தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு விவரங்களை பெற்று லஞ்ச, லாவண்யங்களையும், ஊழல்களையும் அம்பலப்படுத்தி வரும் சமூக ஆர்வலர்கள், மீதான தாக்குதல்கள் அண்மைக்காலத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சதிஷ் ஷெட்டி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விவரங்களை பெற்று அம்பலப்படுத்தியதால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதே போல் பீகார் மாநிலம் பெகுசரால் பகுதி, புல்லாரியா கிராமத்தில் சசிதர் மிஸ்ரா என்பவர் பஞ்சாயத்து அளவில் நடைபெற்ற முறைகேடுகளை வெளி கொண்டு வந்தார். இதனால் ஆத்திரமுற்ற சமூக விரோதிகள் அவரை சுட்டு படுகொலை செய்துள்ளனர்.

மக்களுக்கு விரோதமான நடவடிக்கையை செய்து வருபவர்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலப்படுத்தியவர்களை பாதுகாக்க அரசுகள் தயாராக இல்லை. ஆனால் தகவல் பெறும் உரிமை சட்டத்தை முடக்குவதற்கான நடவடிக்கையாக பீகார் அரசு தகவல் பெறுவோர் 10 பக்கத்திற்கு மேல் விவரம் கேட்டால் பக்கத்திற்கு 2 ரூபாய் கட்டணம் அளிக்க வேண்டும் என சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது ஏழை, எளிய மக்களுக்கு எதிரானது.

இதைப் போன்று தற்போது தேசிய கிராமப்புற வேலை உறுதிசட்டத்தில் தொழில் நகரங்களில் வேலை கிடைப்பதில் பாதிப்பு உள்ளதாக கூறி சட்டத்தை மாற்றி அமைத்திட ஒரு கூட்டம் கூப்பாடு போடுகிறது.

இந்திய அரசியல் சாசனம் 19வது சட்டப்பிரிவு வழங்கியுள்ள உரிமையை அந்நிய முதலீடு மற்றும் அந்நிய நிறுவனங்களின் வரவால் மறுக்கும் நிலை. சாதாரண ஏழை எளிய மக்களுக்கு பயன்பட்டு கொண்டிருக்கும். நகர்ப்புற, கிராமப்புற சாமான்யப்பட்ட மக்களை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்கள் அமலாக்க மறுப்பது அல்லது அதற்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பது அல்லது வேறு திட்டங்களுக்கு அந்த நிதியை மாற்றுவது தொடர்கிறது. 2004--------------- முதல் 2008ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் பட்ஜெட்களில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் வரை பயன்படாமல் உள்ளது.

வன பாதுகாப்பு சட்டத்தின் மூலம் பழங்குடியினர் பெற்ற சமூக பாதுகாப்பை, வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாப்பதாகக் கூறி அம்மக்களை வெளியேற்ற முயற்சிப்பது அவர்களது வாழ்வாதாரத்தை பறிப்பது. மாநகர் பகுதி வளர்ச்சிக்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துகிறோம் என உழைப்பாளி மக்களின் வாழ்விட உரிமையை காலி செய்வது பெரும் வணிக வளாகங்களை அமைப்பது.  ஆதிக்கம் படைத்தோரிடம் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களை பாதுகாக்கும் வன்கொடுமை பாதுகாப்பு சட்டம், இன்று வரை கேலி கூத்தாகவே பயன்படுத்தப்பட்டுவருகிறது. தலித் மக்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி உட்பட பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது என்பது அம்மக்களின் ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதிப்பதாகும். என இது காலம் வரை போராடி பெற்றது பாதுகாத்து வந்த ஜனநாயக உரிமைகளை பறிப்பது மீண்டும் நவீன கொத்தடிமைகளை உருவாக்கவே செய்யும். அதற்கான முயற்சியில் இறங்கியுள்ள அரசுக்கு எதிராக இன்றைய இளைய பட்டாளம் கிளர்ந்தெழும். அதுதான் வரலாறு.

-இளைஞர் முழக்கம் ஆசிரியர் குழு

Pin It