கட்டுரையின் தலைப்பு என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டதல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதலாண்டு நிறைவடைந்ததையடுத்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் சொன்ன பிதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும். இதை 10 சதவீதமாக அதிகரித்து சாதனை புரிவோம். விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருவது கவலையளிக்கிறது. பணவீக்கம் அதிகமாக இருக்கிறது. இதை கட்டுப்படுத்தி சாதாரண மக்களை பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவே ரத்தினச் சுருக்கமாக தலைப்பாக அமைந்துவிட்டது.

கடந்த 5 வருடங்களில் அரிசி உள்ளிட்ட முக்கிய தானியங்கள் 150 சதம் விலையேறியுள்ளன. தானிய வகைகள் சராசரியாக 75 சதம் விலையேறியுள்ளன. இது உணவுப்பொருட்களின் விலைப்பட்டியல் தயாரிக்கப்பட்ட 1845 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 165 ஆண்டுகளில் கண்டிராத ஒன்று. ஆனால், இது ஆட்சியாளர்கள் வியாக்கியானம் செய்வதைப் போல எதிர்பாராமல் எழுந்த அபாயமல்ல. அதன் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட அந்த அரசியல் குறித்து ஏ.பாக்கியம் எழுதிய உணவு நெருக்கடி வளர்ந்த நாடுகளின் புதிய சுரண்டல், எனும் சிறிய பிரசுரம் பேசுகிறது.

இன்று ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி, தேவைக்கு குறைவான உற்பத்தியால் ஏற்பட்டதல்ல. உதாரணமாக கடந்த 50 ஆண்டுகளில் மக்கள் தொகை 2.6 மடங்கு அதிகரித்துள்ளது. உணவு தானிய உற்பத்தியோ 3.3 மடங்கு உயர்ந்துள்ளது. ஆக தேவைக்கும் கூடுதலான உற்பத்தி ஏற்பட்டுள்ள இந்தக் காலத்தில்தான் வரலாறு காணாத நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதற்கு குறிப்பாக 3 காரணங்களை இப்புத்தகம் முன்வைக்கிறது. 1.சுதந்திரச் சந்தை (உலகமயம்) 2. யூகவணிகம், 3.உயிரியல் எரிசக்தி.

உலகமயமாக்கல் உலக நாடுகளின் சந்தைகளை பெரும் நிறுவனங்களின் லாப வேட்டைக்காக திறந்துவிட்டது. இதன்மூலம், உணவுதானிய சந்தைக்குள்ளும் பெரும் நிறுவனங்கள் கால்பதித்தன. அவர்கள் பெருமளவில் தானியங்களை வாங்கி அவற்றை அதிக லாபம் கிடைக்கும் சந்தையில் விற்கத் துவங்கினார்கள். இந்த நடவடிக்கையால், ஒரு நாடு முதலில் தனது ஏற்றுமதியை முடித்து பின்னர் மீதமிருந்தால் தங்கள் உணவுக்காக வைத்துக்கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டது. அதாவது உணவு என்னிடமே இருந்தாலும், அது விற்று லாபம் பார்ப்பதே என் வேலை.

இவ்வாறு விவசாய உற்பத்தி வணிகமானதால், பட்டினிச் சாவுகளும் அதிகரிக்கின்றன. அதே சமயம் விவசாயி களும் உற்பத்தியாளர்கள் என்ற அடையாளத்தை இழந்து, பெரும் நிறுவனங் களைச் சார்ந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதாவது, இந்தியா, அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தின் நிலைக்கே தள்ளப் படுவதாக நூலாசிரியர் அதிர்ச்சி யளிக்கும் புள்ளிவிபரங்கள் மூலம் விளக்குகிறார்.

அதே போல, மிக முக்கியமான ஆபத்தாக, பொருள் விளைவதற்கு முன்பாகவே அதனைக் கொள்முதல் செய்து, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் மூலம் விலையேற்றம் செய்யும் நவீன பதுக்கல் முறையான முன்பேர வர்த்தகத்தை அவர் குறிப்பிடுகிறார். இவ்வாறான வணிகர்களுக்கு, யூக பேரம் மூலம் 2007 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 788 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. அதாவது, அவ்வளவு பணம் சாதாரண ஏழை, நடுத்தர மக்கள் சட்டைப்பையி லிருந்து திருடப்பட்டிருக்கிறது. இது ஒவ் வோராண்டும் அதிகரிக்கிறது. (இவ்விடத்தில், 2007 ஆம் ஆண்டு கோதுமை, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்கள் மீது யூக பேர வாணிகத்தை தடை செய்தபோது, அப்பொருட்களின் விலை 20 சதம் குறைந்ததும் கவனிக்கத்தக்கது.)

