“நீதிபதி கோவிந்தராஜன் குழு தீர்மானித்த கட்டணத்தையே அனைத்து பள்ளிகளும் வசூலித்திட வேண்டும். ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் பள்ளியின் தொலைபேசி கட்டணம் உட்பட அனைத்து செலவுகளையும் கணக்கிட்டு பள்ளிக்கான கல்விக் கட்டணம் தீர்மானிக்கப்படுகிறது. நீதிபதி கோவிந்தராஜன் குழு 15 கூட்டங்களை நடத்தி இறுதி செய்யும் இக்கட்டணத்தை மீறி வசூல் செய்யும் பள்ளிகள் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்’’ 2010 மே 7ல் தமிழக சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்த அறிவிப்பு இது.

நீதிபதி கோவிந்தராஜன் ராஜிநாமா என்பது 2010 அக் 22 வெளிவந்த செய்தியாகும். இந்த 6மாத கால இடைவெளியில் நடந்ததென்ன? அமைச்சர் அறிவித்தபடி நீதிபதி கோவிந்தராஜன் தீர்மானித்த கட்டணம் பள்ளிகளில் அமல்படுத்தப்படுவதற்கு மாறாக, அவரே ராஜிநாமா செய்து விட்டு போகும் அளவிற்கு என்ன நடந்தது?

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண ஒழுங்கு படுத்தும் சட்டம் என்பது 2009 ஜூலை 16ல் தமிழக அரசால் முன்மொழியப்பட்டு, ஜூலை 23ல் நிறைவேற்றப்பட்டது. 2009 ஆகஸ்ட் 7ல் அரசு இதழில் வெளியிடப்பட்டு, டிசம்பர் 7ல் அறிவிப்பும் இறுதிசெய்யப்பட்டன. இந்த சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட தனியார் கல்வி கட்டண தீர்மானிக்கும் குழுவின் தலைவர் ஒரு நீதிபதியாக இருக்க வேண்டுமென்பதால் நியமிக்கப்பட்டவர் தான் நீதிபதி கோவிந்தராஜன். இவருடைய பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும்.

இந்தக் குழு முடிவெடுத்து தனியார் பள்ளிகளுக்கான ஒரு கேள்வித்தாளை இறுதி செய்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி பள்ளியின் செலவு மற்றும் அடிப்படை வசதிகள், மாணவர் எண்ணிக்கை உட்பட அனைத்து விவரங்களையும் 10,934 பள்ளிகளில் கேட்டபொழுது 700 பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் பதில் அளித்துள்ளனர். அந்த பதில் விவரங்களை வைத்து ஆய்வு செய்த இக்குழு ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனி கட்டணத்தை தீர்மானித்தது. பள்ளியின் செலவுத் தொகை தவிர, கூடுதலாக 10 சதம் வரவையும், பள்ளி விழாக்களுக்கான செலவுகளையும் சேர்த்து தீர்மானிக்கப்பட்டது தான் கல்வி கட்டணம் என இறுதி செய்யப்பட்டது. எனவே, தீர்மானிக்கப்பட்டதை விட கூடுதலாக எந்த தொகையும் வசூலிக்க வேண்டியதில்லை எனும் அளவிற்கு பள்ளியின் அனைத்து செலவுகளும், (10 சதம் இலாபம் உட்பட) இதில் கணக்கிடப்பட்டுள்ளது.

2010 மே, 7ல் வெளியிடப்பட்ட இக்கல்வி கட்டண விவரங்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் தனி உறையில் சிடப்பட்டு முதன்மை கல்வி அலுவலர் மூலம் வழங்கப்பட்டது. தமிழக அரசும் இக்கட்டண விவரத்தை தன்னுடைய வலைத் தளத்தில் வெளியிடப்போவதாக அறிவித்தது. மேலும், அனைத்து பள்ளிகளும் தகவல் பலகையில் வெளியிட வேண்டுமெனவும், இக்கட்டணத்தை தவிர கூடுதலாக வசூலிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இக்கட்டணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தனியார் மெட்ரிக் பள்ளிகளின் சங்கம் அறிவித்தது.

