை வைத்து நிலங்களை வாங்கிக் குவிக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இது அதிகாரித்துள்ளது. மண்ணாசை கொண்ட துரியோ தனர்களாய் மந்திரிகள் வலம் வருகிறார்கள்.

தமிழகத்திலும் நிலங்களை விவசாயிகளிடம் அதிகமான விலை கொடுத்து வாங்கிக் குவிக்கிறார்கள். நிலத்தை விற்க மறுக்கும் விவசாயிகள் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் அமைச்சராக இருந்த என்.கே.பி.ராஜா இது போன்ற தாக்குதல் வழக்கில் சிக்கி அமைச்சர் பதவியையும், மாவட்டச் செயலாளர் பதவியையும் இழந்தார். தற்போது மீண்டும் அப்பதவி கிடைத்துள்ளது.

அண்மையில் சேலம் மாவட்டத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். தங்களுக்குச் சொந்தமான 13 ஏக்கர் நிலத்தை விற்க மறுத்ததற்காக ஒரு விவசாயக் குடும்பமே கொலை செய்யப்பட்டுள்ளது. சிறையிலுள்ள தம்பி மகனை அமைச்சர் வீரபாண்டியார் சிறையில் சந்தித்துப் பேசியுள்ளார். இதில் கடும் கண்டனத்திற்கு ஆளாகி அமைச்சர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சூ கி விடுதலை

பர்மிய ராணுவ ஆட்சிக் கெதிராகப் போராடி வரும் ஆங் சான் சூகி 15 ஆண்டு வீட்டுச் சிறை வாசத்தி லிருந்து விடுதலை பெற்றுள்ளார். ஜனநாயத்துக்கான போராட்டத்தில் அவருக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே நோபல் பரிசு கிடைத்தது. ராணுவ நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி தனது வாழ்வின் 15 ஆண்டு காலத்தைத் தனிமைச் சிறையில் கழித்துள்ளார்.

உலகில் நெல்சன் மண்டலோவுக்குப் பிறகு அதிக காலம் சிறையிலிருந்த பெண் தியாகி இவர்தான். விடுதலையானதும் ராணுவ ஆட்சிக்கெதிரான போராட்டம் தொடரும் என்றும், ஜனநாயக ஆட்சி வரும் வரை போராட்டம் முற்றுப் பெறாது என்றும் சூகி அறிவித்துள்ளார். உலகமே அவரை வாழ்த்துகிறது.

Pin It