அது எம்ஜிஆர். ஆட்சிக் காலம். சிறுவிவசாயிகள் பெற்ற கூட்டுறவுக் கடனுக்கான அசல் வட்டி, அபராத வட்டி முழு வதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்; விவசாய மின் கட்டணச் சுமையைக் குறைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக விவசாயிகள் போராடுகிறார்கள். இது சம்பந்த மாக முனுஆதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவில் உழைக்கும் விவசாயிகள் தலைவரும் இந்நூலாசிரியருமான தோழர் கோ.வீரய்யனும் ஓர் உறுப்பினர். குழுவின் பரிந்துரை யை ஏற்று அசல்வட்டி, அபராத வட்டி முழுவதையும் அரசு தள்ளு படிசெய்தது. குழுவின் தலைவருடன் கோ.வீரய்யனும் இதர உறுப்பினர்களும் சேர்ந்து முதல மைச்சர் எம்ஜிஆரைச் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்கள்.

இனி, இந்நிகழ்வு குறித்து இந்நூலில் கோ. வீரய்யன் கூறுகிறார்-

முதல்வர், ‘இனிமேல் வீரய்யன் கடன் தள்ளுபடி கேட்க மாட்டாரே. ‘நான், ‘அது எப்படி? இனிமேல் வெள்ளம், வறட்சி, புயல் வராது என்று முதல்வர் உத்தரவாதம் கொடுத்தால் கடன் தள்ளுபடி கேட்கமாட்டேன்’ என்றேன்.

முதல்வர் சிரித்துக் கொண்டே, ‘அதுதான் தலை வர்’ என்று முடித்துவிட்டார்.

ஆம்; அதுதான் தலைவர்! பாடுபடும் விவசாயிகள் பாதிக்கப் படுகிறபோது அவர்களது கோரிக் கைக்காக உறுதியுடன் தலைமை யேற்று போராட்டக் களம் காணு பவரே மெய்யான தலைவர். அத்தகைய தலைவர் கோ. வீரய்யனின் வாழ்க்கை வரலாறு தான் இந்நூல்-தாமே எழுதிய சுயசரிதம்.

ஆர்வத் தூண்டுதலும் ஓர் உதவிதான். கம்யூனிஸ்ட் இயக்க நூல்கள் ஏராளமாய் எழுதிய பெருமை பெற்ற என். ராம கிருஷ்ணன், இந்த சுயசரிதையை எழுதுவதற்குத் தூண்டுகோலாக வும் உதவியாகவும் இருந்தார் என்று தமது ‘’என்னுரை’’யில் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார் வீரய்யன்.

“உரக்குழியில் இருந்து அனுப்பப்படும் உரம் வயலில் கொண்டுபோய்க் கொட்டிய பிறகு வயலில் தண்ணீர் பாய்ந்தபிறகு உரத்தில் மக்காமல் கிடக்கும் ஓலை தண்ணீர் அலையில் அசைந்து அசைந்து கரையோரம் வந்து ஒதுங்குவதைப்போல் நிலப் பிரபுத்துவக் குப்பைக் குழியாக இருந்த, எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கிராமத்தில் மாடு மேய்க்கும் சிறுவனாக இருந்த நான் கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் வந்து ஒதுங்கினேன். மாநிலத் தலைவர்களில் ஒருவராக என்னை தரம் உயர்த்தி அடை யாளம் காட்டிய பெருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கும் மட்டுமே சேரும்.’’

- அரசியல் வாழ்க்கையில் தாம் அடைந்த உயர்வை பெரு மையை இவ்வாறு ஒரு கவித்துவ அழ கோடும் தன்னடக்கத்தோடும் இந்நூலில் பதிவு செய்கிறார் தோழர் வீரய்யன்.

தஞ்சைபூமி,நஞ்சைபூமி மட்டுமல்ல-தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல-அது பெரும் நிலப்பிரபுத்துவ மேலா திக்கமும் அதன் குரூரங்களும் நிறைந்த பூமியும்தான். விவசாயக் கூலித் தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தி வதைத் ததற்கும், சாணிப்பால்- சாட்டை யடிக்கும் தீரமிக்க, தியாக மிக்க தனது போராட்டங்களால் முற்றுப்புள்ளி வைத்தது கம்யூனிஸ்ட் இயக்கம். அந்த மண்ணின், அத்தகைய இயக்கத் தின் வரலாற்றோடு தம் வரலாற்றையும் பின்னிஇணைத்து எழுதிச் செல்கிறார் இந்நூலில் வீரய்யன்.