மேலும், முக்கியமான மற்றொரு காரணம் உயிரியல் எரிசக்தி: எரிசக்தி துறையில் தங்கள் ஆதிக்கத்தை நீடிக்கச் செய்வதற்காக, அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்புநாடுகளும் பயோ டீசல் தயாரிப்பை ஊக்குவிக்கின்றன. அமெரிக்காவில், கடந்த 2008 ஆம் ஆண்டு விளைந்த சோளத்தில் 30 சதம் உயிரியல் எரிசக்தி தயாரிப்புக்காக ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக அந்த நாடுகள் தங்கள் நிலத்தையும், மனித உழைப்பையும், வளத்தையும் மட்டும் பயன்படுத்துவதில்லை. வாய்ப்புள்ள எல்லா நாடுகளிலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அவை வளைத்துப்போட்டுள்ளன. இத்திட்டம் முழு மூச்சுடன் செயல்படுத்தப்பட்டால், உலகின் பல நாடுகளின் விவசாய நிலங்கள் பணக்கார நாடுகளின் வாகனங்களின் பசியைத் தீர்ப்பதற்கானதாக மாற்றப்படும். உணவு தானியங்கள் எப்போதெல்லாம் வணிகமயமாகின்றனவோ, அப்போதெல்லாம் பட்டினிச் சாவுகள் அதிகரித்திருக்கின்றன என்பதுதான் இப்புத்தகம் நம் முன்பாக வைத்திருக்கும் எச்சரிக்கை. மேற்குறிப்பிட்ட உணவு நெருக்கடி ஜப்பான், தென் கொரியா, சீனா போன்ற நாடுகளை பாதிக்கவில்லை. இதற்கு முக்கியமான காரணம், அவர்கள் தேவைக்கு தன்னிறைவான உற்பத்தியை உத்திரவாதப்படுத்தியிருக்கிறார்கள். சேமிப்பு போகவே ஏற்றுமதி செய்வோம் என உறுதியாக இருக்கிறார்கள். சர்வதேச வணிக ஒப்பந்தங்களின் போது உணவுப் பாதுகாப்பை பாதிக்காத வகையில் மிக கவனமாக அமைத்துக் கொள்கின்றனர்.

ஆனால், இந்தியா மேற்சொன்ன பாதுகாப்பை ஏற்படுத்தத் தவறிவிட்டது. காங்கிரசும், பாஜகவும் போட்டிபோட்டுக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கும், யூக வணிகத்திற்கும் கதவு திறந்து விட்டுள்ளார்கள். அதுமட்டுமின்றி மக்களை மேலும் இக்கட்டில் தள்ளும் வகையில், விலையேற்றத் திற்கான பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது ஒரு ஏமாற்று வேலை என்பதை இப்பிரசுரம் தெளிவாக முன்வைக்கிறது. உண்மையிலேயே உணவுப் பொருட்களின் விலை குறைய வேண்டுமானால், என்ன செய்யவேண்டும் எனவும் விளக்குகிறது.

வறுமைக்கோடு என்பதை துள்ளியமாக கணக்கிட வேண்டும். எல்லா மக்களுக்குமான பொது வினியோகத்தை பலப்படுத்த வேண்டும். விவசாயம் மற்றும் ஆராய்ச்சிக்கான பொது முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும். விளைபொருட்களை கொள்முதல் செய்வது, இடுபொருட்களை வழங்குவது, விளை நிலங்களைப் பாதுகாப்பது, கூட்டுறவு கடன் வசதியை ஏற்படுத்துவது என விவசாயிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு முதலிடம் தருவதும் மிக அவசியம். அத்துடன், உடனடியாக யூக வணிகத்தை தடை செய்வது மிக அடிப்படையான தேவையாகும். மேற்சொன்ன பரிந்துரைகள் மிக அத்தியாவசியமானவை.

இத்தனையும் சொல்லுவதுடன் இப்பிரசுரம் முடிந்துவிடவில்லை. செய்திகளைப் படித்தவர்கள் செயலில் இறங்க வேண்டும், மகத்தான மக்கள் எழுச்சியே மாற்றத்தை சாதிக்கும். என்கிறார் ஆசிரியர். ஆம், செயல் .. அதுவே நாம் பேசுவதற்கான சிறந்த மொழி.

உணவு நெருக்கடி: வளர்ந்த நாடுகளின் புதிய சுரண்டல்

ஆசிரியர்: ஏ.பாக்கியம்

வெளியீடு: பாரதி புத்தகாலயம் ரூ.10

 

Pin It