உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது பாலஸ்தீனம். எங்களை சுதந்திர தேசமாக அங்கீகரியுங்கள் என்று வரலாற்றின் கதவுகளை தட்டியிருக்கிறது யாசர் அராபத்தின் பூமி. நீண்ட நெடுங்காலமாக காலனி ஆதிக்கத்தாலும் ஏகாதிபத்தியத்தாலும் தாக்குண்டு, இன்றளவும் இஸ்ரேல் எனும் ஏகாதிபத்திய ஏவலாளியின் கொலைக்களமாக தவித்துக்கொண்டிருக்கும் பாலஸ்தீனம், தனது விடுதலை முழக்கத்தை மீண்டும் ஒருமுறை உரத்து எழுப்பியிருக்கிறது.

193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை 194வது நாடாக பாலஸ்தீனத்தையும் அங்கீகரித்து இணைத்துக் கொள்ள வேண்டுமென, நியூயார்க்கில் நடைபெற்று வருகிற ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் முழக்கமிட்டிருக்கிறார் பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ்.

இந்தியா உள்பட 160க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்தின் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் எதிர்பார்த்தது போலவே அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ் என ஏகாதிபத்திய சக்திகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எப்படியேனும் பாலஸ்தீனத்தின் கோரிக்கையை நிராகரித்துவிட வேண்டும் என்பதில் இவர்கள் முனைப்பாக உள்ளனர்.

சுதந்திரத்தைப் பற்றியும், ஜனநாயகத்தைப் பற்றியும் வாய்கிழியப் பேசும் அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும், தனி நாட்டில் வாழ்கிற மக்களாக இருந்தபோதிலும், சுதந்திர தேசமென ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்படாத மக்களாக பாலஸ்தீன மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு சுதந்திர நாடு அல்ல என்ற எண்ணத்திலேயே இஸ்ரேலும் தான் நினைக்கும்போதெல்லாம் பாலஸ்தீனத்தை துவைத்து எடுக்கிறது; குண்டுமழை பொழிகிறது; காசாவிலும் மேற்குகரையிலும் வாழ்கிற பாலஸ்தீனர்களை ஓட ஓட விரட்டுகிறது; அவர்களது வாழ்வாதாரத்தைப் பறிக்கிறது.

மத்திய தரைக்கடல் பிரதேசத்தில் ஜோர்டான், துருக்கி, எகிப்து, சிரியா ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ளன இஸ்ரேலும் பாலஸ்தீனமும். இதில், மேற்குகரை எனும் பகுதியும் காசா எனும் பகுதியுமாக இரண்டு தனித்தனி பகுதிகளாக பாலஸ்தீனம் இருக்கிறது. இவ்விரண்டு பகுதிகளுக்கு இடையில் இஸ்ரேல் ஒரு பெரும் பிரதேசமாக இருக்கிறது. மேற்குகரை மற்றும் காசா ஆகிய பகுதிகளைச் சேர்த்து மொத்தம் 6 ஆயிரத்து 200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நாடாக பாலஸ்தீனம் இருக்கிறது. அடிப்படையில் பாலஸ்தீனத்தின் இரண்டு பிரதேசங்களும் புவியியல் அமைப்பில் தனித்தனி பகுதிகளாக பிரிந்து இருக்கின்றன; எனினும் இடையில் இருக்கும் இஸ்ரேலின் வழியாக இவ்விரண்டு பகுதிகளையும் இணைக்கும் விதத்தில் மிக நீண்ட சாலை போக்குவரத்து நடந்து வந்தது. அதை இஸ்ரேல் தடுத்துவிட்டது.

பாலஸ்தீனம் எனும் பூமியாகத்தான் ஒட்டுமொத்த பிரதேசமும் இருந்தது. 1947ல் இப்பிரதேசத்தில் காலனி ஆதிக்க ஆட்சி நடத்திவந்த பிரிட்டன், அமெரிக்காவின் உதவியோடு, யூத மக்களுக்கென்று ஒரு நாடு என்ற பெயரில் இஸ்ரேலை உருவாக்கியது. பாலஸ்தீனத்தை துண்டாடியது. காலனி ஆதிக்க நயவஞ்சகர்கள் நடத்திய இந்தப் பிரிவினையால் இருதரப்பு மக்களும் பிரிந்து நிற்பது வரலாற்றின் கட்டளையாக மாறிப்போனது.

இந்தப்பின்னணியில் 1967ல் இரு பகுதியினருக்கும் இடையே நடந்த போரைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் தலைநகரமாக ஜெருசலேம் நகரின் கிழக்குப் பகுதியை பிரித்து அறிவிக்க வேண்டுமென பாலஸ்தீனர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பாலஸ்தீனம் தொடர்ந்து கூறிவருகிறது.

