கடந்த வாரம் 3வது கட்டத் தேர்தல் நடைபெறுவதற்குமுன்பு கொல்கத்தா அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் நா கூசாமல் பொய் பேசியிருக்கிறார். மேற்குவங்க இடதுமுன்னணி அரசு குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி அரசை விட மோசம் என்றும் முஸ்லிம்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

தாம் சொல்வது பொய் என்று பிரதமருக்கு தெரியும். இருப்பினும் தேர்தல் பிரச்சாரம் என்பதால் பொய்களை முதலீடாக்கியாவது காங்கிரஸ் வெற்றியை உறுதிப்படுத்த முடியாதா என்ற நப்பாசை தான் அதற்கு காரணம். ஆனால் அதற்காக அவர் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. காலையில் எழுந்தது முதல் தூங்கப்போகும் வரை பொய்களை பேசி வரும் மம்தாவுடன் கூட்டு சேர்ந்திருப்பதால் அவரிடம் உள்ள நோய் தொற்றிக்கொண்டது போலும்.

சரி உண்மையிலேயே இடதுமுன்னணி அரசு முஸ்லீம்களுக்கு செய்தது தான்என்ன? இந்தியாவில் முஸ்லீம்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்று மத்திய அரசு நியமித்த சச்சார் கமிட்டி சுட்டிக்காட்டியது. அந்த கமிட்டி அளித்த பரிந்துரைகள் படி முஸ்லீம்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிய ஒரே மாநிலம் இந்தியாவிலேயே மேற்கு வங்க இடது முன்னணி அரசு தான். மேலும் முஸ்லிம் மக்களுக்கு உருது மொழியை கற்றுத்தரும் மதராசா பள்ளிகளுக்கு போதிய நிதியை ஒதுக்கி அவற்றை புனரமைத்த அரசும் மேற்கு வங்க அரசுதான். நிலைமை இப்படி இருக்கையில் நரவேட்டை புகழ் நரேந்திர மோடியின் குஜராத் அரசை விட மிகமோசம் மேற்கு வங்கம் என்று எப்படித்தான் பிரதமர் கூறினாரோ? பிரதமர் இப்படி பேசிக்கொண்டே இருக்கும் போது தான் குஜராத் அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டது.

2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் நடைபெற்ற கலவரத்தின் போது காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிய முதல்வர் நரேந்திரமோடி, முஸ்லீம்களுக்கு எதிராக இந்துக்களின் கலவரத்தை அனுமதியுங்கள். அப்போது தான் முஸ்லீம்களுக்கு பாடம் கற்பிக்க முடியும் என்று பேசியிருக்கிறார். இதை அம்மாநில எதிர்க்கட்சிகளோ இடதுசாரிக் கட்சிகளோ கூறவில்லை. மோடி நிர்வாகத்தின் கீழ் உள்ள காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தான் கூறியிருக்கிறார். இதற்கு முன்பாகவே குஜராத் கலவரம் குறித்து பல்வேறு விஷயங்கள் வெளிவந்துள்ளது. குஜராத் கலவரத்தின் போது நரேந்திர மோடி வந்த இடத்தில் நாங்கள் எத்தனை பேரை கொன்றோம், எதை எதை சேதப்படுத்தினோம் என்று கலவரக்காரர்கள் கூறியதை நரேந்திரகோடி உற்சாகப் படுத்தியதும் வெளிவந்த உண்மைகளே.

குஜராத் வன்முறை சம்பவம்தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் இதனை தெரிவித்துள்ளார். மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சஞ்ஜீவ் பட், வன்முறையாளர்களை அடக்கவேண்டாம் என்று நரேந்திர மோடி வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்தார் என்றும் கூறியுள்ளார். மேலும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான சிறப்பு விசாரணைக்குழு மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்பதையும் தெரிவித்துவிட்டார்.

இந்த குழு தனக்குகிடைத்த தகவல் அடிப்படையில் செயல்படவில்லை என்றும் குஜராத் அரசை பாதுகாக்கும் நோக்கத்தில் நடந்து கொள்வதாகவும் எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதாக உள்ளது இந்த காவல்துறை அதிகாரியின் பிரமாணப்பத்திரம். மோடியின் முகமூடி கிழிந்து வரும் நிலையில் அந்த அரசை விட மேற்கு வங்க அரசில் முஸ்லீம்களின் நிலை மிகமோசம் என்கிறாரே பிரதமர்.