ஏற்கனவே இச்சட்டம் உருவாக்கப்பட்டது முதல் எதிர்த்து வந்த தனியார் மெட்ரிக் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபொழுது 2010 ஏப்ரல் 9ல் நீதிமன்றம் இச்சட்டம் செல்லுமென தீர்ப்பு வழங்கியது. டி.எம்.ஏ பாய் நிறுவனம் (எதிர்) கர்நாடாக அரசு 2002, இஸ்லாமிக் கல்வி நிறுவனம் (எதிர்) கர்நாடக அரசு 2003, மற்றும் பி.ஏ. இனாம்தார் (எதிர்), மகாராஷ்டிரா அரசு (2005) ஆகிய வழக்குகளின் தீர்ப்பின் படி தமிழக அரசின் இச்சட்டம் செல்லுமென உயர்நீதிமன்றம் உறுதியிட்டு கூறியது. உடனடியாக உச்சநீதிமன்றத்திற்கு தனியார் பள்ளிகள் சென்றபொழுது 2010 மே, 11ல் அனுமதி கட்டத்திலேயே இவ்வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன் பின்னரே நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டன.

இத்தனை உறுதியான சட்டங்களும், தீர்ப்புகளும் பின்னணியில் இருந்தபொழுதும், திமுக அரசு இதை அமல்படுத்திய விதம் மிகவும் கேவலமானதாகும். கல்விக் கட்டணம் வெளியிடப்பட்டவுடன் சில பள்ளிகள் நீதிபதி கோவிந்தராஜன் குழுவில் மேல்முறையீடு செய்தனர். இச்சட்டத்தின்படி கட்டணத்தை ஏற்றுக்கொள்ளாத பள்ளிகள் 15 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவேண்டும் என்பதே விதியாகும். ஆனால் இந்த சட்டத்தை மீறிய முதல் சட்ட விரோத செயலை துவக்கி வைத்து இந்த சட்டத்தை அவமதித்த செயலை செய்த முதல் நபர் தமிழக முதல்வர் கருணாநிதி ஆவார். அதாவது, மே 23க்குள் மேல்முறையீடு செய்வதை சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், மே 23ல் தமிழக முதல்வர் அறிவித்தது என்னவென்றால் கட்டணத்தை ஏற்காத பள்ளிகள் மேல்முறையீடு செய்தால் அரசு பரிசீலிக்கும் என்பதாகும்.

நீதிபதி கோவிந்தராஜன் அறிவிக்கவேண்டிய அறிவிப்பை ஒரு முதலமைச்சர் அறிவித்தது எந்த விதத்தில் சரி? எங்கப்பன் புதருக்குள் இல்லை என்று சொல்லும்படியாக உடனடியாக 6400 பள்ளிகள் மேல்முறையீடு செய்தனர். தனியார் பள்ளிகளுக்கான தைரியத்தையும், ஒற்றுமையையும் உருவாக்கி துவக்கி வைத்தவர் தமிழக முதல்வராயிற்றே, சும்மாயிருப் பார்களே கல்வி முதலாளிகள்.

அடுத்தடுத்து அரங்கேற்றப்பட்ட நாடகங்களால் தமிழக கல்வித்துறை சந்தி சிரிக்கும் அளவிற்கு மிக மோசமான நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்த பள்ளிகளுக்கு 30 நாட்களுக்குள் இறுதி தீர்ப்பு வழங்க வேண்டுமென்பது நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் சட்டப்படியான கடமை. ஆனால், 6400 பள்ளிகளுக்கும் கட்டணத்தை ஆய்வு செய்து எங்களால் முடிவெடுக்க இயலாது. எனவே இந்தாண்டு ஏற்கெனவே தீர்மானித்ததையே பள்ளி நிர்வாகங்கள் வசூல் செய்ய வேண்டுமென நீதிபதி கோவிந்தராஜன் குழு அறிவித்தது. இதற்காகவே காத்திருந்த தனியார் பள்ளிகளின் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. நான் அடிப்பது போல் அடிப்பேன் நீ அழுவது போல் நடிக்க வேண்டும் என திமுக அரசுக்கும், தனியார் பள்ளிக்கும் இருந்த உறவு இங்கிருந்துதான் வெளிப்பட துவங்குகின்றது.

எந்தவிதமான நிர்வாக வசதியும் ஏற்படுத்தப்படாத குழுவால் தீர்மானிக்கப்பட்ட முறையான கட்டணம் என்பதுபோல் தோற்றத்தை நீதிமன்றத்தில் தனியார் பள்ளிகள் வாதிட்டபோது தமிழக அரசும் அதற்கு ஒத்து ஊதுவதுபோல் தான் நீதிமன்றத்தில் வழக்காடியது. 2010 செப் 14ல் இடைக்கால தீர்ப்பு வழங்கிய நீதிபதி வாசுகி தனது தீர்ப்பின் மூலம் இக்கட்டணத்தை அமல்படுத்து வதற்கு தடைவிதித்தார். தீர்ப்பு வழங்கப்பட்ட காலம் காலாண்டு தேர்வு என்பதால், பள்ளிகள் பெற்றோர்களை நிர்ப்பந்தப்படுத்தி இஷ்டம் வசூல் செய்வதை தீவிரப்படுத்திக் கொண்டனர்.

