இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமானது அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60லிருந்து 62 ஆக உயர்த்தும் மத்திய அரசின் யோசனையை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் செய்தி அறிந்தேன்.   ஏற்கனவே அரசு ஊழியரின் ஓய்வு வயதை 58லிருந்து 60 ஆக உயர்த்திய போது மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.

இது ஒருபுறமிருக்க, 6வது சம்பளக் கமிஷன் மூலம் சமூக நீதியின்மேல் ஒரு அணுகுண்டையே அரசாங்கம் போட்டுள்ளது என்ற செய்தியை உங்களது கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

பொதுவாக அரசு ஊழியர்கள் குரூப் ,, , என நான்கு வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளனர்.  உயர் அதிகாரிகள் குரூப் ஏ, இரண்டாம் நிலை அதிகாரிகள் குரூப் பி, எழுத்தர் உள்ளிட்டோர் குரூப் சி, துப்புறவு உள்ளிட்ட உடலுழைப்புப் பணியாளர்கள் குரூப் டி என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.  இதில் குரூப் சி, குரூப் டி பிரிவினர் பெரும்பான்மையினர்.  வறுமையாலும், சூழ்நிலையாலும் படிப்பை முடிக்காதவர்கள், படிக்க முடியாதவர்களுக்கு குரூப் டி பதிவிகள் நுழைவாயிலாக இருந்தன.  இதன்மூலம் ஏராளமான தாழ்த்தப்பட்டோரும், ஒடுக்கப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும், வசதியற்றோரும் அரசுப் பணியில் நுழைந்து ஓரளவு நாகரிகமான வாழ்க்கையை மேற்கொள்ளும் நிலையை அடைந்தனர்.

ஆனால் 6வது சம்பளக் கமிஷன் இதற்கும் வேட்டு வைத்து அந்த நுழைவாயிலை அடைத்து விட்டது.  ஏற்கனவே பணியில் இருக்கும் நான்காம் நிலை ஊழியர்களை மூன்றாம் நிலைக்கு உயர்த்தி விட்டு நான்காம் நிலை பணியிடங்கள் அனைத்தையும் ஒழித்து விடுமாறு தாராளமயக் கொள்கைகளை ஒட்டி சிபாரிசு செய்தது சம்பளக் கமிஷன்.  உலக வங்கி, ஐ.எம்.எப் கொள்கைகளைத் தலையில் வைத்துக் கூத்தாடும் மத்திய அரசும் அந்தப் பரிந்துரையை ஏற்று அமல்படுத்தி விட்டது.

நான்காம் நிலை ஊழியர்களை தரம் உயர்த்தினால் நாம் சந்தோஷப்படத்தானே வேண்டும் என்கிறீர்களா?  இங்குதான் உள்ளது வேட்டு.  தரம் உயர்த்தப்பட்டவர்கள் அதே பழைய பணிகளைத்தான் செய்ய வேண்டும்.  அவர்கள் ஓய்வு பெற்றவுடன் அந்தக் காலிப் பணியிடம் நிரப்பப்பட மாட்டாது.  இனி அரசுப் பணியில் நுழைய பத்தாம் வகுப்பு தேறியிருக்க வேண்டும்.  இந்தியாவின் நிலை என்ன?

மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் கல்வியைப் பொறுத்த வரை இந்தியா 128ம் இடத்தில் இருக்கிறது.  61% பெரியவர்கள் கல்வியறிவற்றவர்கள்.  76.4% இளைஞர்கள் கல்வியறிவற்றவர்கள்.  கல்வியறிவு பெற்றவர்களாகக் கருதப்படுபவர்களிலும் மிகச்சிறிய அளவினர்தான் பத்தாம் வகுப்பை எட்டிப் பிடிக்கிறார்கள்.  இப்படியிருக்கும்போது எப்படி சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் அரசு வேலைக்கு வர முடியும்?

1991ல் நகைச்சுவை அரசர், புன்னகை மன்னன் திரு.நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சி நடக்கும்போது, அதில் நிதியமைச்சராக இருந்த தற்போதைய பிரதமர் திரு.மன்மோகன்சிங் புதிய பொருளாதாரக் கொள்கையை இடதுசாரிகள், தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பை அலட்சியப்படுத்தி விட்டுக் கொண்டு வந்தார். அப்போது திட்டமில்லாச் செலவைக் குறைக்க வேண்டுமென்ற உலக வங்கியின் கட்டளையை நிறைவேற்றுவது என்ற பெயரில் அரசுப் பணிகள் மீது தாக்குதலை ஏவியது அரசு.  பன்னாட்டு முதலாளிகள் கேட்ட ‘பிவீக்ஷீமீ ணீஸீபீ திவீக்ஷீமீ’ கொள்கையை சிறிது சிறிதாக இந்தியாவில் திணித்து விடுவதாக அவர்களுக்கு வாக்குக் கொடுத்தார் பிரதமர். ‘I am not running any Dharmashala, I am running a Government’ என்று வேறு கொக்கரித்தார்.  அதாவது வேறு வார்த்தைகளில், வேலை கொடுப்பது அரசின் பணியல்ல என்றார். அதுதான் இப்போது முழுமூச்சாக நிறைவேற்றப்படுகிறது.

