இந்தியாவின் சிறந்த நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் அமீர்கான். தொடர்ந்து மக்களுக்கான சினிமாக்களை வழங்கி வருகிறார். அண்மையில் அவர் தயாரிப்பில் வெளிவந்துள்ள பீப்லி திரைப்படம் இந்திய விவசாயிகளின் அவலத்தை அப்பட்டமாய்த் தோலுரித்துக் காட்டுகிறது. விவசாயிகளின் வாழ்க்கை அவலங்கள், ஆளுவோரின் துரோகம், அரசு அதிகாரிகளின் அலட்சி யம், அரசியல்வாதிகளின் ஏமாற்று வித்தைகள், ஊடகங்களின் பம்மாத்து அரசியல் ஆகியவற்றைப் படம் அம்பலப்படுத்துகிறது.

கடந்த ஓராண்டு காலத்தில் ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதுவேறு பல மாநிலங்களுக்கும் பரவி வருகிறது. தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு அரசு ஒரு லட்சம் ரூபாய் வழங்குகிறது. ஒரு விவசாயியின் உயிருக்கு நம் நாட்டு அரசுகள் நிர்ணயித்துள்ள விலை ஒரு லட்சம் ரூபாய் தான். கடன் தொல்லைக்கு ஆளாகி நிலத்தை லேவாதேவிக்காரர்களிடம் பறி கொடுப்பதற்குப் பதில் தனது உயிரைக்கொடுத்துத் தனது குடும்பத்திற்கு ஒரு லட்சம் கிடைத்தால் அவர்களாவது வாழட்டும் என்ற நினைப்பைத் தூண்டுகிறது. இத்தகைய சூழலை அரசுகள் இரக்கமற்ற முறையில் உருவாக்கிவருகின்றன.

தற்கொலைகள் முதலில் ஆந்திர பருத்தி விவசாயிகளிடம் தொடங்கியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா பகுதிக்கு பரவியது. பின்பு மத்திய பிரதேசத் திலும் இக்கொடுமை பரவியுள்ளது. விவசாயிகளின் இந்தத் தற்கொலைக்குக் காரணம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததுதான். கொடும் வட்டிக் காரர்களின் தாக்குதலில் இருந்து தப்புவதற்குத் தங்கள் கிட்னியைக்கூட விவசாயி கள் விற்கும் நிலை ஏற்பட்டது. அதன் உச்சகட்டமாய் தற்கொலை இப்போது முன்னுக்கு வந்துள்ளது.

குறைந்த செலவில் நிறைந்த மகசூல், அதிக லாபம் என்று அமெரிக்க விதை கம்பெனிகளின் (மான்சாட்டோ) அசைவார்த்தைகளை நம்பி ஏராளமாய்க் கடன் வாங்கி விவசாயிகள் முதலீடு செய்தனர். பூச்சிகளின் தாக்குதலாலும், விளைச்சலுக்கு நியாயமான விலை கிடைக்காமையாலும் பாதிக்கப்பட்டனர். கடனைத் திருப்பிச்செலுத்த முடியாமல் வறுமைப் படுகுழியில் தள்ளப் பட்டனர். கடனுக்காகத் தங்கள் நிலங்களை இழந்தனர். இதனால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தொலைக்காட்சிகளில் பகாசுர நிறுவனங் கள் ஏராளமாய் வந்து வளர்ந்துவிட்டன. செய்தி களை யார் முந்தித்தருவது என்பதில் அந்த ஊடகங் களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஊடகச் செய்தியாளர்கள் அசுரப் பசியோடு வெறிப்பிடித்து அலைகிறார்கள். அறிவார்ந்த செய்திகளை விட மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் செய்திகளைத் தான் அவர்கள் முக்கியத்துவப்படுத்துகிறார்கள்.