மேற்கு கரையில் 26 லட்சம் மக்கள்; காசா பகுதியில் 16லட்சம் பேர்; கிழக்கு ஜெருசலேம் நகரில் 2லட்சத்து 70 ஆயிரம் பேர் என பாலஸ்தீனர்களின் மொத்த மக்கள்தொகை சுமார் 50 லட்சம் ஆகும். இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள்; கிறிஸ்தவ மக்களைச் சேர்ந்தவர்களும் கணிசமாக இருக்கிறார்கள்.

இவர்கள் தவிர மேற்குகரையில் 3லட்சம் யூதக்குடியிருப்புகள் உள்ளன. கிழக்கு ஜெருசலேமில் 2லட்சம் யூதக் குடியிருப்புகள் உள்ளன. காசா பகுதியிலும் யூத மக்களை இஸ்ரேல் வலுக்கட்டாயமாக குடியமர்த்தியது அங்குள்ள பாலஸ்தீனர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் நோக்கிலேயே இதைச் செய்தது. பின்னர் 2005ம் ஆண்டில் சர்வதேச நிர்ப்பந்தத்தின் காரணமாக, தங்களது யூதக் குடியிருப்புகளை காசாவிலிருந்து இஸ்ரேல் வாபஸ்பெற்றது.

பாலஸ்தீனர்களின் மொழியாக அரேபிய மொழி நீடிக்கிறது. இந்த தேசத்திற்கென்று கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களும் சிவப்பு முக்கோணமும் கொண்ட கொடி இருக்கிறது. இந்தக்கொடியை 1964லிலேயே ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களும் அங்கீகரித்துவிட்டார்கள். ஆனால் தற்சமயம் தனது ஆளுகையில் இருக்கும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீன மக்கள் இந்தக் கொடியை பயன்படுத்தக்கூடாது என 1993ல் இஸ்ரேல் தடைசெய்தது.

மிகச்சிறந்த கால்பந்து வீரர்களையும், வீராங்கனைகளையும் கொண்ட நாடு பாலஸ்தீனம். ராணுவமோ, விமானப்படையோ, கப்பற்படையோ இல்லை. ஆனால் பாலஸ்தீனர் ஒவ்வொருவரும் விடுதலைக்கான போராளிகளாக வலம் வருகிறார்கள்.

யாசர் அராபத்தின் மரணம் வரையிலும், மேற்குகரை மற்றும் காசா பகுதியில் இரண்டிலுமே பாலஸ்தீன விடுதலை அமைப்பும்(பிஎல்ஓ), அதில் பிரதான அமைப்பான ஃபதா இயக்கமும் செல்வாக்குடன் திகழ்ந்தன.

அராபத்திற்கு பிறகு காசா பகுதியில் ஹமாஸ் இயக்கம் முன்னிலை பெற்றது. 18 மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் காசாவில் ஹமாஸ் இயக்கம் வெற்றிபெற்றது. அங்கு அவ்வமைப்பின் ஆட்சி நடந்து வருகிறது. மேற்குகரையில் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் ஆட்சி நடந்து வருகிறது. எனினும் ஒட்டுமொத்த நாட்டையும் பிஎல்ஓ எனப்படும் பாலஸ்தீன விடுதலை அமைப்பே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த அமைப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்துள்ளது.

1947ல் இஸ்ரேல் உருவான போதே இஸ்ரேல் ஒரு தனிநாடு; பாலஸ்தீனம் ஒரு தனி நாடு என்று ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்து அறிவித்தது. இதற்காகவே ஐ.நா. சபையில் தீர்மானம் 181 நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் 1969ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களோடு சேர்த்து 1974ல் தீர்மானம் 3236 நிறைவேற்றப்பட்டது. இதன்படி பாலஸ்தீனம் சுதந்திரமும் இறையாண்மை மிக்க ஒரு நாடு என்ற உரிமையை ஐக்கிய நாடுகள் சபை உறுதிசெய்தது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் பாலஸ்தீன விடுதலை அமைப்பிற்கு ஐ.நா.சபையின் பார்வையாளர் என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டது. பின்னர் ஐ.நா.சபையின் விவாதங்களில் பங்கேற்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. 1998ல் பாலஸ்தீனமும் இஸ்ரேலும் அமைதி உடன்பாட்டை மேற்கொள்ள தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்ததைத் தொடர்ந்து, ஐ.நா.சபையின் நிரந்தர அழைப்பாளர்களாக பாலஸ்தீன விடுதலை அமைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் என்ற பிரச்சனையில் இத்தகைய நீண்ட பின்னணி இருக்கிறது என்ற போதிலும், பாலஸ்தீனம் ஒரு சுதந்திரமான இறையாண்மை மிக்க நாடே என ஐ.நா.சபையே அங்கீகரித்துள்ள போதிலும் இஸ்ரேலும் அமெரிக்காவும் அவற்றின் கூட்டாளிகளும் இன்றளவும் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேலின் ஒரு பகுதியே பாலஸ்தீனம் என்று கூறுவதற்கும், எனவே மேற்குகரையிலும் காசாவிலும் தனி ஒரு ஆட்சி நடத்துவதற்கு உரிமை இல்லை என்று கூறுவதற்கும், இஸ்ரேலிய மக்களை மேற்குகரையிலும் காசாவிலும் குடியேற்றலாம் என்று கூறுவதற்கும் இஸ்ரேலில் நீண்டகாலமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வரும் வலதுசாரி பிற்போக்கு இனவெறி சக்திகள் முயற்சித்து வருகின்றன. அந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே பாலஸ்தீனப் குதிகளை கண்மூடித்தனமாக இஸ்ரேல் தாக்குகிறது.

