சென்னை அரசாங்கத்திற்கு விலக்கப்பட்ட மந்திரிகளுக்கு பதிலாக ஸ்ரீமான்கள் முத்தையா முதலியாரும் சேதுரத்தினமய்யரும் நியமனம் பெற்று விட்டார்கள். இவர்களால் நமக்கு ஏற்படப் போகும் நன்மை தீமைகளை பற்றி இப்போது ஒன்றும் எழுதாமல் விட்டு விடுகிறோம்.
மந்திரிகளிடமிருந்தோ, சர்க்காரிடமிருந்தோ அல்லது எந்த விதமான அரசியல் கட்சியார் என்பவர்களிடமிருந்தோ நாம் எவ்வித அரசியல் விஷ யத்தையும் நாம் இப்போது எதிர்பார்ப்பதில்லை. அதற்கு காலம் வரும்போது அதைப் பற்றி பேசிக் கொள்ளலாம். இப்போது நாம் மந்திரிகளிடமும், அரசாங்கத்தினிடமும் எதிர்பார்ப்பதெல்லாம் நம் மக்களுக்குள்ளாகவே ஒருவருக்கொருவர் சமத்துவமும் சமசுதந்திரமும், சுயமரியாதையும் ஏற்படுவதற்கு ஆதரவுதான். இந்தக் காரியத்திற்கு எவ்வளவு தூரம் இந்த மந்திரிகள் ஆதரவளிப்பார்கள் என்பதைப் பற்றி இப்போது “ஜோசியம்” கூறும் நிலைமையில் நாம் இல்லை.
ஏனெனில் ஒரு மந்திரி பார்ப்பனர்; அதிலும் வைதீக வேஷம் கொண்ட பார்ப்பனர். வைதீக வேஷமில்லாத பார்ப்பனராகிய சர். சி. பி. அய்யரால் நமது சமூகத்திற்கு நேர்ந்த கொடுமைகளை பார்க்கும்போது வைதீக வேஷக்காரப் பார்ப்பனரால் என்ன விளையக்கூடும் என்பதைப் பற்றி யோசித்தால் பயமாய்தான் இருக்கும். மற்றொரு மந்திரி ஸ்ரீமான் முத்தையா முதலியார் ஒரு பார்ப்பனரல்லாதார். ஆனாலும் பார்ப்பனருக்கு அடுத்தபடி என்று சொல்லத்தக்க வேளாள சமூகத்தை சேர்ந்தவர். இவரால் எவ்வளவு தூரம் அனுகூலம் ஏற்படும் என்பதும் யோசிக்கக் கூடியதுதான். ஆனால் இப்போது நாம் அதைப் பற்றி பேச வரவில்லை.
இந்த இரு கனவான்களும் மந்திரி பதவி ஒப்புக் கொண்டதற்காக “தேசீய” வயிற்றுப் பிழைப்பு ஆசாமிகளின் கூக்குரலுக்குத் தான் நாம் சமாதானம் சொல்ல விரும்புகின்றோம்.
கோஹத்தி காங்கிரசுக்குப் பின்னாலும், மந்திரி வேலை ஒப்புக் கொள்ளுவதில்லை என்று சொல்லியும், முட்டுக்கட்டை போடப் போகிறோம் என்று சொல்லியும் இன்னும் என்ன என்னமோ சொல்லியும் ஓட்டு வாங்கி சட்டசபை ஸ்தானம் கிடைத்த பிறகும் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரியை மந்திரி உத்தியோகம் ஒப்புக் கொள்ளும்படி தந்தி கொடுத்த ஸ்ரீமான்கள் வரதராஜுலு போன்றோருக்கும், ‘தமிழ் நாடு’ பத்திரிகை போன்றவைகளுக்கும் ஸ்ரீமான்கள் முத்தையா முதலியாரும், சேது ரத்தினமய்யரும் மந்திரி வேலை ஒப்புக் கொண்டதைப் பற்றி பேச வாயுண்டா? எழுத கையுண்டா? என்று கேட்கின்றோம். அப்படி மீறிப் பேசினால் அது பேசும் வாயா அல்லது கழிக்கும் வாயா என்று கேட்கின்றோம். மீறி எழுதினால் அது எழுதும் கையா? உலக்கையா? என்று கேட்கின்றோம்.
நிற்க, புதிய மந்திரிகளுக்கு ஜஸ்டிஸ் கட்சியார் ஆதரவளிப்பதாக கவர்னரிடம் ஒப்புக் கொண்டதாக தெரிகின்றது என்றும், “ஜஸ்டிஸ் கட்சியின் குட்டிக்கரணம்.” “பனகால் ராஜாவின் துரோகம்” என்றும் ஆசாமிகளும், பத்திரிகைகளும் கூப்பாடு போடுகின்றன. கோஹத்தி காங்கிரசில் “மந்திரி பதவி ஒப்புக் கொள்ளவும் கூடாது, வேறு கட்சிகள் மந்திரி ஸ்தானம் பெறுவதை ஆதரிக்கவும் கூடாது” என்கின்ற தீர்மானம் நிறைவேறி இருக்கும் போதே திருட்டுத்தனமாய் பார்ப்பன அடிமைகளை மந்திரியாக்கி, அவர்களை ஆதரித்து, விஷயம் வெளியான பின்பும் ஸ்ரீமுத்தையா முதலியாரை இதைப் பற்றி கேள்விக் கேட்கக்கூட உரிமையில்லாமல் செய்ததுடன் இம்மாதிரி அயோக்கியத்தனம் செய்ததிற்காக தங்களையே தாங்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் பாராட்டிக் கொண்ட யோக்கியர்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியார் ஆதரிப்பதாக ஒப்புக் கொண்டது தப்பு ‘என்பதற்கு வாயேது; எழுத கையேது என்று கேட்கிறோம்.