ஆனால், ஜூலை மாதம் முதலே துவங்கிவிட்ட பெற்றோர் போராட்டத்தை அரசு கண்டு கொள்ளவில்லை. பள்ளிகளில் ஆங்காங்கே போராடத் துவங்கிய பெற்றோர்களின் எழுச்சியை நீதிமன்ற தீர்ப்பு வேகப்படுத்தியது. தனியார் பள்ளிகளின் இலாப வேட்டையால் பல ஆண்டுகாலம் பாதிக்கப்பட்டிருந்த பெற்றோர்கள் துவக்கிய போராட்டம் எழுச்சிகரமாக வெடிக்க துவங்கிய பொழுதுதான் மாற்றங்கள் நிகழத்துவங்கின. உயர்நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத திமுக அரசிற்கு எதிராக மக்கள் கோபம் அதிகரிக்க துவங்கியது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் மேல்முறையீட்டு மனுக்களை நீதிமன் றம் அனுமதித்து இவ்வழக்கின் திசையை மாற்றியது.

பெற்றோர்களின் போராட்டதை ஒருங்கிணைப்பதற்காக தமிழ்நாடு மாணவர்பெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு எனும் அமைப்பு உருவாகி 2010 அக் 9 சென்னையில் மாபெரும் தர்ணா அறிவித்த பின்பு பல பள்ளிகளில் பள்ளி வாரியாக பெற்றோர் சங்கங்கள் உதயமாகின. தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்த பெற்றோர் போராட்டம் தமிழக அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியது. தமிழகத்தின் பெரும் அரசியல் கட்சிகள் மௌனம் காத்து வந்த வேளையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றோர்களின் போராட்டத்தை ஆதரித்து போராட துவங்கியது.

மக்களின் கருத்தையும், சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளையும் தெரிந்து கொண்டு முக்கியமான தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்ற பிரகடனத்தோடு சென்னை உயர்நீதிமன்றம் அக் 05ல் வெளியிட்ட தீர்ப்பு மக்கள் போராட்டங்களுக்கு மாபெரும் வெற்றியை தேடித் தந்தது. தனியார் பள்ளிகள் கட்டணம் தீர்மானிக்கும் குழுவின் கட்டணத்தையே இவ்வாண்டு 10,934 பள்ளிகளும் பின்பற்ற வேண்டுமெனவும், இனிமேல் கூடுதலாக எந்தவொரு பள்ளியும் வசூல் செய்யக்கூடாது, ஏற்கனவே வசூல் செய்யப்பட்டிருந்தால் அத்தொகையை தனி வங்கியிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டுமெனவும், மேல்முறையீடு செய்த 6,400 பள்ளிகளும் நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் தீர்ப்புக்கு உட்பட்டு கூடுதல் தொகையை பெற்றோர்களுக்கு திருப்பி தரவேண்டுமெனவும் உத்தரவிட்டது. மேலும், மேல்முறையீடு செய்யாத 4,534 பள்ளிகளும் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது ஏற்கனவே வசூலித்திருந்தால் உடனடியாக பெற்றோர்களிடம் திருப்பித்தர வேண்டும் என்பதும் தீர்ப்பின் அர்த்தமாகும்.

திமுக அரசின் உண்மையான முகம் இந்த தீர்ப்பிற்கு பின்னர் இன்று தோலுரிருந்து தொங்குகிறது. ஆம். அக்டோபர் 5க்கு பின்னரும் எந்தவொரு பள்ளியும் உயர்நீதிமன்ற தீர்ப்பை இன்றுவரை மதிக்கவில்லை. மே 7ல் வெளியிடப்பட்ட கல்வி கட்டண விவரம் ஐந்து மாதங்கள் ஆகியும் எந்த பள்ளியிலும் ஒட்டப்பட வில்லை. அரசின் வலைத்தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட கட்டண விவரம் வெளியிடப்படவில்லை. தீர்ப்புக்கு பின்னர் பல பள்ளிகளில் போராட்டம் வெடித்து கிளம்பிய போதும் கல்வித்துறை வேடிக்கை பார்த்தது. தமிழக அரசு தன்னுடைய நிலைபாடு என்ன என்று அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் கூடுதல் வசூல் நடைபெறுவதாக கூறி பெற்றோர்கள் பள்ளி முன்பாக போராட்டம் நடத்திய பொழுது பள்ளி நிர்வாகங்கள் அறிவித்த அறிவிப்பு மிக அதிர்ச்சிகரமானதாகும்.

