கல்வியைப் பற்றி பேசுகின்றபோது மொத்த சமூகத்தைப் பற்றியும் பேசுகின்றோம் என்றார் கல்வியியல் அறிஞர் பாவ்லோ ஃபிரையர்.

மொத்த சமூகத்தைப் பற்றியும் பேசுகின்ற கல்வியில் பொதுவான ஒரு பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவே கடும் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.

போராட்டங்களின் பின்னணியில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பான பொதுப்பாடத்திட்டத்தை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தமிழக அரசு ஏற்று, நடைமுறைப்படுத்தும் என்று ஒரு வழியாக தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு துவங்கியுள்ள நிலையிலும், பல பள்ளிகளில் பொதுப்பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வில்லை.

தமிழகத்தின் நூற்றுக்கணக்கான பள்ளிகளில் இன்னமும் மெட்ரிக் பாடத்திட்டத்தின் புத்தகங்களே விநியோகிக்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த பள்ளிகளில், மாவட்டக் கல்வித்துறைக்கு தகவல் கொடுத்து நிர்ப்பந்தித்த இடங்களில் அவசர அவசரமாக பொதுப்பாடத் திட்டத்தின்படியான புத்தகங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இரண்டு மாத காலமாக பாடப்புத்தகங்கள் குறித்து பரவலான விவாதங்கள் நடைபெற்றும் தமிழகத்தின் முக்கிய கல்வியாளர்கள், அறிவியல் இயக்கம் போன்றவை பொதுப்பாடப்புத்தகங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றின் தரம் மெட்ரிக் புத்தகங்களை விட, பழைய பாடத்திட்ட புத்தகங்களை விட மேம்பட்டது என அறிவுறுத்திய பிறகும் சென்னை உயர்நீதி மன்றம் விரிவான தீர்ப்பினை வழங்கியபிறகும் தனியார் பள்ளி முதலாளிகளுக்கு பொதுப்பாடத்திட்ட புத்தகங்கள் குறித்த வெறுப்பு நீங்கிவிடவில்லை.

இதுநாள் வரை அடித்து வந்த பெருங்கொள்ளையை அபகரித்து விடும் விஷயமாகவே பொதுப்பாடத்திட்டத்தையும், பாடப்புத்தகங்களையும் பார்க்கிறார்கள். பாகுபாடு நிலவுவது வியாபாரத்திற்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.

மேலும் சமூகத்தின் மேல்தட்டு வர்க்க குழந்தைகள் பயிலும் பள்ளி நிர்வாகங்களோ சமூக மேலாதிக்க உணர்வோடு பொதுப்பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுத்து வருகிறார்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட குழந்தைகள் படிப்பதை எல்லாக் குழந்தைகளும் படிப்பதா? பாகுபாடு வேண்டும் அதைவிட தரமானது என்றில்லை, எங்களுடையதுதான் உயர்வானது என்று சொல்லிக்கொள்வது பாகுபாடு பாடத்திட்டத்தில் தேவை என்பது அவர்களின் எண்ணம்.

ஆனால் சமூகநீதிக்கு எதிரான இத்தகைய செயல்களை வேடிக்கை பார்க்கும் தமிழக அரசின் செயல்தான் வேதனையானது.

பொதுப்பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதை கண்காணிக்க விரிவான ஏற்பாடுகள் தேவை, மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளதா? பொதுப்பாடப் புத்தகங்கள் பயிற்று விக்கப்படுகிறதா? என்பது உறுதி செய்யப் பட வேண்டும் என சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்தபோதே மாணவர்- வாலிபர் அமைப்புகள் வலியுறுத்தினோம்.

ஆனால் பொதுப்பாடத்திட்டத்தையே வேண்டா வெறுப்பாக நடைமுறைப்படுத்திய அரசுக்கு நமது குரல் காதில் விழ நியாயமில்லைதான்.

ஆனால் சமச்சீர் கல்விக்காகவும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் நடந்த போராட்டங்கள் அரசை அசைத்திருக்கின்றன. பள்ளிக்கல்விக்கான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று முடிந்த மூன்று தினங்களுக்குப் பிறகு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் துப்புரவு உள்ளிட்ட புதிய பகுதிநேர பணியிடங்கள் உருவாக்கம் , புதிய வகுப்பறைகள், குடிநீர், கழிப்பிடங்கள் கட்டுவது போன்ற புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது வரவேற்புக்குறியது.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்தப்பட வேண்டும் என்பது நமது நீண்ட நாளைய கோரிக்கை. புதிய அறிவிப்புகளால் அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படக்கூடிய அதே வேளையில் பாடத்திட்டத்திலும், புத்தகத்திலும் சமமின்மை நிலவினால் பாகுபாடுகள் தொடர்ந்தால் பாகுபாடுகளைக் காட்டியே தனியார் கல்வி நிறுவனங்கள் பொய்யாக அவர்களது மேன்மையை நிறுவவும் அதன் மூலம் பள்ளிக்கல்வியை வியாபாரமாக்கவும் முயல்வார்கள் எனவே பொதுப்பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதை உறுதியுடன் கண்காணிக்க வேண்டியது அரசு பொறுப்பாகும்.

2009 பொதுப்பாடத்திட்ட சட்டத்தில் பலவித தேர்வு முறைகளும் மாற்றப்பட்டு ஒரே விதமான தேர்வு முறை கொண்டுவரப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைக்குள்ள தேர்வு முறைகளில் சீர்திருத்தம் அவசியம் தேவைப்படுகின்றது. மனப்பாடத்திறன் மட்டுமே இன்றைய தேர்வுமுறையால் மதிப்பீடு செய்யப்படுகின்றது.

சர்வதேச அளவில் பள்ளிக்கல்வியில் பகுப்பாய்வு செய்தல் கிரியேட்டிவிட்டி,செயல்வழிகளில் கற்று அவற்றை பரிசோதித்தல் போன்ற திறன்கள் தேர்வுகளில் மதிப்பிடப் படுகின்றன நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் அத்தகைய தன்மையில் தேர்வு முறை மாற்றியமைக்கப்பட்டு மாணவர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. எனவே தமிழகத்தில் புதிய தேர்வு முறை உருவாக்கப்பட வேண்டும். சில தனியார் பள்ளிகளில் பாடங்களை மனப்பாடம் செய்விக்க மனித உரிமைக்கு விரோதமான முறைகள் கடைபிடிக்கப்படுவதை நாம் அறிவோம். புதிய தேர்வு முறை அதை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுப்பாடத்திட்டத்தை முறையாகவும் உறுதியாகவும் நடைமுறைப்படுத்துவதுடன் தேர்வுமுறைகளிலும் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்து சமச்சீரை ஏற்படுத்த வேண்டும் தமிழக அரசு இதை நோக்கி பயணிக்குமா?

Pin It