இந்தச் செய்தி ஊடகங்கள் மிகவும் பெரிது படுத்திக்காட்டும் செய்திகளால் உருவாகும் விளைவுகள் பற்றிக் கவலையே படுவதில்லை. மக்களை உணர்ச்சிமயமாக்கி தங்கள் விளம்பர வியாபாரம் செழிக்க வேண்டும் என்ற நிலையே மேலோங்கியுள்ளது. இதை “பீப்லி” திரைப்படம் வெட்ட வெளிச்சமாக்குகிறது. பீப்லி சம்பவத்தை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் எப்படிப் பயன் படுத்துகிறார்கள் என்பதையும் படம் அம்பலப் படுத்துகிறது.

பீப்லி என்பது மத்தியப்பிரதேசத்திலுள்ள ஒரு கிராமம், அதில் விவசாயத்துக்குக் கடன் வாங்கி ஒரு ஏழை விவசாயி தனது நிலத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. தனது நிலத்தைக் காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சிகள் வீணா கின்றன. அவர் ஒரு தாதாவிடம் தனது அண்ண னோடு உதவி கேட்டுச் செல்கிறார். தாதா அவரிடம் கிண்டலாக, “நீ தற்கொலை செய்துகொண்டால் அரசு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும். அதை வைத்து உன் குடும்பம் நிலத்தைமீட்டுக் கொள்ளலாம்” என்று கூறுகிறான்.

விவசாயியின் அண்ணன் தனது தம்பியைத் தற்கொலை செய்யத் தூண்டுகிறார். அந்தச் செய்தி தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளுக்குத் தெரிந்து உடனே கிராமத்திற்குப் பாய்ந்து வருகி றார்கள். அனைத்து ஊடகங்களும் இந்தத் தற் கொலைச் செய்தியைப் போட்டிபோட்டுப் பெரிதாக விளம்பரம் செய்து விடுகின்றன. அந்த நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. முதலமைச்சரே அத்தொகுதியில் போட்டியிடுவதால் எதிர்க்கட்சி தற்கொலைச் செய்தியைப் பெரிதுபடுத்திப் பிரச்சாரம் செய்கிறது. எப்படியும் விவசாயியைத் தற்கொலை செய்யவைக்க முயற்சிக்கிறது. ஆளுங்கட்சி அதைத் தடுக்க முயற்சிக்கிறது.

செய்திகளின் பரபரப்பால் பீப்லி கிராமத்தில் திருவிழாக் கூட்டமாகிவிடுகிறது. எதிர்க்கட்சி விவசாயியை எப்படியும் தற்கொலை செய்து கொள்ள வைத்துவிட முயற்சிக்கிறது. போலீசும், தாதாக்களும் இதைக் கண்காணிக்கின்றனர். ஒரு மனிதன் உயிரைவிடும் விஷயம் துயரத்துடன் பார்க்கப்படாமல் கீழ்த்தரமான உணர்ச்சிகளே வெளிப்படுகின்றன. இந்தக் களேபரத்தில் விவ சாயி தப்பியோடி நகரத்தில் கட்டிடத் தொழிலாளி யாக மாறிவிடுகிறார். அவரைக் கொலை செய்ய வைக்கப்பட்ட வெடிகுண்டில் ஒரு நிருபர் சாகிறார். அது தற்கொலை செய்யவேண்டிய விவசாயியின் பிணம் என்று முடிவு செய்யப்படுகிறது. சாவு விபத் தால் ஏற்பட்டது என்று கூறி ஒரு லட்ச ரூபாய் வழங்க அரசு மறுத்து விடுகிறது.

அரசு மற்றும் அதிகாரிகளை விவசாயியின் தாயும், மனைவியும் மிகுந்த கோபத்துடன் திட்டு கிறார்கள். இன்றைய விவசாயிகளின் பரிதாப நிலை, அரசு அறிவிக்கும் மோசடியான அறிவிப்புகள், ஊடகங்கள், அரசியல்வாதிகளின் சுயநலம் படம் முழுக்க அம்பலமாகிறது. இந்த இந்திப்படம் அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுத் திரையிடப்பட வேண்டும். அமீர்கானின் அற்புதமான படம் இது.

Pin It