குழந்தைகளின் அற்புத உலகில் - 4

இந்தப் பூவுலகில் பிறந்ததிலிருந்தே குழந்தையின் மனம் வளரத் தொடங்கி விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக உடலும் மனமும் புற உலகத்தைக் கண்டு உணர்கின்றன. தனக்கும் புற உலகத்துக்கும் இடையில் அழகிய ஒருதொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறது. எல்லாவற்றையும் அறிந்துகொள்ள புரிந்துகொள்ள மனதில் இருத்திக்கொள்ள ஒவ்வொரு சிறு சிறு முயற்சியாகச் செய்து பார்க்கிறது. அதன் முயற்சிகளே அதற்கு ஆனந்தத்தைத் தருவதாக அமைகிறது. இந்த ஆனந்தம் தான் அதன் வெற்றி. இப்படி ஒரு வெற்றியிலிருந்து மற்றொரு வெற்றிக்கு பயணப்படுகிறது குழந்தை. இதனால் ஏற்படும் அனுபவப் பதிவுகளை மனதில் இருத்திக்கொள்கிறது. தன்னிடம் அன்பு மீதூற ஒலி எழுப்பிக் கொஞ்சுவோர்களிடம் புன்னகைக்கிறது. தாயாரின் தாலாட்டில் தன்னை மறந்து உறங்குகிறது. திரும்பத் திரும்ப ஒலிக்கும் பதச்சேர்க்கையின் இசைக்கோர்வை குழந்தையின் ஆழ்மனதில் ஒரு அமைதியை உருவாக்கி அதனிடம் முழுமையான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

குழந்தைகளின் உளப்பதிவுகள் ஆரம்பத்தில் பார்வை மூலமே உருவாகிறது. எனவே காட்சி பிம்பங்களை பலமுறை உற்றுப்பார்த்த பின்னரே குழந்தை அதைப் புரிந்து கொள்ளவும், அதற்கு எதிர்வினை புரியவும் தொடங்குகிறது. இதனால் குழந்தைக்கு ஒழுங்கின் மீது மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டு விடுகிறது. அந்த இடத்தில் அந்தப் பொருள் இருப்பதையே மனம் பதிவு செய்து கொள்வதால் அந்தப்பொருள் இடம் மாறும்போது மனப் பதிவில் குழப்பம் ஏற்படுகிறது. அதனால் உணர்ச்சிகளில் மாறுதல் நிகழ்கிறது. குழந்தை அந்தப் பொருளை அதே இடத்தில் வைக்கும்வரை அமைதியிழந்து அழுகிறது. பல்வேறு அறிவியல் சோதனைகளில் கண்டறியப்பட்ட இந்த உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

பொதுவாகக் குழந்தைகள் ஒழுங்கற்றவர்கள் என்றும், அவர்களால் பொருட்களைச் சிதறடிக்கத்தான் முடியும் என்றும் பெரும்பாலான பெற்றோர்கள் கருதுவார்கள். ஆனால் குழந்தையின் ஒழுங்கமைவான அகஉலகத்தில் நாம் நம் விருப்பத்திற்கேற்ப குழந்தையின் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து விடுகிறோம். குழந்தைகள் தங்கள் ஒழுங்கு சீர்குலைக்கப்பட்டதற்கு எதிராக எதிர்ப்பையும் கலகத்தையும் செய்கிறார்கள்.                ஆனால் நாம் குழந்தையின் அக மனதைப்பற்றி அறியாததினால், “என்ன அட்டகாசம்! என்ன சேட்டை. . . பிள்ளையா இது. . . ” என்று அங்கலாய்க்கிறோம். மொழியறிவு இல்லாத பருவத்தில் குழந்தை தன் அதிருப்தியை அழுகையின் மூலமே வெளிப்படுத்துகிறது. அந்த அதிருப்தியின் காரணத்தை அறியமுடியாத அவசரத்திலோ. அகங்காரத்திலோ, பலவீனத்திலோ நாம் இருக்கிறோம்.