‘’மனித உரிமைகளைப் பெற, சமூக ஒடுக்கு முறைகளைத் தகர்த்தெறிய, வேலைக்காக, கூலிக் காக, சாகுபடி உரிமைக்காக, நிலத்திற்காக, குடிமனைக்காகப் பல்வேறு கிராமப்புறப் போராட் டங்களை நடத்தியுள்ளோம்; வெற்றியும் பெற்றுள்ளோம். அந்த அனுபவங்களை இன்றைய நிலைக்கேற்பப் பொருத்த முயற்சி செய்வது வெற்றிக்கு உதவும். என்பதை இன்றைய தலை முறைக்கு உணர்த்தவேண்டும் என்ற உணர்வுடன் முடிந்தவரை விடுபடாமல் சுருக்கி எழுத முயற்சி செய்திருக்கிறேன்’’ என்று தமது இயக்க அனுபவங்களைப் பல்வேறு நிகழ்வுகளோடு நேர்த்தியாய் தொகுத்தெழுதி ஒரு நல்ல நூலாக வழங்கியிருக்கிறார் வீரய்யன்.

தஞ்சை மாவட்டம் சித்தா டி என்ற கிராமத்தில் ஓர் ஏழை விவசாயிக் குடும்பத்தில் பிறந்த வீரய்யன் படித்ததெல்லாம் ஆரம்பக் கல்வி மட்டும்தான். அதுவும், பகல் முழுவதும் மாடு மேய்த்துவிட்டு இரவில் திண் ணைப் பள்ளியில் படிப்பு- இரண்டு ஆண்டுகள் மட்டுமே. ஆண்டுகள் இரண்டென்றாலும் 1முதல்4-ஆம் வகுப்பு வரையான பாடப் புத்தகங்களைப் படித்துத் தேர்வு பெற்றதால் அவர் படித்தது 4-ஆம் வகுப்புவரை என்றானது! அவ்வளவுதான் அவர் படிப்பு. .அதற்குமேல் படிப்பைத் தொடர முடியாத நிலை. “18 வயதுவரையில் தினக்கூலி முக்கால் மரக்கால் நெல், ஒருஅணா கூலிக்கு எங்கள் குடும்பம் சார்பில் நான் ஒருவனாக பண்ணை வேலைக்குச் சென்று வந்தேன்.’’ - அத்தகைய வீரய்யன், சின்ன வயசிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டு, பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின், உழைக்கும் விவசாயிகள் இயக்கத்தின் தீரமிக்க - உழைக்கும் வர்க்கத் திற்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட- மிகச் சிறந்த தலைவராக உயர்ந்த வரலாற்றை நூல் முழுதும் ஏராளமான சம்பவங்களோடு விவரிக்கிறார். அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தது சாதாரண காலமல்ல. காங்கிரஸ் மத்தியஅரசு கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்து, போலிஸ் அடக்கு முறையும் கைதும் ஏவிவிடப் பட்ட 1948-50 காலம்... தஞ்சை மாவட்டத்தில் கட்சியுடன் விவசாயிகள் சங்கமும் தடை செய்யப்படுகிறது. இத்தகைய ஆபத்தான சூழலில்தான், கம்யூனிஸ்ட் இலட்சியத்தின்பால் ஈர்க்கப்பட்ட வீரய்யன் துணிந்த நெஞ்சமுடன் கட்சிக்குள் காலடி யெடுத்துவைக்கிறார்!

இளைய வயதில் இவர் படித்த முதல் அரசியல் நூல், ஆங்கிலேய மார்க்ஸிய அறிஞர் எமிலிபேர்ன்ஸ் எழுதிய “பணம்’’ எனும் நூல். “நான் படித்த முதல் கட்சிப் புத்தகம் அதுதான். அது எனக்குள் பெருந் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.’’ என்கிறர். கட்சி இயக்கத்தின் மீதும் பொது சேவையின் மீதும் முதல் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் இவரது உறவினர் எல். குப்புசாமி .