உச்சநீதிமன்றமே சொன்னால் கூட நாங்கள் கட்டணத்தை குறைக்க மாட்டோம், இந்த கட்டணத்தை கட்டவில்லையெனில் குழந்தையை வீட்டிற்கு டி.சி கொடுத்து அனுப்பி விடுவோம், அரசு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்துள்ளது என பலவாறாக பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களிடம் கூறிய பொய்களை அனுமதித்தது கல்வித்துறையின் கேவலமான நிலைபாடகும். ஆம் பல பள்ளிகளில் காவல்துறை முன்னிலையிலும், கல்வி அதிகாரிகள் தலையிட்டு நடந்த பேச்சுவார்த்தையிலும் நிர்வாகங்கள் சொன்ன பதில் தான் மேற்கூறப்பட்டுள்ளது. நீதிபதி கோவிந்தராஜன் குழு தீர்மானித்த கட்டணத்தை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என மே 7ல் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தது தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்காக அல்லது கேரளத்தில் உள்ள பள்ளிகளுக்கா என்பது புரியாத புதிராகவே உள்ளது.

6 மாத காலமாக மறைக்கப்பட்ட கட்டண விவரம் உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு பின்னரும் பள்ளி நிர்வாகத்தால் மதிக்கப்படவில்லையெனில் இத்தகைய தைரியம் தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு யார் அளித்தது? பள்ளி வாரியாக கட்டணத்தை வெளியிட வேண்டுமென பெற்றோர்கள் நடத்திய போராட்டமும், நீதிமன்ற அவமதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சமும் தான் திமுக அரசை இணையதளத்தில் கட்டணத்தை வெளியிட நிர்ப்பந்தித்தது. ஆனால், கட்டண விவரம் வெளியிடப்பட்ட அக், 21க்கு மறுநாளே நீதிபதி கோவிந்தராஜன் இராஜிநாமா என்பது தான் அரசின் மீது சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

சமச்சீர் கல்வி தந்த சமத்துவ அரசு என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொள்ளும் திமுக வால் இந்த 5 ஆண்டுகளில் தமிழக கல்வி அடைந்த சீரழிவுகளில் மிக பிரதானமானது கல்வி கட்டணமும், சமச்சீர் கல்வியுமாகும். சமச்சீர் கல்விக்காக போர£டிய மாணவர்கள் மீது ஒரு வருடம் கழித்து பொய் வழக்கு போட்ட திமுக அரசு, சமச்சீர் கல்வி சட்டத்தை மீறிய பள்ளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாறாக அந்த தனியார் பள்ளி நிர்வாகங் களுடன் மீண்டும் கைகோர்த்துக் கொண்டு தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண ஒழுங்குபடுத்தும் சட்டத்தை சிதைக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

இந்தியாவிலேயே மிகவும் கல்வி வியாபாரமான மாநிலங்களில் தமிழகம் பிரதானமானது. தனியார் கல்வி நிலையங்களின் கட்டணக் கொள்ளை எந்தவித கட்டுப்பாடும் இல்லாதது. திமுக, அதிமுக, காங்கிரஸ் மட்டுமல்ல தேமுதிக பிரமுகர்கள் வரை அரசியல்வாதிகளால் கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுவதால் எந்த கட்டுப்பாட்டையும் தமிழக அரசியல்வாதிகள் அனுமதிக்கவில்லை. ஆனால், மாணவர்களின், வாலிபர்களின் தொடர்ச்சியான போராட்டத்தால் உருவான நிர்ப்பந்தம் காரணமாக சமச்சீர் கல்வியை பேசத்துவங்கிய திமுக விற்கு கட்டணம் குறித்து பேசுவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. 

தனியார் பள்ளிகள் ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1973, தமிழ்நாடு கட்டாயக் கல்வி சட்டம் 1994, நன்கொடை தடைச்சட்டம் 1992 மற்றும் சிட்டிபாபு கமிஷன் ஆகிய முயற்சிகளின் தோல்விகளை தொடர்ந்து உருவாக்கப்பட்ட சட்டம் தான் இச்சட்டமாகும். மேலும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி உருவானது தான் நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் கட்டண பரிந்துரைகளாகும். இந்த நிர்ப்பந்தங்களினால் உருவான இச்சட்டத்தால் தனியார் பள்ளிகள் மூலம் தனக்கு ஒரு பெரும் நிதி வரவும் அதே நேரத்தில் மக்களின் ஆதரவும் கிடைத்து விடும் என இரட்டை கணக்கு போட்ட திமுக விற்கு இன்று பெரும் எச்சரிக்கையாய் மாறியுள்ள மக்கள் போராட்டம் இதுவே ஆகும்.

Pin It