ஒழுங்கின் மீதான கவனம் ஈர்ப்பு குழந்தையின் மனதை உருவாக்குவதற்கான இயல்பான, அடிப்படைத் தேவையாகவே இருக்கிறது. இதையே தானே உருவாக்கிக்கொள்ளும் விளையாட்டுகளிலும், தன்னுடன் மற்றவர்கள் விளையாடும் விளையாட்டுகளிலும் எதிர்பார்க்கிறது. கையால் முகத்தை மூடிக்கொண்டு திடீரென திறந்து உற்சாக ஒலி எழுப்பும் படுக்காளி விளையாட்டும் கண்ணாமூச்சி விளையாட்டும் குழந்தைகளிடம் ஒழுங்கு குலைதலும் ஒழுங்கை மீட்டலுமான செய்கையால் மனங்கவரப்படுகிறது. ஒழுங்கு பற்றிய கூர்மையான உணர்ச்சியை இயற்கையிலேயே குழந்தை பெற்றிருக்கிறது. புறவயமான உலகில் உள்ள ஒழுங்கு என்பது மட்டுமல்ல, அகவயமான தன் உலகிலும் இந்த ஒழுங்கைப் பாதுகாத்துவைத்திருக்கிறது. அதே நேரம் ஒழுங்கை நாம் உணர்வது போல் குழந்தைகள் உணர்வதில்லை. ஏற்கனவே உருவாக்கி விட்ட உலக ஒழுங்கு பற்றியே நம்முடைய கவனம் இருக்கிறது. ஆனால் குழந்தைகள் தங்கள் மனதில் படைப்பூக்கமான ஒரு ஒழுங்கைப் புதிதாக உருவாக்குகிறார்கள். குழந்தைகளைப் பொறுத்தமட்டில் இது ஒன்றுமில்லாததில் இருந்து புதிதாக ஒன்றைப் பிரகாசிக்கச் செய்வதும் ஆக குழந்தை படைப்பின் உச்சத்தில் இருக்கிறது. நுண்ணிறிவின் வளர்ச்சியினால்தான் குழந்தை நம் கண்ணுக்குப் புலனாகாத அசையும் உயிரினங்களையும், (எறும்பு, புழு, பூச்சி) அசையாத பொருட்களையும் (தூசி, துரும்பு) கண்டு களிபேருவகைக்கொள்கிறது.

இவற்றையெல்லாம் உணராத பெரியவர்கள் தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட கற்பிதங்களில் மூழ்கி குழந்தையின் அவதானிப்புகளை அலட்சியம் செய்கிறார்கள். குழந்தையின் நுண்ணறிவு வளர்ச்சியைப் பற்றித் தெரியாததினால் இடையூறு செய்கிறார்கள். இதன் மூலம் குழந்தையின் அக உலக வளர்ச்சியில் பெரும்பாதகத்தை ஏற்படுத்துகிறார்கள். பிற்காலத்தில் குழந்தைகளின் ஆளுமைத்திறன்கள் பாதிக்கப்படவும் ஏதுவாகிறது.

குழந்தையின் மனமானது பெரியவர்களுக்குத் தெரியாத ஒரு ரகசியமாக இருக்கிறது. அவர்களுக்கு அது ஒரு மாயம்போல தெரிகிறது. குழந்தையின் ஒவ்வொரு நடத்தைக்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. குழந்தையின் ஒவ்வொரு எதிர்வினையையும் கண்டறிந்து கொள்ளும்போது குழந்தையின் மனஉலகம் பற்றிய ஒரு புதிய புரிதல் ஏற்படுகிறது. குழந்தையிடம் ஒரு ஆசிரியரைப் போல அதிகாரம் செலுத்திய நாம் குழந்தையின் மாணவர்களாகி விடுவோம்.

குழந்தைகள் தங்களுடைய அவதானிப்பால் ஒவ்வொரு பொருளின் நுட்பமான பகுதியையும் உற்று நோக்குகின்றனர். தொட்டுப்பார்க்கின்றனர். முகர்ந்து உணர்கின்றனர். ருசித்துப் பார்க்கின்றனர். இதன்மூலம் அந்தப் பொருளின் எல்லாவித சூட்சுமங்களையும் அறிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். அப்படி அறிந்து கொண்ட அனுபவங்களின் மூலம் தங்கள் மன உலகின் அடிக்கட்டுமானத்தைக் கட்டுகின்றனர். அற்பம் என்றோ அற்புதம் என்றோ குழந்தைகள் உலகில் இல்லை. எல்லாவற்றையும் அறிந்துகொள்ளும் தீராத பயணத்தில் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள். எவர்களிடம் உற்சாகமின்மை இல்லை. அவர்களிடம் விரக்தியில்லை. அவர்கள் முன்னேறிக் கொண்டேயிருக்கிறார்கள். திரும்பிப் பார்ப்பதற்கு அவர்களுக்கு எந்த வருத்தங்களோ, துயரங்களோ இல்லை. படைப்பின் முழுச்சக்தியோடு அவர்கள் இயங்குகிறார்கள்.

சோர்ந்து, வருந்தி, விரக்தியுற்று, கவலையின் வலையில் சிக்கி, நம்முடைய எல்லாச் சக்தியையும் இழந்த நாம் குழந்தைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறோம். குழந்தைகள் நம்மைப்பார்த்து சிரிக்கிறார்கள். . .
Pin It