குஜராத் கலவரத்தின்போது சாது முகமூடி அணிந்திருந்த வாஜ்பாய்யே இப்படி ஒரு சம்பவம் நடந்தபிறகு எப்படி, எந்த முகத்தை வைத்துக்கொண்டு வேறுநாடுகளுக்கு செல்வேன் என்றார். ஆனால், மன்மோகன் சிங்கோ குஜராத்தை விட மேற்குவங்கம் மோசம் என்று மோடியை உயர்த்துகிறார்.

 மேற்கு வங்கத்தில் கடந்த 35 ஆண்டுகளில் முஸ்லீம்களுக்கு எதிராக ஒரு கலவரமாவது நடந்துள்ளதா? எந்த முஸ்லீமாவது மத வன்முறையில் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளதா? இந்த கேள்விகளுக்கு இல்லை என்பதே பதில். பாபர்மசூதி தகர்க்கப்பட்டபோது நாடு முழுவதும் கலவரம் வெடித்தது. பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவேண்டிய நிலை. அப்போது கூட கோடிக்கணக்கான முஸ்லீகள் வசிக்கும் மேற்குவங்கத்தில் ஒரு அசம்பாவித சம்பவங்கள் கூட நடைபெறவில்லை. இவை அனைத்தும் பிரதமருக்கு தெரியுதோ தெரியவில்லையோ ஆனால் அரசியல் விழிப்புணர்வு பெற்ற வங்க மக்கள் அறிந்துள்ளனர். எனவே தேர்தல் கால புளுகு முட்டைகளுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள்.

குஜராத் அரசை இடது முன்னணி அரசுடன் ஒப்பிட்டு பேசுவதன் மூலம் மோடி மென்மையானவர். அவர் குஜராத் தொழிற்வளர்ச்சியின் முகம் என்றெல்லாம் சித்தரிக்க பார்க்கும் சக்திகளின் கைகளை வலுப்படுத்தி இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். மதச்சார்பின்மை என்ற விஷயத்தில் காங்கிரஸ் கட்சி என்றைக்கும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை கொண்டது இல்லை. பாபர்மசூதியை இந்துக்கள் வழிப்பாட்டிற்கு திறந்து விட்டவர் காலஞ்சென்ற பிரதமர் ராஜீவ்காந்தி என்றால் அவருக்கு பின் பிரதமராக பொறுப்பேற்ற நரசிம்மராவ் அந்த மசூதியை தகர்க்கப்படுவதை வேடிக்கை பார்த்தார். தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களின் தொழில்வளர்ச்சிக்கு பயன்பட இருந்த சேது சமூத்திர திட்டத்திற்கு காவி கும்பல்கள் மதச்சாயம் பூசி எதிர்ப்பு தெரிவித்தவுடன் அடுத்த ஆண்டு உத்தரபிரதேசத்தில்நடைபெறவுள்ள தேர்தலில் இந்துக்களின் வாக்குகளை இழக்கவேண்டியிருக்கும் என்ற காரணத்தால் அந்த திட்டத்தையே கைவிட்டுவிட்ட அரசு தான் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு. இப்படி பட்ட பாரம்பரியத்தில் வந்த கட்சியில் உள்ள மன்மோகன் சிங் இடதுசாரிக்கட்சிகளை பார்த்து முஸ்லிம்களுக்கு எதுவும் செய்யாதவர்கள்? என்று சொல்வதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

மதவாதத்தை முன்வைத்து செயல்படும் பா.ஜ.க விற்கு தன்னை வளர்த்துக்கொள்ள எப்போதும் ஒரு சாதுவான முகமூடி தேவை. ஒரு காலத்தில் வாஜ்பாய் அதற்கு பயன்பட்டார். தற்போது அத்வானியால் அந்த முகமூடியை அணிய முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் கூட சுஷ்மா சுவராஜ்க்கு கிடைத்த பிரபலம் அத்வானிக்கு கிடைக்கவில்லை. அந்த வகையில் இடதுசாரிகளை எதிர்க்கிறோம் என்ற பெயரில் வளர்ச்சி என்றோ, ஏதேதோ பெயரில் குஜராத்தையும், மோடியையும் முன்னிறுத்துவது ஆபத்தான ஒரு செயல்பாடே. சாதுவான முகமூடி இனி எந்த பா.ஜ.க தலைவருக்கும் பொருந்தப்போவதில்லை.

Pin It