தூரிகை நுனியில் வண்ணங்கள் சொட்ட, படைப்பு குறித்த மோனதவத்தில், வீற்றிருக்கும் பள்ளிக்குழந்தைகளின் பிஞ்சு விரல்களில், அவிழும் ஓவியங்களைக்காணக் கிடைக்கும் வாய்ப்பை, நான் தட்டிக் கழித்ததில்லை, எந்தத் தருணத்திலும். மொட்டு அல்லது மலர் வகுப்புகளில் பயிலும் மூன்று நான்கு வயதுள்ள சின்னஞ்சிறு குழந்தைகளின் ஓவியங்களில் தவறாது இடம் பிடித்து விடுகிறது இயற்கையும், கூடவே பறவைகளும். பறவைகளில் மயில்களை அதிகக் குழந்தைகள் வரைந்திருப்பார்கள். மயில்களை இக்குழந்தைகள் நேரில் பார்த்திருப்பார்களா என்கிற சந்தேகம் தோன்றிமறையும் இடைவெளிக்குள் நிறங்களின் திரட்சியோடு ஓர் மயிலை வரைந்து நம் பார்வைக்கு பரிமாறிவிடுகின்றனர் குழந்தைகள்.

மயில் மனித குலத்தின் மரபணுவோடு கலந்த பறவை. தொன்மையான வரலாற்றுச் செய்திகளில் உயிர்ப்போடு சித்தரிக்கப்பட்ட பறவை. வேட்டைச் சமூக அமைப்பில் குகைகளில் வாழ்ந்த நமது முன்னோர்கள் பாறைகளில் மயிலை ஓவியமாக வரைந்துள்ளார்கள். சீகூர், சிறுமலை, மல்லசமுத்திரம், கோத்தகிரி அருகே உள்ள கொணக்கரையிலும் மயில்கள் பாறை ஓவியமாக நிலைத்திருக்கும் காட்சி இன்றளவும் நம் வரலாற்று பாரம்பரிய சாட்சியாய் உள்ளன.

இந்தியாவில் இயற்கைச் சூழலில் வாழும் பெரிய பறவை மயில்கள் தான். இவைகள் கோழிக்குடும்பத்தை சார்ந்தவை. சங்க இலக்கியங்களில் “மஞ்சை” என்னும் சொல் மயிலைக் குறிக்கிறது. காட்டு மஞ்சை கழனி மஞ்சை எனும் சொல்லாடல்களிலிருந்து வேளாண்நிலங்களிலும் மயில்கள் வாழ்ந்திருப்பதை அறிய முடிகிறது. ஆனாலும் காடும், காடு சார்ந்த முல்லை நிலமும், வெப்பமண்டலப் பகுதிகளும் தான் மயில்களின் வாழ்விடம்.

புழுபூச்சிகள், பூரான், சிறுபாம்புகள், விதைகள் மற்றும் தானியங்களை விரும்பி உண்ணும் மயில்கள் காலை, மாலை நேரங்களில் தீவிரமாக இரைதேடும் தன்மை கொண்டவை. நீலப்பச்சை நிறக் கழுத்தையும், அழகிய கொண்டையும், நீண்ட தோகையும் கொண்டது ஆண்மயில். பழப்புநிற மேலுடலும், கழுத்திற்கு கீழே வெள்ளை நிறவயிற்றுப்பகுதியும் கொண்டது பெண் மயில். எழுப்பும் குரலை அகவல் என்கிறோம். காடுகளில் மயில்களின் குரல் மற்ற விலங்குகளுக்கு எச்சரிக்கை ஒலியாக உள்ளது.

ஆண் மயிலை விட பெண்மயில்கள் உருவில் சிறியவை. நன்குவளர்ந்த ஆண் மயிலின் உடல் இரண்டிலிருந்து மூன்றடி நீளம் கொண்டவை. வளர்ந்த ஆண்மயிலின் தோகை மட்டும் நான்கிலிருந்து ஐந்தடி நீளமிருக்கும். ஆண்மயில்கள் எடை நான்கு கிலோவிலிருந்து ஆறுகிலோ வரையும் பெண் மயிலின் உடல் எடை மூன்று கிலோ முதல் நாலரை கிலோ வரையும் இருக்கும்.