இந்நூலில், “வெண்மணி கொடூரம்’’ என்ற பகுதியைப் படிக்கையில் இன்றும் மனம் அதிரும். “இந்தத் தாக்குதலுடன் கீழத் தஞ்சையில் மார்க்சிஸ்ட் இயக்கம் அழிந்துபோகும், அந்த அதிர்ச்சியில் இருந்து நாம் மீள மாட்டோம் - மீளமுடியாது என்று அவர்கள் (நிலப் பிரபுக்கள்) போட்ட கணக்கு களை நொறுக்கி நிமிர்ந்து நின்ற துடன், எதிர்த்தாக்குதல் தொடுத்து அவர்களைப் பின்னுக்குத் தள்ளியது கட்சி’’ என்று நெஞ்சு யர்த்திக் கூறுகிறார் வீரய்யன்.

தஞ்சை மாவட்ட விவசாயி கள் இயக்கத்திற்கு தங்கள் உத்வேகமிக்க பங்களிப்புகள் செய்த ஏ.கே.கோபாலன், பி. சீனிவாசராவ், பி.ராமமூர்த்தி, ஏ.பாலசுப்ரமணியம்,எம். ஆர். வெங்கட்ராமன், என்சங்கரய்யா, ஆர்.ராமராஜ், வி.பி.சிந்தன், தியாகி வெங்கடாசலம், பி.எஸ்.தனுஷ் கோடி, கே.ஆர்.ஞானசம்பந்தம், கோ.பாரதிமோகன், செல்லமுத்து மற்றும் பல தோழர்களின் பணிகள் இந்நூலில் சிறப்பித்துக் குறிப்பிடப்பட்டுள்ளன.

வீரய்யனின் 60ஆண்டுக் கால அர்ப்பணிப்பு மிக்க மக்கள் பணி களையும் கட்சிப் பணிகளையும் சிறப்பாகப் பாராட்டி, மார்க் சிஸ்ட் கட்சித் தலைவர்கள் என்.சங்கரய்யா, கே.வரதராசன், என்.வரதராஜன்ஆகியோர் இந் நூலில் முன்னுரையும் அணிந் துரையும் வாழ்த்துரையும் வழங்கிச் சிறப்பித்திருக்கிறார்கள். மிகச் சிறந்த ஒரு விவசாயப் பாட்டாளிகள் தலைவரின் வாழ்கையையும், தஞ்சை பூமியின் தியாகமிக்க விவசாயிகள் இயக்க வரலாற்றையும் அறிய இது எல்லாரும் படிக்க வேண்டிய நூல்.

வெளியீடு: அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு மாநிலக் குழு, பி.எஸ். தனுஷ்கோடி நினைவகம், எண்.46-ஏ, வ.உ.சி. தெரு, கஸ்தூரிபா நகர், மேற்கு தாம்பரம், சென்னை- 600 045. விலை ரூ. 125.

 இதே நூலிலிருந்து

நம் தேசத்தில் ஒருபக்கம் பலகோடி பசித்த வயிறுகள் தினம் பரிதவிக்கையில், மற்றொரு பக்கம் இந்திய உணவுக் கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை உணவுத் தானியங்கள் உரிய பாதுகாப்பு செய்யப் படாமல் மழையில் நனைந்தும், எலிகள் தின்று தீர்த்தும் வீணாகும் கொடுமையை உச்சநீதிமன்றமே கண்டித்ததை நாடறியும்.

1985-ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்த கோ. வீரய்யன், இதே நிலைமை தஞ்சைமாவட்டத்தில் இருந்ததை சட்டமன்றத்தில் வேதனையுடன் சுட்டிக்காட்டிப் பேசினார். அது-

“குறுவையிலே கொள்முதல் செய்த நெல்லை பாதுகாப்பாக வைப்பதற்கு நிர்வாக ஏற்பாடுகள் இல்லாமல்- நான் அறிந்தவரை யில் தஞ்சை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன் நெல், நாற்றுமுளைத்து நாசம் ஆகியிருக்கிறது. இந்த மடித்த அரிசியை ,வாங்கிச் சாப்பிடுகிற மக்களுடைய தலையிலேதான் கட்டப் போகிறீர்கள்.”                    

Pin It