இத்தகைய பின்னணியிலேயே, எங்கள் தேசம் ஒரு சுதந்திர தேசம் என்ற முழக்கம் பாலஸ்தீனத்தில் வலுத்தது. ஐக்கிய நாடுகள் சபையில் ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக, அதில் உரையாற்றிய ஜனாதிபதி முகமது அப்பாஸ், ஐ.நா.சபையின் 194வது நாடாக, சுதந்திரமும் இறையாண்மையும் மிக்க நாடாக பாலஸ்தீனத்தை இணைத்துக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை சாசனத்தையும் அளித்தார்.

அதற்கு முன்பு, பாலஸ்தீனத்தின் இந்த முயற்சியை முறியடிப்பதற்கு அமெரிக்காவின் தரப்பில் பல முயற்சிகள் நடந்தன. பேச்சுவார்த்தை என்ற பெயரில் இழுத்தடித்து விடவும் முயற்சி நடந்தது. எதற்கும் பணியாத பாலஸ்தீன ஜனாதிபதி தனது நாட்டின் கோரிக்கையை முன்மொழிந்தார்.

“துணிச்சல் மிக்க, பெருமை வாய்ந்த எமது மக்களுக்கான நேரம் வந்துவிட்டது; பல பத்தாண்டுக் காலமாக வீடிழந்து, உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்து இடம்பெயர்ந்துகொண்டிருந்த எமது மக்களின் துயரம், காலனி ஆதிக்கத்தின் கீழும் இடைவிடாது தாக்குதலின் கீழும் வீழ்ந்து கிடந்த எமது மக்களின் துயரம் துடைக்கப்படுகிற தருணம் வந்துவிட்டது; இப்பூவுலகின் இதர அனைத்து மக்களைப்போலவே நாங்களும் சுதந்திரமானவர்களாக இறையாண்மை மிக்கவர்களாக விடுதலையடைந்த தாய்நாட்டின் மக்களாக வாழ்வதற்கான தருணம் வந்துவிட்டது” என்று உணர்ச்சிக் கொந்தளிப்புடன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் முழக்கமிட்டார் பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ்.

ஐ.நா. பொதுச்சபை இத்தீர்மானத்தை ஆதரித்தாலும், பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அங்கு அமெரிக்காவும், பிரான்சும் பிரிட்டனும் இதை ஒழித்துக் கட்ட முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தவிதத்திலும் இந்த ஏகாதிபத்திய நாடுகள் சுதந்திர பாலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

அதுமட்டுமின்றி ஐ.நா.சபையில் சுதந்திர நாடு என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டுவிட்டால் மட்டும், நீண்டநெடுங்காலமாக நீடித்து வரும் பாலஸ்தீன பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடுமா? என்ற கேள்வியையும் சர்வதேச நோக்கர்கள் எழுப்பியுள்ளனர்.

இதற்கு பாலஸ்தீனர்கள் பதில்சொல்கிறார்கள்: “இல்லை. பிரச்னை உடனே தீர்ந்துவிடாது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சுதந்திர தேசத்தின் மீது இஸ்ரேல் அத்துமீறி தாக்குதல் நடத்த முடியாது; இரு தரப்புக்கும் இடையிலான பிரச்னையை இருவேறு நாடுகளுக்கு இடையிலான பிரச்னை என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்ப்பதற்கு இஸ்ரேலுக்கு சர்வதேச நிர்ப்பந்தம் அதிகரிக்கும்.இஸ்ரேலின் தலையீடின்றி, பிற நாடுகளின் தலையீடின்றி சுதந்திரமான, கவுரவமான வாழ்க்கையை வாழ்வதற்கான எமது மக்களின் உரிமையை உலகளாவிய முறையில் உரத்து முழங்கி உறுதிசெய்யும் முயற்சியின் ஒரு படியே இந்த அங்கீகாரப் போராட்டம்”.

Pin It