இரண்டிலிருந்து மூன்றாண்டுகளுக்குள் மயில்கள் பருவடைகின்றன. மயில்களின் இனப்பெருக்கக் காலம் சித்திரை தொடங்கி புரட்டாசி வரை. இனப்பெருக்க காலத்தில் தான் ஆண் மயில்களுக்கு நீண்ட தோகை வளரும், வருடம் ஒருமுறை வால்பகுதியின் மேலடுக்குகளில் வளரும் தோகை ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உதிர்ந்துவிடும். இனப்பெருக்க காலங்களில் ஆண் மயில்கள் நிறப்பொலிவோடு காணப்படும். வானவில்லின் நிறம் ஏழு என்றால் ஒன்பது நிறம் மயிலுக்கு. பெண் மயில்களை கவரவே ஆண்மயில்களுக்கு தோகை வளர்கிறது. வெப்பம் குறைந்து கார்மேகம் சூழ்ந்த குளிர்ந்தவேலையில்தான் இனச்சேர்க்கைக்கு தயாராகின்றன மயில்கள். நான்கைந்து பெண் மயில்கள் மேயும் இடத்திற்கு அருகில் ஆண்மயில்கள் தோகை விரித்தபடி அசைந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தில் ஆண்மயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள நேரும், வலதுகாலில் ஆண்மயிலின் பலம் உள்ளது. பலமாக உதைபட்ட ஆண்மயில் ஒதுங்கிக் கொள்ள, வெற்றிக்களிப்பில் பெரும் குரலில் கத்தியவாறு தமது தொண்டைப்பகுதியை தானே கொத்தவும் செய்யும். தன்னைத்தானே வருத்திக் கொள்வதைப் போல தோன்றினாலும், பெண்மயில்களின் கவனத்தை ஈர்க்கும் உத்திதான் இது. பறவை இனங்களில் மயில்களுக்கு மட்டும் வாய்த்த தனிச்சிறப்பாக ஆய்வாளர்கள் இதனை கருதுகிறார்கள்.

மயில்களின் இனச்சேர்க்கை குறித்து நம்மில் பலருக்கும் தவறான கருத்துள்ளது. ஆண்மயில் வாய்வழியே விந்தை உமிழ்வதாகவும். உமிழ்ந்த விந்தை பெண்மயில்கள் கொத்தி விழுங்கி அதன் பொருட்டு கருவுறுவதாகவும் காலம் காலமாய் நம்புகிறார்கள். (பறவைகள் குறித்த அறிவியல் தேடல் இல்லாததும் இதற்கு ஒரு காரணம்). சேவலைப்போல தான் இணை சேர்கிறது மயில்களும். கருவுறும் பெண்மயில் 28நாட்கள் வரை அடைகாத்து குஞ்சுகள் பொரிக்கின்றன. முட்டையிலிருந்து வெளிப்படும் குஞ்சுகள் இரண்டு மணிநேரத்தில் நடக்கவும், 9 நாட்களில் பறக்கவும் கற்றுக்கொள்கின்றன. தாய் மயில் தனது குஞ்சுகளுக்கு உணவையும், எதிரிகளின் நடமாட்டத்தையும் பலவிதமான குரல்களை எழுப்பி உணர்த்தும். மயில்களின் ஆயுட்காலம் இருபதாண்டுகள் என்று பறவை ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அழகிய தோகைதான் மயில்களுக்கு சில நேரங்களில் ஆபத்தாகவும் இருக்கிறது.

