இந்தியாவில் விலைவாசி உயர்வுக்காக மிகவும் கவலைப்பட்டு, பாதிக்கப்பட்டு தன்னைத் தானே வருத்திக்கொள்ளும் நபர் ஒருவர் உண்டெனில் அவர் நிதியமைச்சர் பிரணாப் ஆகத்தான் இருக்க முடியும். அவருக்கே தெரியாமல் பணவீக்கம் உயரும்போதெல்லாம் அவர் படும் பாடு இருக்கிறதே, அதை யாரும் புரிந்துகொண்டதாகவே தெரியவில்லை. ஒரு நிதியமைச்சர் என்ற மரியாதை கூட தராமல் பணவீக்கம் தானாக உயரும்போது, பாவம் நல்ல மனிதர் வருத்தப்படாமல் எப்படி இருக்க முடியும். நிதி நிறுவனம், பங்கு பரிவர்த்தனை, விலைவாசியை மட்டுமல்ல கறுப்புப்பணத்தை கட்டுப்படுத்தக்கூட தன் அதிகாரத்தை பயன்படுத்த விரும்பாத நல்ல மனிதர் அவர்.

ஆம். சாதாரண கவுன்சிலர் கூட தன் அதிகாரத்தை பயன்படுத்தி பந்தா செய்யும் இக்காலத்தில், எந்த பந்தாவும் செய்ய விருப்பமில்லாமல் தன் அதிகாரங்களின் மூலம் யாரையும், எதையும் தொந்தரவும் செய்யாமல் இருப்பதென்பது ஒரு சாதாரண விசயமல்ல. ஆனால் இந்திய மக்களின் மீது அவர் கொண்டுள்ள அன்பும், அக்கறையும் எளிதானதல்ல. ஒவ்வொரு நாளும் காலையிலேயே பத்திரிக்கை படிக்கும் நல்ல பழக்கமுள்ள மனிதரென்பதால், விலைவாசி உயர்ந்துவிட்டது என்பதை படிக்கும்போது, மிகவும் வருத்தப்பட்டு விடுகிறார். அத்தோடு அவர் நின்று விடுவதில்லை. ஒரு நிதியமைச்சர் என்பதால் விலைவாசி மீதான தன் நடவடிக்கையை உடனே பத்திரிகைகளை கூட்டி அறிவித்துவிடுவதில் இன்று வரை உடனுக்குடன் செயல்படுவதில் மிகவும் கெட்டிக்காரர் நம்ம பிரணாப். ஆரம்ப காலங்களில் விலைவாசி உயர்ந்த உடன் உடனுக்குடன் புலம்பி தன் நடவடிக்கையை எடுக்கத்துவங்கியவர். வருத்தப்படுவது, துக்கப்படுவது. துயரப்படுவது, வேதனைப்படுவது என்று அவரால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் எடுத்தும் இன்று வரை விலைவாசி கொஞ்சம் கூட அவரை மதிக்கவில்லை.

அது மட்டுமல்ல, இவரின் வருத்தத்தைக் கூட பொருட்படுத்தவில்லை என்பதைப் பார்க்கும்போது, ஒரு வேளை இவர் கண்ணீர் விட்டு கதறி ராஜினாமா செய்தால் தான் விலைவாசி இவரை மதிக்கும் போல. பெட்ரோல் விலையை அடிக்கடி உயர்த்துவதால் இவர்பட்ட வேதனையை இவரைப்போலவே இளகிய மனம் கொண்ட பிரதமர், மன்மோகன்சிங்கும் பட்டதால்தான், பெட்ரோல் விலையை உயர்த்தும் பாவ காரியத்தை அவர்களின் கீழுள்ள பெட்ரோல் நிறுவனத்திற்கே கொடுத்துவிட்டனர். இப்போது கூட கேஸ், டீசல் விலையை உயர்த்தும் போது, மாநில அரசுகள் விற்பனை வரியை குறைக்கவேண்டும் என ஆலோசனை கூறுகையில், அவர்களுடைய பொருளாதார அறிவை, அக்கறையை மக்களுக்காக பயன்படுத்தியதை யாரும் பாராட்டவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. ஏனெனில், விலைவாசியால் பாதிக்கப்படாத ஒருவர் விலைவாசி உயர்வுக்காக வருத்தப்படுவது சாதாரண விசயமல்ல. உலக விலைவாசிக்கேற்ப இந்தியாவில் விலைவாசி உயர்ந்தால் இந்தியாவின் மானம் உலக அரங்கில் பாதுகாக்கப்படும் என்ற உண்மையை தன் மனதிற்குள்ளேயே போட்டு பூட்டி வைத்துள்ள பிரணாப் அவர்களின் நோக்கம் ஒன்றுதான். அதை யாரும் புரிந்து கொள்ளமுடியாது.

