ஓய்வில் இருப்பவர்கள் பொதுவாக காலையில் நடைப்பயிற்சிக்கு செல்வார்கள். பூங்காவில் இருந்துகொண்டு போவோர் வருவோரிடம் ஊர்க்கதைகளையும், இளமைக் கால கதைகளையும் பேசிக்கொண்டிருப்பார்கள். சிலர் பாடல் கேட்பார்கள், டிவி பார்ப்பார்கள். ஆனால், இதுவே ஒரு அரசியல்வாதியாக இருந்தால்.., அதுவும் முன்னாள் முதல்வராக இருந்தால்.., தினசரி ஒரு அறிக்கை விடுவார்கள் போல. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக இதுதான் நடந்துவருகிறது.

நகைச்சுவை சேனல்களைத் தான் மக்கள் விரும்பிப் பார்ப்பார்கள் என்பதால் அரசியலில் கூட நகைச்சுவை இல்லாமல் அவர்கள் பேசுவதில்லை. காவல்துறை ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக மாறிவிட்ட்துதமிழகத்தில் தற்போது நடக்கப்போகும் உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடக்காதாம். எப்படி இப்படியெல்லாம் முடியுதோ அறிக்கை விட? தமிழக தேர்தல் ஆணையம் அதிமுகவின் கைப்பாவையாக மாறிவிட்டதாம்.

அதனால், நியாயமான தேர்தலை நடத்த நீதிமன்றத்தின் கதவைத் தட்டப்போகிறார்களாம். இன்று இவர்கள் சொல்வதை மக்கள் கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போதே முடிவெடுத்துவிட்டார்கள். இன்று நீ, நாளை நான் என்பதுதான் திமுக, அதிமுக கட்சிகளின் அரசியல்.

அதனால், கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது திமுகவின் வன்முறையை, தொழில்முறை ரவுடிகளை வைத்து நடத்திய அதிகார தவறுகளைப் பார்த்த மக்கள் அன்றே முடிவெடுத்துவிட்டார்கள். வன்முறை விதைத்த திமுக வன்முறையால் தவிக்கும் என.

தளபதியும் ,அஞ்சா நெஞ்சரும் அனுதினம் தவறாது செல்லும் இடம் சிறைச்சாலைதான்.

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் என்னை செல்லவைத்துவிட்டார் ஜெயலலிதா என நொந்து பேசுவது தான் இன்று திமுகவின் அரசியல்.

கவர்னரிடம் மனுக்கொடுப்பது, நீதிமன்றத்தில் மனு போடுவது, சிறையில் மனு போடுவது, மனித உரிமை ஆணையத்தில் மனு போடுவது என மனு அரசியல்( பழைய மனு அல்ல) நடத்திக்கொண்டிருக்கும் திமுக, ஆட்சியில் உள்ள போது மனித உரிமை பற்றி யோசிக்காதவர்கள் என நாமறிவோம்.

. தமிழகத்தில் மனிதராக பிறந்த அனைவரும் ஒரு நாள் மனித உரிமை ஆணையத்தில் மனுக் கொடுத்து தானே ஆகவேண்டும். முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய இன்று காவல்துறை செல்கையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களை வைத்துக்கொண்டு மறியல் செய்கிறார்கள். அடக்குமுறை என ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ஜாமீன் ஜாமீன் என துடியாய் துடிக்கிறார்கள். எனக்கு மகன் உள்ளான் எனவே, ஜாமீன் தாருங்கள் என மன்றாடுகிறார்கள். ஆனால். ஆட்சியில் உள்ள போது, சமச்சீர் கல்வி கேட்டு மனுக் கொடுக்க வந்தவர்களைக் கூட அடித்து மண்டையை உடைத்து சட்டம் தன் கடமையை செய்தது என்றீர்களே, இன்று ஏன் சட்டத்துக்கு பணிய மறுக்கறீர்கள்?

உங்க கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், மனுப் போடுவீர்கள், காவல் துறையை மிரட்டுவீர்கள், ஆளும் கட்சிக்கு மிரட்டல் விடுவீர்கள். ஆனால் நீங்கள் ஆட்சியில் உள்ள போது மக்கள் மட்டும் அனைத்தையும் சகித்துக்கொள்ள வேண்டுமா? நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள், உங்கள் ஆட்சியில் காவல்துறை ஏவல்துறையாக இருந்ததா இல்லையா? தேர்தல் ஆணையம் உங்கள் கைப்பாவையாக செயல்பட்டதா சுயமாக செயல்பட்டதா? சட்டமன்றத்தில் ஜனநாயகம் மதிக்கப்பட்டதா? எதிர்க்கட்சி ஆன சில நாள்களிலேயே அவர்களும், இவர்களும் புலம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள் உண்மைகளை. ஆனால், அனுபவித்த மக்கள் சகித்துக்கொள்கிறார்களே எப்படி?

Pin It