மேலை நாடுகளில் துகி என்னும் கிரேக்க சொல்லாடல் தோகை என்னும் தமிழ் சொல்லிலிருந்து வந்ததுதான். கி.மு. பத்தாம் நூற்றாண்டில், சாலமன் அரசனால் தாமிரபரணி நதிக்கரையிலிருந்து உவரித் துறை முகம் வழியாக கப்பலில் கட்டுக்கட்டாக மயில் தோகைகளை தூக்கிச்சென்று, ரோமானிய மக்களுக்கு அறிமுகம் செய்தனர். பிறகு கடலோடி வணிகர்கள் ஆன பினீசியர்கள் கப்பல் கப்பலாய் ஏற்றி ரோமானிய வீதிகளில் தமிழ்நாட்டு மயில்களின் தோகைகளை கடை பரப்பினார்கள். ரோம் நாகரீகத்தில் மயில்களின் தோகை பலவிதமான உணவுப்பொருள்களோடு கலந்து உண்ணும் பழக்கமிருந்தது. நாகரிக காலத்திலும் ரோமானிய செல்வந்தர்கள் தமது விருந்து மேசைகளின் மீது பல்வேறு விதங்களில் மயில் தோகைகளை அழகுபடுத்தி வைத்திருக்கிறார்கள். தமிழர்களின் பண்பாட்டுத் தளங்களில் மயில்களின் அடையாளம் ஆழமாய் பதிந்துள்ளது. பழனி மலைக்கருகில் உள்ள திருஆவினக்குடியில், தொல்பொருள் அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற செம்புக்காசுகளில் மயிலின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆற்காடு நவாப் சந்தா சாயுபு போன்ற முகமதிய மன்னர்களும், விஜயரகுநாத நாயக்கர் ஆட்சியிலும் மயிலின் உருவம் பொரிக்கப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. போர்க்களத்தில் தாய் மண்காக்க எதிரிகளோடு போராடி, வீரமரணம் அடையும் தமிழர்களுக்கு நடுகல் நட்டு மயில் பீலிகளால் அழகு செய்து, ஆண்டுக்கொருமுறை உணவுப் பண்டங்களையும், மதுபானங்களையும் படைத்து வழிபடும் பழக்கம் பதினான்காம் நூற்றாண்டு வரை இருந்துள்ளது. மயிலாட்டம் என்கிற கலையும், மயிலாசனம் என்கிற உடற்கலையும் மயில்களின் பெயராலே இன்றும் விளங்குகிறது. சதிராட்டம் என்கிற ஆடல் கலைக்குள் நிகழ்த்தப்பட்ட மயிலாட்டம் பிறகு பரதக்கலைக்குள்ளும் பரவியது.

பருவமடைந்த ஆண்மயில் பெண் மயிலைக் கவர தோகை விரித்து அசைவதை நடனத்தின் நளினமாகவே தமிழர்கள் பாவித்துக் கொண்டார்கள். மயிலின் அசைவின் போது ஒருக்களித்தல், குதித்தல், சுற்றுதல் என்கிற மூன்று அடவுகளை நிகழ்த்தும். இந்த அடவுகளிலிருந்தே தமிழர்களுக்கு காவடியாட்டம் என்கிற கலை கிடைத்தது. மயிலூர், மயிலாடும்துறை, மயிலம்பாடி, மயிலாப்பூர், மயிலம்பட்டி, மயிலாடும்பாறை, மயிலேறி பாளையம், மயிலம் போன்ற சில ஊர்களைக் குறிப்பிடலாம்.

தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்த வைத்துக் கொள்ளும் பெயர்களில்கூட மயிலம்மாள், மயிலாள், அன்னமயில், பொன்மயில், மயில்சாமி, மயிலாம்பதி, மயிலேறு, மயில்வாகனம், மயிலானந்தம் போன்ற பெயர்களில் இன்றளவும் அழைக்கப்படுகிறார்கள். இறந்த மயிலின் உடலிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பே மயிலெண்ணெய் ஆகும். இது மூட்டுவலி, வாதநோய்களை குணமாக்கும் என்பதும், மயில் பீலியை தீயில் கருக்கி சாம்பலாக்கி தேனோடு குழைத்து குழந்தைகளுக்கு ஊட்ட தீராத சளியும், இருமலும் குணமாகும் என்பதும் கடைந்தெடுத்த மூடத்தனம். ஏனெனில் மயில்களுக்கு மருத்துவகுணம் என்பது இம்மியளவு கூட இல்லை.