கறுப்புப்பண விவகாரத்தில் கூட மிக இளகிய மனதுடன் நடந்து கொண்டவர் பிரணாப் தான். பின்னென்ன? ஒரு முதலாளி இந்திய நாட்டில் கஷ்டப்பட்டு சுரண்டி, வருமான வரித்துறை, அந்நிய செலவாணித்துறை தொழில் துறை,போன்ற பல துறைகளை கஷ்டப்பட்டு ஏமாத்தி, சுவிஸ் வங்கியில் போட்ட பணத்தை இந்திய அரசு கைப்பற்றணும்னு சொன்னா நியாயந்தானா சொல்லுங்க. அவ்வளவு கஷ்டப்பட்ட முதலாளிகள் மேலும் கஷ்டப்படுவதை பார்க்க மனம் விரும்பாத பிரணாப், கொஞ்சம் கூட தயங்காமல் அந்த முதலாளிகளை ஆதரித்தார் பாருங்கள்,அதை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்தியாவில் உள்ள கல்வியின்மை, வேலையின்மை, உணவின்மை, சுகாதாரமின்மை என இல்லாமை பற்றியே பலர் கவலைப்படும் நேரத்தில் ஒரு வித்தியாசமானவர் இவர். நாட்டில் எது இருக்கிறதோ அதைத்தான் வளர்க்க முடியும், எது இல்லையோ அதைப்பற்றி கவலைப்படக்கூடாது. அதனால் தான் இல்லாமையைப் பற்றி கவலைப்பட்டு நேரத்தை வீணடிக்க விரும்பாத இவர், கறுப்புப்பணம், ஊழல் என இருப்பவற்றை வளர்ப்பதில் தன் முழுக்கவனத்தையும் செலவிடுகிறார்.

இவர் இவ்வளவு நல்ல மனிதராக இருப்பதற்கு இவர் மட்டுமே காரணமல்ல என்பதையும் இங்கே சொல்வதை என் கடமையாக கருதுகிறேன். காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை வழி வந்தவர் என்பதால் தான் இன்று இவரால் இப்படி ஆம்ஆத்மிக்களுக்காக சிந்திக்க முடிகிறது. ஏனெனில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை அதுதான். ஆனால், நாங்கள் ஏழைகளுக்காகவே விலைவாசியை உயர்த்துகிறோம் என்று சொன்னால் மக்கள் ஆனந்தக்கண்ணீர் வடிப்பார்கள் என்பதால் அதை அவர்கள் சொல்வதேயில்லை. சமீப காலமாக அண்ணா ஹசாரே மற்றும் ராம்தேவ் ஆகியோர் உண்ணாவிரதம் என இரண்டு நாள் உட்கார்ந்துவிட்டு பண்ணும் பந்தாக்களையெல்லாம் பார்த்து மிகவும் வருத்தப்பட்டு பிரணாப் யோசித்தது ஒண்ணு தான். நாமும் மக்களுக்காக வருத்தப்பட்டது முதல் துயரப்பட்டது வரை அனைத்தும் செய்துவிட்டோம். ஆனால் இந்த பாழாய்ப்போன உண்ணாவிரத ஐடியா ஏன் நமக்கு வரவில்லை. சரி, நமக்குத்தான் வரவில்லை மன்மோகன்சிங்குக்கு கூடவா வரவில்லை? பரவாயில்லை, இந்த ராகுல் தம்பிக்கு கூட ஏன் தோணலை? ஒரு வேளை இவன் இதுக்கெல்லாம் சரிப்பட மாட்டான்னு நினைச்சு நம்மட்ட. . . சரி, அடுத்து காய்கறி விலை, உணவுப்பொருள் விலை என எல்லாம் பாய்ச்சல் வேகத்தில் கூடப்போகுது, அப்போ நாமளும் ஒரு உண்ணாவிரதத்தை இரண்டு நாள் போட்டு விலைவாசியைக் குறைக்க ஒரு விலைபில் போடவேண்டும் என மாநில அரசுகளுக்கு ஒரு நெருக்கடி கொடுத்தால் எப்படி இருக்கும்?

Pin It