ஜஸ்டிஸ் கட்சியார் இரட்டை ஆட்சி ஒழியும் வரை உத்தியோகமேற்பதில்லை என்று சொன்னது வாஸ்தவம் தான். அந்தக் கட்சி மறுபடியும் அனுமதி கொடுக்கும்வரை அவர்கள் உத்தியோகமேற்பதில்லை என்பதை காப்பாற்றி வருகின்றார்கள். ஜஸ்டிஸ் கட்சியாரை தெரிந்தெடுத்த வோட்டர்கள் உத்தியோகம் ஏற்க வேண்டாம் என்று சொல்லி தெரிந்தெடுக்கவில்லை என்பது முழுமூடனுக்கும் தெரியும். எனவே கட்சிக் கூட்டத்தின் தீர்மானம் கட்சிக் கூட்டத்திலேயே யோசித்து செய்ய வேண்டியது; செய்து கொள்ளவும் பாத்தியமுடையது. ஆதலால் அவர்கள் நாளைக்கே கூட்டம் கூடி தீர்மானித்து மந்திரி பதவிகளை ஒப்புக் கொள்வதை எந்த நியாயமும் தடுக்க முடியாது. காங்கிரஸ்காரரைப் போலவோ மற்றும் பல கக்ஷியாரைப் போலவோ, ஜஸ்டிஸ் கக்ஷியார் ஓட்டர்களை ஏமாற்றி ஓட்டர்களுக்குத் துரோகம் செய்யவில்லை என்பதை பார்ப்பனர்களும், பார்ப்பனக் கூலிகளும் உணரட்டும்.
தவிர, கோவைத் தீர்மானத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் நிபந்தனைகளுக்குள்பட்டு தாங்கள் மந்திரி பதவி ஒப்புக் கொள்ளுவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டார்களேயொழிய வேறு கட்சி மந்திரிகளை ஆதரிப்பதில்லை என்று எங்கும் எப்போதும் தீர்மானிக்கவேயில்லை.
இதையறியாத தற்குறிகளும் துவேஷக்காரர்களும் சுயநலக்காரர்களும், ஜஸ்டிஸ் கட்சியை குற்றம் சொல்வதின் கருத்தென்ன? இதில் பனகால் ராஜாவின் துரோகமென்ன? என்று கேட்கின்றோம்.
தவிர கோவை மகாநாட்டில் இரட்டை ஆட்சியென்பதைப் பற்றி பேசியபோது நிர்வாக சபையில் ஒரு பார்ப்பனர் இருந்து கொண்டு பார்ப்பனரல்லாதாருக்கு செய்த அக்கிரமங்களையும் கொடுமைகளையுமே முக்கியமாகக் குறிப்பிட்டு பேசியது அக்கூட்டத்திலிருந்த பந்தற்கால்களுக்கும் சுவர்களுக்கும் கூட நன்றாய் விளங்கியிருக்கும். அப்படி இருக்க அந்த பார்ப்பனர் ஒழிந்ததோடல்லாமல் அந்த ஸ்தானமும் ஜஸ்டிஸ் கட்சியாருக்கே கொடுப்பதானால் மற்ற மந்திரிகளிடம் ஜஸ்டிஸ் கட்சியார் வேலை வாங்கிக் கொள்வதில் யாருக்கு என்ன ஆட்சேபம்? எந்த “சத்திய தேவதைக்கு” இதில் ஆபத்து வந்து விட்டது? என்று கேட்கின்றோம்.
பார்ப்பன அடிமைகள் பார்ப்பன ஆதிக்கத்திற்கு மந்திரி வேலை ஒப்புக் கொண்டால் அது ‘தேசீயம்’ ஆகி விடுகிறது. அம்மந்திரிகள் ‘தேசீய மந்திரிகள்’ ஆகி விடுகின்றார்கள். அவர்களை வெளியில் இழுத்து விட்டுவிட்டு பார்ப்பனரல்லாதாருக்கு அனுகூலமான மந்திரிகள் வந்தால் அது ‘தேசத் துரோகம்’ ‘பனகால் துரோகம்’, ஐஸ்டிஸ் கக்ஷியார் குட்டிக் கரணம் ஆய்விடுகின்றது. என்னே பார்ப்பன சக்தி! இந்த பித்தலாட்டம் ஒழிந்தாலல்லது இந்த நாட்டுக்குச் சுயமரியாதை இல்லையென்பது நமது உறுதி.
ஜஸ்டிஸ் கட்சிக்கு ஒரு வார்த்தை :- எந்தக் காரணத்தைக் கொண்டா வது அரசாங்கத்தார் சட்ட மெம்பர் பதவியை ஒரு பார்ப்பனருக்கு கொடுப்பார்களேயானால் மறுநாளே இந்த மந்திரிகளை கவிழ்த்து விட வேண்டியது அவர்களது கடமையாகும். நமக்கு சுயமரியாதையும், சமத்துவமும், சம உரிமையுமே நமது தேசீயம் என்று உறுதியாய்ச் சொல்லுவோம். மற்றபடி வயிற்றுப் பிழைப்புக்கு தேசீயத்தைப் பற்றி நமக்கு ஒரு சிறிதும் கவலை இல்லை.
(குடி அரசு - தலையங்கம் - 18.03.1928)