இந்தியாவின் தேசியப்பறவையாகவும் மயில் உள்ளது. ஆனால் மயிலை தேசியப்பறவையாக இந்திய அரசு எந்த ஆண்டு அறிவித்தது, என்ற வினாவை எழுப்பினால், பலரும் பதில்சொல்ல முடியாமல் மௌனமாகிவிடுவார்கள். இந்தியாவில் வறண்ட, நீரற்ற, புதர்க்காடுகளில் வாழ்ந்த அடையாளம் அருகிப்போன கானமயிலைத்தான் முதலில் தேசியப்பறவையாக இந்திய அரசு தெரிவு செய்தது. அதன் ஆங்கிலப் பெயரால் அச்சுப்பிழை நேர்ந்துவிட்டால் வேறுபிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிற விவாதம் தலை தூக்க தற்போது அழிவின் விளிம்பில் அல்லாடும் மயிலுக்கு அந்த வாய்ப்பு வந்து சேர்ந்த ஆண்டு 1963.

1972 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த வனச்சட்டத்தின்படி மயில்கள் வேட்டையாடுதல் அல்லது வேறுவகையில் துன்புறுத்துதல் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. மயில் மியான்மாரிலும் (பர்மா) தேசியப்பறவையாக உள்ளது. உயிரியல் பூங்காவில் ஓரிரண்டு வெள்ளை மயில்களை நீங்கள் காண நேர்த்திருக்கலாம். இதை தனித்த இனமென்றும், அரியவகைப் பறவையென்றும், இது வண்டலூர், கோவை உயிரியல் பூங்காவில் வசிக்கிறது உண்மையில் வெள்ளை மயில்கள் தனித்த இனமன்று. வெள்ளை மயில்கள் வெள்ளுடல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவை என்ற கருத்தாய்வுகள் கூட இன்னும் முழுமையாக்கப்படவில்லை. வெள்ளை மயில்கள் நிறம் மங்கும் பண்புகளை கொண்ட நிறப்பிறழ்வு நோய் கொண்டவைகள். வெள்ளை மயில்களின் கண்கள் நீலநிறத்தில் உள்ளன. ஆண் வெள்ளை மயில்களின் தோகையில் உள்ள புள்ளிகள் மங்கலாக வெளிர்ந்து காணப்படுகின்றன.

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் வேளாண்மை குடிமக்களின் வேண்டாத பறவையாய் மயில்களின் தோற்றம் மாறிப்போனது. தொடர்ந்து அழிக்கப்பட்டுவரும் காடுகளால் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு காட்டுயிர்களின் வாழ்வு புலம் பெயர்ந்து வாழும் நொம்பலத்திற்குள்ளானது. இன்று வேளாண் நிலங்கள் தான் மயில்களின் புகலிடம். விளைநிலங்களில் இரைதேடி வரும் மயில்கள் முளைப்பயிர் மக்கா சோளம், தக்காளி, சூரியகாந்தி போன்றவற்றைக் கொத்திக் குதறிவிடுவதாக முறையிடும் வேளாண்மக்கள் மயில்களின் மீது மாளாத கோபத்தில் உள்ளார்கள்.

காடுகளில் மயில்களின் பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்த நரி, காட்டுப்பூனை, கீரி போன்ற பாலூட்டிகளின் வாழ்வை சீரழித்து சிதிலமாக்கிவிட்டோம். எந்த அறிவியல் முயற்சியாலும் இணைக்க முடியாத இயற்கையின் உணவுக் கண்ணிகள் உடைந்துவிட்டன. விளைநிலங்களிலும், அதனை சுற்றியுள்ள தோப்புகளிலும் மிகுதியாக மயில்கள் பெருக இதுவும் ஒரு காரணம்.