நான்காம் நிலை ஊழியர் ஒழிப்பு என்றால் துப்புறவுப் பணிகளோ, உடலுழைப்புப் பணிகளோ இனி அரசு அலுவலகத்தில் இருக்கவே இருக்காதா?  அதை யார் செய்வார்கள்?  விடைகாண்ட்ராக்ட் தொழிலாளர்கள்.  அதாவது இங்கும் தனியார்மயம்.  தனியார் தொழிலாளர்களின் உழைப்பு சக்தியை உறிஞ்ச கதவு திறந்து விடப்பட்டுள்ளது.  ஒரு இளைஞன் நான்காம் நிலை ஊழியராக வேலைக்குச் சேர்ந்தால் 7000_8000 ரூபாய் சம்பளம். பிறகு இன்க்ரிமெண்ட், போனஸ், ஓய்வூதியம் இன்னபிற உரிமைகள்.  இதற்கெல்லாம் வேட்டு வைத்து விட்டு அவன் அதே வேலையில் தினக்கூலியாக, அத்தக்கூலியாக பணியமர்த்தப் படுகிறான்.  சம்பளம் தினசரி 100_150.  விடுமுறை நாட்களுக்கு சம்பளம் கிடையாது.  அரசு விடுமுறை நாளுக்கும் கிடையாது.  மற்ற உரிமைகள் பற்றியோ கேட்கவே வேண்டாம்.  அரசு நலத்திட்டங்கள் இவர்களைச் சென்றடைந்து விடாமல் காண்ட்ராக்டர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.  சிஐடியு முறைசாராத் தொழிலாளர் சங்கம் போன்ற சங்கங்களில் இணைந்து விடாமலும் பார்த்துக் கொள்கிறார்கள்.  மாதிரி முதலாளியாகத் திகழ வேண்டிய அரசாங்கத்தின் லட்சணம் இதுதான்.  இது தவிர ரயில்வே கேண்டீன், பான் கார்டு வினியோகம் என பல அரசுப் பணிகள் வெளியே அவுட்சோர்ஸ் செய்யப்பட்டு விட்டன.  அங்கும் இதே கதைதான்.

செலவைக் குறைக்கிறேன் பேர்வழி என்று நான்காம் நிலை ஊழியரைக் குறைத்த அதே அரசில் குரூப் ஏ அதிகாரிகளின் எண்ணிக்கையோ நாளரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரிக்கிறது.  அவர்களுக்கு சலுகை மேல் சலுகையாக அள்ளி வீசுகிறது அரசு.  ஆறாவது சம்பளக் கமிஷன் கீழ்நிலை ஊழியருக்கு 28% மட்டுமே உயர்வு வழங்கிய அதே சமயத்தில் அதிகாரிகளுக்கு 300% வரை உயர்த்தியது.  (ரூ.30,000/ பெற்ற அதிகாரிக்கு ரூ.90,000/).   ஊதிய நிர்ணயத்தில் கீழ்நிலை ஊழியருக்கு துரோகம் இழைத்த அதே அரசு அதிகாரிகளிடம் தாராளமாக நடந்து கொண்டது.  மந்திரிகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாடாளுமன்றத்திலும் அதிகரித்தே வந்திருக்கிறது.  அவர்கள் கேட்காமலேயே அவர்களது சம்பளமும், படிகளும் உயர்த்தப்படுவதும் தெரிந்ததே.

அரசு ஊழியருக்கு கருணை அடிப்படையிலான வேலை என்று ஒன்று இருந்தது(!).  அதாவது, ஒரு அரசு ஊழியர் இறந்து விட்டால், அவரது குடும்பம் திடீரென நிர்க்கதியாக தெருவுக்கு வந்து விடக்கூடாது என்பதால் அவரது வாரிசு ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டது.  இன்று கருணை அடிப்படையிலான வேலைக்கும் உச்சநீதி மன்றத்தின் ஒரு ஆணையைக் காட்டி வேட்டு வைக்கப்பட்டுள்ளது.  அதாவது நேரடி காலிப் பணியிடத்தில் 5% கருணை அடிப்படையிலான வேலைக்கு ஒதுக்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் கூறியது.  அதில் உள்ள பிரச்னைகளை ஆராய்ந்து சரியான நடவடிக்கை எடுப்பதற்கு பதில் அரசு அந்த தீர்ப்பை அப்படியே ஆணையாக்கி விட்டது.  அதாவது 20 நேரடி காலிப் பணியிடங்கள் இருந்தால் ஒரு பணியிடம் கருணை அடிப்படையிலான பணிக்கு ரிசர்வ் செய்யப்படும்.  (20 காலிப் பணியிடங்கள் இருந்தால் ஒருவர்தான் சாகலாம்!)  பெரிய அலுவலகங்களிலேயே இதற்கு வழி கிடையாது.  ஆக பல வாரிசுகள் இப்போது கருணை வேண்டி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அரசுக்கு இன்னும் கருணை வரவில்லை.

ஆக சமூகநீதிக்கு என்ன ஆனது?  அரசு ஊழியருக்கு பஞ்சப்படி வழங்கினாலே அரசு ஊழியருக்கு சம்பள உயர்வு, அடுத்த லாட்டரி என்று வரிந்து கட்டிக் கொண்டு முழங்கும் நடுநிலை நாளிதழ்கள் இந்த சமூகநீதிக் கொலையை கண்டு கொள்ளவேயில்லை. சமூக நீதிக் காவலர்களெல்லாம் எங்கே போனார்கள் என்றும் தெரியவில்லை.

எனவே 6வது ஊதியக்குழுவும், அரசும் நான்காம் நிலை ஊழியரை ஒழிப்பதன் மூலம் சமூக நீதிக்கு வைத்த அணுகுண்டை அகற்ற வேண்டிய பொறுப்பு அரசு ஊழியர் சங்கங்கள் மேலும், வாலிபர் சங்கம் தலையிலும்தான் விழுந்துள்ளது.  இந்தச் சவாலை ஏற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் களத்திலிறங்கும் வேலை தேடும் இளைஞர்களும் இந்த சவாலை எதிர்கொள்ள முன்வர வேண்டும்.

Pin It