விளைநிலங்களில் பயிர்களை நாசம் செய்கிறது மயில்கள் என குற்றம் சாட்டும் வேளாண்மக்கள் விளை நிலங்களில் சிறுபாம்பு, பூரான், பூச்சிகள், சிதறிய தானியங்கள் என்று மயில்கள் இரைதேடுவதை கவனிப்பதில்லை. பூச்சிகளை கட்டுப்படுத்தும் மயில்களும் உள்ளன என்பதை வேளாண்மக்கள் உணர வேண்டும். எல்லா பூச்சிகளும் பயிர்களை நாசம் செய்யும் என்பதும் தவறான கருத்து. பூச்சிகளையும், பறவைகளையும் தவிர்த்து விட்டு வேளாண் நிலங்கள் செழிக்க முடியாது. கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி, நெல்லை போன்ற மாவட்டங்களில் விளைநிலங்களுக்கு வரும் மயில்களை விரட்டுதல் நஞ்சு வைத்து கொல்லுதல் போன்ற அடாத செயல்கள் செய்தித்தாள்களில் தினமும் அச்சேறுகின்றன.

கொங்குநாட்டு விளைநிலங்களில் ஆங்காங்கே மயில்கள் செத்துக்கிடப்பதை நாளும் பார்க்கலாம். பருத்திக்காடுகளில் தெளிக்கப்படும் உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட “எண்டோ சல்பான், மோனோ குரோட்டோபோஸ்” போன்ற உயிர்க்கொல்லி மருந்துகளால் செத்துவிழும் புழுக்களை கொத்தி தின்னும் மயில்கள் ஆறேழுநாட்களில் செரிமான உறுப்புகளில் நஞ்சுபடிந்து குடல் புண்ணாகி இறந்து விடுகின்றன என்பதை பிரேத பரிசோதனையில் அறியமுடிகிறது.

பண்ணைகளில் பொதிப்பொதியாய் வளர்க்கப்படும் கோழிகளின் மூலம் பரவும் தொற்றுநோய்க்கிருமிகளால் ஏற்படும் பறவைக்காய்ச்சல் நோய் மயில்களையும் விட்டு வைப்பதில்லை.

விளைநிலங்களில் விரட்டப்பட்ட மயில்கள் கோவை மாநகரப்பகுதிக்கு குடிவந்துவிட்டன. சிங்காநல்லூர், வெள்ளலூர், பட்டணம் பகுதிகளில் மனிதமலம், எச்சில் கழிவுகள், அழுகிய கோழி இறைச்சி, கெட்டுப்போன காய்கறிகள் என்று தேடித்தின்று இரசாயன நஞ்சு நுரைத்த நொய்யலில் நீரைக்குடித்து உயிர் வாழ்கிறது.

பல்லுயிர்களை பாதுகாக்க உலக நாடுகள் முனைப்போடு செயலாற்றும் தருணத்தில் உயிர்களின் வாழ்வை உருக்குலைக்கும் செயல் இயற்கைக்கு மட்டுமல்ல அறிவியலுக்கும் எதிரானது.

பூமியின் வேர்பிடித்த எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமை சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. வலியது வாழும் என்கிற நியதிகளுக்குள் மனித குலம் எந்திரத்தனமாய் தள்ளப்பட்டுள்ளது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு கொங்குமண்ணில் பாடப்பட்ட ஓர் நாட்டுப்புறப்பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.

மருத பூத்தவனம்

மயிலாடும் சோலைவனம்

மருத மரத்தே சாச்சுபுட்டோம்

மயில் போயி எங்கடையும் – பொன்னு

மயில் போயி எங்கடையும்?

என்ற எமது முன்னோர்கள் இசைத்த நாட்டுப்புற பாடலில் ஊடாடும் குற்ற உணர்வு காலம் கடந்தும் நம்மை உறுத்துகிறது

(கட்டுரையாளர் - “மயிலு” ஆவணப்பட இயக்குனர்/பறவை ஆர்வலர்)

Pin It